சிலந்திகளைக் கொல்லும் மருந்திற்குச் சிலந்தி கொல்லி (acaricide) என்று பெயர். பயிர்களுக்கு அழிவு தரும் பல்வேறான சிலந்திகள், சிலந்தி கொல்லியால் சிறப்பாகவும், விரைவாகவும் கட்டுப்படுத்தப் படுகின்றன. சிலந்தி கொல்லிகளில் கரிம, கனிம வேதிப் பொருள்கள் அடங்கும். இவை தூவும் தூள், நீர்ம மாற்றுத் திரட்டு, தனையும் தூள், குறுநொய் வடிவங்களில் கிடைக்கின்றன. சிலந்தி கொல்லிகளில் முக்கியமான மருந்துகள் கந்தகம், பைனா பேக்ரில், டைகோஃபால், ஈத்தியான் (ethion), கார்போஃபினோத்தியான் (carbophenothion), புரோபார்கைட், டெட்ராடைஃபான், ஆக்சிதயோகுவினாக்ஸ் போன்றவை ஆகும். கந்தகம், தூவும் தூள் மருந்தாகவும் பிணையும் தூள் மருந்தாகவும் கிடைக்கின்றது. இது ஓர் உணர் நச்சு மருந்தாகும். நனையும் கந்தகத்தை ஒரு லிட்டருக்கு 2—5 கிராம் வீதம் கரைத்த கலவையைத் தெளித்தும், ஹெக்டேருக்கு 25 கி.கி. அளவில் கந்தகத் தூளைத் தூவியும், சிலந்திகளைக் கட்டுப்படுத்தலாம். பைனபேக்ரில் (binapacryl) என்னும் சிலந்தி கொல்லி, பூசணக் கொல்லித் தன்மையையும் கொண்டுள்ளது. இது மோரோசைட் என்ற வணிகப் பெயரில் விற்பனை செய்யப்படுகின்றது. தேயிலையில் காணப்படும் சிலந்திகளை இது நன்கு கட்டுப்படுத்தும். டைக்கோ ஃபால் (dico fol) என்னும் சிலந்தி கொல்லி, செல்தேன் என்ற வணிகப் பெயரில் 18.5% நீர்ம மாற்றுத் திரட்டாகக் கிடைக்கிறது. இம்மருந்து சிலந்தியின் எல்லா வளர்ச்சி நிலைகளையும் கட்டுப் படுத்தக் கூடியது. நீண்ட நாள் தொடர்ந்து சிலந்தி கொல்லித் தன்மையுடனிருக்கும். இம்மருந்து தேயிலையில் காணப்படும் பயிர்ச் சிலந்திகளைக் கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலும் ஒரு லிட்டருக்கு 2.5 மி.லி. என்ற அளவில் இது பயன்படுத்தப்படுகிறது. மருந்து தெளித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகே அறுவடை செய்தல் வேண்டும். தேனீ, பூச்சிகளை அழிக்கும் ஒட்டுண்ணிகள், உயிரினங்கள் ஆகியவற்றிற்கு இது தீங்கிழைப்பதில்லை. ஈத்தியான் என்பது டேஃபெத்தியான் என்ற வணிகப் பெயரில் 50% நீர்ம மாற்றுத் திரட்டாகக் கிடைக்கின்றது. தேயிலைச் சிலந்தியைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 2.5 லி. அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. கார்போஃபினோத்தியான் என்னும் சிலந்தி கொல்லி மருந்திற்குப் பூச்சி, சிலந்தி இவற்றை அழிக்கும் தன்மையுண்டு. பயிர்ச் சிலந்திகளின் முட்டையை அழிக்கும், இது டிரைதியான் என்ற பெயரில் விற்கப்படுகிறது. இம்மருந்து பயிர்களில் தோன்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்தி, ஒரு லிட்டருக்கு 3 மி. லி. வீதம் கலந்து பயன்படுத்தப்படுகிறது. புரோபார்கைட் என்னும் மருந்து ஓமைட் என்ற வணிகப் பெயரில் கிடைக்கிறது. இம்மருந்து ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து பயன்படுத்தப்படுகிறது. டெட்ராடைஃபான் பயிர்ச் சிலந்திகளின் அனைத்துப் பருவங்களையும் ஒழிக்கும் சிறந்த சிலந்தி கொல்லி ஆகும். 1954 முதல் பயன்படுத்தப்படும் இது டிடியான் என்ற வணிகப் பெயரில் கிடைக்கிறது. தேயிலை, பருத்தி, சோளம், ஆப்பிள், காஃபி, தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற பயிர்களை அழிக்கும் சிலந்திகளைக் கட்டுப்படுத்தும் இது, நனையும் தூள் மருந்தாகவும் கிடைக்கிறது. இம்மருந்தைப் பூசணி வகை இளங்கொடிகளில் பயன்படுத்தும் போது கேடு விளையும், பயிரின் வகை, வளர்ச்சிப் பருவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஹெக்டேருக்கு 1—2 லி. மருந்து தேவைப்படும். ஆக்சிதயோகுவினாக்ஸ் என்னும் சிலந்தி கொல்லி மொரஸ்டான் என்னும் வணிகப் பெயரில் 25% நனையும் தூளாக விற்பனை செய்யப்படுகிறது. இம்மருந்து சாம்பல் நோயையும் பயிர்ச் சிலந்திகளின் எல்லா வளர்ச்சி நிலைகளையும் அழிக்கும் திறன் கொண்டது எனினும், தேனீக்களுக்குப் பாதுகாப்பானது. கத்தரி, ஆமணக்கு இவற்றில் தோன்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துகிறது. 1950 முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ஆரமைட் என்னும் சிலந்தி கொல்லி, பூச்சிகளைத் தின்று அழிக்கும் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்காது. ஆனால், பேரி மரத்திற்குக் கேடு விளைவிக்கும். இது 15% நனையும் தூள், 25% நீர்ம மாற்றுத் திரட்டாகக் கிடைக்கிறது. இம்மருந்தைப் பயன்படுத்திய நான்கு வாரங்களுக்குப் பின்பே, பயிர்களை அறுவடை செய்து பயன்படுத்த வேண்டும். மேலும் குளோரோபென்சிலேட், குளோர் ஃபென்சன், ஃபென்சன் முதலியவையும் சிலந்தி கொல்லிகளாகப் பயனாகின்றன. இவற்றுள், குளோர்ஃபென்சன் 50% நனையும் தூளாகவும், குளோர்பென்சிலேட் 25% நனையும் தூள் நீர்ம மாற்றுத் திரட்டாகவும், ஃபென்சன் 20% நனையும் தூள் நீர்ம மாற்றுத் திரட்டாகவும் விற்பனை செய்யப்படும். 1949 முதல் பயன்படுத்தப்பட்டு வரும் குளோர்ஃபென்சன் முட்டை, குஞ்சு, வளர்ந்த சிலந்தி இவற்றைக் கட்டுப்படுத்தும். பூச்சி கொல்லிகளாகப் பயன்படும் பாரதியான் மீதைல் டெமெட்டான். தயோமெட்டான், டைமீதோயேட், பாசலோன் முதலியவையும் சிலந்திகளைக் கட்டுப்படுத்தும் திறன் பெற்றுள்ளன. ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்ட குறுநொய் மருந்துகளாகிய கார்போஃப்யூரான், ஆஸ்டிகார்ப், ஃபோரேட், டைசல்ஃப்டோன் முதலியவை சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், பயிர்களைத் தாக்கும் சிலந்திகளையும் கட்டுப்படுத்தும். —கோ.அர்ச்சுணன்