இழப்பீடு
iḻappīṭu
இழப்பீடு என்பது ஒருவருக்கு ஏற்படும் இழப்பினை ஈடு செய்வதற்காகக் கொடுக்கப்படும் பணத் தொகை.
இழப்பீடு என்பது ஒருவருக்கு ஏற்படும் இழப்பினை ஈடு செய்வதற்காகக் கொடுக்கப்படும் பணத் தொகை. தீங்கியல் சட்டத்திலும் ஒப்பந்தச் சட்டத்திலும் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுக்கப்படும் தீர் வழி இழப்பீடாகும்.
வாதிக்கு உற்ற தீங்கிற்கு ஈடாக நீதிமன்றம் விதிக்கும் தொகை இழப்பீட்டுத் தொகை. தொழிலாளர் நலச் சட்டத்திலும் பணியாளர்க்கு ஒரு சில சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஓர் ஒப்பந்தத்தில் இழப்பீடாக அறுதியிட்டு ஒப்பிய தொகை அறுதியிட்ட இழப்பீடு (Liquidated Damages) எனப்படும். ஒப்பந்தத் தரப்பினர் முன்னதாகவே அறுதி செய்து கொள்ளாத இழப்பீடு ‘அறுதியிடா இழப்பீடு’ (Unliquidated Damages) எனப்படும்.
ஒப்பந்தச் சட்டவியலில் ஒப்பந்த முறிவிற்கு இரண்டு வகையான தீர்வழிகள் வழங்கப்படுகின்றன. 1) பொதுச் சட்டத்தீர்வழி (Common Law Remedy), 2) நேர்மை நோக்கில் உரியதான தீர்வழி (Equitable Remedy). பொதுச் சட்ட விதியின்படி, ஒப்பந்த முறிவினால் ஒருவருக்கு இழப்பு ஏற்படின் ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் அவர் எவ்வளவு தொகை பெறுவாரோ அவ்வளவு தொகை அவருக்கு அளிக்கப்படவேண்டும். பல குழ்நிலைகளில் பொதுச் சட்டத்தீர்வழியான இழப்பீடே ஒப்பந்த முறிவிற்காக வழங்கப்படுகிறது.
ஒப்பந்தச் சட்டவியலின்படி இழப்பீடு நான்கு வகைப்படுகிறது. அவையாவன:
1. பொது இழப்பீடு அல்லது சாதாரண (சரி நிகர்) இழப்பீடு அல்லது கணிசமான இழப்பீடு (General or Ordinary or Substantial Damages).
2. சிறப்பு (தனி முறை) இழப்பீடு (Special Damages).
3. பழிவாங்கும் நோக்கத்திற்கான இழப்பீடு அல்லது தண்டிக்கும் நோக்கத்திற்கான இழப்பீடு அல்லது எச்சரிக்கை இழப்பீடு (Vindictive or Punitive or Examplary Damages).
4. பெயரளவு இழப்பீடு (Naminal Damages).
சாதாரண இழப்பீடு ஒப்பந்த முறிவினால் ஒருவருக்கு என்ன இழப்பு ஏற்பட்டதோ, அவ்விழப்பின் அளவிற்கு மட்டும் பணவடிவில் ஈடு செய்வதற்காகக் கொடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ‘அ’ என்பவர் ‘ஆ’ என்பவருடன் ஒரு மூட்டை அரிசி ரூ. 70/– வீதம் 100 மூட்டைகள் முன்பு ஒரு நாளில் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்திருக்கும் போது, கொடுக்கப்- பட வேண்டிய நாளில் அங்காடி விலை ரூ. 71/– என்று இருந்து. ‘அ’ அரிசி மூட்டைகளைக் கொடுக்க மறுத்தால், வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை, ஒப்பந்த முறிவு செய்த நாளில் இருந்து அங்காடி விலைக்கும் ஒப்பந்த தொகைக்கும் உள்ள வேறுபாடு, அதாவது ஒரு மூட்டைக்கு ரூ. 1/ வீதம் 100 மூட்டைகளுக்கு ரூ. 100/– இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். உண்மையில் ஏற்பட்ட இழப்புக்கு ஈடாகக் கொடுக்கப்படுவது சாதாரண இழப்பீடு எனப்படுகிறது.
சிறப்பு இழப்பீடு
ஆதாயத்தினை இழந்ததற்காக வேண்டும் இழப்பீடு சிறப்பு இழப்பீடு எனப்படுகிறது. இது வழக்கில் மெய்ப்பிக்கப்படும் தனிச் சூழ்நிலைக்கேற்ப வேண்டப்படும் இழப்பீடாகும். எடுத்துக்காட்டாக, ‘அ’ என்பவர் ஓர் ஆலையின் அதிபர். அவர் ஓர் இயந்திரத்தின் ஒரு பகுதியைப் பழுது பார்ப்பதற்காக அனுப்புகிறார். அங்குத் தாமதமேற்படுகிறது. அதன் காரணமாக ஆலை ஓடவில்லை. அதற்காக, ‘அ’ என்பவர் ஆதாயம் இழந்தேன் என வேண்டும் இழப்பீடு இதில் அமையும்.
பழிவாங்கும் நோக்கத்திற்கான இழப்பீடு
ஒருவரைத் தண்டிக்கும் எண்ணத்துடன் கேட்கும் இழப்பீடு இது. பொதுவாக, இது ஒப்பந்தச் சட்டவியலில் இடம் பெறுவதில்லை. தீங்கியல் சட்டத்தின்படி தான் இவ்வகையான இழப்பீடு வழங்கப்படுகிறது. இப்பொதுவிதிக்கு விலக்குகள்: 1. திருமணம் செய்வதாகக் கூறிய ஒப்பந்தத்தை முறித்தாலும், 2. வாடிக்கையாளரின் கணக்கில் பணம் இருக்கும்போது வங்கியாளர் அவரது காசோலையினை மதிக்க மறுத்தாலும் இவ்வகையான இழப்பீடு வேண்டலாம்.
பெயரளவு இழப்பீடு
சட்டப்படியான உரிமைகள் மீறப்பட்டால், உண்மையில் இழப்பு ஏதும் இல்லாதிருப்பினும் இத்தகைய இழப்பீட்டினை வேண்டலாம். ஈட்டுத் தொகையின் அளவு பெயரளவில் உள்ள இழப்பீடு இது. இதனை ஏன் பெயரளவு இழப்பீடு எனக் கூறுகிறார்கள் என்றால், இதன் அளவு ஓர் உரூபாயாகவோ ஒரு பைசாவாகவோ கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ‘அ’ என்பவர் ஒரு மோட்டார் கார் விற்பனையாளரிடம் கார் வாங்குவதாக ஒப்பந்தம் செய்தபின்பு ஒப்பந்தத்தை முறித்துக் கார் வாங்கவில்லையாயின், கார் விற்பனையாளர் ‘அ’ என்பவர் ஒப்பந்தத்தை முறித்ததற்காக அவர் மீது பெயரளவு இழப்பீடு வேண்டலாம்.
சாதாரணமாக, இழப்பீடு நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்படுகிறது. சில சூழ்நிலைகளில், ஒப்பந்தம் ஏற்படுத்தும் பொழுதே இரு சாராரும் இழப்பீட்டின் அளவினை வரையறை செய்து ஒப்பந்தத்தின் ஒரு பிரிவாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். இது அறுதியிட்ட இழப்பீடு என்று சொல்வப்படும். வீடு, நில விற்பனை ஒப்பந்தங்களில் ஒரு நிபந்தனையாக மிகச் சாதாரணமாக இது எழுதப்படுகிறது.
தீங்கியல் சட்டத்தின்படி, இழைக்கப்பட்ட தீங்கிற்குப் பெறக் கூடிய தீர்வழிகள் இரண்டு உள. 1. சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட தீர்வழி (Judicial), 2. தனது சொந்தச் செயல்களினால் பெறக் கூடிய தீர்வழி (Extra Judicial), சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட தீர்வழிகள்; இழப்பீடு வழங்குதல், உறுத்துக் கட்டளை பிறப்பித்தல், சொத்தினை மீட்டுப் பெறுதல் ஆகியன. ஒரே தீங்கிற்கு உறுத்துக் கட்டளையும் இழப்பீடும் சேர்த்துப் பெறலாம். ஒருவருக்கு மற்றவரது செயலினால் நேரடியாகவும் உடனடியாகவும் ஏற்படக்கூடிய இழப்பிற்கு மட்டுமே இழப்பீடு வேண்டலாம்.
தீங்கியல் சட்டத்தில் ‘அறுதியீடா இழப்பீடு’ மட்டும் பெற முடியும் தீங்கியல் சட்டத்தின்படி இழப்பீடு நான்கு வகைப்படும். அவையாவன: 1. அற்ப இழப்பீடு (Contemptuous Damges), 2. பெயரளவு இழப்பீடு (Nomin Damages), 3. கணிசமான அல்லது சாதாரண (இயல்பு) இழப்பீடு (Substantial or Ordinary Damages), 4. எச்சரிக்கும் நோக்கத்திற்கான அல்லது பழிவாங்கும் நோக்கத்திற்கான அல்லது தண்டிக்கும் நோக்கத்திற்கான இழப்பீடு (Exemplary or Vindictive or Retributary or Punitive Damages).
அற்ப இழப்பீடு
கொண்டு வந்திருக்க வேண்டியது அன்று என்று கருதப்படும் வழக்கில், வேண்டா வெறுப்பாக மிகச் சிறிய அளவில் அளிக்கப்படுவது.
பெயரளவு இழப்பீடு
ஈட்டுத் தொகையின் அளவு பெயரளவில் உள்ளது.
கணிசமான அல்லது சாதாரண (இயல்பு) இழப்பீடு
உண்மையில் ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்யும்படி வேண்டுவது. இதனை ஈடுசெய்யும் இழப்பீடு (Compensatory Damages) என்றும் குறிப்பிடலாம். எதிர்வாதியின் செயலால் இயல்பான அல்லது நிகழக் கூடிய விளைவிற்குத் தக்க ஈடு என்றும் சொல்லலாம்.
எச்சரிக்க அல்லது தண்டிக்க அல்லது பழிவாங்க வேண்டப்படும் இழப்பீடு
இது ஒரு தீங்கினால் பேரிடர் விளையுமானால். அத்தீங்கிற்காகப் பெறப்படுவது. சமுதாய நலனுக்காகவும் தீங்கிழைத்தோரைத் தண்டிப்பதற்காகவும் வேண்டப்படுவது.
இவ்வாறு தீங்கியல் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டோருக்குத் தீர்வழியாக இழப்பீடு வழங்கப்படுகிறது.
தொழிலாளர் நலச் சட்டங்களில் தகராறுச் சட்டத்தின் கீழும், பணியாளர் இழப்பீட்டுச் சட்டத்தின்கீழும் பணியாளர்க்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
தொழில் தகராறுகள் சட்டத்தின்படி (Industrial Disputes Act) நான்கு சூழ்நிலைகளில் பணியாளர்க்கு இழப்பீடு கொடுக்கப்படுகிறது. பணியாளரைத் தளர்ச்சிப் பருவத்துக்குள்ளாக்கும் போதும், ஆட்குறைப்புச் செய்யும்போதும் தொழிலகத்தின் மேலாண்மை அல்லது உரிமை மாற்றப்படும்போதும் தொழிலகம் மூடப்படும்போதும் இவ்விழப்பீடு வழங்கப்படுகிறது.
தளர்ச்சிப் பருவ இழப்பிடு (Lay of Compensation)
தொழில் தகராறுகள் சட்டத்தின் 2 (K K K) என்ற பிரிவு தளர்ச்சிப் பருவத்தை வரையறுக்கிறது. எரிபொருள், சக்தி மூலப்பொருள் ஆகியவற்றில் பற்றாக்குறைவினாலோ உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மிகுந்து போவதாலோ இயந்திரங்கள் பழுதடைந்து போவதாலோ இயற்கைக் கோளாறினாலோ வேறு ஏதேனும் தொடர்புடைய மாற்றங்களினாலோ பணியாளர் பெயர்ப் பட்டியலில் இடம்பெற்ற, ஆட்குறைப்புச் செய்யப்படாத பணியாளருக்குப் பணி அளிக்கத் தவறுதல், மறுத்தல், இயலாமை ஆகியவை தளர்ச்சிப் பருவம் எனப்படும்.
பதவிப் பணியாளராகவோ தற்செயல் பணியாளராகவோ அல்லாத ஒரு தொழிலகத்தில் ஓராண்டு தொடர்ச்சியாகப் பணியில் இருந்து, பெயர்ப் பட்டியலில் இடம்பெற்ற பணியாளரைத் தொடர்ந்தோ இடையிடையோ தளர்ச்சிப் பருவத்துக்குள்ளாக்கினால் அவர் தளர்ச்சிப் பருவத்துக்கு உள்ளாக்கப்பட்ட நாட்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று (தொழில் தகராறுகள் சட்டம்) 25 என்ற பிரிவு கூறுகிறது. அவருக்குக் கொடுக்கப்படும் அடிப்படை ஊதியம் உரூ. ஐம்பது வீதமும் அகவிலைப்படி உரூ. நூறு, வீதமும் இழப்பீடாக வழங்கப்படுகிறது. ஆனால், பணியாளரும் பணியளிப்பவரும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி, ஒரு பணியாளர் பன்னிரண்டு மாதங்களில் நாற்பத்தைந்து நாட்களுக்கு மேல் தளர்ச்சிப் பருவத்துக்குள்ளாக்கப்பட்டால், நாற்பத்தைந்து நாட்கள் முடிவடைந்த பின்பு இழப்பீடு வேண்ட முடியாது. ஆகவே, அந்த நாற்பத்தைந்து நாட்கள் முடிவடைந்தவுடன் அப்பணியாளரை ஆட்குறைப்பிற்காக நீக்கி விடலாம். 25 E என்ற பிரிவின் படி ஒரு பணியாளர் தளர்ச்சிப் பருவத்துக்குள்ளாக்கப்படும் போது அவருக்கு அதே தொழில் உற்பத்தியோ அதே உரிமையாளருக்கு உரிமையான அதே இடத்திலோ அவ்விடத்திலிருந்து ஐந்து கல் தொலைவிலுள்ள இடத்திலோ உள்ள தொழிலகத்தில் மாற்றுப் பணி கொடுக்கும்போது, அம்மாற்றுப் பணிக்குத் தனித் திறமையோ அல்லது முன்னனுபவமோ வேண்டாதிருந்தால், அப்பணியாளர் அம்மாற்றுப் பணியினை ஏற்க மறுத்தால், அவர் தளர்ச்சிப் பருவத்திற்கான இழப்பீடு வேண்ட முடியாது.
ஒரு நாளில் ஒரு முறையேனும் தளர்ச்சிப் பருவத்துக்கு உள்ளாக்கப்பட்ட பணியாளர் பணியிடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பணிக்கென வரவில்லையாயின் இழப்பீடு வேண்ட முடியாது.
தொழிலகத்தின் ஒரு பகுதியில் பணிபுரியும் பணியாளர்கள் உற்பத்தி செய்வதில் வேகம் குறைவதாலோ வேலை நிறுத்தம் செய்வதாலோ, அதன் காரணமாக மற்றொரு பகுதியில் உள்ள பணியாளர்கள் தளர்ச்சிப் பருவத்திற்கு உள்ளாக்கப்பட்டால் இழப்பீடு பெறமுடியாது.
ஆட்குறைப்பு இழப்பீடு (Retrenchment Compensation)
25 F என்ற பிரிவின்படி ஒரு பணியாளர் ஆட்குறைப்புச் செய்யப்பட்டால், ஆட்குறைப்புச் செய்யப்படுவதற்கு முன்பே இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். ஆகவே இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பது ஆட்குறைப்பிற்கான ஒப்பந்தங்களுள் ஒன்று. ஆட்குறைப்புச் செய்யப்பட்ட பணியாளருக்கு ஒவ்வொரு முடிவடைந்த ஆண்டுத் தொடர்ச்சிப் பணிக்காகப் பதினைந்து நாட்களுக்கான சராசரி வாதியம் இழப்பீடாக வழங்கப்படும். தொடர்ச்சிப் பணி ஆறு மாதத்திற்கு மேற்பட்டு இருக்குமானால், சராசரி ஊதியத்தில் ஒரு பங்கு வீதம் இழப்பீடாக வழங்கப்படும்.
மாறுதல் இழப்பீடு (Transfer Compensation)
தொழிலகத்தின் உரிமையோ மேலாண்மையோ, ஒப்பந்தப்படியோ சட்டப்படியோ மாற்றப்பட்டால் ஓராண்டு தொடர்ச்சிப் பணி புரிந்த ஒவ்வொரு பணியாளருக்கும் அறிக்கையும் இழப்பீடும் கொடுக்கப்படவேண்டும் என்று தொழில் தகராறுகள் சட்டத்தின் 25–ஆம் பிரிவு கூறுகிறது. பணியாளர்களின் பணி நீட்டிக்கப்பட்டால் புதிய மேலாளரின்கீழ்ப் பணிபுரியும் அப்பணியாளருக்குப் பணி ஒப்பந்தங்களில் மாற்றம் இல்லாதிருந்தால், அப்பணியாளர் மாறுதல் இழப்பீடு வேண்ட முடியாது. ஆட்குறைப்பு இழப்பீடு வேண்டினாலும் மாறுதல் பெறமுடியாது ஓராண்டுத் தொடர்ச்சிப் பணிக்குப் பதினைந்து நாட்களுக்கான சராசரி ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும்.
பணியாளர் தாமாக ஓய்வு பெற்றால் அல்லது தகுந்த வயது வந்தவுடன் ஓய்வு பெற்றால் அல்லது தொடர்ந்து உடல் நலமின்மையால் பணி நீக்கம் செய்யப்பட்டால் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் காரணமாகத் தண்டிக்கும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டால் அன்றி, வேறு ஏதேனும் காரணத்திற்காக ஒரு பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டால் அது ஆட்குறைப்பு ஆகும் (தொழில் தகராறுச் சட்டம் (2(00)).
மூடுதல் இழப்பீடு (Closure Compensation)
ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஒரு தொழிலகம் நிலையாக அடைக்கப்பட்டால், அத்தொழிலகத்தில் ஓராண்டிற்குக் குறையாமல் தொடர்ச்சியாகப் பணிபுரிந்த பணியாளருக்கு மூடுவதற்கு முன்பே இழப்பீடும் அறிக்கையும் அளிக்க வேண்டும். ஓராண்டுத் தொடர்ச்சிப் பணிக்குப் பதினைந்து நாட்களுக்கான சராசரி ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும். பணியளிப்பவரின் கட்டுக்கடங்காத தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒரு தொழிலகம் அடைக்கப்பட்டால், அதில் பணிபுரிந்த பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் இழப்பீடு அவர்களது மூன்று மாத சராசரி ஊதியத்திற்குமேல் இருக்கக் கூடாது.
சுரங்கங்களில் தொழில் புரியும் பணியாளருக்கு சுரங்கப் பொருள் தீர்ந்துவிட்ட பின்பு வேறு பணி அளிக்கப்பட்டால், பணியில் தடையில்லாதிருக்குமானால் இழப்பீடு வழங்கப்பட வேண்டியதில்லை அதைப்போன்று, கட்டடங்கள், பாலங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள் போன்றவை கட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட தொழிலகம் இரண்டாண்டுகளுக்குள் பணிமுடிந்து அடைக்ககப்படுமானால், அதில் பணிபுரிந்த பணியாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய தேவையில்லை. இரண்டாண்டுகளுக்குமேல் பணி தொடருமானால் இழப்பீடும் அறிக்கையும் வழங்க வேண்டும் (பணியாளர் இழப்பீட்டுச் சட்டம்).
பணியாளர் இழப்பீட்டுச் சட்டம் (1923) விபத்தில் பணியாளர்க்கு ஏற்படும் காயங்களுக்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும்.
பணியாளர் பணி செய்து கொண்டிருக்கும் போது எழுந்த விபத்தின் காரணமாக இறந்துவிட்டால், பணியளிப்பவர் அவரைச் சார்ந்தோருக்கு (Dependants) இழப்பீடு வழங்க வேண்டும். அத்தகைய விபத்தில் காயமுற்றாலும் பணியளிப்பவர் இழப்பீடு வழங்க வேண்டும். சில சூழ்நிலைகளில் சட்டம் பணியளிப்பவரை அத்தகைய கட்டுப்பாட்டினின்றும் விலக்குகிறது. அதாவது, ஒரு பணியாளர் பணி செய்து கொண்டிருக்கும்போது, பணியினின்றும் எழுந்த விபத்தினால் காயமுற்று, அக்காயம் மூன்று நாட்களுக்குள் ஆறிப் போகுமானால் இழப்பீடு வேண்ட முடியாது. பணியாளர் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாலோ குடித்திருந்ததாலோ விபத்து ஏற்பட்டுக் காயமுறுவாரானால், இழப்பீடு பெறத் தகுதியற்றவராகிறார். பணியாளரின் பாதுகாப்பிற்கெனக் கொடுக்கப்பட்ட ஆணையினையோ விதியினையோ வேண்டுமென்றே மீறியதால் விபத்து ஏற்பட்டாலும் இழப்பீடு பெற முடியாது. பணியாளரின் பாதுகாப்பிற்கென அளிக்கப்பட்ட கருவிகளை வேண்டுமென்றே அணியாது அகற்றியதால் விபத்து ஏற்பட்டுக் காயமடைந்தாலும் இழப்பீடு வேண்டத் தகுதி கிடையாது.
விபத்தில் இறந்து விட்டால் பணியளிப்பவர் இழப்பீடு கொடுத்தே ஆகவேண்டும். விலக்குகள் காயமடைந்தால் மட்டும் உதவிக்கு வரும். இச்சட்டத்தின்படி இயலாமைக்காகக் (Disablement) கொடுக்கப்படும் இழப்பீடு இறத்தலுக்காகக் கொடுக்கப்படும் இழப்பீட்டை விட மிகுதியாக இருக்கும். நான்காம் அட்டவணைப் பட்டியலில் எவ்வளவு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. மாத ஊதியத்தின் அடிப்படையில் இழப்பீடு குறிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகை அமர்த்தப்பட்ட ஆணையாளரிடம் கொடுக்கப்படலாம். குறைந்தது உரூ. 10/– இழப்பீடாக வழங்கப்படும். இறப்பு விபத்துச் சட்டத்தின்படி (Total Accident Act) விபத்தில் இறந்தவர்களின் வழிமுறையினருக்கு இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு பணியாளருக்குச் சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒப்பந்தச் சட்டப்பிரிவிலும் தீங்கியல் சட்டவியலிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தீர்வழியாக இழப்பீடு வழங்கப்படுகிறது. அ.பி.பொ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 459)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s8bxpj6m/
தமிழ்“இழப்பீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/s8bxpj6m/APA
Oliyon Research. (2026). இழப்பீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s8bxpj6m/MLA
"இழப்பீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/s8bxpj6m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment