இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவரான பீட்டர் முனிவர் கி.பி. 60–ஆம் ஆண்டளவில் கிறித்தவச் சமயத்தைப் பரப்புவதற்காக உரோமாபுரியில் இருந்த நிறுவனத்தை, பிற்காலத்தில் கிறித்தவ உலகம் முழுவதையும் ஆட்சி செய்யப் போப்பின் தலைமைத் திருச்சபையாக மாற்றினார். பீட்டர் முலிவரே அத்திருச்சபையின் முதல் போப்பாவர். போப்பு ஏழாம் கிரிகரியின் (கி.பி. 1073–1085) காலத்திலிருந்துதான் உரோமானியத் திருச்சபையின் தலைமை மதகுரு போப்பு என்று சொல்லப்படுகிறார். அதற்கு முன்னிருந்தவர்கள் சமய வட்டத் தலைவர் (Bishop) என்றே சொல்லப்பட்டனர். எனினும், பீட்டர் முதல் அனைவருமே போப்புகளாகவே கருதப்படுகின்றனர். ஏனெனில், உரோமாபுரியிலுள்ள திருச்சபையைத் தலைமைத் திருச்சபையாகக் கிறித்தவ உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்னசெண்ட்டு முதலாம் (ஆ.ஆ. 401–417) முதலாம் இன்னசெண்ட்டு போப்பு, முதலாம் அனசுடேசியசின் மகன் ஆவார். இவர் காலத்தில் உரோமாபுரி விசிகோத்துகளின் தலைவர் அலரிக்கு என்பவரால் கி.பி. 408–இல் முற்றுகையிடப்பட்டது. அலரிக்கு உண்மையிலேயே நல்ல பண்பாளர்; கிறித்தவ சமயத்தைத் தழுவியவர், அவரைச் சார்ந்த விசிகோத்துகளும் கிறித்தவர்களேயாவர். வீரதீரச் செயல்களில் வல்லவராகிய அலரிக்கு உரோமாபுரியிலிருந்த பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடிக்க உரோமானியப் பேரரசின்மீது பலமுறை படையெடுத்தார். பேரரசர் கொனோரியசு இத்தாலியின் மீது இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நிகழும் எனக் கருதி, தம் தலைநகரத்தை உரோமாபுரியிலிருந்து இத்தாலியின் வடகிழக்கிலுள்ள இராவென்னாவுக்கு மாற்றிவிட்டார். அலரிக்கு கி.பி. 409–ஆம் ஆண்டில் உரோமாபுரியில் முற்றுகையை வலுப்படுத்தினார். இக்காலத்தில் போப்பு உரோமாபுரியில் தங்கியிருக்கவில்லை. பேரரசரான கொனோரியசு பணித்த சமயப்பணி காரணமாகப் போப்பு உரோமாபுரி நகரை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. கொனோரியசு வாளாவிருப்பது கண்டு, பொறுமையிழந்த அலரிக்கு தம் படைகளுக்கு உரோமாபுரியைச் சூறையாடும்படி ஆணையிட்டார். வரலாறு காணாத முறையில் உரோமாபுரி கொள்ளையடிக்கப்பட்டது. தெருக்களில் பிணக்குவியல்கள் நிரம்பின. தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த நவரத்தினங்கள், அணிகலன்கள் ஆகியவை மூட்டை மூட்டைகளாகக் கட்டப்பட்டுக் குதிரைகளின் மீது எடுத்துச் செல்லப்பட்டன. மதத் தொடர்பான எல்லா வழக்குகவிலும் போப்பாண்டவர் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்பதைக் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றும் மக்கள் யாவரும் உணருமாறு, போப்பு முதலாம் இன்னசெண்ட்டு செய்திருந்தார். பெலேசியசு என்பவரால் கி.பி. 417–ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘தொல்லைத் தீவினை இல்லை’ என்னும் கோட்பாட்டால் ஏற்பட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டார். கார்த்தேசு நகரில் கூடிய மதகுருமார்கள் அவையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கிறித்தவச் சமய ஒழுக்க நெறியின் அடிப்படையில் மேற்கூறிய சிக்கல்களுக்குத் தீர்வு கண்டார். இவர் கி.பி. 417–ஆம் ஆண்டில் காலமானார். இன்னசெண்ட்டு, இரண்டாம் (ஆ.ஆ. 1130–1142) பிறப்பால் இவர் ஓர் உரோமானியர்; திறமையானவர்; தூய வாழ்க்கையை மேற்கொண்டவர். அரசியல் முறையில் கூட இவருக்குத் தொடர்புகள் மிகுதி. அதனால்தான் இவர் மிகக் குறுகிய காலத்தில் உயர்ந்த நிலையை அடைந்தார். இவர் தூதுவராகவும் அரசியல் வல்லுநராகவும் இன்னும் பல நிலைகளிலும் பணியாற்றியவர். பிரான்சில் கி.பி. 1123–இல் இவர் போப்பின் சமயப் பேராளராக வேலை செய்- தார். இளமைப் பருவத்தில் இவர் பாபரசி (Papareschi) என்று அழைக்கப்பட்டார். இரண்டாம் கொனோரியசு கி.பி. 1130–பிப்பிரவரி 13–ஆம் நாள் இறந்திடவே, பாபாசி போப்பு ஆனார். இவர் தம் பெயரை இரண்டாம் இன்னசெண்ட்டு என்று மாற்றிக் கொண்டார். இவர் ஆட்சிக் காலத் (Papacy) தொடக்கத்தில் பல இன்னல்களைச் சந்தித்தார். இவருக்குப் போட்டியாகப் பீர்லியோனிலாவைச் (இரண்டாம் அனாக்கிளிடசு) சில கத்தோலிக்கச் சமய மத குருமார்கள் போப்பாக அமர்த்தினார்கள். இன்னசெண்ட்டால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவர் கி.பி. 1130 சூன் மாதத்தில் பிரான்சு செல்ல வேண்டியதாயிற்று. கிளாயிர்வாக்சின் (Clair Vaux) மதகுருவான பெர்னார்டு இன்னசெண்ட்டிற்குப் பேருதவியாக இருந்தார். பெர்னார்டின் முயற்சியின் விளைவாக இன்னசெண்ட்டு இங்கிலாந்து அரசரான முதலாம் என்றியைச் சார்ட்டர்சு என்னுமிடத்தில் சந்தித்தார். உரோமாபுரியில் ஏற்பட்டிருந்த இக்கட்டான நிலையைப் பற்றி அவரிடம் பேசினார். இன்னசெண்ட்டு கி.பி. 1131 மார்ச்சு மாதத்தில் செருமனி நாட்டு அரசர் இலொதையர் என்பவரை இலீசு (Liege) என்னுமிடத்தில் சந்தித்து, அவரை அனாக்கிளிடசை எதிர்த்துப் படைகளை அனுப்புமாறு வேண்டிக் கொண்டார். இவர் வேண்டுகோளுக்கிணங்கச் செருமானியப் படைகள் கி.பி. 1132 ஆகசுட்டுத் திங்களில் உரோமாபுரியைப் பிடித்துக்கொண்டன. ஆனால், இலியோனைன் (Leonine) நகரத்தை மட்டும் அவர்களால் வெற்றிகொள்ள இயலவில்லை. அந்நகரம் அனாக்கிளிடசின் கீழ் இருந்தது. எனினும் இலொதையர் புனித உரோமானியப் பேரரசின் பேரரசரானார். இன்னசெண்ட்டு கவுண்டசு, மடில்லா முதலிய பகுதிகளைப் பேரரசரிடம் ஒப்படைத்தார். ஆனால், திருச்சபைக் குருமார்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் உரிமையை மட்டும் விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்குமிடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இத்தருணத்தில், இன்னசெண்ட்டு யாரிடமிருந்தும் உதவி பெறவில்லை. போப்பு பிசாவிற்குச் சென்று ஆலோசனை அவை ஒன்றைக் கூட்டினார். இக்கூட்டத்தில் அனாக்கிளிடசைக் கண்டனம் செய்தார்கள். இலொதையர் இரண்டாம் முறையாக கி.பி. 1136–37–இல் இத்தாலியின் மீது போர் தொடுத்தார். ஆனால், அவர் உரோமாபுரியை முற்றுகையிடவில்லை. அனாக்கிளிடசு கி.பி. 1138 சனவரித் திங்களில் இறந்து விட்டார். அனாக்கிளிடசிற்குப் பிறகு நான்காம் விக்டர் போப்பு ஆனார். ஆனால் இரண்டு திங்களுக்குப் பிறகு அவர் போப்புப் பதவியைத் துறந்ததால், கி.பி. 1139–இல் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது. இரண்டாம் இன்னசெண்ட்டு தாம் போப்பு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமைதியற்ற சூழ்நிலையால் போப்பு உரோமானிய உள்ளாட்சிப் பிரிவுடன் (Commune) மோத வேண்டியதாயிற்று. உள்ளாட்சிப் பிரிவு சுதந்திரமான ஆளவை மன்றம் (Senate) ஒன்றை ஏற்படுத்தியது. இப்படிப் பல சிக்கல்களைச் சந்தித்த இரண்டாம் இன்னசெண்ட்டு கி.பி. 1142–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24–ஆம் நாள் காலமானார். இன்னசெண்ட்டு, மூன்றாம் (ஆ.ஆ. 1198,1216) இவர் கி.பி. 1160/1161–இல் தம் தந்தைக்குச் சொந்தமான கவிக்னானோ (Gavignano) கோட்டையில் பிறந்தார். தம்முடைய தாயார் மூலமாக இவர் உரோமாபுரியில் வசிக்கும் பல பிரபுக்களுக்கு உறவினராக விளங்கினார். இளமையில் இவரை இலொதையர் என்றழைந்தனர். இவர் பாரிசு நகரத்தில் சமயப் படிப்பினை முடித்தார்; பொலோக்னா நகரில் சமயத் தொடர்பான சட்டங்களைப் (Canon Law) படித்து முடித்தார். இவர் தலைமை மதகுருவாக இருந்தபொழுது, கி.பி. 1215–இல் இலேடரன் என்னுமிடத்தில் ஆலோசனை அவையைக் கூட்டினார். இதனை நான்காம் இலேடரன் ஆலோசனை அவை என்று கூறுவர். அந்த அவையைக் கூட்டியதால் போப்பின் செல்வாக்கு உயர்ந்தது. பல கட்டளைகளை (Decrees) போப்பு அவ்வவையில் பிறப்பித்தார். அப்பமும் மதுவும் முறையே ஏசுவாகவும் அவரது இரத்தமாகவும் மாறுவதை (Transubstantiation) மறுக்கக் கூடாத கொள்கையென இவ்வவையில் அறிவித்தார். கிறித்தவச் சமயக் குருமார்களைச் சீர்திருத்துவதற்குப் பல சட்டங்களை நிறைவேற்றினார். இதன் விளைவாக அடுத்த முந்நூறு ஆண்டுகள் கிறித்தவத் திருச்சபைகளில் பெரிய சிக்கல்கள் கூட எளிமையாயின. பிரான்சிசு முனிவர் (ஆ.ஆ. 1182–1186) நகரங்களில் கிறித்தவச் சமயக் கொள்கைகளை விளக்கிக் கொண்டும், பிறசமயக் கொள்கைகளை எதிர்த்துக் சொற்பொழிவு செய்து கொண்டும் சென்றபொழுது அவருடைய அமைப்பில் பலர் சேர்ந்தனர். அவர்கள் ‘பிரான்சிசுகள் திரிதுறவிகள்’ என்றழைக்கப்பட்டனர். இவ்வமைப்பைப் போப்பு மூன்றாம் இன்னசெண்ட்டும் ஏற்றுக்கொண்டார். இன்னசெண்ட்டு தாம் போப்புப் பதவி ஏற்றதிலிருந்து ஒவ்வோராண்டும் பதவி ஏற்றுக்கொண்ட நாளில் பல அறிவுரைகளை வழங்கினார். அரசியல் சிக்கல்களிலும் தம் வலிமையைக் காட்டினார். செருமனியில் இவர் தனிப்பட்ட உரிமைகளைப் பெற்றிருந்தார். இதற்குக் காரணம், செருமனி நாட்டு அரசர்தாம் புனித உரோமானியப் பேரரசராகவும் விளங்கினார். அரசியலில் மட்டுமல்லாது சமயத்துறையிலும் போப்பு தம்முடைய வலிமையைக் காட்டினார். இவர் காலத்தில் மூன்று முக்கியச் சிக்கல்கள் எழுந்தன. 1. போப்பாண்டவருடைய ஆட்சிக்குட்பட்ட இத்தாலிய மாநிலங்களில் போப்பின் இறைமைக்குப் (Sovereignty) பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. 2. செருமனியில் இரட்டிப்புத் தேர்தல் முறை (Double Election) நிலவியது. 3. பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் போர்கள் ஏற்பட்டன. முதல் சிக்கலில் போப்பு வெற்றிகொண்டார். போப்பின் அதிகாரம் போப்பாண்டவரின் ஆட்சிக்குட்பட்ட, இத்தாலிய மாநிலங்களில் வலுவடைந்தது. ஆயினும் இந்த வெற்றி சிறிதுகாலமே நீடித்தது. அம்மாநிலங்களில் மக்கனின் அன்பையும் மதிப்பையும் போப்பு பெற்றார். செருமனியில் ஏற்பட்ட இரட்டிப்புத் தேர்தல் முறையில் புனித உரோமானியப் பேரரசரைத் தேர்ந்தெடுப்பதில் இரு கட்சிகள் தோன்றலாயின. ஒரு கட்சியினர் சுவாபியா பிரபுவை (Duke of Swabia) ஆதரித்தனர். மற்றொரு கட்சியினர் பிரன்சுவிக்குப் பிரபுவை (Duke of Brunswick) ஆதரித்தனர். இவர் நான்காம் ஆட்டோ என்றழைக்கப்பட்டார். போப்பும் இவரை ஆதரித்தார்; அரியணையிலும் அமர வைத்தார். ஆயினும் ஆட்டோ, போப்பின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் குறைப்பதில் ஈடுபட்டார்; மேலும் செருமனியையும் சிசிலியையும் இணைப்பதில் தீவிரமாகச் செயற்பட்டார். இச்செயலைப் போப்பு வெறுத்தார். பேரரசரைக் கிறித்தவ உலகத்திலிருந்து தைரியமாகத் தள்ளியும் வைத்தார். போப்பு கி.பி. 1216–இல் இரண்டாம் பிரடரிக்கைப் பேரரசராகத் தேர்ந்தெடுத்தார். பிரிடரிக்கு போப்பின் எண்ணப்படி செருமனியையும் சிசிலியையும் இணைக்கப் போவதில்லை என்னும் உறுதி மொழியைத் தந்தார். அந்நாடுகள் எப்போதுமே பிரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் போப்பு கொண்டிருந்தார். மூன்றாம் சிக்கலில் மூன்றாம் இன்னசெண்ட்டு முழு வெற்றி அடைந்ததாகத் தெரியவில்லை. இரண்டாம் பிரடரிக்கு பிரான்சு நாட்டு அரசர் இரண்டாம் பிலிப்பு அகசுடசின் உதவியுடன், நான்காம் ஆட்டோவையும் அவர் நேச அரசரான சான் (இங்கிலாந்து அரசர்) என்பவரையும் வெற்றிகொண்டார். இன்னசெண்ட்டு பிரான்சு, இங்கிலாந்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போரினை நிறுத்த முடிவு செய்தார். ஆனால், போர் கடுமையாக நடந்தபடியால் அவரால் போரினை நிறுத்தமுடியலில்லை. இங்கிலாந்து அரசர் சான் என்பவரைப் போப்பு கிறித்தவ உலகத்திலிருந்து தள்ளிவைத்தார். இதற்குக் காரணம் போப்பின் எண்ணப்படி அமர்த்தப்பட்ட காண்டர்பரித் தலைமைக் குருவை (Archbishop) அவர் ஏற்றுக் கொள்ளாததேயாகும். இங்கிலாந்து அரசர் ஆங்கிலேயரின் உரிமைகளை ஏற்றுக்கொண்ட மகா சாசனத்தில் (Magna Carta) கி.பி. 1215–இல் கையெழுத்திட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார். இதைப்பற்றிப் போப்பிற்குத் தெரிவித்தபோது, இன்னசெண்ட்டு அதை ஆங்கிலேயர்களுக்கு உரிமைகளே இல்லாத சாசனம் என்று கருதி நீக்குதல் செய்தார். போப்பு மூன்றாம் இன்னசெண்ட்டின் காலத்தில் தான் நான்காம் சிலுவைப் போர் மூண்டது. போப்பின் முயற்சியினால் எகிப்திலுள்ள இசுலாமிய அரசரைத் தாக்குவதற்காகப் பெரும்படையொன்று புறப்பட்டது. ஆனால், இப்படையிலால் எகிப்தையோ செருசலத்தையோ கைப்பற்ற முடியவில்லை. மாறாகக் கிழக்கு உரோமானியப் பேரரசர் தங்களுக்கு உதவி செய்யவில்லையென்று அப்படைகள் கான்சுடாண்டிநோபிளைத் தாக்கிக் கொள்ளையடித்தன. போப்பு கிழக்கு உரோமானியப் பேரரசரைத் தம் அதிகாரத்திற்கு உட்படுத்தியதே நான்காம் சிலுவைப் போருக்கு முக்கியக் காரணமாகும். திருச்சபையின் வலிமையை ஆணித்தரமாக நிலை நாட்டிய போப்புகளுள் மூன்றாம் இன்னசெண்ட்டு குறிப்பிடத்தக்கவர். ஐந்தாம் சிலுவைப் போருக்காக மாபெரும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த தருணத்தில் கி.பி. 1216–ஆம் ஆண்டு சூலை 16–ஆம் நாள் மூன்றாம் இன்னசெண்ட்டு காலமானார். இன்னசெண்ட்டு, நான்காம் (ஆ.ஆ. 1243–1254) இளமையில் சினிபால்டோ (Sinibaldo) என்றழைக்கப்பட்ட இவர் பொலோக்னாவில் சமயத் தொடர்பான சட்டங்களைப் படித்து வல்லுநர் ஆனார். ஒன்பதாம் கிரிகரிக்குப்பின் நான்காம் செலசுடைன் போப்பு ஆனார். அவர் பேரரசரின் நெருங்கிய நண்பராவார். அவர் காலத்தில் எந்தச் சிக்கலும் எழவில்லை. நான்காம் இன்னசெண்ட்டு கி.பி. 1243–ஆம் ஆண்டில் போப்பானார். இவர் பதவி ஏற்ற- வுடனே பிரடரிக்கின் அதிகாரத்தைக் குறை கூறினார். சினங் கொண்ட பிரடரிக்கு நான்காம் இன்னசெண்ட்டை உரோமாபுரியிலிருந்து விரட்டியடித்தார். போப்பு பிரான்சிலுள்ள இலியோன் (Lyons) நகரத்திற்கு ஓடினார்; அங்கே திருச்சபையைச் சார்ந்த குருமார்கள் கூட்டமொன்றைக் கூட்டி, பிரடரிக்கை மதவிலக்கம் செய்து, அவர் தொடர்ந்து பேரரசராக இருக்க உரிமை இல்லாதவரென அறிவித்தார். படையைக் கொண்டே போர்க்களத்தில் மன்னரைத் தோற்கடிக்கத் திட்டம் தீட்டினார். ஆனால், அதற்குள்ளாக கி.பி. 1250–ஆம் ஆண்டில் இரண்டாம் பிரடரிக்கு இறந்து விட்டார். மன்னர் இறந்த பின்னரும், பேரரசுக்கும் திருச்சபைக்கும் ஏற்பட்ட போராட்டம் மட்டும் தீர்வதாக இல்லை. அது மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்தது. இந்தப் பலத்த போராட்டத்தைச் சந்திப்பதற்கு நான்காம் இன்னசெண்ட்டுக்கு அளவிறந்த பணம் தேவைப்பட்டது. ஏற்கெனவே ஒன்பதாம் கிரிகரி கருவூலத்திலிருந்த பொருளையெல்லாம் செலவழித்துவிட்டார். பலவந்தப்படுத்திப் பணம் வசூலிக்கும் முறையில் நான்காம் இன்னசெண்ட்டு ஈடுபட்டார். உறவினர்களுக்கு அளவிறந்த சலுகைகளைக் காட்டினார். இவருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. நான்காம் இன்னசெண்ட்டு மதகுருமார்களுக்குச் சிவப்புத் தொப்பிகளை அளித்து அவற்றைச் சிறந்த அடையாளப் பொருள்களாக மதிக்கவைத்தார். இன்றும் மதகுருமார்கள் அவற்றை அணிகிறார்கள். மங்கோலியர்களைக் கிறித்துவமதத்திற்கு மாற்றி அவர்கள் உதவியுடன் இசுலாமியருடன் போரிட முயன்றார். ஆனால் இவர் கி.பி. 1254–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 7–ஆம் நாள் காலமானார். இன்னசெண்ட்டு, ஐந்தாம் (ஆ.ஆ. 1276) தொமினிகன் (Dominican) திருக் கூட்டத்தைச் சார்ந்த முதல் போப்பு இவரே ஆவார். பாரிசுப் பல்கலைக் பிரிவில் பட்டத்தைப் கழகத்தில் படித்துச் சமயப் பெற்ற இவர் போப்பு ஆவதற்கு முன்பு பல நிலைகளில் பணியாற்றினார். பீட்டரின் தீர்ப்புகளுக்கு இவர் பல விளக்கவுரைகளை எழுதிப் பெரும் புகழ் அடைந்தார். மற்ற மதகுருமார்களுடன் சேர்த்து தொமினிகன் திருக்கூட்டத்திற்கு விதி முறைகளை வகுத்தார். கிரேக்கர்களுடன் ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், இத்தாலியர்களை அமைதிப்படுத்துவதிலும் ஐந்தாம் இன்னசெண்ட்டு பெருந்த ஆர்வங் காட்டினார். இன்னசெண்ட்டு ஆறாம் (ஆ.ஆ. 1352–1362) சிவில் துறையில் (Civil Department) பேராசிரியராகத் தூலோசில் (Toulouse) பணியாற்றிப் பிறகு அந்நகரத்தில் தலைமை நீதிபதிப் பொறுப்பை ஏற்றார். சமயத் துறையில் கூட இவர் பல நிலைகளில் பணியாற்றியுள்ளார். இவர் கி.பி. 1352–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18–ஆம் நாள் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதகுருமார் ஒருவர் பல பதவிகளை வகிப்பதை இவர் தடை செய்தார். மதகுருமார்கள் பணி செய்யுமிடங்களிலேயே வசிப்பது முறையானது என்னும் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையப் பகட்டான வாழ்க்கையை இவர் குறைத்துக்கொண்டார். செருமன் நாட்டு அரசர் நான்காம் சார்லசிடம் நல்லுறவு முறையை ஏற்படுத்திக்கொண்டார். உயர்ந்த ஆணையை (Golden Edict) கி.பி. 1356–ஆம் ஆண்டில் பிறப்பித்துச் செருமானியப் பேரரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையில் சில விதிகளை உருவாக்கினார். பிரான்சுக்கும் இங்கிலாந்திற்கும் கி.பி. 1360–இல் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுப் பிரிடிக்னி (Bretigny) உடன்படிக்கை ஏற்படச் செய்த பெருமை இவரையே சாரும். இன்னசெண்ட்டு, ஏழாம் (ஆ.ஆ. 1404–1466) சமயத் துறையில் பல நிலைகளில் பணியாற்றிப் போப்பு நிலையை அடைந்தவர். பானிபேசுக்குப் (Boniface) பிறகு இவர் போப்பு ஆனார். இவரைப் போப்பாகத் தேர்ந்தெடுத்தபொழுது எதிர்ப்புகள் இல்லை. ஆனால் சில நாட்களில் உரோமாபுரியில் இவருக்கு எதிர்ப்புத் தோன்றியது. நேப்பிள்சு நாட்டுப் படைகளின் உதவியுடன் உரோமாபுரியில் ஏற்பட்ட கொந்தளிப்பை இவர் அடக்கினார். மேலும் சமயச் சார்பான பொதுக்குழுவைக் கூட்டும் முயற்சிகளை மேற்கொண்டார். மறுப்புரையாளர்களுக்கும் (Protestants) கத்தோலிக்கர்களுக்குமிடையே இருந்த கசப்பு உணர்வைக் குறைப்பது இவர் கொள்கையாக இருந்தது. ஆனால், இவர் திட்டமிட்டப்படி பொதுக்குழுவைக் கூட்டவில்லை. இவர் கி.பி. 1406–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6–ஆம் நாள் உரோமாபுரியில் காலமானார். இன்னசெண்டு, எட்டாம் (ஆ.ஆ. 1484–1492) நான்காம் சிக்சுதசுக்குப் (Sixtus IV) பிறகு எட்டாம் இன்னசெண்ட்டு போப்பு ஆனார். இசுலாமை எதிர்த்து முசுலிம்களுடன் போரிட இவர் கிறித்தவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். ஆனால், இவருடைய அறை கூவலை ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் இத்தாலிய அரசியலில் ஈடுபட்டார்; அதிலும் வெற்றி பெறவில்லை. நேபிள்சு அரசர் பெர்டினாண்டு பல ஆண்டுகளாகப் போப்பிற்குக் கப்பம் செலுத்தவில்லை என்னும் காரணத்தால் அவரைப் பதவியிலிருந்து நீக்கினார். போப்பின் படைகள் நேப்பிள்சுக்கு அனுப்பப்பட்டுத் தோற்றுப் போயின. இவர் நேபிள்சை உரோமாபுரியுடன் சேர்க்க முயன்ற திட்டமும் கைகூடவில்லை. தனி வாழ்க்கையில் ஒழுக்கங்கெட்டவரெனக் கருதப்பட்ட இவர் போப்பாண்டவர் ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களில் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் பதவியைத் துறந்தார்; இவர் கி.பி. 1492–ஆம் ஆண்டு சூலை 26–ஆம் நாளில் உரோமாபுரியில் காலமானார். இன்னசெண்ட்டு, ஒன்பதாம் கி.பி. 1591–இல் இரண்டு மாதங்கள் மட்டும் போப்பாகப் பதவியில் இருந்தார். இவர் கி.பி. 1566–இல் வெனிசில் போப்பாண்டவரின் பேராளராக அமர்த்தப்பட்டார். உரோமாபுரியில் பதின்மூன்றாம் கிரிகரி இவரைப் பல நிலைகளில் அமர்த்தி, கி.பி. 1583–இல் போப்பாண்டவரின் மன்ற உறுப்பினர் (Cardinal) என்னும் பதவியையும் கொடுத்தார். போப்பாண்டவர் பதினான்காம் கிரிகரி நோயுற்றிருந்த காலத்தில், ஒன்பதாம் இன்னசெண்ட்டு அனைத்துச் சமயப் பணிகளையும் கவனித்து வந்தார். இவர் பிரான்சு நாட்டிலிருந்த கத்தோலிக்கச் சங்கத்தையும் இசுபெயின் நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் பிலிப்பையும் ஆதரித்தார். பிலிப்பின் ஒத்துழைப்புடன் பதினான்காம் கிரிகரியைப் போப்பாண்டவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு இவர் போப்பு ஆனார். ஆனால், இரண்டு மாதத்திற்குள் உரோமாபுரியிலேவே காலமானார். இன்னசெண்ட்டு, பத்தாம் (ஆ.ஆ. 1644–1655) இவர் கி.பி. 1644–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15–ஆம் நாள் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆட்சிக் காலத்தில், ஐரோப்பாவில் ஏற்பட்ட வெசுட்பேலியா உடன்படிக்கை (1648) குறிப்பிடத்தக்கதாகும். முப்பதாண்டுப் போரும் வெசுட்பேலியா உடன்படிக்கையும் இக்கால ஐரோப்பிய வரலாற்றில் சிறப்பிடத்தைப் பெறும் நிகழ்ச்சிகளாகும். சமயப்போர்களில் இதுவே கடைசியானதாகும். மறுப்புரையாளர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்குமிடையே ஒரு போராகத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, பொருளாதார, அரசியல் சிக்கல்களின் அடிப்படையில் நிகழ்ந்தது என்பதை மறந்து விடமுடியாது. இறுதிக்கட்டத்தில் இது ஆப்சுபர்குகளுக்கும் பூரன்களுக்குமிடையே ஒரு பெரிய ஆதிக்கப் போட்டியாக உருவெடுத்தது. சமயத்துறையைப் பொறுத்தவரை இந்த உடன்படிக்கையும் ஐரோப்பிய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்ததாகும். இவ்வுடன்படிக்கையால் கால்வீனியச் சமயம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கத்தோலிக்கர், உலூதரின் பிரிவினர், கால்வினியர் போன்றவர்களுக்குச் சம உரிமைகள் அளிக்கப்பட்டதன் மூலம் ஐரோப்பாவில் எழுந்த சமயச் சிக்கலுக்கு நிலையான தீர்வு ஏற்பட்டது. எனினும், பத்தாம் இன்னசெண்ட்டு வெசுட்பேலியா உடன்படிக்கை பயனற்றதென்ற கருத்தினைக் கொண்டிருந்தார். பத்தாம் இன்னசெண்ட்டை மைத்துனி ஒலிம்பியா மெய்தல்சினி என்பாள் ஆட்டிப் படைத்தாள். ஒலிம்பியா மெய்தல்சினி (Olimpia Maidalchini) போப்பாண்டவர் உலகச் சிக்கல்களில் ஈடுபடக்கூடாது என்ற கொள்கையை உடையவள். ஆனால் பொருள் திரட்டுவதில் ஒலிம்பியா பேராசை கொண்டவளாக இருந்தாள். இதனால் போப்பின் மதிப்புக் குறையலாயிற்று. மேலும் செசுயூட்டுகளுக்கும் சென்செனிசுடுளுக்குமிடையே ஏற்பட்ட பூசல்களில் போப்பு ஈடுபட்டுத் தம் செல்வாக்கையும் மதிப்பையும் இழந்து விட்டார். பத்தாம் இன்னசெண்ட்டு கி.பி. 1655–ஆம் ஆண்டு சனவரி மாதம் 7–ஆம் நாள் காலமானார். இன்னசெண்ட்டு, பதினோராம் (கி.பி. 1676–1689) சமயத் துறையில் பல நிலைகளில் பணியாற்றியவர். பதினான்காம் உலூயி மன்னர் எதிர்த்த போதிலும், கி.பி. 1676–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21–ஆம் நாள் இவர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேர்மையானதெனத் தோன்றியதைச் செய்து காட்டும் பண்பினை உடைய இவர், வலிமையும் மனத்திண்மையும் கொண்டவர்; பொருளை வீண்செலவு செய்யாதவர்; சிக்கனத்துக்குப் பெயர் பெற்றவர். முதலில் மன்னர் பதினான்காம் உலூயி போப்பை எதிர்த்தார். பின்னர்க் கத்தோலிக்கக் கொள்கையை எதிர்த்தவர்களை ஒழிப்பதையே இவர் நோக்கமாகக் கொண்டார். உலூயி கி.பி. 1682–ஆம் ஆண்டு ‘கேலிகன் சுந்தரம்’ என்ற ஓரறிக்கையை விடுத்தார். இதன்படி சமயத் தொடர்பான செய்திகளில் போப்புக்கும் பிரான்சில் உரிமையும் அதிகாரம் உண்டென்றும், ஆனால் அரசரைப் பதவியிலிருந்து விலக்கவோ குடிகளை அரசருக்குக் கீழ்ப்படியக் கூடாதென்று ஆணை பிறப்பிக்கவோ அவருக்கு அதிகாரமில்லையென்றும், சமயத்தில் போப்பின் அதிகாரமும் அவருடைய ஆலோசனைச் சபையின் முடிவிற்குக் கட்டுப்பட்டது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பதினோராம் இன்னசெண்ட்டு கத்தோலிக்கத் திருக்கோயில் கட்சியின் உறுப்பினர்களுக்கு (Jansenists) ஆதரவைத் தெரிவித்தார். அறத்தொடர்பான பல ஆட்சிச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும். இவர் ஒழுக்கசீலர். இவர் கி.பி. 1689–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 12–ஆம் நாள் உரோமாபுரியில் காலமானார். இன்னசெண்ட்டு, பன்னிரண்டாம் (கி.பி. 1691–1700) இவர் கி.பி. 1681–இல் பதினோராம் இன்னசெண்ட்டால் பதவியில் அமர்த்தப்பட்டார். போப்பாண்டவர் பதவி கிடைத்த பிறகு, பதினோராம் இன்னசெண்ட்டை வழிகாட்டியாகக் கொண்டு இவர் பணியாற்றினார். உறவினர்களுக்குப் பதவி கொடுத்தோ தனி உரிமை கொடுத்தோ ஆதரிக்கும் முறையை வெளிப்படையான ஆணைகளைப் பிறப்பித்தே கண்டித்தார். போப்பின் ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களில் நடுநிலைமையில் நின்று நீதியை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும். பிரான்சுடன் கி.பி. 1693–இல் நல்லுறவு மலர்ந்தது. அதேபோல் இவர் காலத்தில் கத்தோலிக்கத் திருக்கோயில் கட்சி உறுப்பினர்களுக்கும் ஏசுசபையினருக்கும் (Jesuit) இடையே நல்லுறவு ஏற்பட்டது. இவர் கி.பி. 1700–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ஆம் நாள் உரோமாபுரியில் காலமானார். இன்னசெண்ட்டு, பதின்மூன்றாம் (கி.பி. 1721–1724) இவச் போலிப் (Poli) பகுதியை ஆட்சி செய்த சீமோனின் மகன். இக்குடும்பத்தினர் பலர் போப்புகளாகத் திகழ்ந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மூன்றாம் இன்னசெண்ட்டும் பதின்மூன்றாம் இன்னசெண்ட்டும் ஆவார்கள். இவர் பல நிலைகளில் பணியாற்றியவர். இவர் கி.பி. 1721–ஆம் ஆண்டு மே மாதம் 8–ஆம் நாள் பதின்மூன்றாம் இன்னசெண்ட்டு என்னும் பெயருடன் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறாம் சார்லசை கி.பி. 1722–ஆம் ஆண்டு நேப்பிள்சு நாட்டுப் பேரரசராக நியமித்த பெருமை இவரையே சாரும். இசுட்டூவர்ட்டு அரசராகப் போட்டியிட்ட சேம்சை இங்கிலாந்தின் அரசராக இவர் ஒற்றுக்கொண்டார். இங்கிலாந்தில் உரோமானியக் கத்தோலிக்கச் சமயத்தை மீண்டும் நிலைநாட்டும்படி அவருக்குக் கட்டளை விடுத்து, அவருக்கு உதவுவதாக உறுதிமொழி அளித்தார். இவர் கி.பி. 1724–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7–ஆம் நாள் உரோமாபுரியில் காலமானார். இல.இரா.