கருங்கடல், காசபியன் கடல், ஆகியவற்றிற்கும் உருசியா, துருக்கி நாடுகளுக்கும் இடையில் அர்மீனிய நாடு அமைந்துள்ளது. அரசியல் அடிப்படையில் அர்மீனியர்கள் (Armenian) உருசிய அர்மீனியர்கள், துருக்கி அர்மீனியர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றார்கள். இருப்பினும் அர்மீனிய மக்கள் துருக்கி, பிரான்சு, சிரியா, உருசியா, அமெரிக்கா முதலான நாடுகளிலும் வாழ்கிறார்கள். உருசியப் பகுதியும் துருக்கிப் பகுதியும் இணையும் மேற்கத்தியப் பீடபூமியே இவர்கள் மிகுதியான அளவில் வாழுமிடமாகும். இப்பீடபூமி 4000 அடி முதல் 6000 அடி வரை உயரமானதாக உள்ளது. இதனாலேயே அர்மீனியர்கள் மேட்டுநில மக்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களது வரலாறு குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் நெடுங்காலமாகச் சுதந்திரத்திற்காகப் போராடி வந்தனர். கி.பி. 1894–ஆம் ஆண்டு ஒட்டோமான் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். 1915–ஆம் ஆண்டு துருக்கியர் 1,75,000 அர்மீனியர்களைச் சிரியாவிற்கும் மெசபடோமியாவிற்கும் நாடு கடத்தினர். இந்நிகழ்ச்சியில் துருக்கிய மக்களின் கொடுமையால் 6,00,000 அர்மீனியர் கொல்லப்பட்டனர். இக்கொலை நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அர்மீனியர் அனைவரும் ஒற்றுமையை ஏற்றுக் கூட்டுணர்வுடன் வாழ முற்பட்டனர். இதன் பின்னர்த் தம் அண்டை மக்களான சார்சியா (Georgia), அசர்பெய்சன் (Azerbaijan) முதலானோரைப் போலவே தங்களையும் உருசிய மக்களெனவே கூறிக் கொள்ள முற்பட்டனர். இவர்கள் தோற்றத்திலும் மொழியிலும் இந்திய–செருமனியைச் சார்ந்தவர்கள். அர்மீனியர் அடிப்படையில் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். புகையிலை, பருத்தி, நெல் முதலான பயிர்களை விளைவிக்கின்றனர். இவர்கள் வாழும் சில பகுதிகள் வறண்ட பீடபூமியாகவும், எரிமலை வெடித்த குன்றுகளாகவும், அரைப் பாலைவனமாகவும் இருப்பதால் இப்பகுதிகளில் பயிர்த்தொழில் செய்ய இயலவில்லை. துருக்கிய அர்மீனியர் பயிர்த்தொழிலில் பண்டைய முறைகளையே கையாளுகின்றனர். உருசிய அர்மீனியர்களுக்கு உருசியாவின் அரசமைப்பு மிகுந்த ஊக்கமளிப்பதாலும், நவீன முறைகளில் பயிர்த்தொழில் செய்வதாலும் மேம்பட்ட வாழ்க்கை அமைப்பை மேற்கொண்டுள்ளனர். கல்வியிலும் அர்மீனியர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார்கள். கல்விச்சாலைகளும், பல்கலைக் கழகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அர்மீனியர் கிறித்தவ மதத்தைச் சார்ந்துள்ளனர். இவர்கள் தமக்குரிய வளமுற்ற பண்டைய பண்பாட்டை இன்றளவும் நிலைநிறுத்தி வருகின்றனர். திருக்கோயில் (Church), நெடுங்கணக்கு (Alphabet), கலை, இலக்கியம், முதலான பண்பாட்டுக் கூறுகளைத் தமக்கென்று அமைத்து வாழ்ந்து வருகின்றனர். வணிகம் செய்வதில் அர்மீனியர் மிக வல்லவராவர். தங்களுக்குச் சொந்தமான வணிகத்தில் முழு ஈடுபாடுடனும் மிக்க ஆற்றலுடனும் முழுக் கவனத்தையும் செலுத்தும் இயல்புள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களது திறமையைக் கணக்கிட்டு மூன்று யூதர் அல்லது மூன்று கிரேக்கர்களுக்கு ஓர் அர்மீனியர் நிகரானவர் என்பர். உருசிய அரசின் முன்னேற்றத் திட்டங்களில் வளர்ச்சியடைய முடியும் என்று நம்புவதால் தங்கள் குழந்தைகளை உருசிய மொழியில் பயிற்றுவிக்கின்றனர்.