ஒரு வடிவமைத்த இரும்பு உள்ளகத்தைக் (iron core) கொண்டு சுற்றப்பட்ட கம்பிச் சுருள் மின்னணுவியல், மின்னியல் சுற்றுகளில் பலவாறு பயன்படுகிறது. சுருள்கள் காந்தப் புலத்தை உண்டாக்கவும், மின் தூண்டத்தை (induction) உண்டாக்கவும் பயன்படும். காற்றை உள்ளகமாகக் கொண்ட மின் தூண்டத்தில் கம்பிச் சுருள் எளிய அட்டை மீது சுற்றப்பட்டிருக்கும். இவ்வகையான தூண்டத்தில் அளவு குறைவாகயிருக்கும். இரும்பை உள்ளகமாகக் கொண்ட கம்பிச் சுருளில் தூண்டத்தின் அளவு மிகுதியாக இருக்கும். இரும்பு ஒரு திண்மப் பொருளாக இருந்தால், சுழிப்பு மின்னோட்டம் ஏற்படும் போது, சுழிப்பு மின்னோட்ட இழப்பு ஏற்படும். இரும்பாலான உள்ளகம் பல மெல்லிய தகடுகளால் ஆக்கப்பட்டால், சுழிப்பு மின்னோட்டம் குறைந்து, இழப்பும் குறையும். படம் 1 இல் காற்று உள்ளகச் சுருளும் இரும்பு உள்ளகச் சுருளும் காட்டப்பட்டுள்ளன. பெர்ரைட் என்னும் தனிமத்தை உள்ளகமாகக் கொண்ட சுருள்களும் உள்ளன. இது பெர்ரைட் உள்ளகச் சுருள் எனப்படும். பெர்ரைட் என்பது மிகவும் பொடியான இரும்பையும், ஒரு வகை மின் கடத்தாப் பொருளையும் ஒன்று சேர்த்துத் தயாரிக்கப் படுவதாகும். காற்றை உள்ளகமாகக் கொண்ட சுருள்கள் மிகக் குறைந்த மின் தூண்டத்தைக் கொண்டிருக்கும். உள்ளகத்தால் இழப்பு ஏற்படுவதில்லை எனலாம். இரும்பை உள்ளகமாகக் கொண்டவை மிகக் குறைந்த அலைவெண் மின்னோட்டத்தில் இழப்புக் குறைவாக இருக்கும். அலைவெண் மிகும் போது, இழப்பும் மிகும். ஆனால், காற்று உள்ளகச் சுருளை விட, இரும்பு உள்ளகச் சுருள் மிகுதியான மின் தூண்டத்தைக் கொண்டிருக்கும். பெர்ரைட் உள்ளிட்ட சுருள்களில் மின்தூண்டம் பெருமளவிலிருக்கும். சுழிப்பு மின்னோட்ட இழப்பும், மின் காந்தத்தால் ஏற்படும் இழப்பும் மிகவும் குறைவு. மிக உச்சத்திலிருக்கும் அலைவெண்களில் இழப்புகள் மிகக் குறைவாகவிருக்கும். ஒரு சுருளில், அதன் மின்னோட்டத்தால் ஏற்படும் மின்னழுத்தம் e = என்றிருக்கும்; di/dt என்பது மின்னோட்டம் மாறு விகிதம். மின் தூண்டத்தின் அளவு ஹென்றிகளில் கூறப்படும். சுருளில் ஒரு நொடிக்கு ஓர் ஆம்பியர் என்று மாறும் மின்னோட்டம் ஒரு வோல்ட் மின்னழுத்தத்தை ஏற்படுத்தினால், மின் தூண்டத்தின் அளவு ஒரு ஹென்றியாகும். (di/dt = 1 ஆம்பியர்/நொடி, e = 1 வோல்ட், L = 1 ஹென்றி). சுருள்கள் பல வழிகளில் பயன்படுகின்றன. வானொலிப் பெட்டிகளில் பயன்படும் சுற்றுகளிலும் தொலைக் காட்சிப் பெட்டிகளிலும், மின்னோடி, மின் கருவிகளிலும் சுருள்கள் பயன்படும். செம்பு, அலுமினியம் போன்ற தனிமங்கள் கம்பிகளுக்குப் பயன் படும். கம்பிகளின் விட்டத்தைப் பொறுத்து, மின்னோட்ட அளவு மாறுபடும். —க. அர. பழனிச்சாமி நூலோதி. B.L. Theraja, Basic Electronics Solid State, Second Edition, S.Chand and Company Pvt. Ltd., New Delhi, 1987.