இருதுசம்காரம்
irutucamkāram
கவி என்பதற்குச் சுக்கிரன், பிள்ளையார், கவிஞன், சூரியன் என்று பொருள்.
கவி என்பதற்குச் சுக்கிரன், பிள்ளையார், கவிஞன், சூரியன் என்று பொருள். கவி எந்தக் கருத்தையும் மனிதன் இயல்புக்கு அப்- பாற்பட்டு நோக்குபவன். கவியின் குரலே கவிதை. காப்பிய உலகில் கவி என்பான் ஒரு படைக்கும் கடவுள். கவி இயல்பாகக் கவிஞனாகவே பிறக்கிறான்.
ஆன்மீகமும் புலமையும் அறிவு ஆராய்ச்சியுடன் அறிவுரை தரும். கவிதையோ காதலியின் கன்னல் மொழியில் மனவுணர்வுகளை அரவணைத்து அறிவு புகட்டும். கவிதையும் இசையும் இணைந்திருக்கும் பொழுது கருத்து இசைந்த நாட்டியமாகும். பரத முனிவர் காலத்தில் இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்தே இருந்தன. பிறகு வெவ்வேறாயின. இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் ஒருங்கே அமைந்த காப்பியத்தைக் காண்பதரிது.
இருதுசம்காரம் என்பது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் வருணனையாக இயற்றப்பட்ட ஒரு சிறு காப்பியம் ஆகும். இருதுசம்காரம் என்பதற்குப் பருவ வருணனைகளின் தொகுப்பாய் அமைந்த தனிக்காப்பியம் என்பது பொருள். இக்காப்பியம் நடை, கருத்து, தொனி, அணி, உவமை முதலியவற்றில் மேம்பட்டு விளங்குகிறது. இதில் உள்ள எளிய எடுப்பான சொற்கள், மிக அருமையான இயற்கை வருணனைகள், கவியின் மனவுணர்வு வெளிப்பாடு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு. காளிதாசரே இதனைப் படைத்தவர் எனப் பலர் கருதுகின்றனர். இந்நூலைக் கற்ற விக்டர் என்னும் மேனாட்டறிஞர் காளிதாசரைத் தவிர வேறு எந்நாட்டுக் கவிஞனாலும் ஆண், பெண் காதலைப் பற்றி இவ்வளவு கவினாகப் பாடியிருக்க முடியாது எனக் கூறுகிறார்.
இந்நூலில் பருவகாலங்களின் இன்றைய முறை மாறி, கோடை, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் என்ற முறையில் அருமையான இயற்கை வருணனைகள் அமைந்துள்ளன. இதில் ஆறு சருக்கங்களும் 153 செய்யுள்களும் பல்வகை யாப்பில் உள்ளன. இன்பம் நுகர்வோரும் நாடகம், திரைப்பட அரங்கங்கள் அமைப்போரும் படித்தறிய வேண்டிய நூல் இது. இந்நூலில் பருவக்கால வருணனைகள் படிப்போரை இன்புறுத்தும் வகையில் புனையப்பட்டுள்ளன. கோடைக் கால இரவுப் பொழுதில் வானம் தெளிவாக உள்ளது. எங்கும் அமைதி நிலவுகிறது. நிலவு தண்ணொளியை வீசிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் மாளிகையின் நிலாமுற்றத்தில் இளங்காதலர் இருவர் காதல் விளையாட்டில் களித்திருக்கின்றனர். தாமரை மணம் வீசும் எழில் முகமுடைய காதலி வீணை மீட்டுகிறாள். அது காதலனின் கருத்து, செவி, கண் ஆகியவற்றிற்கு இனிமை அளிக்கிறது. கோடை வெயிலைத் தாங்காத பாம்பு புற்றினுள்ளிருந்து வெளியேறி, தோகை விரித்தாடும் மயிலின் நிழலில் பதுங்கி ஒதுங்குகிறது. அதனருகே ஒரு தவளை படுத்திருக்கிறது. இது இந்நூலில் கூறப்பட்டுள்ள கோடை வருணனையுள் ஒன்று.
கூதிர் கால வருணனைகள் இருது சம்காரத்தில் இயற்கைச் செழிப்பினை வெளிப்படுத்துகின்றன. கரிச்சான் குஞ்சுகள் கீச்சிடுகின்றன. தடாகத்தில் தாமரை மலர்கள் தேன் சிந்துகின்றன. அதனை மாந்தி வண்டினம் முரல்கின்றன. இயற்கை எழிலில் இன்புற்றவாறே அழகிய இளம்பெண் ஒருத்தி நடனம் ஆடுகின்றாள்; தம்முருவம் தடாகத்தில் தெரியவே, வேறொருத்தி நடனம் ஆடுவதாக மயங்கி, மனக்காழ்ப்புக் கொள்கிறாள். இவை போன்று இளவேனில், முதுவேனில் போன்ற பருவங்களின் வருணனைகள் சிறப்பாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. என்.எஸ்.தா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 199)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rwc2zmrc/
தமிழ்“இருதுசம்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rwc2zmrc/APA
Oliyon Research. (2026). இருதுசம்காரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rwc2zmrc/MLA
"இருதுசம்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rwc2zmrc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment