அங்காரகன்
aṅkārakaṉ
இவன் மங்களன், குகன், ஆரல் செவ்வாய் முதலிய வேறு பெயர்களைக் கொண்டவன்.
இவன் மங்களன், குகன், ஆரல் செவ்வாய் முதலிய வேறு பெயர்களைக் கொண்டவன். இவன் நவக்கிரக மண்டலத்தில் மூன்றாவதாக விளங்குகிறான். நவக்கிரக வழிபாட்டில் சூரியனுக்குத் தெற்கே இவனை மந்திர முறையால் அமர்த்தி வழிபடுவது மரபு. உடல், உடை, மாலை முதலியன சிவப்பாய் இருத்தலின் செவ்வாய் – செம்மீன் எனத் தமிழில் குறிக்கப்பட்டுள்ளான். வானில் இவன் தோற்றத்தை, ‘முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச் செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்’ என்று புறநாநூறு (60) குறிப்பிடுகிறது. நிலமகளால் வளர்க்கப் பெற்றவனாதலின் இவன் நிலமகளின் மகனாகக் குறிக்கப்பெறுகிறான். குகன், தராசுதன், பௌமன் என்பனவும் அக்காரணம்பற்றி இவனுக்கு அமைந்த பெயர்களாகும்.
உமை இறைவனை நீங்கியிருந்த காலத்தில் இறைவன் யோகத்தில் இருந்தார். அப்போது நெற்றிக் கண்ணில் வேர்வை அரும்பி நிலத்தில் விழுந்தது. அதிலிருந்து அங்காரகன் தோன்றி நிலமகனாய் வளர்க்கப்பெற்றான். அவன் கடும் தவம் செய்ய, அத்தவ மிகுதியால் உடம்பில் யோகாக்கினி தோன்றியது. அத்தவப் பயனாகக் கிரக நிலை எய்தினான்.
தக்கன் செய்த யாகத்தினை அழித்த வீரபத்திரர், மூவுலகையும் அழிக்க முற்பட்டபோது தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கத் தன் உருவினை மாற்றி அழகிய அங்காரகனாகத் திருமேனி பூண்டதாக மச்ச புராணம் கூறுகிறது.
இவன் பிரமனுக்குப் பூராடத்தில் தோன்றியவன் என்றும் ஏகாதர உருத்திரர்களில் ஒருவன் என்றும் சயத்தரதனுடன் பிறந்தவன் என்றும் கூறப்படுகிறான்.
அங்காரகன் நான்கு அருட் கைகளையுடையவன்; செம்மலரும் செவ்வுடையும் செம்மேனியுஞ் செவ்வாயுங் கொண்டவன்; வலக் கைகளில் அபயமும் சக்திப் படையுமுடையவன்; இடக் கைகளில் சூலமும் கதையும் கொண்டவன்; செம்மறியை ஊர்தியாகக் கொண்டவன்; செங்கொடியும் குடையும் உடையவன். சித்திரை, முதல் செவ்வாயில் இவனைச் சிறப்பாக வழிபடுவது மரபு. த.கோ
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 147)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sjp6z55r/
தமிழ்“அங்காரகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sjp6z55r/APA
Oliyon Research. (2026). அங்காரகன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sjp6z55r/MLA
"அங்காரகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sjp6z55r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment