பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தால் அறியலாகும் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இம்மன்னன் வரலாறு அப்புராணத்தில் உக்கிரகுமாரன் திரு அவதாரப் படலம், உக்கிர பாண்டியனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம், கடல் சுவற்வேல் விட்ட படலம், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம், மேருவைச் செண்டாலடித்த படலம் ஆகிய பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. இவன் பெயர், வரலாறு முதலியன சிறிய மாற்றங்களுடன் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்திலும் கூறப்பட்டுள்ளன. இம்மன்னன் சோமசுந்தர பாண்டியனுக்கும் தடாதகைப் பிராட்டிக்கும் மைந்தனாகப் பிறந்தான்; இளமையில் கலைகள் பல பயின்றான்; உரிய காலத்தில் சோமசேகரன் என்னும் மன்னன் மகள் காந்திமதியை மணந்து, மதுரை ஆட்சியினை மேற்கொண்டான். இறைவன் அருளால் வளை, வேல், செண்டு ஆகிய படைகள் பெற்றான். இவன் 96 அசுவமேதயாகம் செய்து பெருமை பெற்றமை கண்டு, பொறாமை கொண்டு, இந்திரன் மதுரையை அழிக்கக் கடலை ஏவினான். சித்தராகத் தோன்றிய சிவபெருமான் தூண்டுதலால் உக்கிர குமார பாண்டியன் மதுரையைச் சூழ்ந்த கடலின்மீது தன் வேலினைச் செலுத்தி, அதன் வீறினை அடக்கினான். இவன் காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யாமல் வறுமை மிகவே, மழைவேண்டி இந்திரனின் உதவியை நாடி, சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் தேவருலகு சென்றனர். அவர்களின் வருகை உணர்ந்த இந்திரன் மூவர்க்கும் தனித்தனி இருக்கை அமைத்திருந்தான். சேர சோழ மன்னர் இருவரும் தத்தமக்கு அமைக்கப்பட்ட இருக்கையில் அமர, இப்பாண்டிய மன்னன் இந்திரனோடு ஓர் இருக்கையில் அமர்ந்தான். அது கண்டு மனம் புழுங்கிய இந்திரன் அதனை வெளிக்காட்டாமல் சேர சோழ மன்னர்க்கு உரிய சிறப்புச் செய்து அனுப்பி, அவர்கள் நாட்டில் மழை பொழியுமாறு செய்தான். பாண்டியனைப் பாராட்டுவதுபோன்று பலர் கூடிச் சுமக்கத்தக்க ஒரு பெரிய மாலையினை அவனுக்கு அணிவித்தான். பாண்டியன் அதனை மிகவும் எளிதாகத் தோளில் ஏற்று விளங்கினான். அதனால், இப்பாண்டியன் ‘ஆரந்தாங்கு பாண்டியன்’ என்று இந்திரனால் சிறப்பிக்கப்பட்டான். பாண்டி நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாமலிருந்தது. ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற பாண்டியன் அங்கு வந்த இந்திரனுடைய மேகங்களைப் பிடித்துச் சிறையிலிட்டான். அவற்றை மீட்க எண்ணிப் படை எடுத்துவந்த இந்திரன் முடியினை வளை எறிந்து விழச் செய்தான். ‘மழை பெய்விக்கிறேன் மேகங்களை விடுக’ என வேண்டி இந்திரன் தூதனுப்பவும் இசையாமல், அவனுக்கு நண்பனான ஒருவேளாண் மகன் இந்திரனுக்குப் பிணையாகி வேண்ட விடுவித்தான். பிறிதொரு சமயம் நாட்டில் மழை பெய்யாமற் போக, பாண்டியன் சோமசுந்தரப் பெருமானை வேண்டினான். வறட்சி ஓராண்டு நீடிக்கும் என்றும், அது நீங்க மேருமலை சென்று அங்குள்ள பொன்னறை திறந்து பொன்னை எடுத்தபின் அதனை மூடி நின் இலச்சினை பொறித்து வருக என்றும் அவர் அருளினார். இறைவன் ஏவலால் பாண்டியன் சென்று மேருவை அழைக்க, அது காலந்தாழ்த்தியதால் சினமுற்று அம்மேருவின் செருக்கு அடங்குமாறு அதன் சிகரத்தினைத் தன் கைச் செண்டினால் தாக்கினான். அதனால், நிலை தளர்ந்த மேரு பொன்னறையினைக் காட்டி வேண்டியவற்றை எடுத்துச் செல்லுமாறு வேண்டிப் பணிந்தது. அப்பொன்னைக் கொண்டு வந்து பாண்டியன் தன் குடிமக்களுக்களித்து நாட்டினைக் காத்தான். இப்பாண்டியன் இவ்வாறு பல்லாண்டு நாடுகாத்துப் பின்னர், தன் மகன் வீர பாண்டியனுக்கு முடிசூட்டிச் சிவபத மெய்தினான். இம்மன்னன் உக்கிர பாண்டியன், ஆரந்தாங்கு பாண்டியன் என்றும் அழைக்கப் பெற்றான். இவன் இந்திரன் அணிவித்த மாலையை அணிந்தமை பற்றிய குறிப்புச் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. இவனைச் சிலப்பதிகாரம் ‘தேவராரமார்பன்’ என்று குறிப்பிட்டுள்ளது. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திலமைந்த வாழ்த்துக் காதையில் இடம் பெறும் கந்துகவரிப் பாடலில் ‘தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்று பந்தடித்துமே, தேவரார மார்பன் வாழ்க என்று பந்தடித்துமே’ (சிலப் வாழ்த்து, கந்துகவரி) எனப்பந்தடிக்கும் மகளிர் பாடியாடும் பகுதியில் இக்குறிப்பு அமைந்துள்ளது.