இராமநாதபுரம் மாவட்டத்தில் (இன்று பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம்) கோட்டையூரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் 1909–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 6–அம் நாள் பிறந்தார். தந்தையார் சு.வீ.அள. இராமநாதன் செட்டியார்; தாயார் உமையாள் ஆச்சி, இவர் தம் உயர்நிலைக் கல்வியைக் காரைக்குடியிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். அழகப்பர் கல்வியில் மிகவும் ஆர்வமுடையவர். கல்லூரிக் கல்வி தொடங்குவதற்கு முன்னரே இவர் கல்வி வாழ்க்கைக்கு இடையூறு ஒன்று நேர்ந்தது. மலாயாவில் தொழிலாற்றிய இவர் தந்தையார் தம் தொழிலில் அழகப்பரைப் பழக்குவதற்காக மலாயா வருமாறு கடிதம் எழுதி அழைத்தார். தந்தை சொல் தவிர்க்க முடியாத நிலையில், படிப்பைத் தொடர முடியாத வருத்தத்துடன் மலாயா புறப்பட்டார். கப்பலில் செல்லும்பொழுது வழியிலேயே கடுங்காய்ச்சல் ஏற்பட்டது. கப்பல் அதிகாரி, ‘கடும் காய்ச்சல் அழகப்பச் செட்டியார் அம்மைக்கு அறிகுறி’ என அஞ்சி இவரை நாகப்பட்டினத்தில் இறக்கிவிட்டுச் சென்றார். இப்பயணத்தடை படிப்புப் பயணம் தொடர வாய்ப்பாயிற்று. சென்னை மாநிலக் கல்லூரியில் அப்பொழுதைய பல்கலைக் கழகத் தொடக்க வகுப்புப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர், அக்கல்லூரியிலேயே ஆங்கில இலக்கியத்தைப் பாடமாகக் கொண்டு பி.ஏ., (ஆனர்சு) படித்துத் தேர்ந்தார். நகரத்தார் மரபில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல்வர் என்ற சிறப்பையும் பெற்றார். ஐ.சி.எசு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இங்கிலாந்து சென்றார். ஆனால், இப்படிப்புக்குரிய மருத்துவச் சோதனையில் இடர்கள் ஏற்பட்டன. இப்படிப்பை விடுத்து, மனம் தளராது ‘மிடில் டெம்பிள்’ (Middle Temple) என்ற சட்டப் பல்கலைக்கழகத்தில் ‘பார்-அட்-லா’ (Bar-at-Law) பயிலத் தொடங்கினார். இப்படிப்புக் காலத்திலேயே ஓய்வு நேரத்தில் இலண்டனில் உள்ள ‘சார்ட்டர்டு பாங்கு’ (Chartered Bank) என்ற பெரிய வங்கியில் பகுதி நேரப் பயிற்சியில் சேர்ந்து, வங்கி அலுவலர் முறைகளையும் மேலைநாட்டுத் தொழில் முறைகளையும் நன்கு அறிந்தார். இரு பயிற்சிகளுக்குமிடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் விமானம் ஓட்டவும் பயின்றார். 1933–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26-ஆம் நாள் இலண்டன் வழக்குரைஞர் அவையில் இடம் பெறுவதற்காக அழைப்பைப் பெற்றார். இவர் சார்ட்டர்டு வங்கியியல் மேனிலைப் பயிற்சி பெற்ற முதல் இந்தியராவர்; விமானியாகச் சான்றிதழும் பெற்றார். தம் பெரியப்பாவிடம் தம் படிப்பு விருப்பத்தைக் கூறி அவர் இசைவைப் பெற்றார். ஆனால், அழகப்பர் கல்லூரியில் சேருவதற்கு முன்னரே பெரியப்பா எதிர்பாராது காலமானார். அழகப்பர் கல்வித் தடை கண்டு மிகக் கலங்கினார். இவர் கலக்கம் தந்தையாரைக் கனிவித்துக் கல்வியைத் தொடர இசைவுதரச் செய்தது. இளமையில் தம் கல்வியில் கொண்ட ஆர்வமே, தம் வாழ்க்கையில் கல்விக்கான தனித்தனிக் கொடைகளுக்கும் பல்வகைக் கல்விநிலையங்கள் நிறுவுதற்கும் வித்திட்டது. கல்விப் பருவத்துடன் இவர் கல்வி நாட்டம் நின்று விடவில்லை. பின்னரும் படிக்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்; பயணம் செய்யும்போதும் படிப்பார். தாம் படிக்கும் நூல்களில் சிறந்த இடங்களைக் கோடிடுவார்; காணப்பெறும் பிழைகளைத் திருத்துவார். இவர் படித்த நூல்கள் இவர் கையெழுத்துடன் காரைக்குடி அழகப்பா கல்லூரி நூலகத்தில் இன்னும் உள்ளன. மூதறிஞர் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் எழுதிய ‘ஆத்ம சிந்தனை’ என்ற நூலைப் படித்து அதில் ஈடுபட்ட அழகப்பர், கல்லூரி மாணவர்கள் அதனைப் படிக்கவேண்டுமெனக் கருதி அந்நூல்களை வாங்கி மாணவர்களுக்குக் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார். தம் கல்லூரியில் கல்வியின் பல பிரிவுகளும் இருக்கவேண்டுமென எண்ணினார். மிகச் சில கல்லூரிகளிலேயே மண்ணியல் துறைப்பிரிவு (Geology) இருக்கும். முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்தே அழகப்பா கல்லூரி இத்துறையைப் பெற்று விளங்குகிறது. தகுதி வாய்ந்தவர் எங்கிருப்பினும் அவர்களைத் தம் கல்லூரிக்கழைத்துப் பணியில் அமர்த்தினார். முப்பதாண்டுகளுக்கு முன்னரே, அரசாங்க ஊதிய விகிதம் நூறு ரூபாய்க்குக் குறைவாக இருக்கும்போதே தம் கல்லூரி ஆசிரியர் எவரும் ரூபாய் நூற்றுக்குக் குறைவாக ஊதியம் பெறலாகாது என்பதில் கருத்துச் செலுத்தினார். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவர் கல்வி நிறுவனங்கள் செய்ம்முறைப் பயிற்சிக்கான பல கருவிகளையும் பெற்று விளங்குகின்றன. இவை யாவும் அழகப்பர் கல்வியின்பாற் கொண்ட ஆர்வத்தின் விளைவுகளே. அயல்நாட்டுக் கல்வி முடித்துத் தாயகம் திரும்பிய அழகப்பர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்டார். எனினும், இத்தொழிலைத் தொடரவில்லை. அப்பொழுது கொச்சி திவானாக இருந்த சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார், கொச்சியில் தொழில்வளம் பெருக முதலீடு செய்வோருக்குப் பல சலுகைகளைத் தந்தார். அழகப்பர் இச்சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு பல நெசவாலைகளைக் கொச்சிப் பகுதியில் தொடங்கினார். அழகப்பரைத் தொழில் துறையில் ஊக்கப்படுத்தியவர் சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார். தமிழ்நாட்டில் சென்னிமலையிலும் துணிகளை வழவழப்பாகச் செய்- யும் தொழில் தொடங்கினார். பம்பாயில் பங்கு வணிகத்தில் (Forward Trading) ஈடுபட்டார். பங்கு மாற்று முன்னோக்குப் பேரத்தில் வல்லுநராக விளங்கினார். ‘சூபிடர் ஏர்வேசு’ என்ற விமானக் கம்பெனி ஒன்றையும் நிறுவினார். காசுமீரில் ஊடுருவிய பாகிசுதான் படைகளை அப்புறப்படுத்தும் இந்தியப் படைகளுக்கு உணவுப் பொருள்களையும் தளவாடங்களையும் அனுப்ப இந்நிறுவனத்தின் தகோடா (Dakoda) விமானங்கள் பயன்பட்டன. மேனாட்டு முறையில் விடுதித் தொழில் ஒன்றையும் நடத்தினார். அழகப்பர் என்றவுடன் வள்ளல் என்ற எண்ணமே மேலோங்கும். அவர் கொடை தொடர்கொடை. அவர் வாழ்க்கை நிறைவுறும் பொழுதே அவர் தொடர் கொடையும் முற்றுப் பெறுகிறது. தக்கர் பாபா வித்தியாலயத்தில் அரிசனத்தார் வாழ்வு உயர்தற்குக் கொடுத்தது, தமிழ்க் சுலைக்களஞ்சியத் தொகுப்புக்குக் கொடுத்தது, திருவாங்கூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் கட்டிலுக்கு வழங்கியது, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியற் கல்லூரி நிறுவவும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொழில் நுணுக்கக் கல்லூரி நிறுவவும் நல்கியது போன்றவை பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை நிலை வேறுபாடு கருதாது அழகப்பர் நல்கிய பெருங் கொடைகள் ஆகும். காரைக்குடி வட்டத்தில் கல்வி நிறுவனங்கள் அமைப்பதில் 1947 முதல் அவர் தம் கல்விக்கொடை மேலோங்கியது. மாண்டிசோரிப் பள்ளி, ஆயத்தப் பள்ளி, ஆதாரப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கலைக் கல்லூரி, பெண்களுக்கான கலைக் கல்லூரி, ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி பொறியியற் கல்லூரி, பல்தொழில்நுட்பப் பள்ளி, உடற்பயிற்சிக் கல்லூரி, இசைப் பள்ளி ஆகியன அழகப்பரின் கல்வி நிறுவனங்கள். மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சிக் கழகம் (Central Electro Chemical Research Institute) காரைக்குடியில் அமைய அவர் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. தில்லியில் பிரதமர் நேரு இல்லத்தில் நள்ளிரவில் அவர் கல்கத்தாவிலிருந்து திரும்பி வரும் வரை காத்திருந்து, காரைக்குடியில் இக்கழகத்தை அமைக்குமாறும், அதற்கென 300 ஏக்கர் பரப்புள்ள நிலமும் 15 இலட்சம் ரூபாயும் நன்கொடை தருவதாகவும் வாக்களித்தார். இக்கழகத்திற்கான கூடுதல் தண்ணீர்த் தேவையைச் சுட்டிக்காட்டிய போது, தேவையான தண்ணீர்க்கான வாய்ப்பு நிலைகளையும் எடுத்துக்காட்டி ஆசாய்ச்சிக்கழகம் அமையப் பாடுபட்டார். புதுதில்லியில் தென்னிந்தியக் கல்விக் கழகம் தழைக்கக் கொடை அளித்தார். அழகப்பர் திறமைக்கேற்பப் பல சிறப்புகளும் பொறுப்புகளும், பெற்றார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துத் தம் 37–ஆம் வயதில் வீரப் பெருந்தகை (Knight) என்ற பட்டம் பெற்றார். பின்னர் இப்பட்டத்தைத் துறந்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் டாக்டர் பட்டம் தந்து சிறப்பித்தன. இந்திய அரசு 1957–ஆம் ஆண்டில் ‘தாமரைத்திரு’ (பத்மசிரீ) என்னும் பட்டம் அளித்தது. கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்தில் கூடிய காமன்வெல்த்துப் பல்கலைக் கழக மாநாட்டில், சென்னைப் பல்கலைக் கழகக் குழுவில் ஒருவராய் அழகப்பர் பங்கேற்றார். கிளாசுகோ பல்கலைக் கழகத்தின் ஐந்நூற்றாண்டு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சார்பாளராகக் கலந்துகொண்டார். சப்பானில் கியோட்டோ நகரில் நிகழ்ந்த 12–ஆம் பசிபிக் உறவு மாநாட்டில் இந்திய நாட்டுச் சார்பாளராகச் சென்றார். சென்னை அரசின் தொடக்கக் கல்விச் சீர்திருத்தக் குழுவின் தலைவராகப் பணியாற்றி நாடு போற்றும் சிறப்பானதொரு அறிக்கையும் தந்தார். இவர் நோயால் வருந்திய ஒருநேரத்து அண்ணல் காந்தியடிகள் தம் மாலை நேரப் பிரார்த்தனையில் இவருக்காக வேண்டினார். நேரு இவரைச் “சமதர்ம முதலாளி” எனக் குறிப்பிட்டார். அழகப்பர் தம் கல்வி நிலையங்களிலுள்ள மாணவர்களையும் ஆசிரியர்களையும் அலுவலர்களையும் தம் குடும்பத்தவராகவே கருதினார். ஆண் மகவு இல்லாதவர்கள் பிள்ளை கூட்டிக்கொள்ளுதல் பொது மரபு. உமையாள் என்னும் மகள் தவிர ஆண் மகவு வேறு இல்லாத அழகப்பரிடம் பிள்ளை கூட்டிக் கொள்ளுமாறு சிலர் வற்புறுத்தினர். தம் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தம் பிள்ளைகளே எனக்கூறிப் பிள்ளை கூட்டிக்கொள்ள மறுத்துவிட்டார். தம்மைத் தம் கல்வி நிலையங்களுடன் இரண்டற இணைத்துக் கொண்டதுடன் கல்லூரி வட்டத்தில் ஒருவகைக் குடும்பவுணர்வு நிலவுமாறும் செய்த பெருமையுடையவர். தம் இறுதி அடக்கமும் கல்லூரி வளாகத்திலேயே அமைய விரும்பிப் பவநகர் அரங்கின் எதிரே இருக்குமாறு அதற்குரிய இடத்தைக் குறித்தார். அழகப்பர் நல்லியல்புகளுள் ஒன்று நன்றி மறவாமை. தாமரைத் திரு பட்டம் பெற்றபோது, அச்சிறப்பு, துணைவேந்தர் இலட்சுமணசாமி முதலியாருடன் தொடர்பு கொண்டு பல்வேறு கல்விக் கூடங்கள் நிறுவிச் சிறப்புற்றதால் கிடைத்தது எனக் கருதினார். நோயுற்றதால் நேரிற் சென்று நன்றி கூறமுடியாத நிலைக்கு வருந்தினார். ஆதலால் பட்டம் பெற்ற மறுநாளே துணைவேந்தருக்குக் கடிதம் வழியாகத் தம் நன்றியைத் தெரிவித்து ஆறுதல் பெற்றார். தமக்கு ஒவ்வொரு நேரத்து ஒவ்வொரு வகையில் உதவி செய்தவர்கள் பெயரைத் தம் கல்லூரிகளின் விடுதிகளுக்கு வைத்தார். அண்ணல் காந்தியடிகள் இறந்தபோது சித்துவல்ல சாமியார் ஒருவரை அழைத்துக்கொண்டு வானவூர்தி வழி விரைந்தார். அடிகளின் சாம்பலைக் கொண்டு வந்து காரைக்குடி அருகில் ஆற்றில் கரைத்தார். அழகப்பரின் கல்வித்திறமையும் சிந்தனைச் சிறப்பும் அவர்தம் பேச்சுகளில் வெளிப்பட்டன. ‘இந்திய நாடு பெரும்பாலும் வேளாண்மைப் பொருளாதாரத்தையே கொண்டிருப்பது. இந்தியா, தொழில் மயமாக வேண்டும்; அதற்கேற்ப நன்கு திட்டமிட்டுத் தொழில்கள் தொடங்க வேண்டும்; அதற்கான பயிற்சிகளைப் பெறக் கல்வி நிலையங்களும் பயிற்சி நிலையங்களும் பெருக வேண்டும்’ என நாட்டின் உடனடித் தேவையை வற்புறுத்தினார். ‘கோடி கொடுத்த கொடைஞன்’ என்ற சிறப்புப் பெயரைத் தம் நாற்பத்தெட்டாண்டுக் குறுகிய வாழ்க்கையிலேயே பெற்றவர் அழகப்பர். இவர் தேர்ந்த கல்வியாளர்; திறமையான தொழில் வல்லுநர்; தடைகளைக் கண்டு தளராது செயலாற்றும் உறுதிப் பாடுடையவர். இவர் தம் நாற்பத்தொன்பதாம் பிறந்த நாளன்று 6–4–1957–இல் காலமானார்.கோ.சி.