அரசு வாணிகக் கழகம்
aracu vāṇikak kaḻakam
தேர்வு செய்யப்பட்ட பொருள்கள் சிலவற்றின் கொள்முதலிலும் விற்பனையிலும் அரசு நேரடியாகப் பங்கு கொண்டு அவற்றைச் செயற்படுத்தும் கருவியாக 1956–ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின்கீழ் அரசு வாணிகக் கழகம் (State Trading Corporation) வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக மே திங்கள் 18–ஆம் நாளில் அமைக்கப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட பொருள்கள் சிலவற்றின் கொள்முதலிலும் விற்பனையிலும் அரசு நேரடியாகப் பங்கு கொண்டு அவற்றைச் செயற்படுத்தும் கருவியாக 1956–ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின்கீழ் அரசு வாணிகக் கழகம் (State Trading Corporation) வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக மே திங்கள் 18–ஆம் நாளில் அமைக்கப்பட்டது. ஒரு கோடி உரூபாய் அனுமதிக்கப்பட்ட முதலாகவும் (Authorised Capital), 100 உரூபாய் மதிப்புள்ள பங்குகளாக ஒரு இலட்சம் உரூபாய் அளவிற்கும், 5 இலட்சம் உரூபாய் செலுத்திய முதலாகவும் (Paid up Capital) கொண்டு தொடங்கப்பட்டது. அதன் முழுமையான முதல், இந்தியக் குடியரசுத் தலைவரின் பெயரில் மைய அரசால் வழங்கப்பட்டது. இக்கழகம் சட்டத்தால் கட்டுப்பட்ட நிறுவனம் அன்று. அயல்நாட்டு வாணிகத்தில் அடங்கும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களைக் கொள்முதல் செய்தல், விற்பனைக்கான வழி வகைகளை வகுத்தல், சரக்குப் போக்குவரத்துக்கான பாதுகாப்பை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் திறமைமிக்க வகையில் செயற்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இக்குறிக்கோளை அடைவதற்குத் தேவையான பிற தொடர் அலுவல்களையும் ஏற்று நிறைவேற்றுவது இதன் மற்றொரு பொறுப்புமாகும்.
சிறப்பு நோக்கங்கள்
ஏற்றுமதி அளவையும் தரத்தையும் பெருக்குவது, அவற்றைப் பன்முகப்படுத்துவது, வெளி வாணிக இடைவெளி நீக்கம், தொழில் வாணிகத் துறைகளோடு ஒத்துழைப்பு, நீண்டகால அடிப்படையில் மொத்தச் சரக்குகளை (Bulk Commodities on Long term basis) ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயற்படுத்துவது, மொத்தச் சரக்கு இறக்குமதியை வரையறுப்பது, அரசு ஆணையின்போது விலை வரையறை ஆதரவு (Price Support} ஆகியவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவது ஆகியவைகளாகும்.
கழகத்தின் விற்பனை 1956–இல் 9.2 கோடி உரூபாயிலிருந்து 879 கோடியாக 1975–இல் வளர்ந்தது. இது, 1980–ஆம் ஆண்டு அளவில் ஏற்றுமதிப் பொருள்களின் மதிப்பு 1000 கோடி உரூபாய்க்கு மேலும் உயர்த்தது. நுகர்பொருள்கள், தோல்சார் பொருள்கள், தொழிற் பொருள்கள், முன்னேற்றப் பொருள்கள் (Development Goods), உற்பத்திப் பொருள்கள் ஆகியவை இக்கழகத்தின் முழுக் கட்டுப்பாட்டில் ஏற்றுமதியாகின்றன. நடுத்தர, சிறு தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதியைப் பெருக்க மாநில அங்காடி அமைப்பு (State Marketing Division) ஒன்றை நிறுவியுள்ளது. ஏற்றுமதியை மையமாகக் கொண்டு உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்- களை ஊக்குளித்து அவற்றில் கழகம் முதலீடு செய்து அவற்றின் வளர்ச்சியில் முழுமையான பங்கேற்று வருகிறது. இந்தியத் திரைப்பட ஏற்றுமதிக் கழகத்தில் (Indian Motion Pictures Export Corporation) முதன்மைப் பங்குதாரராக முதலீடு செய்து, இந்தியத் திரைப்பட ஏற்றுமதியைப் பெருக்குகிறது.
கைவினை, கைத்தறி ஏற்றுமதிக் கழகத்தை நிறுவிக் (Handicrafts and Handloom Export Corporation Limited} கைவினைப் பொருள்களின் ஏற்றுமதியைப் பெருக்க உதவுகிறது. கனிப்பொருள் ஏற்றுமதிக்கெனத் தனியாக இந்தியக் கனிப்பொருள் மற்றும் உலோகப் பொருள் வாணிகக் கழகம் (Mineral and Metal Trading Corporation of India) என்ற அமைப்பை 34.8 மிலியன் உரூபாய் செலவில் நிறுவியுள்ளது. இதைப்போன்றே இந்திய முந்திரிக் கழகமும் (Cashew Corporation of India) அரசு வாணிகக் கழகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. பொறியியல் கருவிகள், இரயில் தளவாடங்கள், இரயில் பெட்டிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் பொறுப்புக்கென இந்தியத் திட்டங்கள், கருவிகள் கழகம் (The Projects and Equipments Corporation of India) என்ற அமைப்பை 1971–இல் ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இக்கழகத்தினால் தோற்றுவிக்கப்பட்ட பெரும் பொறியியல் திட்டங்கள், அந்நாடுகளின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைந்துள்ளன.
ஏற்றுமதி இறக்குமதி வாணிக ஒப்பந்தங்களில், இது நேர்முக (Direct) மறைமுக (Indirect) ஒப்பந்த முறைகளைக் கையாள்கிறது. நேர்முக ஒப்பந்த முறையில் கழகம், தன் சொந்தப் பணத்தை முதலீடு செய்து. வாணிக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மறைமுக ஒப்பந்த முறைப்படி, வெளி நாட்டவர்க்கும் இந்திய வணிகருக்குமிடையே வாணிக ஒப்பந்தங்கள் ஏற்பட முகவராகவும் நடுவராகவும் இருந்து துணை புரிகிறது. இவ்வாறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தித் தரவும், இறக்குமதி, ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றிடவும், பொருளின் தர அளவு பொறுப்புறுதிக்காகவும் (Guarantee) இது உதவி செய்கிறது. சரக்கு விடுப்பின் காலப் பட்டியலைப் (Deliverence of Stock Schedule) பின்பற்றுவதிலும், குறிப்பட்ட காலத்தில் அயற்செலாவணி கொடுக்கப்படுவதிலும் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாதபடி வாணிகம் நல்ல முறையில் நடத்திடத் தேவையான உதவிகளை இக்கழகம் செய்கிறது. வாணிக ஒப்பந்தம் செய்து கொண்ட பின், எழும் தகராறுகளையும் இக்கழகம் தீர்த்து வைக்கிறது.
கழகம் ஏற்றுமதி செய்யும் பொருள்களாவன
1) இரயில் பெட்டிகள்–எந்திரங்கள், 2) பொறியியற் பொருள்கள்–எந்திரக் கருவிகள், சிறு தொழிற் பொருள்கள், 3) இரசாயனப் பொருள்கள்–உப்பு, மருந்து வகைப் பொருள்கள், 4) நுகர்பொருள்கள்–தோல், காலணிகள், தலைமுடிகள், கைவினைப் பொருள்கள், துணிகள், தைத்த ஆடைகள், 5) வேளாண்மைப் பொருள்கள்–பழ வகைகள், பழச்சாறு, உயர்ந்தரக அரிசி, பயறு வகைகள், 6) சிமெண்டு முதலியன.
நாட்டின் வளம் குன்றாமல் ஏற்றுமதியைப் பெருக்கி எஃகு, சிமெண்டு, தொழிற்சாலை எந்திரங்கள் போன்ற இன்றியமையாப் பொருள்களை இறக்குமதி செய்வதில், தொடக்க காலத்திலிருந்து கழகம் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. இறக்குமதியின் அளவு, காலம், விலை ஆகியவை உள்நாட்டின் உற்பத்தி அளவைச் சிறிதேனும் கெடுக்காத வகையில் பார்த்துக் கொள்கிறது. உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது. மூலப்பொருள்கள், காலணிகள், கைவினைப் பொருள்கள், உப்பு, தேயிலை, காப்பி, கம்பளி போன்ற ஏற்றுமதிப் பொருள்களின் தர வரையறை, கொள்முதல், ஏற்றுமதி அளவு, விற்பனைக்கான நாடுகளின் தேர்வு, சரக்குப் போக்குவரத்து வகை, தடம் ஆகியன குறித்து எல்லா முடிவுகளையும் இக்கழகமே செய்கிறது. சணல், இரப்பர், புகையிலை போன்ற பொருள்களின் உற்பத்தி நாட்டில் மிகுதியாகப் பெருகிய காலங்களில் விலை ஆதரவு (Price Support), மிகைப்பொருள் பங்கீடு ஆகிய பொறுப்புகளை ஏற்கிறது. அரசின் ஆணைக்கேற்ப வேளாண்மைப் பொருள்களின் உற்பத்தி நலனையும் விலையையும் பாதுகாத்து வருகிறது. நாட்டில் உற்பத்தியாகும் சிமெண்டுத் தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதுடன், நாட்டின் மொத்த தேவையைக் கணக்கிட்டுப் பற்றாக்குறைக் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து. இறக்குமதி செய்து, நாடு முழுவதும் ஒரே விலையை நிலைப்படுத்துகிறது. கட்டுப்பாடான விலைக்கு (Controlled Price) சிமெண்டு விற்கும் பொறுப்பையும் அரசு இக்கழகத்திடமே ஒப்படைத்துள்ளது.
மூலப் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் இணைப்பு வாணிக ஒப்பந்த (Link Trade Agreement) முறையைப் பின்பற்றி நாட்டு ஏற்றுமதிக்கு ஈடான இறக்குமதிக்கு வழி வகை செய்கிறது. எடுத்துக்காட்டாக, செருமனியிடமிருந்து துணி ஆலைகளுக்குத் தேவையான புதிய எந்திரங்களை இறக்குமதி செய்து அதன் மதிப்பிற்கு ஈடான இந்திய நாட்டுப் பொருள்களைச் செருமனிக்கு ஏற்றுமதி செய்தது. அதனால், அயற் செலாவணி செலுத்து நிலையிலும் சாதகமான நிலை ஏற்பட உதவுகிறது. உள்நாட்டு வாணிகத்தைக் கட்டுப்படுத்துவதால் ஏற்றுமதி வளர்ச்சி- யடையும் என்ற எண்ணத்துடன் சில பொருள்களின் அக வாணிகத்தையும் தானே மேற்கொண்டு நடத்துகிறது.
மைய, மாநில அரசுகளின் உதவியுடனும், சிறு தொழில் முன்னேற்றக் கழகத்தின் (Small Industries Development Corporation) உதவியுடனும் ஏற்றுமதிக்கான உயர்தரப் பொருள் உற்பத்திக்கு நிதி உதவி அளித்தும், மூலப் பொருள்களை உற்பத்தி செய்தும் நாட்டின் உற்பத்தித் திறனைப் பெருக்குகிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத் தேவைக்கேற்ப மூலதன எந்திரங்கள் (Capital Equipments) தொழிற்சாலை மூலப்பொருள்கள், அரிய பண்டங்கள் ஆகியவற்றை அவ்வப்போது இறக்குமதி செய்வதன் மூலம் குறிப்பிட்ட காலத்தில் வழங்கவும் செய்கிறது. ஏற்றுமதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்குத் தடங்கலின்றி மூலப் பொருள் கட்டுப்பாடான விலையில் குறித்த காலத்தில் கிடைத்திடத் தொழிற்சாலை மூலப்பொருள் உதவி மையம் (Industrial Raw Material Assistance Centre) ஒன்றை உருவாக்கியுள்ளது.
அரசு வாணிகக் கழகம் இந்திய ஏற்றுமதியைப் பெருக்குவதன் காரணமாகப் புதிய அங்காடிகளை ஆய்ந்து கண்டுகொள்ளவும், வெளிநாடுகளின் தேவைக்கேற்பப் பொருள்களின் தரத்தை உயர்த்தவும் மிகவும் முனைந்து செயற்படுகிறது. வாணிக ஒப்பந்தங்களில் இந்தியாவிற்குப் பலன் தரக்கூடிய கூறுகளை ஆராய்ந்து வாணிக ஒழுங்குக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தித் தருகிறது. உலக அங்காடியின் தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு உலகம் முழுவதும் 18 அலுவலகங்களை அமைத்துச் செயலாற்றுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 743)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rn7vc2ua/
தமிழ்“அரசு வாணிகக் கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rn7vc2ua/APA
Oliyon Research. (2026). அரசு வாணிகக் கழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rn7vc2ua/MLA
"அரசு வாணிகக் கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rn7vc2ua/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment