இராமப்பையன் அம்மானை
irāmappaiyaṉ ammāṉai
வரலாற்றுத் தொடர்புடைய ஒரு நாட்டுப்புறப் பாடல் வகைச் சிற்றிலக்கியமாகும்.
வரலாற்றுத் தொடர்புடைய ஒரு நாட்டுப்புறப் பாடல் வகைச் சிற்றிலக்கியமாகும். இது இராமப்பையனின் வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கதைப்படுத்திக் கூறும் நூலாகும். மதுரை மண்டலத்தை, கி.பி. 1623 முதல் 1656 வரை ஆண்ட திருமலை நாயக்க மன்னரிடம் தளவாயாகப் (படைத்தளபதி) பணியாற்றினான் இராமப்பையன். இவன் மறையோரினத்தில் பிறந்து வீரத்தில் விஞ்சிய சிறப்புடையனாய் விளங்கினான். இவன் இராமநாதபுரம் பாளையத்தை ஆண்ட சடைக்கத் தேவன் என்ற சேதுபதி மன்னன்மீது போர் தொடுத்து, அவனைப் புறங்கண்டு சிறைப்படுத்திய வீர வரலாற்றைக் கூறுவது இவ்வம்மானை நூலாகும். இதனை இயற்றிய புலவர் நாட்டுப்புற மக்கள் உடுக்கையடித்துக்கொண்டு பாடும் வழக்கில் எழுதியுள்ளார். அக்கால முறைக்கு ஏற்றபடி எளிய சொல்லாட்சியும், பேச்சு வழக்கு மொழியும், மரூஉவும், திரிபுச் சொற்களும் இடம் பெற்று இவ்வம்மானை விளங்குகிறது. மேலுமிது எதுகை, மோனை நலஞ்சிறந்து கேட்டார்ப் பிணிக்கும் எளிய நடையில் அமைந்துள்ளது. திரும்பத் திரும்பக் கூறம், அடுக்குச் சொல் மிகுதியாக இடம் பெறல் போன்ற நாட்டுப்பாடலின் இயல்புகள் இந்நூலில் நிரம்ப இடம் பெற்றுள்ளன.
இந்த இலக்கியம் செவிவழிச் செய்தியாகப் பாடப்பட்டு வழங்கி வந்த பின்னரே எழுத்து வடிவில் இடம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இதனைப் பாடிய புலவர் பெயர் அறிதற்கியலவில்லை. நாட்டுப்புறப் புலவர் ஒருவரால் இயற்றப்பட்டிருக்கக்கூடும் என எண்ணற்கிடமுளது. இந்நூல் தஞ்சைச் சரசுவதி மகால் நூலகத்திலிருந்து 300 அடிகளைக்கொண்ட பிரதியாக அச்சாகி வெளியிடப்பட்டுள்ளது. இதில் சரிதம் முடிவு பெறவில்லை. சென்னை அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகத்தில் இவ்வரலாறு முழுதும் அடங்கிய இரு பிரதிகள் உள்ளன.
இராமப்பையன் எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் துணைக் கொண்டு சேதுபதி மீது படையெடுப்பதும், அம்மன்னனை வெல்லப் பரங்கியர் துணை நாடுவதும் ஆராய்தற்குரியது. இவனது புகழ் இழப்பிற்குப் பரங்கியர் துணை நாடியது ஒரு பெருங்காரணம் எனக் கருதப்படுகிறது. மேலும், சேதுபதி அரசன் நாட்டுப் பற்றும் அஞ்சா நெஞ்சமும் கடவுள் பக்தியும் உடையவனாக விளங்கினான். சேதுபதியின் பண்பு நலன்களை உணர்ந்து, பரந்த நோக்குடைய திருமலை மன்னன் அவனைச் சிறைவீடு செய்து, அவன் இழந்த நாட்டை அவனிடமே ஒப்படைத்தான். இத்தகைய வீர வரலாறு கூறும் நூலாக இராமப்பையன் அம்மானை விளங்குகிறது. அக்காலத்தில் போருக்கு அனுப்பும்போது வெற்றிலை பாக்கு, பரிசு முதலியன வழங்கி அனுப்புதல் மரபாக இருந்ததென்பதும் அவ்வாறே போரில் வெற்றி பெற்று மீளும் போதும் அளிக்கப்பட்டதென்பதும் இவ்வம்மானை வாயிலாக அறிய முடிகிறது.கி.கோ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 126)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rf8wt53e/
தமிழ்“இராமப்பையன் அம்மானை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rf8wt53e/APA
Oliyon Research. (2026). இராமப்பையன் அம்மானை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rf8wt53e/MLA
"இராமப்பையன் அம்மானை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rf8wt53e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment