இதன் தாவரவியல் பெயர் பில்லாந்தஸ் எம்பிளிகா (Phyllanthus emblica) ஆகும். இது இஃபோர்பியேசி என்னும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு எம்பிளிகா அஃபிசினேலிஸ் (Emblica officinalis) என்னும் வேறு பெயருண்டு. இதன் தாயகம் இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா ஆகும். இந்தியாவின் இலையுதிர் காடுகளில் தன்னிச்சையாகக் காணப் படும். வீட்டுத் தோட்டங்கள், தோப்புகளிலும் வளர்க்கப் படும். வளரியல்பு. நெல்லி 8–12 மீ. உயரம் வளரக் கூடியது. மரப் பட்டை தடிமனாகப் பிளவு பட்டுத் தகடு தகடாகப் பிரிந்து வரக் கூடியது. இலைகள். மாற்றிலையடுக்கு அமைப்பு; சிறகு வடிவக் கூட்டிலை. சிற்றிலைகள் 50 வரையில் இருக்கும். இலையடிச் செதில்கள் மிகச் சிறியவை. மஞ்சரி . இலைக் கோணக் கதிர் மஞ்சரி. சிறிய மலர்கள்; ஒரு பால் ஓரில்லப் பூக்கள். ஆண், பெண் மலர்கள் கலந்து காணப் படும். நுனியில் ஆண் பூக்களும், கீழே பெண் பூக்களும் அமைந்திருக்கும். பெண் பூக்களின் எண்ணிக்கை குறைவு. புல்லி வட்டம் மட்டுமே உண்டு. 6 மடல்கள்; மகரந்தத் தாள்கள் 3 இணைந்தவை. தேன் சுரப்பி உண்டு. சூலகம். 3 அறைகள் உள்ளன. சூல்கள், அறைக்கு 2 ஆக அச்சொட்டு முறையில் இருக்கும். கனி உள்ளோர் சதைக்கனி (drupe) ஆகும். விதைகள் முக்கோண வடிவம் கொண்டவை. சாகுபடி. பொதுவாக நெலலியை விதை மூலம் பெருக்கமடையச் செய்வர். போத்து, ஒட்டு, மொட்டிடுதல் மூலமும், இனப் பெருக்கம் செய்வதுண்டு. இம்மரத்திற்குப் பனி, வறட்சியைத் தாங்கும் திறன் இல்லை. பெரிய காய்களைக் கொண்ட இனம், வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப் படும். கவாத்து முறையில், வெட்டி எடுத்த போத்துகள் விரைவாகச் செழித்து வளரும். பூக்கள் கோடையில் தோன்றிக் குளிர் காலத்தில் காய்க்கும். சில சூழல்களில், இரண்டாம் பருவத்திலும் காய்கள் தோன்றுவதுண்டு; ஆனால், அவை தரமற்றவை. இளம் காய்கள் பச்சையாக இருந்து முதிர்ந்தவுடன், செங்கல் சிவப்பாக மாறும். காய்கள் துவர்ப்பாக இருக்கும். இவை ஊறுகாய் செய்ய, மிகச் சிறந்தவை. பயன். குஷ்ட நோயாளிகளுக்கு நெலலிக் கனி மிகச் சிறந்த மருந்தாகும். இதற்குக் காரணம், கனியிலுள்ள வைட்டமின் C மிக எளிதில் செரிக்கக் கூடிய நிலையில் இருப்பதேயாகும். இக்கனியிலிருந்து, வைட்டமின் C சத்தைப் பிரித்தெடுத்துப் படிகமாக்கும் ஆய்வு நடை பெறுகிறது. சித்த, ஆயுர்வேத நாட்டு மருத்துவத்தில் நெல்லிக் கனி சிறந்த மருந்தாகக் கருதப் படுகிறது. உலர்ந்த நெல்லிக் காயை வயிற்றுப் போக்கு, சீத பேதி, குருதிப் போக்கு, குருதிச் சோகை, மஞ்சட் காமாலை நோய்களுக்குப் பயன் படுத்துவர். திருபலா எனப் படும் மருந்தில் நெல்லி, கடுக்காய், தான்றிக் காய் மூன்றின் பொடியையும் பயன் படுத்துவர். தலை வலி, தலைச் சுற்றல், மலச் சிக்கலுக்கு இது மிகவும் ஏற்றது. நெல்லிக் கனியை எழுது மை (INK) மற்றும் தலை முடிச் சாயம் தயாரிக்கப் பயன் படுத்துவர். உலர்ந்த நெல்லிக் காயை, நெல்லி முள்ளி என்பர். இதை நீரில் ஊற வைத்துத் தேய்த்துக் குளித்தால், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். காய், பட்டை மற்றும் இலையில் டானின் பெருமளவில் உள்ளது. இலைகளும், காயும் கால் நடைத் தீவனமாகப் பயன் படும். இலையைக் கொண்டு, பட்டு நூல் சாயம் ஏற்றுவதுண்டு. பாக்கு, ஏலப் பயிர்களுக்கு இலை சிறந்த உரமாகும். நெல்லிக் கட்டை சிவந்த, நெருக்கமான கோடுகளோடு காணப் படும். இக்கட்டை உடையக் கூடியது; ஆனால், நீரில் உடையாமல் நிலைத்திருக்கும். —ஸ்ரீ. கணேசன்