இது இரும்பு கார்போனேட்டின் கனிம வடிவமாகும். சிடரைட்டில் (siderite) இரும்புக்குப் பதிலாக மாங்கனீசும், மக்னீஷியமும் ஓரளவு உள்ளன. இது படிவுப் பாறைப் படிவுகளிலும், நீர்ம வெப்ப நரம்புப் படிவுகளிலும் (hydrothermal veins) காணப்படுகிறது. சுண்ணப் பாறைகளில் காணப்படும் இரும்புக் கரைசலின் செயல்பாட்டால் இது உண்டாகிறது. மேலும், இதில் இரும்புக்குப் பதிலாகக் காணப்படும் கால்சியம், வெப்பநிலையைப் பொறுத்து உயர்கிறது. இங்கிலாந்து, கிரீன்லாந்து, ஸ்பெயின், வட ஆஃப்ரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளில் சிடரைட் கிடைக்கிறது. சிடரைட் கால்சைட்டை ஒத்த கட்டமைப்பும், அறுகோணச் சமச்சீர்மையும் கொண்டுள்ளது. தனியான சிடரைட் படிகங்கள் பெரிதும் சாய்சதுர அமைப்புடனும், சில சமயங்களில் வளைந்த அமைப்புடனும் காணப்படுகின்றன. இது பழுப்பு நிறத்துடன் மிகுதியாகக் காணப்படுகிறது. சில சமயம் சாம்பல் அல்லது பச்சை நிறத்துடன் காணப்படும். மோஸ் அளவில் இதன் கடினத்தன்மை 4; ஒப்படர்த்தி 3.9. நுண்மணிகளாகவும், திரட்சியாகவும் சிடரைட் காணப்படுகிறது. —இரா, சரசவாணி நூலோதி. P. Ramdohr, The Ore Minerals and their Intergrowths, Pergamon Press, Oxford, 1969.