பசலை
pacalai
இதற்குப் பசலி, பசரை, வசயிலைக் கீரை, கொத்துப் பசலை, சிறு பசலை, குத்துப் பசலை என்னும் பெயர்களும் உண்டு.
இதற்குப் பசலி, பசரை, வசயிலைக் கீரை, கொத்துப் பசலை, சிறு பசலை, குத்துப் பசலை என்னும் பெயர்களும் உண்டு. இதன் தாவரப் பெயர் ஃபைனேசியா ஒலிரேஷியா (Spinacea oleracea) என்பதாகும். இது கீனா போடியேசிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் தென் மேற்கு ஆசியா. அங்கிருந்து அரேபியர்களால், உணவுப் பயிராகச் சாகுபடி செய்யப் பட்டது. வட ஆப்பிரிக்காவிலிருந்து, மூர் இன மக்களால், ஸ்பெயின் நாட்டிற்குக் கொண்டு செல்லப் பட்டு, அங்கிருந்து உலகம் முழுவதும் பரவலாயிற்று. அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில், இதன் மலைப் பகுதிகளிலும், பிற நிலப் பகுதிகளிலும் பயிராகிறது.
அமைப்பு. இது 30–60 செ.மீ. உயரம் வளரும் செடி. இதன் தண்டும், இலையும் பசுமையானவை. இலைகள், மாற்று இலை அடுக்கத்தில் அமைந்துள்ளன. இலை முட்டை வடிவிலோ, அடி அகன்று, நுனி குறுகிய அமைவிலோ, அம்பு வடிவ அமைப்பிலோ காணப் படுகிறது. இலை பலவாறாகப் பிளவு பட்டும் , மென்மையாகவும், சதைப் பற்றுடனும் காணப் படுகிறது. சாறு நிறைந்த சதைப் பற்றுடைய இலைகள் உண்ணக் கூடியவை. ஒரு பால் மலர்கள் பசுமை நிறங் கொண்டவை. ஆண் மலர்கள், இலையற்ற தூவி (Spike) மஞ்சரியில் அமைந்துள்ளன. இம்மஞ்சரி , தாவர நுனியில் காணப் படும். பெண் மலர்கள், இலைக் கோணத்தில் கொத்தாகக் காணப் படுகின்றன. 4 அல்லது 5 பூவிதழ்கள் காணப் படுகின்றன. 4 அல்லது 5 மகரந்தக் கேசரங்களும் காணப் படுகின்றன. ஒரு சூலிலையால் ஆன சூல் பை, கனி, உலர் வெடியாக் கனி (utricle) வகையைச் சேர்ந்தது. இக்கனி, தட்டையாகவும், கடினமாகவும் உள்ளது. கனித் தோலில் சிறு முள்கள் போன்ற வளரிகள் காணப் படும்.
இலையின் வடிவம், விதையமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பசலையை இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ஒரு பிரிவில், இலைகள் முக்கோண வடிவிலும் , விதைகளும், சிறு முள்கள் போன்று வளரிகள் கொண்ட மேல் தோல் கொண்டும் காணப் படுகின்றன. இவ்வகைப் பசலை இலையுதிர்–மழைக் காலப் பருவங்களில், மலைகளில் பயிரிட ஏற்றதாகும். மற்றொரு பிரிவுப் பசலையில், வட்டமான இலைகளும், மென்மையான மேலுறை கொண்ட விதைகளும் காணப் படுகின்றன. இப்பிரிவை பசலை, கோடை–வசந்த காலப் பருவங்களில், மலைகளில் பயிரிடவும், இலையுதிர் காலத்தில் சமவெளிகளில் பயிரிடவும் ஏற்றதாகும்.
சாகுபடி முறை. பசலை ஒரு குளிர் பருவப் பயிராகும். இதன் வளர்ச்சிக்குக் கார அமில நிலை (pH) 6.0–7.0 இருப்பது சிறந்தது. வளமான மண் நிறைந்த நிலம், இதன் சாகுபடிக்கு ஏற்றது. மிதமான வெப்பமுடைய இடங்களில், ஆண்டு முழுவதும் இதனை வளர்க்கலாம். ஆனால் குளிர் காலத்தில்தான், இது செழித்து வளர்ந்து, மிகுதியான தழை வளர்ச்சியைத் தரும். எனவே, மழை தொடங்கியதும், வளர்க்கத் தொடங்குவது சிறந்தது. இதனை, முட்டைக் கோஸ், பட்டாணி ஆகிய பயிர்களுடன் ஊடு பயிராகவும், சாகுபடி செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு 35–45 கி.கி. விதை தேவைப் படுகிறது. இளந்தண்டுகளைத் தனித்தெடுத்து நட்டும், இனப் பெருக்கம் செய்யலாம். நன்றாக உழுத நிலத்தில், விதைகளை 15–20 செ.மீ. இடைவெளி தந்து விதைத்தல் வேண்டும். வரிசை விதைப்புச் செய்தால், காலத்தில் களை எடுப்பதற்கு எளிதாகிறது. நாற்று விட்டு, 25 நாள் வயதுடைய நாற்றுகளைப் பிடுங்கி விடலாம். நேராக விதைத்தால், 6 வாரங்களில் இலைகளை அறுவடை செய்யலாம். இச்செடியின் வயது 60–70 நாளாகும். இதனை இறைவைப் பயிராகச் செய்தால், உயர் விளைச்சல் கிடைக்கும்.
சாகுபடி செய்யப் படும் வீரிய வகைகளில், விதைகள் மென்மையாகவும், வட்டமாகவும் இருக்கும். இவை திடீர் மாற்றத்தால் (mutation) உண்டானவை. பசலையில் சுருக்கமுடைய இலை வகை, மென்மையான இலை வகை என்று இரண்டு வகைகள் உள்ளன. இவற்றுள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப் படுகிற சுருக்க இலை வகையைச் சேர்ந்த வெர்ஜீனிய சவாய் (Virginia savoy) என்னும் வகையும், மென்மையான இலைகளை யுடைய இயர்லி ஸ்மூத் லீஃப் (Early smooth leaf) என்னும் வகையும் குறிப்பிடத் தக்கவை, மென் இலை வகையின் விதைகள் வட்டமாகவும், மென்மையான விதைத் தோலுடனும் இருக்கும். இலைகள் இளம் பச்சை நிறத்துடனும், அளவில் சிறிவையாகவும், நுனி கூர்மையாகவும் இருக்கும். காற்றின் மூலம், மகரந்தத் தாள்கள் பரவுகின்றன. விதை உற்பத்திக்காகப் பயிரிடப் படும் போது, இரண்டு வகைகளுக்குமிடையே 2 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும். அடிப்படை விதை உற்பத்திக்கு இரண்டு வகைகளுக்குமிடையே 2–4 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.
பயன். வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதற்கேற்ற காய்கறி வகைகளில், பசலைத் தாவரமும் ஒன்றாகும். இக்கீரையில் இளந் தண்டுகளும், இலைகளும் மிகச் சிறந்த உணவாகும். பசலைக் கீரையைப் பச்சையாகவும் உண்ணலாம். வைட்டமின் நிறைந்த கீரை, உடலுக்கு உரந்தரும். இலையை அரைத்து, நெற்றியில் பற்றிட வெப்பத்தால் உண்டான தலை நோய் நீங்கும். இக்கீரையை உணவில் சேர்த்து உண்டு வரக் குருதிச் சோகை நீங்கி, குளிர்ச்சி உண்டாகும்.
இலையை நன்றாகச் சிதைத்துக் கொப்புளம், கழலை, வீக்கம் முதலியவற்றின் மீது பற்றிட அவை குணமாகும். இக்கீரை, சிறுநீர்க் கடுப்பு, நீரடைப்பு, ஒழுக்கு, வெள்ளை, சுவையின்மை, வாந்தி ஆகியவற்றைப் போக்கும். மலத்தை இளக்கும். குருதி அழுத்த, இதய நோயாளிகள், இதன் இலைச் சாற்றை இளநீருடன் கலந்து நாள் தோறும் இரண்டு முறை அருந்த, பெரும் பயன் பெறுவர். வயிற்று வலி, திருகு வலி ஆகியவை குணமாகக் கொள்ளுடன், இவ்விலையைச் சேர்த்,து வடிசாறு தயாரித்து, எலுமிச்சம் பழச் சாற்றைக் கலந்து, நாளும் இரு முறை அருந்த வேண்டும். தொண்டைக் கம்மலுக்கு, இவ்விலைச் சாற்றால், வாயைக் கொப்புளிக்க வேண்டும். கீரையை உண்ண, நினைவாற்றல் கூடும். உடல் வெப்பம், பித்தம், கல்லீரல் நோய் போகும். இலைகளையும், விதைகளையும் அரைத்துத் தீப்புண் மற்றும் தோல் நோய்களுக்குப் பூச அவை குணமாகும். கீரைத் தண்டை, மை போல் அரைத்து உடல் எரிச்சல், வேர்க் குரு, முகப் பரு முதலியவற்றிற்குத் தடவலாம். —கோ. அர்ச்சுனன் துணை நூல். B.Chowdhry, Vegetables, National Book Trust of India,New Delhi,1967.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 413)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rkp7jdnq/
தமிழ்“பசலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rkp7jdnq/APA
Oliyon Research. (2026). பசலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rkp7jdnq/MLA
"பசலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rkp7jdnq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment