அதிகச் சலுகையுறும் நாடுகள்
atikac calukaiyuṟum nāṭukaḷ
பன்னாட்டு அரசியல், வாணிகத் தொடர்பான துறைகளில் சில நாடுகள் உயர்நிலைச் சலுகையைப் பெற்று வருவதுண்டு, அந்நாடுகள் பொதுவாகத் தம் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாகப் பிற நாடுகளைக் காட்டிலும் உயர்நிலையை அடைந்துள்ளன.
பன்னாட்டு அரசியல், வாணிகத் தொடர்பான துறைகளில் சில நாடுகள் உயர்நிலைச் சலுகையைப் பெற்று வருவதுண்டு, அந்நாடுகள் பொதுவாகத் தம் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாகப் பிற நாடுகளைக் காட்டிலும் உயர்நிலையை அடைந்துள்ளன. தடையற்ற, ஆதாயம் ஈட்டக்கூடிய வாணிக நடவடிக்கைகளுக்காக நாடுகள், பிற நாடுகளுடன் சிறப்பான இரு கருத்துகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் செய்து கொள்கின்றன. அவை: (1) ஒப்பந்தம் செய்து கொள்ளும் நாடுகளுக்கிடையே இறக்குமதி வரிவீதம் குறைவாயிருத்தல். (2) அவ்வீதத்தை விட அந்நாட்டில் வேறு நாட்டுப் பொருள்களின் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளின் வீதம் குறைவாக இல்லாதிருத்தல். அப்படிக் குறைவாயிருப்பின் ஒப்பந்த நாட்டுப் பொருள்களின் இறக்குமதி வரிகளும் அதே அளவிற்குக் குறைக்கப்படும். அதாவது ஓர் ஒப்பந்த நாடு அதன் பொருள்களுக்கு அளிக்கும் சலுகைகளைப் பெறுவதுடன் அந்நாட்டில் வேறு நாட்டுப் பொருள்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் பெற வேண்டும். அச்சலுகைகளைப் பெறுவதற்கான வாணிக ஒப்பந்தத்தின் ஓர் உட்பிரிவு விதியை அதிகச்சலுகை நாட்டு விதி (Most–Favoured Nation Treatment) எனவும், அவ்விதிக்குட்பட்டு ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகளை அதிகச் சலுகையுறும் நாடுகள் எனவும் குறிப்பிடுகின்றனர்.
அதிகச் சலுகை நாட்டு விதி, வாணிக நாடுகளுக்கிடையே அளிக்கப்படும் சமத்துவச் சலுகைகள் தொடர்பாகக் கூறுகிறது. தடையிலா வாணிகத்தில் (Free Trade) இணைந்திருந்த நாடுகளுக்கு இச்சலுகை விதி, மிகவும் பொருந்துவதாய் அமைந்திருந்தது. இவ்வாணிக ஒப்பந்தம் ஐரோப்பிய நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பரவலாக வழக்கத்திலுள்ளது. இது ஒப்பந்த நாடுகளுக்குத் தனிப்பட்ட சலுகைகளை அளிக்காமல் அதிகச்சலுகை நாட்டுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளேயே அளித்து வந்தது பிரான்சு கி.பி. 1535–ஆம் ஆண்டில் ஒருமுக ஒப்பந்தத்தைத் (Unilateral) துருக்கி நாட்டுடன் ஏற்படுத்திக் கொண்டதிலிருந்து இவ்விதி தோன்றியது. இதன் பிறகு தொடர்ந்து பல நாடுகள் இவ்விதியைப் பயன்படுத்தின. பின்னர் கி.பி. 1641-ஆம் ஆண்டு நெதர்லாந்தும் போர்ச்சுகல் நாடும் இருமுக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள இசைந்தன. இதுபோன்றே கி.பி. 1654–ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஆலிவர் கிராம்வெல் (Oliver Cromwell) சுவீடன் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இரிச்சர்டு காப்டென் (Richard-Cobden), மைக்கேல் கெவாலியர் (Michael Chavalier) ஆகியோரின் முயற்சியால் கி.பி. 1860–ஆம் ஆண்டு ஆங்கிலேய பிரெஞ்சு ஒப்பந்தம் ஏற்பட்டது. இச்சலுகை இதற்கு முன்பே இருநூற்றாண்டுகளாகப் பல வகைகளில் பழக்கத்திலிருந்ததாகவும் அறியப்படுகிறது.
அதிகச் சலுகை ஒப்பந்தம், பன்னாட்டுப் பொருளாதாரச் சட்ட திட்டங்களுக்குட்பட்ட கொள்கையாக அமைந்து, வாணிகத்திற்குட்பட்ட நாடுகளிடையே சமாதானத் திட்டமாகவும் கட்டுப்பாடற்ற வாணிகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் உள்ளதென்ற ஒரு கருத்தும், நாடுகளிடையே காணப்படும் வாணிகச் சலுகைகளுக்கு இது முட்டுக்கட்டையாக விளங்குகிறது என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. அதிகச் சலுகை நாட்டு விதி, (1) கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை நாட்டு விதி, (2) கட்டுப்பட்ட அதிகச் சலுகை நாட்டு விதி என இரு வகைப்படும்.
கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை
இது இரு ஒப்பந்த நாடுகள், வேறோர் அயல் நாட்டிற்கு வாணிகத்தையும் தொழிலையும் பற்றிய எல்லா உதவிகளையும் தாம் அளித்துள்ள அல்லது அளிக்கவிருக்கும் சலுகைகளுடன் உடனடியாகக் கட்டுப்பாடின்றி அளிப்பதுடன், அந்நாட்டு வாணிகத்தையும் தொழிலையும் எல்லா வகையிலும் உயர் சலுகை பெறும் நாட்டு வாணிகத்துடனும் தொழிலுடனும் ஒத்த நிலையில் நடத்திக் கொள்ள அனுமதிப்பதும் ஆகும். இதற்குச் சான்றாக 1911–ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கும் பொலிவியாவுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைக் கூறலாம். இக்கருத்து, சர்வதேசச்சங்க (League of Nations) நாடுகளிடையே வாணிக ஒப்பந்தங்களின் போது பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட மாதிரி உயர் சலுகை நாட்டு விதியின் உட்பிரிவில், (Model Most-favoured Nation-treatment Clause) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. விளங்கக் கூறினால் ‘A’ என்னும் நாடு ‘B’ என்னும் நாட்டுடன் அதிகச் சலுகைத் தொடர்பு கொண்டால் ‘B’ பிறநாடுகளுக்கு முன்னர் அளித்த அல்லது இனி அளிக்கப்போகும் சுங்கவரிச் சலுகைகளையெல்லாம் ‘A’க்கும் அளிக்கும். அதே நேரத்தில் ‘B’க்கு ‘C’ என்னும் நாட்டுடன் அதிகச் சலுகைத் தொடர்பு இருக்குமானால் ‘A’-க்கு ‘B’ கொடுக்கும் அனைத்துச் சலுகைகளும் ‘C’க்கும் கொடுக்கப்படும். இவ்வாறு அதிகச் சலுகை நாட்டு விதியின் உட்பிரிவு, ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு அளிக்கும் சிறப்புச் சலுகைகளை, அந்த இரு நாடுகளுக்கு மட்டுமே உரிமைப்படுத்தாமல், அதிகச் சலுகைத் தொடர்புடைய பிற எல்லா நாடுகளுக்கும் உரிமைப்படுத்துகிறது. அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் (Woodrow Wilson) செருமனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் 14 கூறுகளில் மூன்றாவது கூறாகக் கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை நாட்டு விதி கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா 1945–ஆம் ஆண்டு வெளியிட்ட பன்னாட்டு வாணிக, வேலை விரிவாக்கம் என்ற திட்ட வரைவு (Proposals for the expansion of world trade and employment) இலண்டன், செனிவா, அவானா (Hawana) போன்ற இடங்களில் கூடிய மாநாடுகளில், உலக வாணிக ஆவணமாக விரிவாக்கப்பட்டது. 1948–ஆம் ஆண்டு ஏற்படுத்திய சுங்கவரி வாணிகப் பொது ஒப்பந்தத்தில், கட்டுப்பாடற்ற கொள்கை புகுத்தப்பட்டது.
அதிகச் சலுகை நாட்டு விதியின் உட்பிரிவை மேற்கொள்ளும் பல நாடுகளில், சுங்கவரிகள் ஒப்பந்தச் சுங்க வரிகள், பொதுச் சுங்க வரிகள் என இருவகைப்படும். அந்நாடுகளுடன் அதிகச்சலுகை வாணிக ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரிகள், ஒப்பந்தச் சுங்க வரிகள் ஆகும். வாணிக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளாத நாடுகளின் மீது விதிக்கப்படும் சுங்க வரிகள் பொதுச் சுங்க வரிகள் ஆகும். அவ்வகையில் பொதுச் சுங்க வரிகளின் வீதம் ஒப்பந்தச் சுங்க வரிகளின் வீதத்தை விட மிகுதியாக இருக்கும், பிற நாடுகளுடன் அவற்றின் சுங்க வரிகளைக் குறைக்கப் பேரஞ்செய்வதற்குப் பொதுச் சுங்க வரிகள் பயன்படுவதால் அவற்றைப் பேரச் சுங்க வரிகள் (Bargaining Tariff) என்றும் கூறுவதுண்டு. ஒப்பந்தச் சுங்க வரிகள் ஒப்பந்தக் காலம் வரையிலேயே செல்லுபடியாகும். ஒப்பந்தக் காலம் முடிந்தவுடன் மீண்டும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளவோ மாற்றியமைக்கவோ வேண்டும்.
மேற்கூறிய வகைகளுக்குப் பதிலாக வேறு வகைச் சலுகைகளும் வழக்கத்திலுள்ளன. அவை உயர் அளவுச் சுங்க வரிகள் (Maximum Tariff), குறைந்த அளவுச் சுங்க வரிகள் (Minimum Tariff) என்பன. பிரான்சு மற்றும் அதன் தொடர்பு கொண்ட நாடுகளில் நடைமுறையில் உயர்ந்த அளவுச் சுங்க வரிகள் எனப்படுவன பொதுச் சுங்க வரிகளே. ஒப்பந்தச் சுங்க வரிகள் ஒரு குறிப்பிட்ட வீதத்திலேயே விதிக்கப்படுபவை. ஒப்- பந்தக் காலம் முடிவதற்குள் மாற்ற இயலாது. குறைந்த அளவுச் சுங்கவரி வீத அளவை ஒப்பந்தங்கள் குறிப்பிடா. ஆனால் ஒப்பந்தக் காலம் முடியுமுன் வரி வீதத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆகையால் இவ்வரிகளை ஒப்பந்த வரிகளுக்கு மாறாக, ஒப்பத்தக் காலத்திலேயே உள்நாட்டுத் தொழில்களுக்குத் தொழிற்காப்பு அளிக்கும் நோக்கமுடன் உயர்த்திக் கொள்ளலாம். ஆனால் அவை, ஒப்பந்த வரிகளைப் போன்று பிறநாடுகளிலிருந்து சுங்க வரிகளை ஒட்டிய சலுகைகளைப் பெறப் பயன்படா.
அதிகச் சலுகைத் தொடர்புடைய நாடுகள் வேறு நாடுகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளனைத்தையும் தாமும் பெற உரிமையுண்டு. எனினும், இவ்விதிக்குப் பின்வரும் விலக்குகளைக் குறிப்பிடுதல் மிகவும் இன்றியமையாதது.
1)
எல்லைப்புற வாணிகம் (Frontier Trade)
பெரும்பாலும் தடையிலா வாணிகமாயிருக்கும். அவ்விதமான வாணிகத்தில் ஈடுபடும் இரண்டு நாடுகளும் பிற நாட்டுப் பொருள்களின் மீது சுங்க வரி விதிக்காது. ஆனால் இச்சலுகை அந்தந்த நாடுகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் பிறநாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டியதில்லை.
2)
குடியேற்ற நாட்டுச் சலுகை
பிரிட்டன், தன் ஆட்சியரிமை (Dominion) பெற்ற நாடுகளுக்கும் குடியேற்ற நாடுகளுக்கும் சுங்கவரிச் அளிக்கிறது. இச்சலுகை கூட, பிரிட்டனுடனும் ஆட்சி உரிமை பெற்ற நாடுகளுடனும் அதிகச் சலுகைத் தொடர்புடைய பிற நாடுகளுக்கு அளிக்கப்படுவதில்லை. இதையொத்த சலுகைகளை அமெரிக்கா, பிரான்சு, இத்தாலி, இசுபெயின் (Spain) போன்ற நாடுகளும் அளித்து வருகின்றன. ஆயினும், இசுபெயின் தன்னுடைய குடியேற்ற நாடுகளுக்களிக்கும் சலுகைகளைப் பிற நாடுகளுக்கும் கொடுப்பதன் மூலம் தனித்து விளங்குகிறது.
3)
மண்டலச் சலுகைகள்
சில நாடுகள், அடுத்துள்ள நாடுகள் என்பதாலும் வரலாற்றுத் தொடர்புடைய நாடுகள் என்பதாலும் ஒன்றுக்கொன்று சுங்கவரிச் சலுகைகள் அளிப்பதுண்டு. இவையே மண்டலச் சலுகைகள் எனப்படும். இசுபெயின், போர்ச்சுகல், நார்வே, சுவீடன், அமெரிக்கா, கியூபா, பால்டிக், சில தென் அமெரிக்க நாடுகள், மத்திய அமெரிக்க நாடுகள் போன்றவை மண்டலச் சலுகைகள் அளித்துள்ளன. இச்சலுகைகள் அதிகச்சலுகைத் தொடர்புடைய வேறு நாடுகளுக்கு அளிக்கப்படுவதில்லை.
4)
சுங்க ஒன்றியங்கள்
சுங்க ஒன்றியங்களிலுள்ள நாடுகளுக்கிடையே சுங்க வரிகள் நீக்கப்பட்டுத் தடையிலா வாணிகம் நிறுவப்படும். இத்தடையிலா வாணிகச் சலுகையை அந்நாடுகள் உச்சச்சலுகைத் தொடர்புடைய வேறு நாடுகளுக்கு அளிப்பதில்லை.
மேற்கூறிய வெளிப்படையான நான்கு விலக்குகளைத் தவிர சில மறைவான (Veiled) முறைகளிலும் உச்சச்சலுகைத் தொடர்புடைய நாடுகளுக்குரிய சலுகைகள் மறுக்கப்படலாம். அவை 1. பொருள்களை வகைப்படுத்துவதில் வேறுபாடு. 2. அதிகச் சலுகை நாட்டுத் தொடர்பு பெற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஒரே தன்மையான பொருள்களைச் சில வேறுபாடுகள் காட்டி ஒன்றை உயர்ந்த சுங்க வரி அட்டவணையிலும் (Customs Schedule) மற்றொன்றைத் தாழ்ந்த சுங்க வரி அட்டவணையிலும் சேர்க்கலாம். இப்பாகுபாட்டினால் ஒரு பொருளுக்கு அளிக்கும் சலுகை மற்றொன்றிற்கு அளிக்கப்படாமல் இருக்கலாம். இது அதிகச் சலுகைத் தொடர்பு பெற்ற நாடுகளின் ஒரே தன்மையான பொருளைச் சுகாதாரக் காரணங்களால் வேறுபடுத்தி, ஒன்றுக்களிக்கும் சலுகைகளை மற்றொன்றுக்கு அளிக்காமல் விட்டுவிடலாம்.
நன்மைகள்
கட்டுப்பாடற்ற அதிகச்சலுகையின் அடிப்படையில் சுங்க வரிச் சலுகைகள் எல்லா ஒப்பந்த நாடுகளுக்கும் சமமாக வழங்கப்படுவதால், நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் சச்சரவுகள் குறைந்து, அமைதி ஓங்க வாய்ப்புண்டு. ஒரு பொருள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும் அதன் மீது ஒரே தன்மையான இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், சுங்க அதிகாரிகளுக்குப் பொருள்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறியவேண்டிய இடர்ப்பாடு இல்லை. கட்டுப்பாடான அதிகச் சலுகைத் தொடர்பில் சலுகைகளைப் பெறுவதற்குப் பதில் சலுகைகளைக் கொடுக்க வேண்டும். நாடுகளின் தரம் பொறுத்துச் சலுகைகள் வழங்கப்படும். கட்டுப்பாடற்ற அதிகச் சலுகைத் தொடர்பில், சலுகைகள் பதில் சலுகைகள் இல்லாமலே கொடுக்கப்படுவதால், சிறியநாடுகள் அதிக நன்மையைப் பெறும்.
கட்டுப்பாடான அதிகச் சலுகை
இதன்படி இரண்டு ஒப்பந்த நாடுகள், வாணிகம், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றோடு தொடர்புடைய எல்லா நடவடிக்கைகளையும் வேறு நாட்டுக்கு அளித்துள்ள, அளிக்கப் போகிற சலுகைகளையெல்லாம் கட்டுப்பாடுகளுடன் தம்முள் ஒன்றுக்கொன்று அளித்துக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொள்வதாகும். அமெரிக்காவின் வாணிக ஒப்பந்தங்களில் 1922–ஆம் ஆண்டுக்கு முன் இக்கட்டுப்பாட்டு விதி காணப்பட்டது. முதல் உலகப் போருக்கு முன் பல ஆண்டுகள் அமெரிக்காவும் அதைப் பின்பற்றிச் சில தென் அமெரிக்க நாடுகளும் கட்டுப்பாடான அதிகச் சலுகை நாட்டுத் தொடர்பை ஆதரித்தன. போருக்குப் பின் சிறிது காலம் பிரான்சிலும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதற்கு ஆதரவளிக்கப்பட்டது. கட்டுப்பட்ட அதிகச் சலுகையின் நன்மைகளைக் கொண்டு இது விரும்பப்பட்டது. இதன்படி ஒருநாடு, தான் அளிக்கும் சலுகைக்குப் பதில் சலுகை பெற்றுக்கொள்கிறது. பிற நாடுகளிலிருந்து சுங்கவரிச் சலுகைகளை எளிதில் பெறுவதால், கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை நாட்டுத் தொடர்பை விடப் பயனளிப்பது, மிகுந்த தொழிற் காப்புப் பெற்றுள்ள நாடுகளிலிருந்து சலுகைகளைப் பெறவும் உதவுகிறது.
சிக்கல்கள்
1) நாடுகளுக்கிடையே ஓரே சீரான சுங்க வரிமுறை இருப்பதில்லை, சலுகை பெறுகின்ற நாடுகள் ஒரே தன்மையான பதில் சலுகையை அளிக்க இயலாது. 2) ஒரு நாட்டின் சலுகைக்குப் பிறநாட்டின் பதில் சலுகை சமமானது என்று ஒப்புக்கொள்ள வேண்டும். இந்நிலையில் நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். 3) நாடுகள் பல சலுகைகளைக் கொடுக்கும்போது எந்தச் சலுகை எதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டது என்பதை உறுதியாக அறிய இயலாது. 4) ஒரு நாட்டின் சலுகையின் மதிப்புக்கும் பிறநாட்டின் பதில் சலுகைகளின் மதிப்புக்கும் நிறைய வேறுபாடு இருக்கலாம். இதைப் பற்றிய சிக்கலை ஒரு முறை அமெரிக்கா எழுப்பியது.
அமெரிக்காவின் சுங்கவரி முறையில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில், பரிமாற்றக் கொள்கை (Principle of Reciprocity) அமைக்கப் பெற்றது. அதன் விளக்கப்படி வெளிநாடுகளில் அமெரிக்கப் பொருள்களின்மீது மிகுதியான வரிகள் விதிக்கப்படுவதாகக் கருதினால், அமெரிக்காவில் அந்நாட்டுப் பொருள்களின் மீது வழக்கமாக விதிக்கப்படும் வரிகளுடன் கூடுதலான தண்ட வரி (Penalty Tax)களும் விதிக்கப்படும். பிற நாடுகளில் அமெரிக்கப் பொருள்களுடைய இறக்குமதி வரிகள் அமைவதைப்போல், அமெரிக்காவில் அந்நாடுகளின் பொருள்களுக்கு இறக்குமதி வரிகள் அமையும். அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் 1938–இல் ஏற்பட்ட சுங்க வரிப் பரிமாற்றக் கொள்ளகையின்படி, அமெரிக்கா, இறக்குமதி செய்த கட்டிடக் கற்கள் மீது சலுகை அளித்தது. இதன்படி அதிகச் சலுகை நாட்டு விதியைத் தொடர்ந்து செயல்படுத்தியது. ஆனால் பரிமாற்றச் சமநிலையை உறுதி செய்வதென்பது எளிதன்று. முதல் உலகப் போருக்கு முன் நீண்ட காலமாகக் கட்டுப்பட்ட அதிகச் சலுகை நாட்டு விதி, அமெரிக்காவில் நடைமுறையாய் இருந்து வந்தது. இரண்டொரு வாணிக ஒப்பந்தங்களே செய்யப்பட்ட போதிலும், அமெரிக்கப் பொருள்கள் பல நாடுகளில் அதிக சலுகைகளைப் பெற்றன. அவ்வாறு சலுகை பெறுவதற்கு அமெரிக்கா பிற நாடுகளோடு பேரஞ் செய்யவில்லை. அப்போதைய சூழ்நிலையும் அமெரிக்காவில் சிறப்பான ஏற்றுமதிப் பொருள்களுமே இதற்கான தனிக் காரணங்களாகும். முதல் உலகப் போருக்குப் பின், அமெரிக்க ஏற்றுமதிகளில் எந்திரக் கருவிகள் மிகுதியானபடியால் இப்பொருள்களுக்கு அயல்நாட்டுச் சந்தைகளில் போட்டி மிகுதியாயிருந்தது. இந்நிலையில் கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை நாட்டுத் தொடர்பு, அமெரிக்காவுக்குத் துணையான நடைமுறையாயிற்று. ஆகவே 1923–ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இம்முறையை ஆதரித்து வருகிறது.
சுங்கவரிப் பேரங்கள்
சுங்கவரிப் பேரங்கள், வன்கவர் பேரங்கள் (Aggressive Bargains), சமரசப் பேரங்கள் (Conciliatory Bargains) என இருவகைப்படும். வன்கவர் பேரஞ் செய்யும் நாடு, அதன் சுங்க வரிகளைக் குறைப்பது அதன் பொருளாதாரத்திற்கு நலமாய் இருந்தபோதிலும், அவற்றைக் குறைக்காது, பிறநாடுகளிலிருந்து சுங்கவரிச் சலுகைகளைப் பெற முயலும். சமரசப் பேரஞ் செய்யும் நாடு அதன் சுங்க வரிகளைக் குறைக்காமலிருப்பது அதன் பொருளாதாரத்திற்கு நலமாயிருப்பினும், அவற்றைக் குறைத்துப் பிற நாடுகளிலிருந்து சுங்க வரிச் சலுகைகளைப் பெறும். சுங்க ஒன்றியமும் காமன்வெல்த்திலுள்ள சுங்க வரிச் சலுகை முறையும் சமரசப் பேரத்திற்குத் தக்க சான்றுகளாகும்.
இப்போதைய நிலை
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி, குறைந்த அளவிலேயே உள்ளது. ஆகவே வளர்ச்சி குறைந்த நாடுகளின் சிறப்புத் தொழில்களுக்குச் சுங்க வரிகளாலும் இறக்குமதிப் பங்கீட்டாலும் தொழிற்காப்பு அளிக்கப்படலாம். இதற்கு உதவியாக 1947–ஆம் ஆண்டில் உருவாகிய சுங்கவரி வாணிகப் பொது ஒப்பந்தத்தில் (GATT) தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் பெரும்பான்மையான நாடுகள் பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடுகள் ஆதலால், அவற்றுக்குச் சில சிறப்புச் சலுகைகள் ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளன. இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னர் இல்லாத அளவுக்கான ஊக்கம் இப்போது அளிக்கப்படுகின்றது. அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செருமனி போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவி சிறப்பானது. மூலதனம், நுட்ப அறிவு ஆகியவை அரசுகளாலும் தனியாராலும் அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் உலக வங்கி (World Bank), பன்னாட்டு நிதிக் கழகம் (International Finance Corporation), ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Export Import Bank) போன்றவை குறிப்பிடத்தக்கவை.க.சொ.
துணை நூல்கள்
Sodersten, B.O., “International Economics”, Macmillan, Great Britain, 1973.
Haterler, G.V., “International Trade”, William Hodge & Company Limited, London, 1965.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 330)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s7ca8twz/
தமிழ்“அதிகச் சலுகையுறும் நாடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/s7ca8twz/APA
Oliyon Research. (2026). அதிகச் சலுகையுறும் நாடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s7ca8twz/MLA
"அதிகச் சலுகையுறும் நாடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/s7ca8twz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment