நுரைப்பித்தன் கீரை
nuraippittaṉ kīrai
இதன் தாவரவியல் பெயர் ரோத்தியா இண்டிகா (Rothia indica) ஆகும்.
இதன் தாவரவியல் பெயர் ரோத்தியா இண்டிகா (Rothia indica) ஆகும். இதன் இணை தாவரப் பெயர்கள் ரோத்தியா ட்ரைபோலியேட்டா (R.trifoliata), ட்ரைகோநெல்லா இண்டிகா (Trigonella indica), டில்வினியா ட்ரைஃபோலியேட்டா (Dillwynia trifoliata) என்பவையாகும்.
ஃபேபேசிக் குடும்பத்தைச் சேர்ந்த இதனை, இந்தியா தவிர இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளில் காணலாம். பூக்களை, நவம்பர்–பிப்ரவரி மாதங்களில் மிகுதியாகக் காணலாம். கனிகள் டிசம்பர் முதற் கொண்டு தோன்றுகின்றன.
அமைப்பு. இது தரையில் படர்ந்து, பல கிளைகளைக் கொண்டிருக்கும் ஒரு பருவச் செடியாகும். இலைகள் விரல்கள் போன்ற மூன்று கூட்டிலைகள் கொண்டவை. கூட்டிலைகள் மீது பட்டுப் போன்ற மயிர் இழைகள் இருக்கும். முனை மழுங்கிய இலையோரங்களில், மெல்லிய மயிரிழைகள் காணப்படும்.
இலை காம்பின் நீளம் 1 செ.மீ. சிற்றிலைக் காம்பின் நீளம் 0.5 மி.மீ. முட்டை வடிவ, 3 மி.மீ. அளவான இலையடிச் செதில்கள் பிரிந்தவை. பூக்கள் 6 மி.மீ. குறுக்களவுள்ளவை. தனியாகவோ, மூன்று பூக்களுள்ள கொத்தாகவோ இவை இருக்கும்.
மஞ்சரி துணர் (raceme) வகையைச் சேர்ந்தது. பூக் காம்பின் நீளம் 2. மி.மீ. புல்லிக் குழல் சமமில்லாதது. 5 மி.மீ. அளவான மேலிரண்டு உதடுகள் அகலமாகவும், பற்களுடனும், ஈட்டி வடிவாகவும் காணப் படும்.
சமமான, மஞ்சள் நிற அல்லி இதழ்கள் நீண்ட காம்பு கொண்டிருக்கும். இறக்கை அல்லி இதழ் குறுகியிருக்கும். படகு அல்லி இணைந்திருக்கும். மகரந்தத் தாள்கள் இணைந்து, கற்றையானவை. 4 மி.மீ. நீளமான மகரந்தக் கம்பிகள் குழாயாக இணைந்து, மேலே பிளவு பட்டிருக்கும். சீரான மகரந்தப் பைகள் நுணுக்கமானவை; பல சூல்கள் கொண்ட 3.5 மி.மீ. அளவுள்ள சூல் பை காம்பற்றது. சூலகத் தண்டு 1 மி.மீ. நீளத்தில் நேராகவும், நூல் போன்றும், காணப் படும். சூலக முடி நுணுக்கமான தலை வடிவாயிருக்கும். கனி மேன்மையாகவும், நேராகவும், தட்டையாகவும், அமுங்கியும் இருக்கும். ஒவ்வொரு கனியிலும் 20 அல்லது மேற்பட்ட விதைகளிருக்கும். பின் புற இணைப்பில், இது பிளவு படக் கூடியது. விதைகள் 1 மி.மீ. அளவில், ஊதா நிறத்தில் சிறுநீரக வடிவிலிருக்கும்.
பயன். இலைகளையும், காய்களையும் சமைத்து, உண்ணலாம். களர், உவர் நிலங்களில், இத்தாவரம் நன்கு வளரும். இச்செடியைப் பசுந்தாளுரமாகப் பயன் படுத்தலாம். —கோ.அர்ச்சுனன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 104)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtackg48/
தமிழ்“நுரைப்பித்தன் கீரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rtackg48/APA
Oliyon Research. (2026). நுரைப்பித்தன் கீரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rtackg48/MLA
"நுரைப்பித்தன் கீரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rtackg48/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment