அலகாபாத்துக் கற்றூண் சாசனம்
alakāpāttuk kaṟṟūṇ cācaṉam
குப்தப் பேரரசரான சமுத்திர குப்தரால் கி.பி.
குப்தப் பேரரசரான சமுத்திர குப்தரால் கி.பி. 360–இல் வெளியிடப்பட்டது. இக்கற்றூண் சாசனம் கி.பி. 1834–இல் முதன் முதல் அச்சிட்டு வெளியிடப்பெற்றது. ‘வங்காள ஆசியக் கழக’த்து இதழின் தொகுதியில் இதனைக் காணலாம். டாக்டர் பிளீட்டு என்னும் அறிஞர் இதனைக் ‘குப்தர் சாசனங்கள்’ என்னும் தொகுதியில் முதல் சாசனமாக வெளியிட்டார்.
இச்சாசனம் 12 மீட்டர் உயரமுள்ள அசோகர் கற்றூணின் ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தூண் முதலில் கௌசாம்பியில் இருந்தது. பின்னர் அலகாபாத்திற்கு மாற்றப் பெற்றது. இது குப்தர் காலத்திய நாகரி எழுத்தில் முப்பத்து மூன்று வரிகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஆயினும், முழுவதும் ஒரே நீண்ட வாக்கியமாக அமைந்துள்ளது. ஏழு, எட்டு, ஆகிய வரிகளில் அழகிய கவிதை ஒன்றும் காணப்படுகிறது. வடமொழிப் புலவர் பெருமானான காளிதாசருக்கு நிகரான திறமையுடைய ஒரு கவிஞரால் இது இயற்றப்பட்டிருக்கலாம் என்பது சிலர் கருத்து. இதனை இயற்றியவர் மகாதண்டநாயகர் (பெரும் படைத்தலைவர்) அரிசேனர் என்பவர். இவ்விவரம் அச்சாசனத்திலேயே காணப்படுகிறது.
இச்சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் அவை நிகழ்ந்த காலத்தை வரிசைப்படுத்தி அதற்கேற்பக் கூறுவதாகக் கொள்ளமுடியாது. நிகழ்ச்சிகள் முன்பின்னாக அமைந்திருக்கக் கூடும். ஆகவே இந்தச் சாசனத்தைக் கொண்டுமட்டும் சமுத்திர குப்தரின் ஆட்சிக்காலச் செய்திகளைக் கால வரிசைப்படுத்திக் கூறிவிட முடியாது. இந்தச் சாசனத்தில் குறிக்கப் பெற்றுள்ள ஆள் பெயர், இடப்பெயர்கள் என்பவற்றை முழுவதும் மனநிறைவோடு அடையாளம் கண்டு கூறுதல் இயலாததொன்று. ஆயினும் பொதுப்படையாக இந்தச் சாசனம் என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்வதில் தடையில்லை. சாசனத்தின் பொருள் விளக்கமாகவே உள்ளது. பழைய சாசனங்கள் எல்லாவற்றிலுமே சில சொற்றொடர்கள் அரசர்கள் முதலியோரை மிகையாகப் புகழ்வது காணப்படும். அவ்வரசர்கள் வாழ்நாளிலேயே பொறிக்கப்படும் சாசனங்களில் இத்தகைய மிகைப்புகழ்ச்சி காணப்படுதல் மிகவும் இயற்கை என்பது பெறப்படும். அவ்வாறு ஓரளவு சில புகழ்ச்சிகள் இந்தச் சாசனத்திலும் புகுந்திருக்கக்கூடும். அவற்றை நீக்கி விட்டுக் கணக்கிட்டால் பெரும்பாலும் நம்பக்கூடிய செய்திகளையே இந்தச் சாசனம் கூறுவதாகக் கொள்ளலாம். இதிற்கூறும் செய்திகள் வரலாற்றுச் செய்திகளாகவே இருந்திருக்கும் என்றுங்கொள்ளலாம். இந்த ஒரு சாசனத்தில் கூறியுள்ள விவரங்களை வைத்துக் கொண்டே சமுத்திரகுப்தரின் வரலாற்றை ஆசிரியர்கள் வரைகின்றனர். சாசனத்தின் முதல் நான்கு வரிகளில் ஓரளவு இடர்ப்பாடு காணப்படுமாயினும், பிற பகுதிகளைப் படிப்பதும் அவற்றின் பொருளைப் புரிந்து கொள்வதும் எளிதேயாம்.
இச்சாசனத்தின் வாயிலாக நமக்குத் தெரியவரும் விவரங்களில் சமுத்திரகுப்தரின் சிறப்புகள், சில போட்டியாளர்களை வலுவில் நீக்கிவிட்டு அவர் ஆட்சிக்கு வந்த விவரம், வெற்றி விவரங்கள், தென்னிந்தியாவை உட்படுத்தியது, சாசனம் இயற்றியவரைப் பற்றிய விவரம் ஆகியவை குறிப்பிடத்தகும்.
சமுத்திரகுப்தரின் வெற்றிகளையும் அவரிடம் தோற்றவர்களைப் பற்றிய செய்திகளையும் கூறும் பகுதி இந்தச் சாசனத்தில் மிகவும் சிறப்பானது. இவ்வெற்றிகள் அவர் அசுவமேதயாகம் செய்ததற்குக் காரணமாயிருந்தன. வென்ற நாடுகளுள் பலவற்றைத் தோற்ற மன்னர்களிடமே திரும்பவும் கொடுத்து விட்டமையால். அவரது பேரரசு தென் இந்தியாவில் மிகுதியாக விரிவடையவில்லை. தக்காணத்திலும் தென் இந்தியாவிலுமாக அவ்வரசர் வென்று, ஆனால் இணைத்துக் கொள்ளாத நாடுகளின் அரசர்களைப் பற்றிய பட்டியல் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது; கோசலத்தை ஆண்ட மகேந்திரர்; மகாகாந்தாரத்தின் மன்னர் வியாக்கிரராசர்; கேரளத்து மந்தராபூர்; பிசுட்டபுரத்து மன்னர் மகேந்திரகிரி; கோட்டூராவன் சுவாமிதத்தர்; எரண்டபள்ளியின் அரசர் தாமனர்; காஞ்சியைப் புரந்த விட்டுணுகோபர்: அவமுக்தாவின் அரசர் நீலராசர்; வேங்கியின் வேந்தர் அசுத்தி வர்மர்; பாலக்காவின் காவலர் உக்கிரசேனர்; தேவராட்டிரத்து மன்னர் குபேரர், குந்தலபுரத்து மன்னர் தனஞ்சயர் மற்றும் தட்சிணாபதத்தை ஆண்ட பிற அரசர்கள் ஆகியோர் என்று பொதுப்படையாக இக்கணக்கீடு கூறுகின்றது. இப்பட்டியல் பெரும்பாலும் தென்னகத்தில் எப்பகுதியில் ஆண்ட மன்னரையும் விட்டு வைத்ததாகத் தெரியவில்லை. ஆயினும் சமுத்திரகுப்தரின் பேரரசு எல்லையை ஒரு வரைபடத்தில் சரிவரக் குறித்துக் காட்ட வேண்டுமாயின், மேற்கூறிய பட்டியலில் குறிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நாட்டின் பெயரையும் உள்ளபடி அறிந்து கொள்ள வேண்டும். சில பெயர்கள் இப்போது, அல்லது குப்தர் காலத்திற்குப் பிற்பட்ட வரலாற்றுக் காலத்தில் வழக்கில் இருந்த பெயர்களாகத் தோன்றவில்லை; சில பெயர்களை வேறு சில பெயர்களாக மயங்கி விடுதற்கு இடமுண்டு. இந்த மயக்கங்களும் இடர்ப்பாடுகளும் நீங்கினால் அன்றி எந்த நாட்டு மன்னர்களையெல்லாம் அந்தக் குப்த அரசர் வென்றார் என்பதைத் தெளிவாகக் காண முடியாது. இந்த இடர்ப்பாடுகள் காரணமாக இவ்வெற்றிகளைப் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. கோட்டூரா, பாலக்கா, தேவராட்டிரா முதலிய பெயர்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த தொல்லை தந்துள்ள இடப்பெயர்கள். கேரளா என்னும் பெயரைச் சேர நாடான கேரள நாடாகக் கருதிக் கோட்டூரா என்னும் இடத்தைக் கோவை மாவட்டத்திலுள்ள கோட்டூர் என்னுமிடமாக மயங்கியவர்கள் உண்டு. இதனைச் சார்ந்துள்ள பாலக்காட்டினையே ‘பாலக்கா’ குறிப்பதாகவும் அவர்கள் தவறாகக் கருதினர். இக்காரணங்களால் சமுத்திரகுப்தர் தென்னாடு முழுவதின்மீதும் படையெடுத்துவந்து ஆங்காங்கு உள்ள அரசர்களை வென்றதாகச் கருதப்பட்டது. ஆனால், இது தவறான கருத்து. தட்சிணாபதத்தில் ஆண்ட பிற அரசர்களையும் சேர்த்து சமுத்திர குப்தர் வென்றதாக அலகாபாத்துக் கற்றூண் சாசனம் கூறுவதால், டாக்டர் ஒயர்னல் போன்ற ஆசிரியர்கள் சமுத்திர குப்தரின் பேரரசு அசோகர் பேரரசைக் காட்டிலும் தென்னகத்தில் மிகப் பரந்திருந்தது என்பர். தேவராட்டிரத்தை, மதுரை மாவட்டத்தின் மேல்கோடியில் உள்ள தேவாரம் என்னுமிடத்தோடு ஒன்றிப் பார்த்த அறிஞர்களும் உளர். ஆயினும் அச்சாசனத்தை ஊன்றி ஆராய்வார்க்கும், அக்காலத்துத் தென்இந்திய வரலாற்று நிலையை மனத்திற்கொண்டு முடிவுகளை மேற்கொள்பவர்களுக்கும், சமுத்திரகுப்தர் கேரளம் வரையில் படையெடுத்து வந்து வென்றதாகக் கொள்ளுதல் தவறு என்பது எளிதில் புலப்படும்.
ஊன்றிப் பார்ப்பவர்களுக்குச் சமுத்திரகுப்தரின் போர்ப்படைகள், மகதத்தில் தொடங்கித் தீபகற்ப இந்தியாவின் கீழைக்கரையோரமாக முன்னேறி ஆந்திர நாட்டில் இருந்த பல அரசர்களை வென்றார் என்பதே உண்மை என்பது தெரியவரும். பாலக்கா என்பது நெல்லூர் மாவட்டத்திலுள்ள பாக்கை என்பதாம்; கோட்டூரா என்பது கஞ்சம் மாவட்டத்திலுள்ள கோட்டூர் என்பதே. கோதாவரி மாவட்டத்திலுள்ள கோலேர் என்பதே கேரலா என்று கொள்ளலாம். கஞ்சம் மாவட்டத்திலுள்ள ரெண்டபள்ளி என்பதே எரண்டபள்ளியாதல் கூடும். தேவராட்டிரத்தையும் மகாராட்டிரத்தோடு இணைக்காமல் அது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியாக இருக்கலாம் என்பது பிரெஞ்சு வரலாற்று அறிஞரான சுவோ துப்ராயில் என்பவரது கருத்து. கோசலம் என்பது தென்கோசலம், பிசுட்டபுரம் கோதாவரி மாவட்டத்திலுள்ள பித்தாபுரம் என்பது தெளிவு. வேங்கியும் காஞ்சியும் ஐயத்திற்கு இடம் தரவில்லை. இவையெல்லாம் தீபகற்ப இந்தியாவின் கீழைக்கரையிலேயே ஆந்திர நாட்டின் தென்கோடி வரையில் உள்ள பிரதேசத்தில் அடங்கி விடுவதால் ‘பிற இடங்களும்’ அங்கேயே இருப்பதாகக் கொள்ள வேண்டும். சமுத்திர குப்தர் கோதாவரி, கிருட்டிணா, நெல்லூர் மாவட்டங்களைக் கடந்து வந்து பிறகு மேற்கே திரும்பிச் சதாரா, மண்டியா மாவட்டங்கள் வழியாகத் திரும்பவும் மகதம் அடைந்ததாகப் பேராசிரியர் சத்தியநாத அய்யர் கருதுகிறார்.
இனி, சமுத்திரகுப்தர் கற்றூண் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ள இடங்களில் ஆண்ட மன்னர்களை வென்றதாகக் கூறலாமேயன்றி, அவ்வவ்விடங்களுக்கெல்லாம் படையெடுத்துச் சென்று அந்த மன்னர்களை வென்றார் என்று கொள்ளத் தேவையில்லை எனத் தெரிகிறது. பல மன்னர்களை ஒருங்கு சேர்த்துப் பட்டியலாக்கி அவர்களை வென்ற செய்தியைச் கூறும்போது, அவ்வாறு வெல்லப்பட்ட மன்னர்கள் ஒரு இராணுவக் கூட்டுச் சேர்த்து திக்விசயத்தை முன்னிட்டுத் தென்னாடு நோக்கிப் படைகொண்டு எழுந்த மகதப் பேரரசரைத் தோற்கடித்து விரட்டும் எண்ணத்தோடு ஒரே இடத்தில் திரண்டு அவரை எதிர்த்திருக்கக்கூடும். அவ்வாறு அவரை அக்கூட்டு மன்னர்கள் எதிர்த்த இடம் கிருட்டிணா ஆற்றங்கரையாகவும் இருக்கலாம். காஞ்சியைச் சேர்ந்த விட்டுணுகோபனைக் காஞ்சியில் தான் வென்றிருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வாறு கற்றூண் சாசனமும் வெளிப்படையாகக் கூறவில்லை. விட்டுணுகோபனும் பிற ஆந்திர மன்னர்களோடு சேர்ந்து வடக்கே சென்று மகத மன்னரை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றிருக்கலாம். சமுத்திர குப்தர் தொண்டைமண்டலம் வரையில் படையெடுத்து வந்தார் என்பது, அசோக மௌரியர் தொண்டைமண்டலத்தைத் தமது பேரரசில் அடக்கியிருந்ததாகச் சில வரலாற்றாளர்கள் கூறுவதுபோல ஏற்றுக் கொள்ளத் தேவையில்லாததொரு கூற்று என்று கொள்ளலாம்.
இச்சாசனத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளிலிருந்து வேறொரு சிக்கலும் எழுந்துள்ளது. அதாவது தாம் வென்ற அரசர்களுக்கே அவர்களுடைய நாடுகளைத் திரும்பவும் மகத மன்னர் வழங்கிவிட்டதாகச் சாசனம் கூறுவது வரலாற்று விவாதம் ஒன்றைக் கிளப்பியுள்ளது. வென்ற நாடுகளைத் திரும்பவும் தோற்ற மன்னர்களுக்கே திருப்பித் தருவதில் கொள்கை என்ன, அதற்குக் காரணம் என்ன என்பதே அச்சிக்கல். வடநாட்டில் சமுத்திரகுப்தர் வென்ற பகுதிகளைப் பேரரசில் சேர்த்துக் கொண்டுவிட்டார் என்பது தெரிகிறது. ஆகையால் சமுத்திரகுப்தர் விந்தியத்திற்குத் தென்பால் உள்ள நாடுகளை வெல்லுதலை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்; அவற்றைப் பேரரசோடு இணைத்துக் கொள்ளும் எண்ணம் அவருக்கில்லை. திக்குவிசயத்தின் நோக்கமே பிற மன்னர்கள் தம்மைப் பேரரசர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான். அதன் முடிவாக அவர் அசுவமேதயாகம் செய்தார். அவ்வாறு செய்வதற்கு ஓர் அரசருக்கு ‘சாம்ராட்’ என்னும் தகுதி ஏற்பட்டுவிட்டால் போதும்; நாட்டைப் பிடித்துப் பேரரசோடு இணைக்க வேண்டுவதில்லை என்று கொள்வதில் தவறில்லை. அன்றியும் திக்குவிசயத்தை மேற்கொள்ளாத பிற நாட்டுப் பேரரசர்களும் இவ்வாறு வென்ற நாட்டைத் தம் அரசோடு இணைத்துக் கொள்ளாமல் தேரற்ற மன்னருக்கே விட்டுக் கொடுத்த செய்தி வரலாற்றில் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, மகா அலெக்சாந்தர், போரசு என்பாரது நாட்டை அவருக்கே திரும்ப அளித்து விட்ட செய்தி கிரேக்க வரலாற்றால் அறியக் கிடக்கிறது. சுவோ துப்ராயில் என்னும் ஆசிரியர், இவ்வாறு வென்ற நாட்டைச் சமுத்திரகுப்தர் தொற்ற மன்னர்க்கே திரும்பவும் அளித்துவிட்ட செய்தியை, அவர் வென்ற நாட்டைப் பின்னர் விட்டதாகக் கொள்வார். அவ்வாறு கொண்டு பல அரசர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து குப்த மன்னரைப் புறங் கண்டு தங்கள் நாடுகளை மீட்டுக் கொண்டனர் என்னும் கருத்துப்படக் கூறுவார். இக்கூற்றுக்குக் கற்றூண் சாசனத்தில் போதிய ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை.
இச்சாசனம் சமுத்திரகுப்தரது தனித் தன்மையைப் போற்றுகின்றது. அவரைக் கவிராசர் என்று புகழ்கிறது. ஆனால், இக்கூற்றைத் தவிர அவரது புலமையை நிலைநாட்ட வேறு சான்று ஒன்றும் இல்லை. அவர் இயற்றிய நூல்களோ கவிதைகளோ ஒன்றுகூட இல்லாத நிலையில் இச்சாசனம் அம்மன்னரை லிச்சாவி வழிவந்ததாகக் கூறுகிறது. அதாவது ‘லிச்சாவியின் மகள் வயிற்றுப் பேரன்’ என்பது சாசனக் கூற்று. லிச்சாவி அரசரோடு மகதத்து மன்னர்களுக்குத் திருமணத் தொடர்பு உண்டு என்பது வரலாறறிந்தது.ந.சு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 856)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rjd98xwp/
தமிழ்“அலகாபாத்துக் கற்றூண் சாசனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rjd98xwp/APA
Oliyon Research. (2026). அலகாபாத்துக் கற்றூண் சாசனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rjd98xwp/MLA
"அலகாபாத்துக் கற்றூண் சாசனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rjd98xwp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment