சாணை பிடித்தல்
cāṇai piṭittal
தொழிற்சாலை யுகம் தொடங்கிய போது வெட்டிரும்பு என்பதே உலோகத்தை வெட்டப் பயன்பட்டது.
தொழிற்சாலை யுகம் தொடங்கிய போது வெட்டிரும்பு என்பதே உலோகத்தை வெட்டப் பயன்பட்டது. இதிலிருந்து படிப்படியாக, ஒரு முனைப் பொறி போன்றவை தோன்றின. ஆயினும் இவையனைத்தும் மந்தமான மேற்பரப்பைத் தோற்றுவித்தன. பல் முனை வெட்டும் பொறியான சாணைச் சக்கரத்தைக் கொண்டு உலோகங்களை வெட்டுவதே சாணை பிடித்தல் எனப்படுகிறது. சாணை பிடித்தல் என்பது பொதுவாக 0.25 -0.50 மி.மீ. அளவிற்கு உலோகத்தைச் சாணைச் சக்கரத்தைக் கொண்டு நீக்குவதே ஆகும்.
சாணை பிடித்தலைச் சில சமயங்களில் முக்கிய உலோகம் அகற்றும் பணிகளில் பயன்படுத்தினாலும், வழக்கமாக இறுதிப் பணிகளிலேயே இது பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் வகையைச் சார்ந்து இதன் அளவு 0.000025 மி.மீ. வரை மாறுபடும். சாணை பிடித்தல் என்னும் முறை ஒருங்கிணைக்கப் பட்ட கார்பைடு (cemented carbide). கல் போன்ற கடினமான பொருள்களுக்கும் ஏற்றது. ஏனெனில், வழக்கத்திலுள்ள சாணை பிடிக்கும் சுரண்டிகள் (abrasives) வினை செய்ய வேண்டிய உலோகங்களை விட மிகவும் கடினத் தன்மை வாய்ந்தவையாக இருக்கும்.
சாணைச் சக்கரங்கள், சுரண்டும் துகள்களாலும, கட்டாற்றல் மிக்க பொருள்களாலும் ஆனவை. சிலிக்- கான் கார்பைடு, அலுமினியம் ஆக்சைடு போன்றவை பெரும்பாலும் சுரண்டிகளாகப் பயன்படும். இந்தச் சுரண்டிகள் சாணைச் சக்கரத்தில் கட்டாற்றல் மிக்க பொருள்களால் நன்கு பதிக்கப்பட்டு வெட்டு முனைகளாகப் பயன்படுகின்றன. இயற்கைச் சுரண்டிகள், செயற்கைச் சுரண்டிகள் எனச் சுரண்டிகள் இரு வகைப்படும். எமரி, குருந்தம் போன்றவை இயற்கைச் சுரண்டிகளுக்கும், கார்போரண்டம். அலாக்சைட் போன்றவை செயற்கைச் சுரண்டிகளுக்கும் எடுத்துக்காட்டுகளாகும்.
கட்டாற்றல் மிக்க பொருள்கள், சுரண்டித் துகள்களைக் கலவையாகச் சக்கர வடிவங்களில் வைத்திருக்கத் தக்கவையாகும். சுரண்டிகளில் சிலிக்கான் கார்பைடு படிகங்கள் கடினத் தன்மையும், எளிதில் விரிசல் அடையும் தன்மையும் கொண்டவை. ஆதலால், குறைந்த இழுவைத் திறன் கொண்ட அலுமினியம், பித்தளை, செம்பு போன்ற பொருள்களுக்குப் பயன்படுகின்றன. மேலும் கடினத் தன்மையும், உடையும் தன்மையும் கொண்ட கடின உலோகக் கலவை ஒருங்கிணைந்த கார்பைடு, பழுப்பு இரும்பு, பளிங்குக் கல் போன்ற பொருள்களுக்குப் பயன்படுகின்றன. அலுமினியம் ஆக்சைடு படிகங்கள் கடினத் தன்மையும், விரிசல் அடையாத் தன்மையும் கொண்டவை. ஆதவால், அதிக இழு திறன்கொண்ட கலப்பு உலோகக் கலவை எஃகு இரும்பு போன்ற பொருள்களுக்குப் பயன்படும். தற்போது பயனில் உள்ள பொருள்களாவன: லிட்ரிஃபைடு, சிலிக்கேட், ரப்பர், ரெசினாய்டு ஷெல்லாக் போன்றவை.
பயன்படுத்தும் சுரண்டிகளைக் கொண்டும் (சிலிக்கான் அல்லது அலுமினியம்), துகளின் உருவைக் கொண்டும், துகள் வகை அல்லது கடினத் தன்மை, அமைப்பு (அடர்த்தி) இவற்றைக் கொண்டும் சாணைச் சக்கரங்களை வகைப்படுத்தலாம்.
அதிகமான உலோகத்தை நீக்க வேண்டியிருப்பின், பருமையான சாணைச் சக்கரத்தையும், சிறந்த பரப்பு வேண்டியிருப்பின் நுண் துகள் சாணைச் சக்கரத்தையும் பயன்படுத்த வேண்டும். மென்மையான உலோகத்தைச் சாணை பிடிக்க மிகு கட்டாற்றல் மிக்க சாணைச் சக்கரமும், கடினமான உலோகத்தைச் சாணை பிடிக்க, குறைந்த கட்டாற்றல் மிக்க சாணைச் சக்கரமும் பயன்படுகின்றன. மென்மையான உலோகத்தைச் சாணை பிடிக்கும் போது, பொறியை ஆழமாகப் பயன்படுத்த வேண்டியிருப்பதால், மிகு கட்டாற்றல் மிக்க துகள் கொண்ட சாணைச் சக்கரத்தையும், கடினத் தன்மை வாய்ந்த உலோகத்தைச் சாணை பிடிக்கும் போது, குறைந்த கட்டாற்றல் மிக்க துகள் கொண்ட சாணைச் சக்கரத்தையும் பயன்படுத்த வேண்டும்.
சாணைச் சக்கரத் தயாரிப்பில் உள்ள முக்கிய வழி முறைகள். முதலில் தூளாக்கப்பட்ட சுரண்டிப் பொடியைக் காந்தப் பிரிப்பான் வழியாகச் செலுத்தி இரும்பு மாசுகளை நீக்கிய பிறகு, தூசு போன்ற மாசை நீர் மூலம் கழுவி நீக்க வேண்டும். பல விதமான சல்லடைகள் வழியாகச் சுரண்டித் துகள்களைச் செலுத்திய பின் அளவுக்குத் தக்கவாறு துகள் வகைப் படுத்தப்படும். தகுந்த கட்டாற்றல் மிக்க பொருள்களைச் சுரண்டித் துகளுடன் கலந்து தகுந்த வடிவங்களில் வார்த்து உலர்த்த வேண்டும், நன்கு உலர்ந்ததும், இவை வெப்பப்படுத்தப் படுவதால், கட்டாற்றல் மிக்க பொருள்கள் சுரண்டித் துகள்களை நன்கு இறுகுமாறு பொருத்திக் கொள்கின்றன. முடிவில் தகுந்த வடிவத்தில் வெட்டப்பட்டுப் பயன்படுத்தப் படுகின்றன.
சாணை பிடிப்பில், சாணைச் சக்கரம் உயர் வேகத்தில் சுழல வேண்டியிருப்பதால், சக்கரத்தில் எவ்வித விரிசலும் ஏற்படக் கூடாது. அதற்காக நீரியல் ஆய்வுகளுக்குச் சாணைச் சக்கரங்கள் உட்படுத்தப்படுகின்றன. மேலும், இவை நிலையான மற்றும் சுழற்சி நிலையில் நன்கு சமன் செய்யப்பட்ட பின்பே பொறிகளில் பொருத்தப்படுகின்றன.
சாணை பிடிக்கும் போது உண்டான வெப்பத்தை வெளியேற்றவும், சாணைச் சக்கரங்களிலிருந்து விழும் சுரண்டித் துகளை நீக்கவும், குளிரூட்டும் (coolant) நீர்மம்-சோடா கலந்து பயன்படுத்தப்படும். துருப் பிடிக்கக் காரணமாக இருப்பதால், நீர் பயன்படுத்தப்படுவதில்லை. அடிக்கடி குளிர்வடையும் நீர்மத்திலிருந்து சுரண்டித் துகள்கள் வடி கட்டப்பட்டுப் பின் மீண்டும் நீர்மம் பயன்படுத்தப்படும்.
சாணை பிடிப்புச் சக்கரம் கொண்டு உலோகத்தை அரைத்தெடுக்கும் முறைக்குச் சாணை பிடித்தல் அல்லது அரைப்புச் செயல் (grinding) என்று பெயர். பொதுவாக மிகத் துல்லியமான அளவும், பளபளப்பான தோற்றமும் கிடைப்பதற்குச் சாணை பிடித்தல் முறை கையாளப்படும். தேவையான பரப்புகளிலும் பொறிப் பணி செய்ய முடியாத மிகச் சிக்கலான பரப்பில் பொறிப் பணி செய்யவும் சாணை பிடித்தல் பயன்படும். பொதுவாக 0.25-0.5 மி.மீ. அளவே சாணை பிடித்தல் மூலம் குறைக்கலாம். 0.000025 மி.மீ. துல்லியம் வரை சாணை பிடிக்க முடியும். அனைத்து வகை உலோகங்களிலும், சாணை பிடிப்புச் செய்யப்படுகிறது. வேலையின் நுட்பத்தைப் பொறுத்து இரு பெரும் பிரிவுகளாக இதை வகைப்படுத்தலாம்.
நுணுக்கமில்லாமல் சாணை பிடித்தல். இது அளந்து பார்த்து நுணுக்கமாகச் சாணை பிடிக்காமல் தோராயமாகச் சாணை செய்வதைக் குறிக்கும். இதற்குப் பயன்படும் சாணைப் பொறிக்கு நுணுக்கமற்ற சாணைப் பொறி என்று பெயர். இதற்கு, பணி மனையில் சிறுமேடையில் அமைக்கப்படும் சாணைப் பொறி (bench grinding) அல்லது தரையில் நிலைப்- படுத்தப்படும் சாணைப் பொறி (pedestal grinder) பயன்படும். எளிய சாணை பிடிப்பு அமைப்பு, படம் 1 இல் விளக்கப்பட்டுள்ளது.
தரையில் நிற்கும் சாணைப் பொறி என்பது தாங்கும் பாலம் ஒன்றில் பொருத்தப்பட்ட சிறிய அமைப்பாகும். இதன் சுழல் தண்டு (spindle) கிடை நிலையில் இருக்கும். ஒரு முனையில் மென்மையான சாணைச் சக்கரம் (smooth grinding wheel) பொருத்தப் பட்டி ருக்கும். பொதுவாக ஒற்றை முனை வெட்டுளிகளைச் (single point tool) சாணை பிடிக்கவும், வார்ப்பு (casting) உருவங்களிலுள்ள உலோகப் பிசிறுகளை நீக்கவும் இது பயன்படும்.
மேலும் நெகிழ் சாணைப் பொறி (flexible grinder),ஊசலாடும் சாணைப் பொறி (swing frame grinder), சாணைப் பட்டைச் சாணைப் பொறி (abrasive belt grinder) எனப் பலவகையான நுணுக்கமற்ற சாணைப் பொறிகள் பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன.
நுணுக்கமான சாணை
மிக நுணுக்கமான அளவிற்குச் சாணைச் செயல்புரிவதை இது குறிக்கும்.
உருளை வடிவச் சாணைப் பொறி (cylindrical grinder).
இது பணிப் பொருளைப் பிடித்துக் கொண்டு சுழலச் செய்வதற்கு ஏற்ற அமைப்பாகும். கடைசல் பொறியிலுள்ள பணிப் பொருளைப் பிடித்துச் சுழலச் செய்யும் தலைப் பகுதி போன்றது. தலைப் பகுதியிலுள்ள சுழற்றியின் பிடிப்பில் தாங்கி முனை பொருத்தி வேலை செய்யலாம். இதில் சுழற்றியின் வேகத்தை மாற்றி அமைக்கும் வசதி உள்ளது. தலைப்பகுதியைத் தேவைக்கேற்பக் குறிப்பிட்ட கோணத்திற்குத் திருப்பியும் அமைக்கலாம். சுழற்றியின் வேகம் நிமிடத்திற்கு 20-30 மீ வரை இருக்கும்.
உட்பக்கச் சாணை பிடித்தல். இது உட்பக்கமாகச் சரிவற்ற, சரிவுள்ள, உருளை வடிவுடையவற்றின் சுற்றுப் பரப்பைச் சாணை பிடிப்பதாகும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> பரப்புச் சாணை பிடித்தல். கிடை நிலையாகவோ, செங்குத்தாகவோ, சாய்வாகவோ அமைந்துள்ள தட்டையான வெளிப் பரப்பைச் சாணை பிடிப்பதற்குப் பரப்புச் சாணை பிடித்தல் என்று பெயர்.
வெட்டுளி மற்றும் வெட்டுக் கருவிச் சாணை பிடித்தல், பணிமனையில் பயன்படுத்தப்படும் துளைக் கரண்டி, வெட்டுக் கருவி, துளையிடும் அலகு (drill bit),மரையிடு உளி (tap) போன்ற பலமுனை வெட்டுளிகளைச் சாணை பிடிக்கலாம். மேலும் அச்சுக் கருவி (gauge), நுணுக்க அளவிகள் (micrometer) போன்றவற்றைச் சாணை பிடிக்கவும் மிகவும் பயன்படும்.
வெளிப்பக்க உருளை வடிவங்கள் சாணை பிடித்தல். வெளிப் பக்கத்தில் உருளை வடிவமாகவும், சரிவு உருளை வடிவமாகவும் சாணை பிடிக்க இவ்வகைப் பொறி பயன்படும். குறுக்கே நகர்த்திச் சாணை பிடித்தல் என்பது சக்கரத்தின் அகலத்தை விட நீளமான உருளை வடிவத்தைச் சாணை செய்தலைக் குறிக்கும். இதில் சாணை பிடிப்பு மேடை, இடப்பக்கமும, வலப்பக்கமும் மாறி மாறி நகரும். சக்கரத்தைப் புகுத்திச் சாணை பிடித்தல் (plunge grinding) என்பது சாணைச் சக்கரத்தை விட அகலம் குறைவான பகுதியில் சாணை பிடிப்பதைக் குறிக்கும். பணிப் பொருள் இருந்த இடத்தில் சுழன்று கொண்டே இருக்கும். சாணை பிடிக்கும் சக்கரத்தை மட்டும் முன்னோக்கி நகர்த்திச் சாணை பிடிக்கலாம். மேலும், முகப்புச் சாணை பிடித்தல் (face grinding), தடுக்கு முகப்புச் சாணை பிடித்தல் (shoulder grinding), வடிவச் சாணை பிடித்தல் (form grinding) எனப் பலவகையுண்டு. —கே.ஆர். கோவிந்தன்
நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Hand Book, McGraw-Hill Book Company, London, 1964.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 43)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sazeq5cg/
தமிழ்“சாணை பிடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sazeq5cg/APA
Oliyon Research. (2026). சாணை பிடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sazeq5cg/MLA
"சாணை பிடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sazeq5cg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment