1935 ஆம் ஆண்டில் ஏ.ஜி. டான்சிலி என்பார் சூழ்நிலை மண்டலம் (ecosystem) எனும் சொல்லை உருவாக்கினார். இம்மண்டலம், பலவாறாக வரையறை செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை மண்டலம் என்பது உயிரற்ற பொருள்களாகிய நீர், நிலம், வெப்பம், ஒளி ஆகியவையும், உயிருள்ள பொருள்களாகிய தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவையும் ஒரே சூழ்நிலையில் கூட்டாகக் காணப்படும் தன்மையாகும். புவி ஒரு பெரும் சூழ்நிலை மண்டலமாக விளங்குகிறது. இப்பெரும் சூழ்நிலை மண்டலம், நிலச் சூழ்நிலை மண்டலம் (terrestrial ecosystem), நீர்ச் சூழ்நிலை மண்டலம் (aquatic ecosystem) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிலச் சூழ்நிலை மண்டலம் காடு, பாலைவனம், புல் வெளி, பயிர் நிலம், மலை போன்ற பல்வேறு கிளைச் சூழ்நிலை மண்டலங்களைக் கொண்டுள்ளது. இதே போல், நீர்ச் சூழ்நிலை மண்டலம், நன்னீர், உப்பு நீர், கழிமுகச் சூழ்நிலை மண்டலங்களைக் கிளைச் சூழ்நிலை மண்டலங்களாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்திலும் பல நுண் சூழ்நிலை மண்டலங்கள் (microecosystem) காணப் படுகின்றன. ஒரு செடியின் தண்டுப் பகுதி, இலை, வேர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நுண் சூழ்நிலை மண்டலமாகும். மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைச் சூழ்நிலை மண்டலங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு விமானத்தின் உட்பகுதியும் சூழ்நிலை மண்டலமாகும். ஓர் அறிவியல் ஆய்வகம், ஒரு மீன் வளர்க்கும் தொட்டி ஆகியவற்றையும் சூழ்நிலை மண்டலம் எனலாம். சூழ்நிலை மண்டலங்கள் பலவகைப் படினும் அவை ஒவ்வொன்றும் அமைப்பு, செயல்பாடுகளில் ஒற்றுமையுடன் விளங்குகின்றன. சூழ்நிலை மண்டலங்களின் பொதுப் பண்புகள். ஒவ்வொரு சூழ்நிலை மண்டலமும், உயிருள்ள மற்றும் உயிரற்ற ஆக்கக் கூறுகளால் ஆனது. சூழ்நிலை மண்டலத்தின் அமைப்பும், செயல்பாடும் பல்வகைக் காரணிகளால் கட்டுப்படுத்தப் படும். ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்திலும், ஆற்றல் சுழற்சி (energy cycle) நடைபெறுகிறது. இச்சுழற்சி, ஆற்றல் அழிவற்றது என்னும் வெப்ப இயக்கவியல் விதிப்படி நடைபெறுகிறது. ஒவ்வொரு சூழ்நிலை மண்டலமும், நாளடைவில் முதிர்ச்சி அடைகிறது. தொடக்கத்தில் சிக்கல் குறைந்த அமைப்பாகத் தோன்றும் சூழ்நிலை மண்டலம், கால ஓட்டத்தில் சிக்கலாகி விடுகிறது. சூழ்நிலை மண்டலத்தின் ஆக்கம். சூழ்நிலை மண்டலத்தின் உயிரற்ற கூறுகள், கரிம மற்றும் கனிமக் கூட்டுப் பொருள்களாகும். அமினோ அமிலங்கள், ஹீயூமிக் அமிலங்கள் ஆகியன கரிமப் பொருள்களாகும். பாஸ்ஃபரஸ், கந்தகம், நைட்ரஜன், கார்பன் ஆகியன கனிமக் கூட்டுப் பொருள்களாகும். சூழ்நிலை மண்டலத்தின் முக்கிய உயிரற்ற காரணிகளாக (abiotic factors) மண், காற்று, வெப்பம், ஒளி, தாதுப் பொருள்கள் ஆகியன கருதப் படுகினறன. சூழ்நிலை மண்டலத்தின் உயிருள்ள ஆக்கக் கூறுகளாகப் பாக்டீரியா, தாவரம், விலங்கு ஆகியன உள்ளன. சூழ்நிலை மண்டலத்தை, அவற்றின் செயற்பாட்டிற்கு ஏற்ப, சிதைப்பவை ((decomposers), உற் பத்தியாளர் (producer), நுகர்பவை (consumer) என்று பெயரிட்டுள்ளனர். சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றல் அம்மண்டலத்தில் காணப்படும் உற்பத்தியாளர் எனப்படும் தாவரங்களாலேயே உற்பத்தி செய்யப் படுகிறது. இம்மண்டலத்திலுள்ள தன்னூட்ட உயிரிகளாகிய (autotrophs) தாவரங்கள், பச்சையம் கொண்டுள்ள பாக்டீரியாக்கள் ஆகியன எளிய கனிமப் பொருளைக் கொண்டு, சூரிய ஒளி ஆற்றலால், பச்சையங்கள் மூலம் சிக்கலான உணவுப் பொருள்களைத் தயாரிக்கின்றன. எனவே இவற்றைச் சூழ்நிலை மண்டலத்தின் முதன்மை உறுப்பினர் என்பர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> தாவரங்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும் தாவர உண்ணிகளை (herbivores) முதன்மை நுகர்பவை அல்லது முதல் நிலை விழுங்கிகள் (primary consumer) என்பர். தாவர உண்ணிகளைக் கொன்று தின்னும் விலங்குகளை இரண்டாம் நிலை நுகர்பவை என்றும், இவ்விலங்குகளைக் கொன்று தின்பவற்றை மூன்றாம் நிலை நுகர்பவை (tertiary consumer) என்றும் கூறுவர். இவ்வகை நுகர்பவையின் கழிவுப் பொருள்களை, வளரும் தாவரங்களுக்கேற்ற கனிம, கரிமப் பொருள்களாக மாற்றுபவையைச் சூழ்நிலை மண்டலத்தின் மாற்றிகள் (transformers) என்று குறிப்பிடுவர். இவற்றாலேயே, சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றலும், சத்துப் பொருள்களும் மறு சுழற்சி அடைகின்றன. தயாரிப்பவையாகிய தாவரங்களும், நுகர்பவையாகிய விலங்குகளும் இறந்து, மண்ணில் விழும் போது, இவற்றைத் தாக்கி அழித்து, சிக்கலான கூட்டுப் பொருள்களைச் சிதைக்கும் எளிய பொருளாகச்சில சாறுண்ணிகளும், பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் செயல்படுகின்றன. இவற்றை, சூழ்நிலை மண்டலத்தைச் சிதைப்பவை என்பர். சூழ்நிலை மண்டலத்தில் காணப்படும் தயாரிப்பாளரான தாவரங்கள், நுகர்பவையான விலங்குகள், சிதைப்பவை, மாற்றிகளின் எண்ணிக்கையில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்தின் சூழ்நிலை அமைப்புப் பிரமிடுகள் (ecological pyramids) வரையப்படுகின்றன. சூழ்நிலை மண்டலப் பிரமிடுகளின் அமைப்பைக் கொண்டு, அச்சூழ்நிலை மண்டலத்தின் வளர்ச்சியையும், அழிவையும் ஊகிக்கலாம். சூழ்நிலை மண்டலத்திற்கு எடுத்துக் காட்டாக, ஒரு நன்னீர்க் குட்டையையோ, குளத்தையோ, ஏரியையோ காணலாம். இச்சூழ்நிலை மண்டலத்திலுள்ள உயிரற்ற பொருள்களின் கூறாக நீர், நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு, பாஸ்ஃபேட், நைட்ரேட், குளோரைடு உப்புகள், பல வகைப் பட்ட அமினோ அமிலங்கள், ஹியூமிக் அமிலம் ஆகியன உள்ளன. உயிர்ப் பொருள்களின் கூறுகளாகப் பல்வகைப் பட்ட உயிரிகளைக் காணலாம். இச்சூழ்நிலை மண்டலத்திலுள்ள தயாரிப்பாளர், இந்நீரில் மிதந்து கொண்டிருக்கும் பலவகைத் தாவரங்களும், தாவர மிதவை உயிரிகளும் (phytoplanktons) ஆகும். விலங்கு மிதவை உயிரிகள் (zooplanktons) முதல் நிலை நுகர்பவையாக, இந்நீர்ச் சூழலில் உள்ளன. இம்மிதவை உயிரிகளைத் தின்று வாழும் மீன்கள், மெல்லுடலிகள் ஆகியன இரண்டாம் நிலை நுகர்பலையாகும். இம்மீன்களையும், மெல்லுடலிகளையும் தின்று வாழும் பாம்புகள் மூன்றாம் நிலை நுகர்பவையாகும். இச்சூழ்நிலை மண்டலத்தில் இறந்து போகும் தாவர, விலங்கு உயிர்களைத் தாக்கி அழிக்கும் சாறுண்ணிகளும், பூஞ்சைகளும் இம்மண்டலத்தைச் சிதைப்பவையாகும். இவை அழியும் பொருள்களின் ஆற்றலை மண்ணுக்கு மாற்றுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —கோவி. இராமசுவாமி