நுண்ணுயிரித் தாக்கம் குருதி ஓட்டத்தை அடைந்தால், அதற்கு நுண்ணுயிரிக் குருதி (bacteremia) எனப் பெயர். இந்நுண்ணுயிரிகள் குருதியிலேயே இனப் பெருக்கமடைந்தால், அது சீழ்க் குருதி எனப் பெறும். மேலும், பரவி எலும்பு, கல்லீரல், மூளை, இதயம் ஆகியவை தாக்கமுறலாம். கிராம் எதிர் நுண்ணுயிரிகள், குருதியில் மிகையாகக் காணப்பட்டால், அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்நுண்ணுயிரிகளிலிருந்து வெளிப் படும் அக நச்சு (endotoxin) செல் சுவர்களைப் பாதித்து, ஹிஸ்டமின், பிராடிகினின் போன்ற பொருள்களை வெளிப் படுத்திக் குருதி நாள நலிவை உண்டாக்கும். முதலில் தோன்றும் காய்ச்சல், திடீர் குருதி ஓட்டத்தின் தளர்வால் உண்டாகும் மிகக் குறை வெப்பத்தால் மறைக்கப் படுகிறது. வெள்ளணுக் குறைவு, தட்டையக் குறை நிலை, குருதிப் பெருக்கு நேர அதிகரிப்பு ஆகியவை பரவலான குருதி நாள உள் உறைவைச் (disseminated intravascular clotting–DIC) சுட்டிக் காட்டும். குருதி ஓட்டம், படிப் படியாகத் தடைப் படும் போது, மூளை, சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்றவை தாக்கப் படுகின்றன. கிராம் எதிர் நுண்ணுயிரிப் பாதிப்பில் 60% மரணம் ஏற்படும். குறை குருதி அழுத்தத்தாலும், வலிமையாக இதயம் உந்தித் தள்ளாமையாலும் மரணம் ஏற்படுகிறது. மருத்துவம். உடனடியாக ஜெண்டாமைசீனையும், கிராம் நேர் நண்ணுயிரிகளைப் பாதிக்கும் பெனிசிலின் அல்லது கிளாக்சாசில்லினும் சேர்ந்த கலவையையும் உட் செலுத்த வேண்டும். மிகத் தீவிர குருதி ஓட்டத் தளர்வுக்கும், பரவலான குருதி நாள உள் உறைவுக்கும், உரிய மருந்துகள் அளிக்க வேண்டும். —மு.ப. கிருஷ்ணன் துணை நூல். Paul D. Hoeprich (Ed.,) Infectious Diseases, Third Edition, Harper & Row, Publishers, Inc., Philadelphia, 1983.