செர்ப்பென்டினைட்
cerppeṉṭiṉaiṭ
இது நுண்பரல் தன்மை மிக்க திண்ணிய பச்சை நிறமுள்ள மூலப் பாறையாகும், மூலத் தன்மை அல்லது அதிமூலத் தன்மையுள்ள பாறைகள் நீர்ம வெப்ப அல்லது நீராவி இயக்க மாற்றத்தால் மாற்றமடைந்து, செர்ப்பென்டினைட் (serpentinite) பாறைகளாகின்றன.
இது நுண்பரல் தன்மை மிக்க திண்ணிய பச்சை நிறமுள்ள மூலப் பாறையாகும், மூலத் தன்மை அல்லது அதிமூலத் தன்மையுள்ள பாறைகள் நீர்ம வெப்ப அல்லது நீராவி இயக்க மாற்றத்தால் மாற்றமடைந்து, செர்ப்பென்டினைட் (serpentinite) பாறைகளாகின்றன. இவ்வாறு பாறைகளைச் செர்ப்பென்டினைட் பாறைகளாக உருமாற்றும் இயக்கத்திற்குச் செர்ப்பென்டினாக்கம் என்று பெயர். பெரிடோடைட், சுண்ணாம்புப் பாறை மற்றும் டோலமைட் பாறைகள் செர்ப்பென்டினைட் ஆக்கமடைகின்றன. செர்ப்பென்டின் இயைபு 3Mg0–2SiO₂–2H₂O. செர்ப்பென்டினைட் பாறையில் பாறைக் கருத் திரளும் கனிமங்களும் செர்ப்பென்டினாக இருக்கும். எனவே, இது ஒரு தனிமப் பாறை வகையைச் சார்ந்தது.
கனிமமும், பாறையும் ஒரே வேதி இயைபை கொண்டவை. செர்ப்பென்டின் கனிமம், செர்ப்பென்டினைட் பாறையிலிருந்து சிறிது வேறுபட்டுக் காணப் படுகிறது. பாறையில் செர்ப்பன்டின் கனிமம் தனித்த முழுப் படிக உருவுடன் காணப்படுவதில்லை. செர்ப்பன்டின் பரல்கள் பாறையில் காணப் படும் போது, அவை அரைகுறையாக மாற்றமடைந்த முந்தைய பாறைக் கனிமத்தின் மாற்றமடையாத கனிம விளிம்புகளுடன் (போலிக் கனிம உருவங்களுடன்) காணப் படும்.
ஆலிவின் கனிமங்கள் பொதுவாகச் செர்ப்பெண்டினாக மாறுவதால், செர்பென்டினில் அரை குறை மாற்றமடைந்த ஆலிவின் உருவங்கள் தென்படும். சில சமயங்களில், ஆம்பிபோல்களும், பைராக்சினும், ஏனைய மக்னீசியம் நிறைந்த கனிமங்களும், செர்ப்பென்டினாக மாற்றமடையும். செர்ப்பென்டின் கனிமங்கள் ஒற்றைச் சரிவுடைய படிகத் தொகுதியைச் சேர்ந்தவை. அடர்த்தி 2.55; கடினத் தன்மை 2.5. ஒளி விலகல் எண்கள் 1.53–1.57 வரை வேறுபடும். இரட்டைக் கதிர் விலக்கம் 0.004–0.015 வரை வேறு படும். இக்கனிமங்கள் பச்சை, மஞ்சள், வெள்ளை நிறங்களில் உள்ளன. இக்கனிமத்தின் சீவல், நிறமற்ற தன்மையிலிருந்து பச்சை நிறம் வரை வேறுபடும்.
திண்ணிய செர்ப்பென்டினைட்டுகள் அடுக்குகளாகவும், நுழைவுப் பாறைகளாகவும், தூய செர்ப்பென்டினைக் கொண்ட ஒடுக்கமான திண்டுகளாகவும், படிகத் தன்மை வாய்ந்த படலப் பாறைகளில் காணப் படும். பெரும்பாலான செர்ப்பென்டினைட்டுகள், குறைந்த வெப்ப நிலை உரு மாற்றத்தால் உண்டாகின்றன. மலைத் தொடர்களிலுள்ள பெரிடோடைட், டூனைட் போன்ற ஆலிவின் கனிமம் நிறைந்த பாறைகள், நீர்ம. வெப்ப உரு மாற்றமடைவதால், செர்ப்பென்டினைட்டுப் பாறைகள் உண்டாகின்றன. மலைத் தோற்ற இயக்கங்களால் உண்டான ஸ்பிலிடிக் ஊடுருவல் பாறைகள்,, பெரிடோடைட், செர்ப்பென்டினைட்டுப் பாறைகள் ஆகியவை ஒஃபியோலைட்டுகள் எனப்படும். மலைத் தோற்ற இயக்கப் பகுதிகளில் ஒஃபியோலைட்டுப் பாறைகள் மிகவும் தொன்மையான பாறைக் குழம்பின் ஊடுருவல் இயக்கத்தைச் சார்ந்தவை என்று கருதப் படுகிறது. ஆல்பைன் பெரிடோடைட்–செர்ப்பென்டினைட்–ஒஃபியோலைட்டுப் பாறைகள் ஆழ்கடற் புவியோட்டில் உண்டானவை என்று கருதப் படுகிறது. அப்பகுதிகளுக்குள், கீழாக இருக்கும் புவியின் புறக் கரு மண்டலத்தின் மேற்பகுதியில் ஒரு சிறு பகுதி உருகி, உருகிய குழம்பு மேலே உள்ள பாறைகளில், புவி இயக்க அசைவுகளால் ஊடுருவி, ஒஃபியோலைட்டுகள் தோன்றியுள்ளன என்று கூறப் படுகிறது. இப்பாறைகள் பெரும்பாலும் உந்து விசைப் பிளவுத் தளங்களில் அமைந்து எரிமலை இயக்கங்களின் அடிப்படையாக உள்ளன.
குறைந்த அழுத்த நிலையில் மக்னீசியம் நிறைந்த போர்சுரைட் ஆலிவின் நீராவியுடன் கூடியிருக்கும் போது 400°C வெப்ப நிலைக்குக் கீழாக ஆலிவின், செர்ப்பென்டைன், புரூசைட்டாக மாற்றமடைகிறது. ஆனால், இருப்பு நிறைந்த ஆலிவின் இவ்வாறு குறைந்த வெப்ப நிலையில் மாற்றமடைவதில்லை. போர்சுரைட்டைப் போல எளிதாகச் செர்ப்பென்டைனாக மாறுவதும் இல்லை.
பெரும்பாலான பாறைகளில் அரை குறையாக மாற்றமடைந்த ஆலிவின் உருவைக் கொண்ட (போலி உருவங்கள்) செர்ப்பென்டைன்கள் காணப் படுகின்றன. செர்ப்பன்டைன் கனிமங்களில் காணப் படும் ஆலிலின் உருவச் சுவடுகள், ஒரு வித வலை போன்ற பின்னலை உருவாக்குகின்றன. வேறு சில பாறைகளில், பச்சை நிறமுள்ள நார்த் தன்மை கொண்ட கிரிசோடைல் கனிமங்கள் உண்டாகின்றன. சில பாறைகளில், தகடுகளான ஆன்டிகோரைட் செர்ப்பென்டைன் கனிமங்கள் இழுவை, அழுத்த விசையால் தோன்றுகின்றன. சில சமயங்களில், ஆன்டிகோரைட் தகடுகள் நார்க் கட்டுகளாகப் பல வேறுபட்ட நிலைகளில் அமைந்திருக்கும்.
செர்ப்பென்டினாக்கத்தால் உண்டான செர்ப்பென்டைன் கனிமங்கள், அவற்றின் படிகத் தன்மையின் அளவைப் பொறுத்து, இலிசார்டைட்டு ஆன்டிகோரைட் எனப் பெயர் பெறுகிறது. கிரிசோடைல் கல் நார்களை உடைய பாறைக் கருத் திரள் பகுதிகள், செர்ப்பென்டினைட்டுப் பாறைகள் உண்டாகும் போதே, உருவாகின்றன அல்லது பாறைகள் உண்டான பின், பாறையில் காணப்படும் வெடிப்பு மற்றும் விரிசல் தளங்களில் சுழற்சியுறும் நீர்ம வெப்ப நீர்மங்களிலிருந்து படிந்து உருவாகின்றன. பாறைக் கருத் திரளிலும், விரிசல் தளங்களிலும், நார் போன்ற கிரிசோடைல் உட்புறமாகக் குழாய் போன்று வளர்கிறது. நார் போன்ற செர்பென்டைன் கனிமங்களே, கிரிசோடைல் கல் நார் எனப் படும். இக்கல் நாரில் 95% விற்பனைக்கு அனுப்பப் பட்டுப் பல தொழில் துறைகளிலும் பயன் படுகிறது. இதன் தகைவு வலிமை மிகுதியானதால், இது நெய்யப் பட்டுக் கல் நார்ப்பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன. தகடுகள் போன்ற ஆன்டிகோரைட் விலை குறைந்தது. செர்பென்டினைட்டுப் பாறைகளைச் சீவல்களாகவும், பலகைகளாகவும், எளிதாக அறுத்து, மெருகேற்றி, விலை மதிப்புள்ள கற்களாகப் பயன் படுத்துகின்றனர்; சுவர்களில் பதிக்கின்றனர்.
கிரிசோடைல் கல் நார் ஆந்திரத்தில் கடப்பை மாவட்டத்தில், புலிவெண்டுலா வட்டத்தில் மிகுதியாகக் கிடைக்கிறது. இப்பகுதியில் 15000 மீ. நீளமும் 1–3 மீ. உயரமுடை ய செர்பென்டைன் நிறைந்த மக்னீசிய சுண்ணாம்புக் கற்கள் உள்ளன. இவற்றில், கிரிசோடைல் கனிமப் பொருள் உள்ளமை அறியப் பட்டுள்ளது. மிகப் பெரிய அளவு கிரிசோடைல் கனிமத்தைக் கொண்ட அதி மூலப் பாறைகள் குபெக்கிலுள்ள தெட்போர்டு பகுதியிலும், தென் ஆஃப்ரிக்கா, சோவியத் ஒன்றியக் குடியரசு ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. —இரா. இராமசாமி நூலோதி. A.N. Winchell and H. Winchell, Elements of Optical Mineralogy, Wiley Eastern Private Ltd, New Delhi, 1968.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 825)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sdzyfvfc/
தமிழ்“செர்ப்பென்டினைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sdzyfvfc/APA
Oliyon Research. (2026). செர்ப்பென்டினைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sdzyfvfc/MLA
"செர்ப்பென்டினைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sdzyfvfc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment