நிறுவனத்தின் அலுவலர்களே கணக்குகளைத் தணிக்கை செய்வது அகத்தணிக்கை (Internal Auditing) எனப்படும். நிறுவனத்தின் கணக்குகள், நடவடிக்கைகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டால் மட்டுமே நிறுவனத்தின் வளர்ச்சியை மதிப்பிட முடியும். வணிக நிறுவனங்கள், பொதுவாக, தனியார் நிறுவனமாகவோ நிறுவன அமைப்பு மூலமோ நடைபெறலாம். நிறுவன அமைப்பு, பொதுமக்கள் சிலரிடமிருந்து சிறு தொகைகளைத் திரட்டி அவற்றை மூலதனமாகக் கொண்டு, அவர்களுள் ஒரு சிலரால் நிருவகிக்கப்படுவது. நிறுவனத்துடன் தொடர்பில்லாத பொது மக்களின் பணம் பயன்படுத்தப்படுவதால் நிறுவனக் கணக்குகள், நிறுவனச் சட்டப்படி தணிக்கை செய்யப்பட வேண்டும். ஆனால், இந்நிறுவனங்கள், கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதால் ஏற்படும் நன்மைகளைக் கண்டு தங்கள் கணக்குகளையும் தணிக்கை செய்கின்றன. தணிக்கை செய்வதற்கான சிறப்புத் தகுதி பெறாதவர்களும் அகத் தணிக்கையை மேற்கொள்ளலாம். நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை, நிறுவனத்துடன் தொடர்- பற்ற, ஆனால் பயிற்சிபெற்ற, “பட்டயக் கணக்கர்” (Chartered Accountant) மூலம் சரிபார்த்துக் கொள்வது “சட்டமுறைத் தணிக்கை” எனப்படுகிறது. இது, நிறுவனச் சட்டப்படி செய்யப்பட வேண்டிய கடமைகளுள் ஒன்றாகும். நிறுவனத்தின் கணக்கு வைப்பு கணக்கு நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள், தொழில் நடப்பு நடவடிக்கைகள், ஆகியவற்றைத் தணிக்கை முறையில் மறு ஆய்வு செய்து, அதன் மெய்ந்நிலையை மேலாண்மையினருக்கு (Management) முறையானவகையில் தெரிவிப்பது அகத் தணிக்கையாகும். அகத்தணிக்கை மேலாண்மையினருக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. நிறுவனத்தின் முழுநேர அலுவலர்கள், நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து திறனாய்வு செய்வது, அகத் தணிக்கையின் சிறப்புத் தன்மையாகும். பெரிய நிறுவனங்களில் அகத் தணிக்கைக்கெனத் தனித்துறை செயல்படுகிறது திட்டங்களின் செயலாக்கம், அகச் சீராய்வின் (Internal Check) முறைமை, நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் ஆகியன குறித்துச் சீர்தூக்கி மேலாண்மைக்குக் கருத்துத் தெரிவிப்பது இத்துறையே ஆகும். அகத் தணிக்கையும், அகச் சீராய்வும் ஒன்று போலக் காணப்பட்டாலும் இரண்டும் பரப்பிலும் நோக்கிலும் வேறுபட்டு நிற்பன. ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று அமையாது, அகச் சீராய்வு முறையில் நிறுவனத்தின் நடவடிக்கைகள், சிறந்த முன்னேற்பாட்டின்படி பிரிக்கப்பட்டு அலுவலர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. இந்த முறையில் பதிவுகள் செய்வதும், அவற்றைச் சரிபார்ப்பதும் ஒரே நேரத்தில் தானாக இயங்குகின்றன. ஆனால், அகத் தணிக்கை, பதிவுகள் அனைத்தும் எழுதி முடித்த பின்னர் மேற்கொள்ளப்படுவது. தவறுகள், மோசங்கள் முதலியன நடக்காமல் தவிர்க்க அகச் சீராய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவை நடப்பதைக் கண்டறிய அகத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அகச் சீராய்வை மீறி ஏற்படும் தவறுகளையும் மோசடிகளையும் அகத் தணிக்கை கண்டறிகிறது. நிறுவனத்தில் அகச் சீராய்வு எவ்விதத்தில் நடைபெறுகிறது என்பதை மதிப்பீடு செய்ய உதவும் அகத் தணிக்கையில், தணிக்கைப் பணியைச் செய்வதற்கென்று தனியே ஒரு முழு நேர அலுவலர் அமர்த்தப்படுகிறார். அகத் தணிக்கையர் நிறுவனத்தின் மேலாண்மையினரால் அமர்த்தப்படுகிறார். இப்பணியினை மேற்கொள்ளக் குறிப்பிட்ட தகுதி ஒன்றும் தேவையில்லை. பயிற்சி அறிவுள்ளவர் அகத் தணிக்கையராகப் பணியாற்றலாம். அகத் தணிக்கை, நிறுவனத்தில் தொடர்ந்து நடைபெறும் நிறுவனப் பணிகளின் ஒரு பகுதியாக அமைகிறது. அகத் தணிக்கையரின் பணிகளை மேலாண்மையினர் முடிவு செய்கின்றனர். இவர் தம் நோக்கம் வரையறுக்கப்பட்டது. நிறுவனத்தின் நடவடிக்கைகளில் ஏதேனும் தவறுகள், மோசடிகள் நடைபெற்றிருக்கின்றனவா என்பதை மட்டும் சோதனை செய்து மேலாண்மையினருக்குத் தெரிவிக்கவேண்டும். நடைமுறையில் அனைத்து நடவடிக்கைகளையும் சரிபார்க்க வேண்டிய பொறுப்பு, சட்டமுறைத் தணிக்கையருக்கு இருந்தாலும், அவர் சில நடவடிக்கைகளை மட்டும் எடுத்துக்காட்டாகப் பார்த்துத் தணிக்கையை முடித்து விடுவார். ஆனால் அகத் தணிக்கையர் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாகக் கவனிப்பார். இவர் தம் அறிக்கை, மேலாண்மையினரின் கவனத்திற்காக உருவாக்கப்படுத்தது. அகத் தணிக்கையர், நிறுவனத்தின் அறிவுரையாளராகச் செயல்படுகிறார். நடைமுறைகளையோ கொள்கைகளையோ மாற்றி அமைக்க இவருக்கு உரிமை கிடையாது. எந்த அலுவலரையும் கட்டுப்படுத்தவும் இவருக்கு உரிமை கிடையாது. இவர், தம் திறனாய்வுகளை மேலாண்மையினருக்குப் பரிந்துரை செய்யவேண்டும். அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் மேலாண்மையினரைப் பொறுத்தது, மேலாண்மையினரை அகத் தணிக்கையர் கட்டாயப்படுத்த முடியாது. அகத் தணிக்கை ஓர் நிறுவனத்தின் குறைபாடுகளையும் மற்ற ஒழுங்கீனங்களையும் மேலாண்மையினருக்குத் தெரிவிப்பநோடு, கணக்குப் பதிவுகள் செம்மையான முறையில் நடைபெற உதவியாகவும் இருப்பார். மற்றப் பணியாளர்கள் அகத் தணிக்கையரை ஒரு தவறான கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அவருக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்தால் அனைத்துக் கணக்குப் பதிவுகளும் செம்மையான முறையில் எழுதப்படும். அகத் தணிக்கையர் நீதிபதியாக நன்மை தீமையைப் பகுத்தறிந்து மேலாண்மையினருக்குத் தெரிவிப்பவராக, தனித்தன்மையுடையவராகப் பணியாற்ற வேண்டும்.பி.இரா. துணைநூல்கள் ஆளுடைய பிள்ளை, கு., “தணிக்கைமுறை”, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், சென்னை, 1976. Ghatalia, S.V., “Spicer and Pegier's Practical Auditing”, Allied Publishers Private Limited, 1965. Tandon, B.N., “A Hand Book of Practical Auditing”, S. Chand & Company, 1970.