சுலாவெசி சுலாவெசி இது ஓர் இந்தோனேசியத் தீவு. வடக்குச் சுலாவெசி, மத்திய சுலாவெசி, தெற்குச் சுலாவெசி, தென் கிழக்குச் சுலாவெசி மாநிலங்களைக் கொண்டுள்ள சுலாவெசிக்குச் செலிபீஸ் என்ற பெயருமுண்டு. இதன் மேற்கில் போர்னியோவும், கிழக்கே மொலுக்கா தீவுகளும் உள்ளன. இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவிலிருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு ஏறத் தாழ 190,000 ச.கி.மீ. தீவு சிறியதாயினும், ஒழுங்கற்ற அமைப்புக் கொண்டுள்ளமையால், கட.ற்கரையின் நீளம் 5600—6000 கி.மீ. இருக்கும். கடற்கரையோரம் பவளப் பாறைகள் நிறைந்தது. சுலாவெசித் தீவு ஒரு மைய மேட்டுப் பகுதியையும் வடக்கு, கிழக்கு, தென் கிழக்கு, தெற்குத் திசைகளில் ஒழுங்கற்ற நிலப் பகுதி நீட்சிகளையும் கொண்டது. சராசரி 600 மீ. உயரப் பகுதிகளில் மழைக் காடுகள் மிகுதியாக உள்ளன. ஆசியாவிலும், ஆஸ்திரேலியாவிலுமுள்ள தாவர, விலங்கினங்களுக்கு இடைப்பட்டவையே இங்கு மிகுதியாகக் காணப்படுகின்றன. காடுகளில் பல வகைப்பட்ட பூச்சி, ஈ, கொசு, அட்டை ஆகியன உள்ளன. பாபிரூசா (பன்றி மான்), கருங்கொண்டைப் பபூன், குட்டைக் காட்டெருமை ஆகியவை சுலாவெசித் தீவிலும் அண்மைத் தீவுகளிலும் காணப்படுகின்றன. எண்பது இனங்களுக்கு மேலான நன்னீர் மீன் வகைகள், நூறுக்கு மேற்பட்ட ஊர்வன, இரு வாழ்வியினங்கள், இருநூறுக்கு மேற்பட்ட பறவையினங்கள் காணப்படுகின்றன. தங்கம், இரும்பு, நிலக்கரி, நிக்கல், ஈயம், சல்ஃபர் ஆகிய தாதுப் பொருள்களும் கிடைக்கின்றன. இத்தீவின் வடக்குப் பள்ளத்தாக்குப் பகுதி மண் வளம் செறிந்து, வேளாண்மைக்கேற்றவாறு உள்ளது. இங்கு நெல், சோளம், பீன்ஸ், தென்னை ஆகியவை பயிரிடப்படுகின்றன. கொப்பரை, நெல், சோளம், காஃபி, மிளகு போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு முத்துச் சிப்பி வளர்ப்புத் தொழில் 1960 ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது.