வட அமெரிக்காவில் சொசோனிய (Shoshonian) மொழி பேசும் பழங்குடிகளாவர். உதே இந்தியர்கள் (Ute Indians) கி.பி. 17–ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் அமெரிக்க உத்தா (Utah), நெவதா (Nevada) ஆகிய பெரிய வடிநிலப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இப்போது இவர்கள் அமெரிக்க அரசால் ஒதுக்கப்பட்ட தென்மேற்குக் கொலராடோப் (Colorado) பகுதியிலும் வடகிழக்கு உத்தா மாநிலத்திலும் வாழ்ந்து வருகின்றனர். ‘உதே’ என்னும் சொல் இந்திய மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் ‘மலை உச்சியில் வாழ்பவர்கள்’ என்பதாகும். உதே இந்தியர்களின் மூதாதையர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தா, நெவதா பகுதிகளில் குடியேறினர். அக்காலத்தில் இப்பகுதி சதுப்பு நில வெப்ப மண்டலக் காடாக இருந்தது. பனியாறுகளும் (Glaciers) மலைகளும் சூழ்ந்த இப்பகுதியில் உதே இந்தியரின் மூதாதையர்கள் வேட்டையாடுதல், காட்டுப் பொருள்களைச் சேகரித்தல் முதலான தொழில்களை ஏற்று வாழ்ந்தனர். பனியாற்றுக் காலத்திற்குப் பின் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டதால், இந்த வடிநிலப்பகுதி இப்போது வறட்சி மிகுந்த பாலைநிலமாக மாறி உள்ளது. கிழக்கு உத்தாப் பகுதி உதே இந்தியர்கள் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் குடியேறிய வெள்ளை அமெரிக்கர்களால் பெருமாற்றத்திற்கு உள்ளாயினர். வெள்ளையர்கள் குடியேறிய தொடக்க காலத்தில் மலைப்பகுதி உதே இந்தியர்கள் வெள்ளையர்களிடமிருந்து குதிரைகளைப் பெற்றுச் சமவெளிப் பகுதிகளிலும் வடிநிலப் பகுதிகளிலும் எருமையை வேட்டையாடினர். இவர்கள் சொசோனியப் பழங்குடியினருடன் தொடர்பு கொண்டதால் அவர்களின் பண்பாட்டைப் படிப்படியாக ஏற்றுக் கொண்டனர். ஒருபகுதி உதே இந்தியர்கள் அண்டைப் பகுதியிலுள்ள நலிந்த பிரிவினரைக் கைப்பற்றி, இசுபானியர்களிடம் (Spanish) அடிமைகளாக விற்றனர். வெள்ளையர்கள் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்திலிருந்து உதே இந்தியர்களின் வேட்டை நிலங்களையும் மலைநிறைந்த காட்டுப் பகுதிகளையும் வேளாண்மைக்காகவும் மேய்ச்சல் நிலத்திற்காகவும் கைப்பற்றத் தொடங்கினர். இதன் பின்னர்த் தொடர்ச்சியாக இருவரிடையேயும் சண்டைகள் நடைபெற்றன. கொலராடோப் பகுதியில் கி.பி. 1850–ஆம் ஆண்டு தங்கம் கண்டெடுக்கப்பட்டதிலிருந்து பழங்குடிகளின் மீது வெள்ளையர்களின் ஆதிக்கம் மிகுந்தது. இக்காலங்களில் சொசோனியரும் பயூட்டினரும் (Paiutes) அவர்கள் பகுதி வழியே செல்லும் சரக்கு இரயிலைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர். இதன் பின்னர் 1879–ஆம் ஆண்டு பெரும் சண்டை மூண்டதனால், அப்போதைய அமெரிக்க அரசு சமாதான வழிமுறைகளைக் கையாண்டு பல உறுதிமொழிகளை அளித்தது. எனினும் கி.பி. 1890–இல் அரசின் செயல்களால் வெறுப்புற்ற இந்தியர்களும், சியோக்கு ஆவி நடன (Ghost Dancers) ஆட்டக்காரர்களும் மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இக்கலகத்தில் 300க்கும் மேற்பட்ட சியோக்கு நடனக்காரர்கள் அமெரிக்க அரசுப் படையினரால் சுடப்பட்டனர். இதன் பின்னரே, கொலராடோ உதே இந்தியர்களை உத்தா மாநிலத்தில் தனிப் பகுதியில் வாழ அமெரிக்க அரசு ஒதுக்கியது. நிலமிழந்த இந்தியர்களுக்கு 1950–இல் 31.9 மிலியன் தாலர் (Dollar) நட்ட ஈடு கொடுத்தது. இருப்பினும் உதே இந்தியர்கள் தம் முன்னோர் வாழ்ந்த இடத்தின் இருபெரும் பகுதியைப் பெற முயற்சி செய்து இறுதியில் அடைந்தனர். இப்போது உத்தா மாநிலத்தில் 3000 க்கும் மேற்பட்டவர்களும் கொலராடோப் பகுதியில் 1700க்கும் மேற்பட்டவர்களுமாக உதே இந்தியர்கள் வாழ்கின்றனர்.