இலாரெல், ஆர்டி என்னும் இரு நகைச்சுவை நடிகர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் புகழ்பெற்று விளங்கினர். இலாரெல் (Stan Laurel கி.பி. 1895–1965) கி.பி. 1895–ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். இவர் 1915–ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்று அங்குப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய சார்லி சாப்ளினிடம் மாணவராகச் சேர்ந்தார். ஆர்டி (Oliver Norvelle Hardy, கி.பி. 1892–1954) கி.பி. 1892–ஆம் ஆண்டு அமெரிக்காவில் சார்சியா மாநிலத்தில் பிறந்தார். இவ்விருவரும் தனித்தனியே ஆலிவுட்டில் பல ஆண்டுகள் நடித்து வந்தனர். இலியோ மக்காரி (Leo McCarey) என்னும் திரைப்படத் தயாரிப்பாளர் 1926–ஆம் ஆண்டு இவ்விருவரையும் இணைந்து நடிக்கச் செய்து திரைப்படம் தயாரித்தார். இலாரெல் மெலிந்த உயரமான உடலமைப்புக் கொண்டவர். ஆர்டி பருத்த உடலமைப்புக் கொண்டவர். இவர்களுடைய நகைச்சுவை நடிப்பு, உடல் அசைவு, முகபாவம் ஆகியவை காண்ப வரிடையே சிரிப்பை வரவழைக்கும். இது கோமாளி நகைச்சுவை (Slapstick Comedy) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நகைச்சுவை முறையில் இலாரெலும் ஆர்டியும் அனைத்துலகப் புகழ்பெற்றனர். இலாரெல் ஏதேனும் ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலைச் செய்து விட்டு அதன் விளைவுகளைக் கண்டு தம் உச்சந்தலையின்மீது விரல்களால் சொறிந்து கொண்டு நிற்கும் காட்சி எல்லா வயதினரிடையேயும் சிரிப்பை வரவழைத்தது. ஆர்டியின் முகத்தோற்றமும் பார்வையும் காண்போரைத் தம் கவலையை மறந்து சிரிக்கச் செய்தன. இவர்களுடைய நகைச்சுவை நடிப்பு, உரையாடலின் மூலம் நகைச்சுவையை வரவழைக்கும் முறையினின்றும் மாறுபட்டதாகும். ஆர்டி ‘அலி பேபு’ (Ollie Babe) என்று இரசிகர்களால் செல்லமாகக் குறிப்பிடப்பட்டார். இவர்கள் இருவரும் 1926–ஆம் ஆண்டிலிருந்து 1940–ஆம் ஆண்டு வரை இணைந்து நடித்து வந்தனர். பின்னர்த் தனித்தனியே ‘20–ஆம் செஞ்சுரி பாக்சு’, எம்.சி.எம். ஆகிய இரு திரைப்பட நிறுவனங்களில் நடித்து வந்தனர். இவர்கள் 1945–ஆம் ஆண்டு நடிப்பதை நிறுத்திவிட்டுப் பிரிட்டிசுத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். ஆர்டி 1954–ஆம் ஆண்டு இறந்தார். அதற்குப் பின், இலாரெல் சில ஆண்டுகள் வரையில் திரைப்படங்களுக்காக நகைச்சுவைக் காட்சிகளை எழுதி வந்தார். இலாரெல் 1965–ஆம் ஆண்டு காலமானார். இலாரெலும் ஆர்டியும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தனர். இவர்களுடைய நகைச்சுவை நடிப்பு முறை இலட்சக்கணக்கானவர்களால் விரும்பப்பட்டது. இம்முறை இலாரெல் ஆர்டி மரபு (Laurel & Hardy Formula) என்று வழங்கப்பட்டது. இவர்களுடைய நகைச்சுவை நடிப்பு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோராலும் விரும்பிக் கண்டுகளிக்கப்பட்டது. இவர்களுடைய நகைச்சுவையில் பால் கவர்ச்சி, காமத் தூண்டுதல் போன்ற விரும்பத்தகாத காட்சிகள் இடம் பெறாமல், மக்கள் மனத்தை மகிழ்விக்கும் திறன் இருந்ததே இவர்களுடைய அழியாப் புகழுக்குக் காரணமாகும். இவர்கள் நடித்த படங்களும் படப்பகுதிகளும் இன்னும் உலகின் பல நாடுகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. இலாரெலும் ஆர்டியும் இணைந்து நடித்த முதற்படம் ‘ஆலிவுடு குறிப்புகள்’ (Minutes from Hollywood) என்பதாகும். இவர்கள் இணைந்து நடித்த இறுதிப் படம் ‘அடால்–கே இராபின்சன் குருசோ’, உடோபியா (Atoll–K. Robinson Crusoe, Utopia) என்ற பல்வேறு பெயர்களைக் கொண்ட படமாகும். இப்படம் 1950–இல் வெளிவந்தது.