அகக் கட்டுமானம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம், முன்னேற்றப் பாதையில் திறமையுடன் செயல்படத் தேவையான பொருளாதார அடிப்படை உள்ளமைப்புகளைக் குறிப்பது. இது “பொது மூலதன இருப்பு” (Stock of Public Capital Goods) என்றும் சொல்லப்படும். நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆக்கத்தை (Production) அல்லது ஆக்கத் திறனை (Productivity) மிகுதிப்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகளை அகக்கட்டுமானம் (Infrastructure) எனலாம். உற்பத்தி (ஆக்கம்) செய்வதற்குத் தேவையான மூலப்பொருள்களைத் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லவும், உற்பத்தியான பொருள்களைப் பல்வேறு இடங்களிலுள்ள அங்காடிகளுக்கு எடுத்துச் செல்லவும் போக்குவரத்து வசதிகள் இன்றியமையாதன. தொழிலகங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், வணிகக் கழகங்கள், அஞ்சலகங்கள், தொலைபேசி நிலையங்கள் ஆகியன பொருளாதாரத்தின் அடிப்படைத் தேவைகள். இவை போலவே பொது மக்களின் நம்பிக்கையும் மதிப்புறுதியும் பெற்ற செலாவணி, வங்கிகள், மாற்றகங்கள் (Exchanges), நிதி நிறுவனங்கள் ஆகியனவும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத் தேவைகளாக உள்ளன. பொது மின்சாரம், நீர்ப்பாசன வசதிகள் ஆகியவையும் தேவையான அடிப்படைப் பொருளாதார மூலதனமாகக் கருதப்படுகின்றன. அடிப்படைச் சமுதாய மூலதனங்களான (Social Overhead Capital) அடிப்படைக் கல்வி, அறிவியல் வளர்ச்சி, சுகாதார, மருத்துவ வசதிகள், வீட்டு வசதிகள், பாதுகாப்பு வசதிகள், நெருக்கடி நிலை உதவிகள், நிலையான அரசியலமைப்பு, தனி மனித உரிமை ஆகியவையும் அகக் கட்டுமானங்களில் அடங்குகின்றன. அகக் கட்டுமானச் செலவுகள் ஆழ்ந்த நோக்கத்துடன் பொதுப்பணிகளுக்காகச் செய்யப்படுவதால், இவற்றின் பயன் நேரடியாக உடனுக்குடன் கிடைப்பதில்லை. எனவே, இவற்றுக்குத் தனியார் துறையிலிருந்து ஊக்கமும், முதலீடும் எளிதில் கிடைக்கும் வாய்ப்பில்லை. ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் அகக் கட்டுமானம், தனியார் துறையின் மூலமும், பொதுத் துறையின் வாயிலாகவும் பெருக்கமடைந்துள்ளது. இந்நாடுகள் முற்காலத் தொட்டே தொடர்ந்து முன்னேற்றமடைந்து வந்த காரணத்தினால் பொருளாதாரச் சமூக அடிப்படை வளங்களைப் பெருக்கி வந்துள்ளன. இவை புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாகவும், தனியார் துறை, பொதுத்துறை ஆகியவற்றின் வாயிலாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன. தொழில் நுட்பம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் பின் தங்கிய நாடுகளில் அகக் கட்டுமானம் தானாகவே வளர்ச்சியடையும் வாய்ப்பில்லை. இதன் அளவும், இதற்கான மூலதன அளவும் மிகையான அளவிற்குப் பெருகிவிட்ட தால் தனியார் ஈடுபாடு இதில் முற்றிலும் இல்லாமல் போகிறது. மேலும், இவற்றுக்கான செலவும், மிக்க அளவில் பெருகிவிட்டது. ஆகவே, பொதுத் துறையில் அரசு பொறுப்பேற்று, மையத்திட்டமிடல் முறையில் (Centralised Planning), இவற்றை உருவாக்கித் தரும்படியான நிலை உள்ளது. செலவு- களுக்காக அரசு வரிகளை விதித்து, அவற்றின் பளுவை மக்கள் உணராத வகையில், நீண்ட காலங்களுக்குப் பங்கீடு செய்கிறது. ஆகவே, அரசு பொறுப்புடன் அடிப்படைப் பொருளாதார வசதிகளை ஏற்படுத்தித் தருவதன்மூலம், தனியார் துறையில் முடங்கிக் கிடக்கும் பொருளாதார மூலதனங்களை விழிப்புறச் செய்து, பொதுத் துறைகளில் ஆதாயமும் பயனும் அடையச் செய்கிறது. அகக் கட்டுமானச் செலவுகளை ஆக்கத்திற்கான வழிகளில் உருவாக்குவது எளிதன்று, அவற்றுக்கான முதலீடு மிகையானது மட்டும் அன்றி, கட்டுமானக் கால அளவும் (Gestation Period) நீண்டதாக இருக்கும், அதாவது, முதலீடு செய்து பணிகள் முடிக்கப் பெற்றுக் கிடைக்கக்கூடிய பலன்கள் 5 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் கிடைக்கலாம். மேலும், முதலீடு செய்து செயல்படுத்தியவருக்கு எவ்வித நேரடி நன்மைகளும் விளையாமல் இருக்கலாம். இதனையே, பொருளாதார வல்லுநர்கள் ‘அடிப்படைச் சமுதாய ஆக்கச் செலவு’ (Social Over-head Cost) என்று கூறுகின்றார்கள். இது சமுதாய மறுமலர்ச்சி, வேளாண்மை, தொழில் துறை ஆகியவற்றிற்காகப் பல ஆண்டுகள் நாடு முழுமைக்கும் செய்யக்கூடிய செலவு என்பதால் இதன் பலனை அறுதியிட்டுக் கணக்கிட முடிவதில்லை. கல்வி, தொழில் நுட்பம், அறிவியல், மருத்துவ வசதிகள் ஆகியவற்றில் ஏற்படும் புரட்சியான மாற்றங்கள், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்புப் பங்கு வகிக்கின்றன. இவற்றுக்கான சமுதாய மூலதனச் செலவு மிகுதி என்றாலும், மனித ஆற்றல்வளம் (Manpower Resources) பெருகுகிறது. மனித ஆற்றல்வளம் ஒரு சிறப்பான அடிப்படை மூலதன இருப்பு ஆகும். குறைந்த அளவு இயற்கை வளங்களோடு, மிகுந்த அளவு மக்கள் தொகையைக் கொண்ட பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சி, அந்நாடுகளின் மனித ஆற்றல் வளத்தைக் கொண்டே அமைகிறது. நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியைத் தொடர்ந்து பெறவேண்டுமாயின், நாட்டில் நிலவும் அரசியல், வாணிகச் சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய அறிவாற்றலை மக்கள் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் அறிவும், ஆக்கத் திறனுமே இதனைச் செயற்படுத்தும் கருவிகளாக விளங்குகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது சப்பான், செருமனி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பெரும் பொருளாதார இழப்புகளைக் குறுகிய காலத்தில் ஈடுகட்ட அந்நாட்டு மக்களின் ஆக்கமும், ஊக்கமும் காரணங்களாயின. அதனால் இந்நாடுகள் குறுகிய காலத்தில் புதுப் பொருளாதாரச் சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை பெற்றன. அகக் கட்டுமானச் செலவுகள் பல துறைகளில் மூலதனங்களைப் பெருக்குவதற்கு வழி வகுக்கின்றன. தொடக்கக் காலத்தில் செலவு மிகுதியாகி, ஆற்றல் பயன்படுத்தப்படாமல் தேங்கிக் கிடப்பது போல் காணப்பட்டாலும், குறுகிய காலத்தில் பல புதிய தொழில்களும், பணிகளும் தொடங்கப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் பெருகி, இதன் விளைவாக மொத்த உற்பத்தி பெருகும். பெரும்பாலான பின் தங்கிய நாடுகளில் சமூக மூலதனத்தின் இருப்பு முற்றிலும் இல்லாத நிலையிலுள்ளது. மின்சாரம் அல்லது அதற்கு மாற்றுச் சக்திகள் கிடைப்பதற்கு அருமையாக உள்ளன. அவற்றைப் பெருக்குவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை. நகரங்கள் தொழில் மயமாக்கப்பட்டாலும், குடியிருப்புக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. சுகாதாரம், வடிகால் வசதிகள் மிகவும் குறைந்தும், அவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப் பெறாமலும் உள்ளன. இந்நாடுகளில் ‘சமூக மூலதன இருப்பு’ இல்லாமையின் காரணமாகப் பொருளாதார வளர்ச்சி தடைப்படுகிறது. ஆகவே, இந்நிலையை அகற்றி அகக் கட்டுமானம் எழுப்பப்பட்டாலொழிய முன்னேற்றத்தை விரைவில் காண இயலாது. ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி வளர்ச்சியடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாட்டு மொத்த முதலீட்டுள் 50 விழுக்காட்டினை வீட்டு வசதிகள், பொதுப்பணிகள் போன்ற பொது அடிப்படைத் தேவைகளுக்கென ஒதுக்கீடு செய்கின்றன. இவ்வாறு செய்யப்படும் முதலீடு, முன்னரே அமையப் பெற்ற சமூக முதலீட்டின் இருப்பை, அதன் முழுச் செயற்பாட்டு நிலையில் இயக்குவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இதனால், அகக்கட்டுமான வசதிகள் இல்லாத வளர்ச்சியடையா நாடுகளில் ‘பொது மூலதன இருப்பு’ பெரிதும் வருந்தத்தக்க நிலையில் உள்ளது. துணை நூல்கள் John Cody Etal, “Policies for Industrial Progress in Developing Countries”, Oxford University Press, Newyork, 1980. Harry W. Richardson, “Regional And Urban Economics”, pitman Publishing Limited, London, 1979. Ray. S.k., “Economics of the Third World”, Prentice Hall of India Private Limited, New Delhi, 1983. Eli Guizberg, “The Human Economy”, Mc Graw Hill Book Company, Newyork, 1976. Marwin L. Fair ET-AL., “Economics of Transportation and Logistics”, Business Publications, INC, Texas, 1975.