பூச்சிகள் பல்வேறு பயிர்களைத் தாக்கிப் பேரிழப்பைத் தருகின்றன. சில வேதி மருந்துகளைப் பயிர்களில் தெளித்தால், பூச்சிகள் அப்பயிரைத் தாக்குவதில்லை. இவ்வாறு தாக்க முனையும் காரணிகளை நெருங்க விடாமல் தடுக்கும் மருந்து, நெருங்க விடா மருந்து (repellant) எனப் படுகிறது. பிரெஸ்டான் எனப் படும் டிரைஃபினைல் டின் அசிடேட் மற்றும் டியடர் எனப் படும் டிரைஃபினைல் டின் ஹைட்ராக்சைடு போன்ற பூசணக் கொல்லிகள், பூசண நோய்களைக் கட்டுப் படுத்தும் திறனைப் பெற்றுள்ளன. இவற்றைப் பயன் படுத்துவதால், புகையிலை வெட்டுப் புழுவாகிய ஸ்போடாப்டிரா லிட்டுரா (Spodoptera litura), நிலக் கடலைச் சுருள் பூச்சி, சிவப்புக் கம்பளப் பூச்சி முதலியவற்றைக் கட்டுப் படுத்தலாம். போர்டோ கலவை, பூசணக் கொல்லியாகப் பயன் படுத்தப் பட்டாலும், இலைத் தத்துப் பூச்சி, வண்டு ஆகியவற்றை நெருங்கி விடா மருந்தாகப் பயன் படுகிறது. நிலக்கரித் தார், இம்முறையில் கரையான், வண்டு, ஈ போன்றவற்றைத் தவிர்க்கும் திறன் கொண்டுள்ளது. துணிகளைப் பாதிக்கும் பூச்சியினங்களைச் சூடம் நெருங்க விடாமல் தடுக்கிறது. விலங்கினங்களைத் தாக்கும் பூச்சிகளை நெருங்க விடாமல் தடுப்பதற்காக, மண்ணெண்ணெய், மீன் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவை பயன் படுகின்றன. நாஃப்தலின் உருண்டைகள் துணிகளைப் பாதிக்கும் பூச்சிகளைக் கட்டுப் படுத்தத் துணையாகின்றன. பென்சைல் பென்சயோட், சிலந்திப் பேன்களை நெருங்க விடாமல் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. —கா. சிவப்பிரகாசம்