உணர்வூட்டல்
uṇarvūṭṭal
அறியாமையில் மூழ்கிச் கிடக்கும் ஏழை, எளிய ஊரக மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பவுலோ பிரைரே (Paulo Freire) என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பித்தல்–கற்றல் முறையே உணர்வூட்டல் அல்லது உணர்வாக்கம் (Conscientization) எனக் குறிக்கப்படுகின்றது.
அறியாமையில் மூழ்கிச் கிடக்கும் ஏழை, எளிய ஊரக மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பவுலோ பிரைரே (Paulo Freire) என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பித்தல்–கற்றல் முறையே உணர்வூட்டல் அல்லது உணர்வாக்கம் (Conscientization) எனக் குறிக்கப்படுகின்றது.
உணர்வூட்டல் கல்விபெறும் ஏழை எளிய மக்கள் தம்மைப் போன்ற எளிய மனித குலத்தைப் பற்றிய விழிப்புணர்வு கொள்வதோடு, தம் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஏழ்மைச் சமுதாயத்திற்கு விடுதலை தேடித் தருவதிலும் ஈடுபடுகின்றனர். பிரைரே வழங்கிய உணர்வூட்டல் கல்வியில், கற்போர், ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களாக மட்டும் கருதப்படாமல் அவர்களே கல்வி நிகழ்ச்சியை முழு ஈடுபாட்டுடன் நடத்திக் காட்டுபவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
பிரைரேவின் கல்விப் பயிற்சி முறை, முதன் முதலில் பிரேசில் (Brazil), சிலி (Chile) ஆகிய இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழும் ஏழை எளிய மக்களிடம் வழங்கப்பட்டாலும், பின்னர்த் தாய்லாந்து, தான்சானியா, ஈக்வடார் ஆகிய நாடுகளில் வயது வந்தோர் கல்விப் பயிற்சியிலும், வளர்ச்சித் திட்டங்களிலும் வெற்றியுற நடத்திக் காட்டப்பட்டுள்ளது. உணர்வாக்கக் கல்விமுறை பொதுவாக, அறியாமையும் எழுத்தறிவின்மையும் மிகுந்த மக்களைக் கொண்ட மூன்றாம் நிலை நாடுகளில் (Third World Countries) வயது வந்தோர் கல்விப் பயிற்சியில் பயன்படுத்தப்படுகிறது.
வயது வந்தோர் கல்வியில் எழுதப் படிக்கக் கற்றல், செயலறிவு பெறுதல், சமூக விழிப்புணர்ச்சி எய்துதல் ஆகிய மூன்று கூறுகள் இன்றியமையாதவை. அறியாமையிலிருந்து விழித்தெழுதல், குறைந்த ஊதியப் பணியிலிருந்து விடுபடுதல், ஏற்றத்தாழ்வு, அநீதி ஆகியவற்றிலிருந்து விடுதலையடைதல் ஆகியவற்றிற்கு வெறும் ஏட்டுக் கல்வியோ எழுத்தறிவுக் கல்வியோ மட்டும் போதாது; உணர்வூட்டல் அல்லது உணர்வாக்கக் கல்வி இன்றியமையாதது என்பது பிரைரேவின் கருத்து. சுற்றுப்புறச் சூழலை ஆய்வுக் கண்ணோட்டத்தில் நோக்கிச் சமுதாய நிறை குறைகளைக் காண்பது, குறைகளைக் களையச் செயலில் இறங்குவது, மீண்டும் மீண்டும் செயல்முறைகள் குறித்துச் சிந்திப்பது, தேவையான மாற்றத்தை நோக்கிக் கற்போர் முன்னேறுவது போன்றவை உணர்வாக்கக் கல்வியின் அடிப்படைகளாகும். உணர்வூட்டல் கல்விப் பயிற்சி பெற்ற மக்கள் மெல்ல மெல்லக் குடும்பம், பணி, சமுதாயம், சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதோடு, தாமே எதையும் தொடங்கும் திறனையும், அதற்கான பொறுப்பினையும் பெற்றவர்களாகின்றனர்.
பிரைரேவின் உணர்வாக்கக் கற்பித்தலில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு அது வகுப்பறையில் மாணவர்களுக்குக் கற்பிக்கும் உத்தியாக (Teaching Technique) இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மாணவர்களுக்குச் சிக்கலான சமூக அமைப்புகளின் உண்மைத் தன்மையைப் படம் பிடித்துக் காட்ட ஆசிரியர் விரும்பும் போது உணர்வாக்கக் கற்பித்தல் முறையை ஆசிரியர் பயன்படுத்தலாம். சமூக அநீதியைச் சுட்டிக் காட்டவோ அதிகாரத்திலுள்ளோர் செய்யும் தவறுகளால் எவ்வகையில் சமூக முன்னேற்றம் தடைப்படுகிறது என்பதையோ உணர்வாக்கக் கற்பித்தலில் பாடமாக நடத்திக் காட்டலாம். இவ்வகைக் கற்பித்தலில் கற்போர் இருவகையான குணங்களைப் பெற்றிருப்பவராக இருப்பர். 1. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுக்குக் காரணம், கடவுள் செயல், முன்வினைப்பயன் என்று நினைப்பவர்களாக இருத்தல்; 2. சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் கண்டவுடன் களைந்தெறிந்து, மாறுதல் தேடும் ஆர்வமுடையவர்களாக இருத்தல், உணர்வாக்கக் கல்வியில் பங்கு பெறும் ஆசிரியர் முதிர்ந்த நடத்தையும், ஆழ்ந்த சமூக அறிவும் கொண்டவராயும் சமுதாய உட்கிடக்கைகளை அறிந்தவராகவும் இருத்தல்.
உணர்வாக்கக் கல்வி கற்பித்தலில், உளவழி நாடகம் (Psycho-drama), பாவனை ஏற்பு (Simulation), பங்கேற்பு (Role-Play), திரைப்படம், நுண்விவாதம் (Critical Dialogue), சோதனை முறை, நேரடி அனுபவம் ஆகிய பல்வகை உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
துணை நூல்
Freire, P., Pedagogy of the Opperessed, Secbury Press, New York, 1973.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 851)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rh6taagz/
தமிழ்“உணர்வூட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rh6taagz/APA
Oliyon Research. (2026). உணர்வூட்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rh6taagz/MLA
"உணர்வூட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rh6taagz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment