நெட்டாங்கு மாறிடும் போது, சராசரி கதிரவன் வழிக் காலமும் மாறுதல் அடைவதால் விளையும் சிக்கல்களைத் தவிர்க்க, மண்டலக் காலம் அல்லது நேர வட்டாரம் (time Zone) பயன் படுத்தினர். 1878ஆம் ஆண்டில் மண்டலக் காலம் என்னும் கருத்தை உருவாக்கியவர் சாண்ட்ஃபோர்டு ஃபிளமிங் என்பார் ஆவார். புவியின் மேற்பரப்பு 24 கால மண்டலங்களாகப் பிரிக்கப் படுகிறது. ஒவ்வொரு மண்டலமும் 15° நெட்டாங்கை உள்ளடக்கியதாகும். கால மண்டலம் இங்கிலாந்திலுள்ள கிரீன்விச்சிலிருந்து 15° (ஒரு மணி) மற்றும் அதன் முழுவெண் மடங்கிலுள்ள உச்சி வட்டத்தை மையமாகக் கொண்டிருக்கும், இவ்வாறாக, ஒவ்வொரு கால மண்டலமும், தோராயமாக 15° அகலமுடையதாகவும் 0°, 15°, 30° … … என்னும் நியம நெட்டாங்கை மையமாகக் கொண்டதாகவும் அமைகிறது. கால மண்டலம் ஒவ்வொன்றிலும் கையாளப்படும் காலம் அதன் நியம உச்சி வட்டத்தில் அமையும் சராசரி கதிரவன் வழிக் காலமாகக் கொள்ளப் படும். ஒவ்வொரு மண்டலத்தையும் குறிக்க, ‘மண்டல எண்’ எனப் படும் ஓர் எண்ணைப் பயன் படுத்துகின்றனர். இம்மண்டலத்தின் மைய உச்சி வட்டம் கிரீன்விச்சிலிருந்து மேற்கு அல்லது கிழக்குப் புறத்தில் எத்தனை மணிக்குள் அமைகிறதோ, அந்த மணிக்கான எண்ணேயாகும். மேற்குப் புற நெட்டாங்கிலுள்ள மண்டலத்திற்குக் மிகை குறியையும் கிழக்குப் புறத்திற்கு குறை குறியையும் (negative sign) பயன்படுத்துவர். மேலும், கிரீன்விச் உச்சி வட்டத்தில் அமையும் பூஜ்ய மண்டலம் இரண்டாகப் பிரிக்கப் படுகிறது. 7.5° கிழக்கிலிருந்து பூஜ்யம் வரையிலான மண்டலத்தை -0 மண்டலம் எனவும், 0- லிலிருந்து 7.5° மேற்கு வரையிலான மண்டலத்தை +0 மண்டலம் எனவும் குறிப்பிடுவர். இவ்வாறே 180°-ஐ மையமாகக் கொண்ட மண்டலம், 172.5° மேற்கு முதல் 180° வரை +12 மண்டலம் என்றும் 180° முதல் 172.5° கிழக்கு வரை -12 மண்டலம் என்றும் பிரிக்கப் படும். அலுவலகப் பயன்பாட்டிற்காக, மண்டலக் காலம் 0 முதல் 24 மணி வரை கணக்கிடப் படுகிறது. மணி மற்றும் நிமிடத்தில் குறிப்பிடப் படும் காலம் பொதுவாக, நான்கிலக்கம்–அதனைத் தொடர்ந்து மண்டல எண் என்றவாறாகக் குறிக்கப் படுகிறது. எடுத்துக் காட்டாக, 1009 மண்டலம் 5-' என்பது கிரீன்விச்சின் மேற்கில் 75° இல் அமைந்த மண்டல நேரத்தைக் குறிப்பதாகும். நாகரீகம் மிகுந்த நாடுகள் மண்டல நேரத்தைப் பயன் படுத்துகின்றன. கப்பலிலும், வானூர்தியிலும் இத்தகைய 24 மணி அமைப்பைப் பயன் படுத்துகின்றனர். அமெரிக்காவில் ராணுவத்தில் அனைத்துப் பிரிவுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் இதனையே பயன் படுத்துகின்றனர். —கு. மணிவாசகன்