இலக்கணப் போலி
ilakkaṇap pōli
போலி என்பது போல அமைந்தது; உண்மை அல்லாதது என்றும் பொருளினைப் பொதுவாகக் கொண்டது.
போலி என்பது போல அமைந்தது; உண்மை அல்லாதது என்றும் பொருளினைப் பொதுவாகக் கொண்டது. இலக்கண நூலில் அது தனக்கெனச் சிறப்பானதொரு பொருள் கொண்டு விளங்குகிறது. மொழி அமைப்பிலிருந்து ஓர் உறுப்பு முன்பின்னாக மாறி அமைந்தாலும், ஒரு பகுதியோ முழுவதுமோ மருவி அமைந்தாலும் குழப்பமின்றி உரிய பொருளை மக்கள் மொழியை வழங்குகின்ற மரபின் ஆற்றலால் தருதலைப் போலி என்று இலக்கண நூலூர் வழங்குகின்றனர். காட்டாக, ஞாத்த, புறநகர் என்பனவற்றைச் சுட்டலாம். நகர, யகரங்கள் தமிழில் தனித்தனி ஒலியன்கள், யகரமுள்ள இடத்தில் ஞகரத்தையோ ஞகரமுள்ள இடத்தில் நகரத்தையோ இட்டு எழுதினால் பொருள் மாறிவிடும். ஆனால் மிக அருமையாக வழக்கின் ஆற்றலால் சிற்சில இடங்களில் சிற்சில எழுத்துகள் மாறிவரினும் பொருள் கெடுதல் இல்லை. ‘யாத்த’, ‘ஞாத்த’ என்ற சொற்களில் உள்ள யகர, ஞகர எழுத்துக்களின் மாற்றங்களால் பொருள் மாறவில்லை. இப்படியே, நகரினது புறம் என்ற பொருளில் நகர்ப்புறம் என்னும் தொடர் ‘புறநகர்’ என முன்பின்னாக மாறி அமைகிறது. எனினும் பொருளில் குழப்பம் ஏற்படவில்லை. ஆனால் நகரினது புறம் என்னும் ஆறன்தொகை புறத்தின் கண் நகரம் என ஏழன் தொகையாக மாறி அமைகிறது. இப்படி இலக்கண மாற்றம் ஏற்படினும் பொருளில் மாற்றம் ஏற்படவில்லை. இத்தகைய சொல் தொகை அமைப்புகளையே அதாவது ஓர் எழுத்துக்கு மற்றோர் எழுத்து அமைந்து பொருள் மாறா நிலையினையும் ஒரு தொகை முன்பின்னாக மாறி அமைந்தும் பொருள் மாறா நிலையினையும் போலி என்பதாகத் தமிழ் அறிஞர் குறித்தனர்.
இவ்விரு வகை மொழிப் போலிகளில் சொற்கள் முன்பின்னாக அமைந்து இலக்கணமரபில் மாறுபட்டாலும் வழக்காற்றலால் உரிய பொருளை வழங்குதலால் புறநகர் முதலியவற்றை இலக்கணப்போலி என்றனர். இதனை, ‘தகுதியும் வழக்கும்’ என்னும் நூற்பாவில் (தொல். சொல். 17) வழக்கின்கண் அடக்கித் தொல்காப்பியனார் கூறுவதாக இளம்பூரணரும் கல்லாடனாரும் குறிப்பர். அவர்கள் இதனை இக்கணத்தொடு பொருந்திய மருஉ வழக்கு என்பர்.
பவணந்தியார், நன்னூல் 267–ஆம் நூற்பாவில் வழக்கு இன்னது என்று விளக்கும்போது இலக்கணப் போலியினைக் குறிப்பிடுகின்றனர். நன்னூல் விருத்தியுரை ஆசிரியர் சிவஞானமுனிவர் இதனைத் தெளிவுபடுத்தும் வகையில், ‘இலக்கண நெறியால் வருவதனை இலக்கணமுடையது என்றும் இலக்கணமுடையதன்றிப் படைப்புக்காலத்து இலக்கணமுடையதோடு ஒருங்கு படைக்கப்பட்டது போலத் தொன்று தொட்டன்றி இடையே வருவதனை இலக்கணப் போலி என்றும், தொன்றுதொட்டன்றி இடையே இலக்கணஞ் சிதைந்து மரீஇயதனை மரூஉ என்றும்...’ என்று குறிப்பிடுவர்.
‘நகர்ப்புறம்’ என்பதனைப் ‘புறநகர்’ என்றும், ‘புறவுலா’ என்பதனை ‘உலாப்புறம்’ என்றும், ‘கண்மீ’ என்பதனை ‘மீகண்’ என்றும், ‘கோவில்’ என்பதனைக் ‘கோயில்’ என்றும், ‘பொதுவில்’ என்பதனை ‘பொதியில்’ என்றும் வழங்கும் இத்தொடக்கத்தன ‘இலக்கணப் போலி’ என்று எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குவர். எனவே, இலக்கணம் இல்லாததாயினும், இலக்கணமுடையது போலச் சான்றோரால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப்போலி என்று கூறலாம். தே.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 277)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sjpy87cg/
தமிழ்“இலக்கணப் போலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sjpy87cg/APA
Oliyon Research. (2026). இலக்கணப் போலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sjpy87cg/MLA
"இலக்கணப் போலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sjpy87cg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment