ஆஃபிரிக்காவின் அடர்ந்த காடுகளில் சிறு சிறு கூட்டமாகப் பழம், இலை, மரப்பட்டை, கறையான் ஆகியவற்றை உண்டு சிம்பன்சி மனிதக் குரங்குகள் வாழ்கின்றன. பெரும்பாலும் மரத்திலும், அரிதாக நிலத்திலும் வாழ்கின்ற இவ்வகை மனிதக் குரங்குகள் அறிவு நுட்பம் வாய்ந்தவையாயினும், அச்ச உணர்வு மிக்கவை. மனிதனைப் போன்ற உருவ அமைப்புக் கொண்ட சிம்பன்சிக் குரங்குகள், ஆஃபிரிக்காவின் காம்பியா பகுதியிலிருந்து காங்கோ பகுதி வரை பரவியுள்ள அடர்ந்த காடுகளில் சிறு சிறு கூட்டமாக வாழ்கின்றன. காங்கோ ஆற்றின் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி விரிந்து செல்லும் ஆர்பர்ட் ஏரி, விக்டோரியா ஏரிக் கரைக் காடுகளிலும், தெற்கு நோக்கி விரிந்து செல்லும் தங்கனிகா காடுகளிலும் அவை நிலையாக வாழ்கின்றன. பல்வேறுபட்ட சூழல்களில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளைக் கொண்டுள்ளன என்றும், 1000 மீ உயரமுள்ள ரூவன் ஜோரி மலைகளில் காணப்படுகின்றன என்றும் ஆய்வாளர் கூறுகின்றனர். உடலின் மேல் அடர்ந்து நெருக்கமாக வளர்ந்திருக்கும் மயிர் உடலின் நிறத்தைப் பளிச்சிடும் கறுப்பு நிறமாகவோ, கறுப்பும், பழுப்பும் கலந்த கரும் பழுப்பு நிறமாகவோ காணப்படுகின்றது. ஆனால், முகம், குதப் பகுதி, கலவி உறுப்பு, உள்ளங்கை, உள்ளங்கால், விரல்களின் மேற்புறப் பகுதி ஆகியவை மயிர் வளர்ச்சியின்றி உள்ளன. முகத்தில் நன்கு வளர்ந்துள்ள கறுப்பு நிற மீசையும், குட்டையாக வளர்ந்துள்ள தாடி மயிரும் காணப்படுகின்றன. சிம்பன்சிக் குட்டிகளில் குதப் பகுதியில் வெண்ணிற மயிர் அடர்த்தியும், வயதான சிம்பன்சிக் குரங்குகளின் தலையிலும், முதுகிலும் வெண்மையான மயிர் வளர்ச்சியும் காணப்படுகின்றன. சிம்பன்சியின் கைகள், கால்களை விட நீளமானவை. நீண்டு, மெலிந்து காணப்படும் கைகள், சிறிய உருவ அமைப்பு, பெரிய காதுகள் ஆகிய அமைப்புகளைக் கொண்டு சிம்பன்சிகளைக் கொரில்லா மனிதக் குரங்குகளிலிருந்து பிரித்தறிவது எளிதாகிறது. ஆண் சிம்பன்சிக் குரங்கு 170 செ.மீ. உயரமும், 70—80 கி.கி உடல் எடையும் கொண்டது. பெண் சிம்பன்சி 130 செ.மீ. உயரமே உள்ளது. சிம்பன்சிக் குரங்குகளை முகமூடிச் சிம்பன்சிக் குரங்கு, சோகா சிம்பன்சிக் குரங்கு, கூலுகம்பா சிம்பன்சிக் குரங்கு, கீழ்த் திசைச் சிம்பன்சிக் குரங்கு, குள்ள வடிவச் சிம்பன்சிக் குரங்கு என ஐந்து வகையாகப் பிரிக்கலாம். முகமூடிச் சிம்பன்சிக் குரங்கு. கினியா நாட்டின் மேற்புறப் பகுதியில் காணப்படும் முகமுடிச் சிம்பன்சிகள் நீண்ட காதுகளையும், வெளுத்த குட்டையான உடல் மயிரையும், புருவம், முகம் இவற்றில் கறுப்பு நிற மயிரையும், நீண்டு வெளுத்த விரல்களையும், கறுநிற உள்ளங்கை, உள்ளங்கால்களையும் கொண்டுள்ளன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சோகா சிம்பன்சிக் குரங்கு. கறுப்பு முகமும், கறுப்பு நிற மயிர்களடர்ந்த கை, கால், காதுகளும் கொண்டுள்ள சோகா சிம்பன்சிக் குரங்குகளின் காதுகள் மிகச் சிறியவை ஆகும். கூலுகம்பா சிம்பன்சிக் குரங்கு. தடித்த மூக்கையும், செவ்வண்ண முகத்தையும், உடலின் மேல் நீண்டு தடித்த மயிர் அடர்த்தியையும் கொண்டுள்ள கூலுகம்பா சிம்பன்சிக் குரங்குகள் நைஜீரியக் காடுகளில் வாழ்கின்றன. இவற்றின் தடித்த மூக்கு கொரில்லா மனிதக் குரங்கை நினைவூட்டுகிறது. கீழ்த் திசைச் சிம்பன்சிக் குரங்கு. வெளுத்த முகமும், உடலின் மேல் நன்கு வளர்ந்த மயிரும், இளஞ்சிவப்பு வண்ணத்தில் கை, கால்களும், செவிகளும் அமையப் பெற்ற கீழ்த் திசைச் சிம்பன்சிக் குரங்குகள் தங்கனிகா, யுகாண்டா,காங்கோ நாட்டுக் காடுகளில் மிகுதியாக வாழ்கின்றன. பழுப்பும், இளஞ்சிவப்பும் கலந்து மங்கலாகத் தோன்றும் மயிர் உடலெங்கும் காணப்படுகிறது. குள்ள வடிவச் சிம்பன்சிக் குரங்கு. பழுப்பும், கறுப்பும் விரவிய உடல் நிறத்தையும், செந்நிற உதடுகளையும், அடர்ந்த முக மீசையையும், சிறுத்து மெலிந்த உடலையும் கொண்டுள்ள குள்ள வடிவச் சிம்பன்சிக் குரங்குகள் காங்கோ ஆற்றின் தென் கரையில் வாழ்கின்றன. சிம்பன்சி, உராங்குட்டன், கிப்பன் ஆகிய மூன்று மனிதக் குரங்குகளும் மரங்களின் மேல் வாழ்பவை என்னும் கருத்தே நீண்ட காலம் நிலவியது. இயற்கைச் சூழலில் சிம்பன்சிக் குரங்குகளின் நடவடிக்கைகளை அணுகிப் பார்க்க முடியாத காரணத்தால், சில ஆய்வாளர்கள் இவை மரங்களின் மேல் வாழ்பவையா, தரையில் வாழ்பவையா எனக் குழப்பமுற்றனர். இவை தரையில்தான் வாழ்கின்றன என்னும் கருத்தைக் கிமேக் என்னும் ஆய்வாளர் வெளியிட்டார். பழங்களை உண்பதற்கும், கூடு கட்டுவதற்கும், உறங்குவதற்கும் மட்டுமே இவை மரங்களின் மேல் ஏறிச் செல்கின்றன என்பது அவருடைய விளக்கமாகும். கினியா நாட்டுப் புல் தரைக் காடுகளில் வாழ்கின்ற சிம்பன்சிக் குரங்குகளின் நடவடிக்கைகளைக் கண்டறிந்த ஹென்றி டபிள்யூ நிஸ்ஸன் என்னும் ஆய்வாளரும், கிமேக்கின் கருத்தை ஆதரித்தார். சிறுத்தையின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கும், அச்சமடையும் பொழுதும் இவை மரங்களின் மேல் ஏறிச் செல்கின்றனவென்றும், இவை உணவுக்காகப் பெரும்பாலான நேரத்தைத் தரையிலேயே கழிக்கின்றன என்றும், எனவே, இவை தரை வாழ் உயிரினங்களே என்றும் பிராங்கி, வெனம் ரெனால்ட்ஸ் என்னும் ஆங்கிலேயத் தம்பதிகள் கருத்துரைத்தனர். ஒரு நாளின் பகல் நேர அளவையும், கிடைக்கின்ற உணவின் அளவையும் கொண்டே அவை மரங்களிலும், நிலத்திலும் செலவிடும் நேரத்தைக் கணிக்க முடியும். யுகாண்டா நாட்டின் பூடாங்கோ காட்டில் வாழ்கின்ற சிம்பன்சிக் குரங்குகளில் 50—70% வரை பகல் நேரத்தை மரங்களில் உணவு தேடியே செலவிடுகின்றன என்றும், இரவிலும் மரங்களிலேயே உறங்குகின்றன என்றும், வாழிட அமைப்பில் இவை நிலத்தில் வாழ்கின்ற கொரில்லாக்களுக்கும், மரங்களில் வாழ்கின்ற உராங்குட்டான்களுக்கும் இடைப்பட்டவை என்றும் மேலும் சில ஆய்வாளர் நிறுவினர். கிடைக்கின்ற உணவுக்காக அதிகமான பகல் நேரத்தை மரங்களிலேயே செலவிடுகின்றன. மரங்களில் நன்கமர்ந்து, ஒன்றையொன்று பேணுவதும், எச்சரிக்கையுணர்வுடன் மரங்களின் மேலமர்ந்து சுற்றிப் பார்ப்பதும், இவற்றின் குட்டிகளும் மரங்களில் தாவியோடி விளையாடுவதும், இவை மரங்களில் வாழ்பவையே என்னும் கருத்தை உறுதிப்படுத்துகின்றன. பருமனான மரங்களைக் கைகளால் அணைத்தவாறு கைகளையும், கால்களையும் மாற்றி மாற்றிப் போட்ட வண்ணம் விரைந்து மரமேறும் தன்மை இவை மரங்களின் மேல் வாழ்பவையே என்பதை நன்குணர்த்துகிறது. பிறிதொரு மேய்ச்சல் காட்டைத் தேடிச் செல்லும் போதே, இவை நிலத்தின் மேல் கை, கால்களை ஊன்றிய வண்ணம் இடப் பெயர்ச்சி செய்கின்றன. பாதங்களைத் தட்டையாக நிலத்தின் மேல் பரப்பிய பிறகு, உடலின் சுமையை (நிலத்தின் மேல்) முன்னரே ஊன்றிக் கொண்டிருக்கும் கைகளால் தாங்கிக் கொள்ளும். கை விரல்களை மடக்கி, நிலத்தில் அழுத்தியவாறு மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் நடந்து செல்லும் ஆற்றலைக் கொண்டவை. இரு கைகளிலும் உணவைச் சுமந்து கொண்டு, மனிதனைப் போல் நேராக நிமிர்ந்த நிலையிலும் நடக்கின்றன. இரண்டு கைகளிலும் வாழைக் குலைகளைத் தூக்கிக் கொண்டு மணிக்கு 45 கி.மீ வேகத்தில் ஓடக் கூடியவை. அகலமான நீர்ச் சுனைகளின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குக் கைகளை வேகமாக முன் நோக்கி வீசியவாறு தாண்டிக் குதிக்கின்றன. மறு கரையைக் கால்களால் தொட்ட பிறகே, கைகளைத் தரையில் ஊன்றிச் சம நிலை பெறுகின்றன. முதுகில் தாங்கிய குட்டியுடன் பெண் சிம்பன்சிக் குரங்கு நீர்ச் சுனைகளைத் தாண்டிச் செல்லும் வியப்பான ஆற்றலைப் பெற்றுள்ளது. சிம்பன்சி மனிதக் குரங்குகளுக்கு நீந்தத் தெரியாது. பெரும்பாலும் தாவர உண்ணியான இவை, இலை தழைகளையும், மரத் தண்டு, மரப் பட்டை, பழம், மலர் ஆகியவற்றையும் விரும்பி உண்கின்றன. சில சமயங்களில் பூச்சிகளையும், புதர்ப் பன்றி அளவுள்ள பாலூட்டிகளையும் உண்கின்றன. குரங்குகளைக் கொன்று, அவற்றின் தசையை இலைகளுடன் கலந்து உண்கின்றன என்றும் கூறுகின்றனர். மரக் கொம்புகளைக் கறையான் புற்றுக்குள் நுழைத்துக் கொம்பு வழியாக வெளி வரும் கறையான்களை உண்கின்றன. கினியாவிலும், தங்கனிகாவிலும் இவை முட்டைகளை உண்கின்றன. இறந்து போன விலங்குகளையோ, முன் உண்டறியாத பழங்களையோ இவை உண்பதில்லை. சிம்பன்சிக் குரங்குகளின் உணவுப் பழக்கம் பருவங்களுக்கேற்ப மாறுகிறது. பழங்கள் கிடைக்கின்ற பருவத்தில் பழங்களையே உண்கின்றன. உணவு தேடுவதில் 6—7 மணி வரை செலவிடுகின்றன என்றும், ஆண் சிம்பன்சி ஒரு நாளில் 50 கி.கி. எடையுள்ள பழங்களையும், பெண் சிம்பன்சி 40 கி.கி. எடையுள்ள பழங்களையும் உண்கின்றன என்றும் கணித்தறிந்துள்ளனர். காட்சிச் சாலைகளில் சத்து மிகு உணவு கொடுத்து, வளர்க்கப்படும் சிம்பன்சிக் குரங்குகள் மிகவும் கொழுத்து, வயிற்றுப் போக்கால் இறந்து விடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிம்பன்சிக் குரங்குகள் தங்கள் கூடுகளைக் கொரில்லா மனிதக் குரங்குகள் போல் அமைக்கின்றன. நிலத்தின் மேல் கிடக்கும் காய்ந்த மரங்களின் மீது குத்துக் காலிட்டமர்ந்து மலம் கழிக்கின்றன. அமெரிக்காவிலுள்ள குரங்கு ஆராய்ச்சி நிலையத்தில், சின்பன்சிக் குரங்குகளுக்குப் பயிற்சியளித்து, எந்திரங்களை இயக்குவதற்கும், தையல் எந்திரத்தில் நூல் கோப்பதற்கும், வீட்டைத் தூய்மைப்படுத்துவதற்கும், பொம்மைகளுடன் விளையாடுவதற்கும், படங்களுக்கு முத்தமிடுவதற்கும் பழக்கியுள்ளனர். ஒரு குடும்பத்தில் சிம்பன்சிக் குரங்கை வளர்த்து அம்மா, அப்பா, கோப்பை என்னும் சொற்களைக் கூறுமாறும் செய்- துள்ளனர். நுண்ணறிவு வாய்ந்த சிம்பன்சிகள் தம் தேவைகளைக் குறியீடு மூலம் தெரிவிக்கின்றன. சமுதாய வாழ்க்கை தலைமைப் பொறுப்பு. சிம்பன்சிக் குரங்குகள் நிலையான குழுக்களில் வாழ்வதில்லை. பல உறுப்பினக் குரங்குகள் ஒன்று சேர்ந்தமைக்கின்ற குழுக்களில், வலிமை வாய்ந்த ஆண் சிம்பன்சிகளே தலைமைப் பொறுப்பேற்றுக் குழுக்களை நடத்திச் செல்கின்றன. வலிமையான ஆண் சிம்பன்சி வீரச் செயல் பல புரிந்து தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றுகிறது. மரக்கிளைகளை ஒடித்துக் கைகளில் பற்றியவாறு வேகமாகச் சுழற்றும்; தலையை முன்னால் நீட்டித் தோள்களைத் தாழ்த்திக் கொண்டு, ‘ஹூஹுஹு’ என ஒலியிட்டவாறே ஆடும்; குதிக்கும்; தரையை உதைக்கும்; எதிர்ப்பட்ட பொருள்களை உயரத்தில் எறிந்து விளையாடும்; பருமனான மரங்களில் முரசடிக்கும்; ஆண் சிம்பன்சிக் குரங்கின் ஆரவாரங்களைக் கண்ணுறும் பிற சிம்பன்சிகள் அஞ்சிப் பின்னடையும்; எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், வீரச் செயல் புரியும் வலிமையான ஆண் சிம்பன்சிக்குப் பிற சிம்பன்சிகள் பணியும். குழுவின் தலைமைப் பொறுப்பேற்கும் ஆண் சிம்பன்சி ஆரவாரத்தைக் குறைத்துக் கொண்டு, தன் குழுவைச் சேர்ந்த சிம்பன்சிகளிடம் அன்பு காட்டும்; தம் வாழிட எல்லைக்குள் வரும் பிற விலங்கினங்களை விரட்டியடிக்கும்; வலிமை குறையும் ஆண் சிம்பன்சியிடமிருந்து, வலிமையான ஆண் சிம்பன்சி ஆட்சியைக் கைப்பற்றிக் குழுவை நடத்திச் செல்லும். மழை வரப் போவதைத் தன் கூட்டத்திற்கு உணர்த்த, ஆண் சிம்பன்சிக் குரங்கு கூட்டை விட்டு வெளியில் வந்து, சரிந்த பள்ளத்தாக்கில் வேகமாக ஓடுகிறது. மீண்டும் மரத்தின் மேல் தாவியேறி, மரக் கிளையை ஒரு கையால் பற்றிய வண்ணம் சுழன்று மரத்திற்கு மரம் தாவிச் செல்லும். அப்பொழுது ஒரு மரக் கிளையை ஒடித்து வேகமாகச் சுழற்றும். மழைக்குரிய நடனம் புரியும் ஆண் சிம்பன்சியைப் பிற சிம்பன்சிக் குரங்குகள் அசையாமல் பார்த்தவாறு மரங்களில் அமர்ந்திருக்கும். மழைக்கால முன்னறிவிப்பைத் தன் குழுவினருக்கு உணர்த்திய பின், அமைதியாக ஏனைய சிம்பன்சிகளின் அருகில் சென்று நட்போடு நிற்கும். இதை மழைக்கால நடனம் என்றும் போர் கால நடனம் என்றும் விளக்குகின்றனா. குட்டிகளுடன் காணப்படுகின்ற எல்லாத் தாய் சிம்பன்சிக் குரங்குகளும் ஒற்றுமையாக வாழ்கின்றன. ஒரு தாய் சிம்பன்சிக் குரங்கு ஒரே நேரத்தில் இரண்டு குட்டிகள் வரை பேணும். பாகுபாடு காட்டாமல், எல்லாக் குட்டிகளிடமும் அன்பு செலுத்தும் அரிய பண்பைச் சிம்பன்சிக் குரங்குகளிடம் காணலாம். குட்டிகள் விரிந்த உள்ளங்கைகளை நீட்டிக் கெஞ்சுகின்ற தோற்றத்தில், தாயிடம் உணவு கேட்கின்றன. உடலுறவில் ஆர்வம் காட்டும் ஆண் சிம்பன்சிக் குரங்கு பெண் சிம்பன்சிக் குரங்குக்கு உணவு கொடுத்துத் தன்னிடம் ஈர்க்கிறது. பெண் சிம்பன்சிக் குரங்கின் கலவி உறுப்புகளும், குதப் பகுதியும், இனப் பெருக்க காலத்தில் சிவப்பு வண்ணம் பெற்று மிகவும் பருத்து விடுகின்றன. ஒரு பெண் சிம்பன்சிக் குரங்கு, ஏழு ஆண் சிம்பன்சிக் குரங்குகளுடன் தொடர்ந்து உடலுறவு கொள்ளும். இதைக் காதல் என்று சொல்ல முடியாது. பெண் சிம்பன்சியின் இசைவுடன், ஆண் சிம்பன்சிகள் சினம் மிகுந்து முரட்டுத்தனமாகச் செய்யும் கற்பழிப்பே என்று ஆய்வாளர் தெரிவிப்பர். முதலில் அணுகி வருகிற ஆண் சிம்பன்சிக்குப் பெண் சிம்பன்சி இணங்குகின்றது. சிம்பன்சியைக் கழியால் அடித்தும், வாயால் கடித்தும் உடலுறவு கொள்ளும் ஆண் சிம்பன்சியின் முரட்டுத்தனத்தால் அச்சமுற்று அலறுகின்ற பெண் சிம்பன்சி கலவி வேட்கை முடிவுற்றதும், வேகமாக ஓடி மறைகிறது. படுத்த நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும் அவை உடலுறவு கொள்கின்றன என்றும், குட்டிகளை அணைத்தவாறே பெண் சிம்பன்சிக் குரங்குகள் உடலுறவு கொள்கின்றன என்றும், உடலுறவு அணுகு முறைகள் இயற்கைச் சூழலிலும், செயற்கைச் சூழலிலும் மாறுபடுகின்றன என்றும் குறிப்பிடுவர். கருவுற்ற பெண் சிம்பன்சிக் குரங்கு 32—34 வாரங்களுக்குள் ஒரு குட்டியை ஈனும். பதினோராம் மாதத்தில் குட்டி முழு வளர்ச்சி பெறுகிறது. சிம்பன்சி மனிதக் குரங்குகள் 35 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. இரண்டு குழுக்களைச் சேர்ந்த சிம்பன்சிக் குரங்குகள் சந்திக்கும் வாய்ப்பேற்படும் பொழுது, இரண்டு குழுக்களும் இணைந்து ஒரே குழுவாகவோ, இரண்டு குழுக்களும் கலந்த பின் புதிதாக இரண்டு குழுக்களாகவோ அமைவதும் உண்டு. பொதுவாக, சிம்பன்சிக் குரங்குகளின் குழுக்களைத் தாய்ச் சிம்பன்சிகள் அடங்கிய குழுவாகவும், உடலுறவுப் பருவத்தை அடைந்து விட்ட ஆண், பெண் காதல் குழுவாகவும் பிரிக்கலாம். சில சமயங்களில், தாய்க் குழுவில் ஓர் ஆண் சிம்பன்சியும் சேர்ந்து கொள்வதுண்டு. குட்டிக்குப் பாலூட்டுகிற மூன்று நான்காண்டுகள் வரை பெண் சிம்பன்சி கருத்தரிப்பதில்லை. பாலூட்டும் பருவம் மாறியவுடன், கருவுறும் பருவம் தொடங்குகிறது. பேறு கால வலியால் அலறுகின்ற பெண் சிம்பன்சி தன் விரல்களால் பனிக் குடத்தைத் திறந்து, பெண் உறுப்பிலிருக்கும் குட்டியை வெளியில் இழுக்கிறது. சிசுவின் கொப்பூழ்க் கொடியைப் பிடுங்கி எறிந்த பிறகு, பனிக்குட நீரையும், நஞ்சுக் கொடியையும் உண்ணும். பேறு காலம் 25 நிமிடங்களில் நிறைவு பெறுகின்றது. புதிதாகப் பிறக்கின்ற சிம்பன்சிக் குட்டி அச்சத்தினால் அலறும். தொண்ணூறு நிமிடங்களுக்குப் பின் அமைதியடைந்து, சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கும். புதிதாகப் பிறந்த குட்டியின் உடல் எடை 800—2200 கிராம் இருக்கும். இரட்டைக் குட்டிகள் பிறப்பதுமுண்டு. வாய்க்குள் பெருவிரலை வைத்துச் சப்பிக் கொண்டிருக்கும் சிம்பன்சிக் குட்டி, தாயின் மயிர்க் கற்றையைக் கெட்டியாகப் பற்றியபடியே இருக்கும். நான்கு மாதங்களுக்குப் பிறகு, தாயை விட்டுச் சிறிது தொலைவு போய் விடுகிறது. ஓராண்டு நிறைவெய்திய குட்டிகள் ஓடி விளையாடுவதும், இரண்டாம் ஆண்டில் தாமே உணவை எடுத்து உண்பதும், ஐந்தாண்டுகள் வரை தாயின் முதுகைப் பற்றிச் செல்வதும், ஏழாம் ஆண்டில் பருவமடைவதும் சிம்பன்சிக் குட்டிகளின் வளர்ச்சிக் காலப் படிநிலைகளாகும். அச்ச உணர்வு மிக்க சிம்பன்சிக் குரங்குகளின் முதல் எதிரி மனிதனே என்றாலும், அவை சிறுத்தையைக் கண்டே மிகவும் அஞ்சுகின்றன. சிறுத்தையின் தோலுக்குள் பஞ்சடைத்து, அதன் காலின் மேல் ஒரு சிம்பன்சி போன்ற பொம்மையையும் வைத்து, சிம்பன்சியின் அச்ச உணர்வை அறிதற்கான ஆய்வு நடத்தினர். அவை பொம்மைகள் என்றுணராத சிம்பன்சிகள் கை விரல்களால் உடலைத் தாறுமாறாகச் சொறிந்து கொண்டன. குச்சிகளையும், கழிகளையும் சிறுத்தைப் பொம்மையின் மேல் எறிந்தன. சிறுத்தைப் பொம்மை அசையாமலிருக்கவே, அவை பொம்மையைத் தாக்கி, சிம்பன்சிக் குட்டியை விடுவித்தன. விலங்குக் காட்சியகங்களில் மட்டுமே காணக் கூடிய அரிய விலங்காக மாறி விட்ட சிம்பன்சிக் குரங்குகள் எண்ணிக்கையில் குறைந்து விட்டன. அவை தம் இயற்கை வாழிடமான ஆஃபிரிக்காவின் காடுகளிலிருந்து அழிந்து போகும் நிலைக்கு வந்து விட்டன. மருத்துவ ஆய்வு விலங்குகளாகப் பயன்படுத்தப்படுவதாலும், வீட்டில் செல்லமாக வளர்ப்பதற்காகக் காட்டிலிருந்து பிடித்து வந்து வேட்டைக்காரர்கள் விற்பதாலும், சிம்பன்சிக் குரங்குகள் அருகி வருகின்றன. —துரை. சுந்தரமூர்த்தி