நைப்புத் தன்மை
naipput taṉmai
நைப்புத் தன்மை என்பது உப்பு வகைச் சேர்மங்களின் அடர்த்தி, நிறம், வடிவமைப்பு போன்ற மற்றுமொரு இயற்பியல் பண்பாகும்.
நைப்புத் தன்மை என்பது உப்பு வகைச் சேர்மங்களின் அடர்த்தி, நிறம், வடிவமைப்பு போன்ற மற்றுமொரு இயற்பியல் பண்பாகும். இது, நீரில் ஆவியை ஈர்த்து, உறிஞ்சும் தன்மையைத் தூண்டும் உப்பின் திறனாகும். சான்றாக, சாதாரண சோற்று உப்பை, ஈரக் காற்றுப் படும் படி, திறந்த வெளியில் வைக்கும் போது, கசிவு நிலை உருவாகி நைத்துப் போகிறது. சோடியம் குளோரைடுடன் மாசாகச் சிறிதளவு கலந்திருக்கும் மக்னீசியம் குளோரைடு காற்றிலுள்ள ஈரப் பதத்தை ஈர்த்து நீர் படியச் செய்கிறது. மக்னீசியம் குளோரைடின் மீது படிந்த நீர், சோடியம் குளோரைடையும் சேர்த்துக் கரைப்பதால், கசிவு நிலை ஏற்படுகிறது. இத்தன்மை உப்பின் நைப்புத் தன்மை எனப் படுகிறது. கால்சியம் ஃபுளுரைடு, கால்சியம் குளோரைடு, கோபால்ட் நைட்ரேட், போரான் டிரை ஆக்சைடு, காப்பர் நைட்ரேட் முதலியன நைப்புத் தன்மை அமைந்த சேர்மங்களின் வேறு சில எடுத்துக் காட்டுகளாகும்.
சேர்ம மூலக் கூறுகளுடன், நீர் மூலக் கூறுகள் இணைந்த உப்புகளில்தான் நைப்புத் தன்மை காணப் படும். குறிப்பிட்ட வெப்ப நிலையில், அத்தகைய நீர் மூலக் கூறுகளில் ஆவியழுத்த அளவி சுற்றுப் புறக் காற்றிலுள்ள ஈரப் பதத்தின் ஆவியழுத்த அளவுக்குக் குறைவாக இருந்தால், அந்த உப்புக்கு நைப்புத் தன்மை ஏற்படுகிறது. உப்பிலுள்ள ஆவியழுத்த நிலையைச் சமன் படுத்த, காற்றில் ஈரப் பத நிலைக்குக் காரணமான நீர் மூலக் கூறுகள் உப்பின் மீது படிகின்றன. இதன் விளைவாக, நைப்புத் தன்மைக்கு எதிரான செயலும் நிகழ்வது உண்டு. குறிப்பிட்ட வெப்ப நிலையில், காற்றின் ஈரப் பத ஆவியழுத்த அளவு குறைவாகவும், உப்புச் சேர்மத்தின் ஆவியழுத்த அளவு மிகுதியாகவும் இருந்தால், உப்புடன் இணைந்துள்ள நீர் மூலக் கூறுகள் சுற்றுப் புறக் காற்றுச் குழலுக்கு வெளியேறி விடுகின்றன. இதனைத் தூள் பூத்தல் அல்லது பொரிதல் (efflorescence) என்கிறோம். எனவே, நைப்புத் தன்மையும், தூள் பூத்தலும் எதிரெதிரான செயல்பாடுகளாகும்.
நைப்புத் தன்மைக்குக் காரணமான காற்று மண்டல ஈரப் பதத்தை அளக்க முடியும். இதற்கான கருவி, ஈர அளவி அல்லது நைப்பு அளவி எனப் படுகிறது. இதனைக்.கொண்டு, ஈரப் பதத்தைத் தனி அளவில் அல்லது ஒப்பீட்டு அளவில் கணிக்க முடியும். எடுத்துக் காட்டுகளாகச் சில நைப்பு அளவிகளைக் குறிப்பிடலாம்.
ரைக்ரோ அளவி (Prychrometer). இக்கருவியில், இரு வகை வெப்பமானிகள் உள்ளன. அவற்றுள் ஒன்று, ஈரமானது; அதன் மீது ஈர மஸ்லின் துணி சுற்றப் பட்டிருக்கும். மற்றொன்று, உலர்ந்த நிலையானது. வெப்ப இயக்கச் சம நிலையால், ஈர–உலர் வெப்ப நிலைகளை இவை காட்டுகின்றன.
மயிர் இழை ஈர அளவி (Hair aggrometer). இக்கருவியில் கயிறாக முறுக்கப்பட்ட மனித மயிரிழைகள், விறைப்பாகப் பொருத்தப் பட்டிருக்கும். காற்றில் ஈரப் பதம் அதிகரிக்கும் போது, அவை விரியும். குறையும் போது, சுருங்கும். மயிரிழையின் ஒரு முனை நிலையாகவும், மறு முனை நெம்பு கோலுடன் இணைந்தும் இருக்கும். அதன் நீட்சியும், குறுக்கமும், நுண்ணிய அளவுகோலால் அளக்கப் படுகின்றன.
பனித் துளி ஈர அளவி (dew point aggrometer). பனி நிலை என்பது ஆய்வகத்தில் பனித் துளி தோன்றுவதும், மறைவதுமான இரு நிலைகளில் சராசரி வெப்ப நிலையாகும். இது பளபளப்பான, குளிர்ந்த உலோகத் தளம் ஒன்றின் மீது, காற்றிலுள்ள ஈரத் துளிகள் படியும் வெப்ப நிலை. இக்கருவி கொண்டு, இந்த வெப்ப நிலையை நேரடியாக அளந்தறியலாம்.
உறை நிலை ஈர அளவி (freeze point hygrometer). காற்றிலுள்ள நீரின் பனியாகப் படியும் நிலை, பனி–உறை வெப்ப நிலையாகும். இந்த ஈர அளவியில், பனி–உறை வெப்ப நிலையை -5°C வரை அளக்க முடியும். காற்று மண்டலத்திலுள்ள ஈரம் அல்லது நீரின் ஆவி பனியாகப் படியும் வெப்ப நிலையை இக்கருவி காட்டுகிறது. பளபளப்பான பரப்பின் மீது காற்று தொடர்ந்து செலுத்தப் படும் போது, மெல்லிய பனிப் படிவு தோன்றுகிறது. இப்படிவை நேரடிப் பார்வையால் அல்லது ஒளி மின் கலத்தின் உதவியால் அறியலாம்.
உறிஞ்சும், ஈர அளவி (absorption hygrometer). காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சுவதால் ஏற்படும் வேதி மாற்றம் அல்லது மின் பண்பு மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கருவி செய்யப் பட்டிருக்கிறது.
ஊடுருவும் அளவி (diffusion hygrometer). சவ்வின் வழியே ஊடுருவும் நீரின் ஆவி செயலாற்றுவதைச் சார்ந்து, இக்கருவி உருவமைக்கப் பட்டுள்ளது. இதில் நைப்புத் தன்மையுள்ள சேர்மம் நுண் துளைச் சுவரால் ஆன அறையில் வைக்கப் பட்டிருக்கும். அந்த அறையிலுள்ள நீரின் ஆவியை உறிஞ்சுவதால், அதனுள் அழுத்தத்தில் குறைவு ஏற்படும். இதனை அழுத்த அளவியில் அளந்து அறியலாம்.
நிற மாலை ஈர அளவி (spectral hygrometer). நிற மாலைப் பகுப்பாய்வின் போது, நீரின் ஆவி ஒளியை உறிஞ்சுகிறது. இது உறிஞ்சிய ஒளியின் இடத்தை நிற மாலையில் கரும்பட்டை அமைப்பில் காணலாம். இப்பட்டையின் கருமையின் அளவு, நீரின் ஆவியின் அழுத்தத்தைப் பொறுத்தது. ஏற்கனவே, அறியப் பட்ட அழுத்தத்திலுள்ள நீரின் ஆவி ஏற்படுத்தும் கருமையின் அளவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட சேர்மத்தின் இணைப்பான நீரின் ஆவியின் அழுத்தத்தை அளந்து அறியலாம். —அ. அரங்கசாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 279)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rnnv963t/
தமிழ்“நைப்புத் தன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rnnv963t/APA
Oliyon Research. (2026). நைப்புத் தன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rnnv963t/MLA
"நைப்புத் தன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rnnv963t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment