மருத்துவமனைகளில் இறந்து போன சிசுவைச் சிதைக்கும் அறுவைகள் செய்யப்படுகின்றன. இத்தகைய அருவெறுப்பான அறுவைகளைச் சில போது, உயிகுள்ள சிசுவின் மீதே செய்யவேண்டி வரும். அப்போது தாயின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். மேலும், சூலை முடிக்க வேறு எவ்வழியும் இல்லாமல் இருக்கும். இந்த அறுவைகள் வருமாறு: கபாலத் துளைப்பு, (நீர் கபாலச் சிசுவின் தலைப் பரிமாணத்தைக் குறைக்க); தலைத் துண்டிப்பு (சிரச்சேதம், தலையை உடலிலிருந்து அகற்ற), உள்ளுறுப்பகற்றல் (வயிற்றினுள் உள்ள உறுப்புகளை அகற்றுதல்); காரை எலும்பகற்றல் (காரை எலும்புகளைப் பிளத்தல்), முதுகெலும்புத் துளைப்பு (முதுகெலும்புத் தண்டைச் சிதைத்தல்) சிசுவின் உடல் மீதும், கழுத்தின் மீதும் செய்யப்படும் அறுவைகள் (சிரச்சேதம், உள்ளுறுப்பகற்றல், காரை எலும்புப் பிளவு, முதுகெலும்புத் துளைப்பு), சிசு அழிப்பு. கபாலத் துளைப்பு. வேறு எந்த வழியிலும் பிரசவம் இயலாத போது, கீழ்க் காணும் நிலைகளில் அறுவை செய்யப்படும். அவை மரித்த சிசு, கபால—கூபகத்தின் மிகையான முரண்பாடு, கருப்பை கிழிந்து விடும் அறிகுறிகள், உயிருக்கு ஆபத்தான வேறு பல சிக்கல்கள் ஆகும். ஃபினோமினோவின் துளைக் கருவி அல்லது பிளாட் துளைக் கருவிகளே இந்த அறுவைக்கு ஏற்றவை. அகலமான யோனி உட்காட்டி 2; மேல் தூக்கி 2: முசக்சின் இடுக்கிகள் 2; புல்லட் இடுக்கிகள் 2; மூளையைச் சிதைக்கும் கரண்டி 1; கபால நொறுக்கி 1; காரை எலும்புகளை வெட்டும் கத்தரிப்பான் 1; அறுவைக்கு முன்னரே, தேவையிருந்தால் கிழிந்து விடும் கருப்பைக் கழுத்து, விடபத்தைச் செப்பனிடத் தேவையான கருவி முதலியவை ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். கபாலத் துளைப்பில் தலையைத் துளைத்தல், மூளையைச் சிதைத்தல் (மூளையைச் சிதைத்து அகற்றுதல்), தலையை நொறுக்குதல் (சிசுவின் தலையை அகற்றுதல்) ஆகிய நிலைகள் உள்ளன. செய்முறை. உட்காட்டி மூலம், யோனியைத் திறந்து, முசக்சின் இடுக்கியைச் சிசுவின் தலையில் பொருத்தி, தலையைக் கீழே இழுத்துத் துளையிட ஃபினோமினோவின் துளைக் கருவியைப் பயன்படுத்துதல் நல்லது. இது, உறை கொண்ட ஒரு துளைக் கருவி. பிறப்புப் பாதையின் மெல்லிய திசுக்களை இது பாதுகாக்கிறது. கபாலத்தின் மேற்பகுதியில், இது ஒரு துளையைப் போடுகிறது. ஈட்டி வடிவப் பிளாட் துளைக் கருவியையும் பயன்படுத்தலாம். தையலின் பகுதியிலோ, உச்சி மென்தோல் பகுதியிலோ கபாலத்தில் ஒரு சிலுவை போன்ற துளை போடப்படுகிறது. பிளாட் துளைப்பானின் வெட்டும் பரப்புகள் திறந்தே இருப்பதால், பிறப்புப் பாதையின் மெல்லிய திசுக்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்குத் துளைப்பானின் கைப்பிடி கீழிறக்கப்பட வேண்டும்; இடக்கையாலோ, உட்காட்டியாலோ, யோனியின் முன்புறச் சுவரையும், சிறு நீர்ப் பையையும் பாதுகாக்க வேண்டும். மூளையைச் சிதைக்க ஒரு தூய்மையான கரண்டியையோ, சுரண்டியையோ பயன்படுத்தலாம். துளையிடப்பட்ட கபாலத்திலிருந்து மூளை எளிதில் வெளி வந்து விடும். சில மகப்பேறு இயலாளர் காலியான கபாலத்தை, தொற்று நீக்கப்பட்ட உடலியங்கியல் கரைசலால் கழுவுகின்றனர். மூளை அகற்றப்பட்ட பின், கபாலம் அளவில் குறைகிறது. அடுத்து, கபாலத்தை நொறுக்க வேண்டும். அதாவது, கபால நொறுக்கி கொண்டு, தலையை வெளியேற்ற வேண்டும். கபால நொறுக்கியில் ஒரு கரண்டி, பூட்டும் பகுதி, ஒரு கைப்பிடி, ஒரு திருகாணி ஆகிய பகுதிகள் உள்ளன. கரண்டி, கபாலத்தினுள் நுழைக்கப்படுகிறது. (ஒவ்வொரு கரண்டியும் இடுக்கி நுழைக்கப்படுவது போல் நுழைக்கப்படும்).. உறுப்புகள் மூடப்பட்டு, திருகாணியால் பொருத்தப்படும். முழுமையாக விரிவடைந்த கருப்பைக் கழுத்து வழியாகத் தலை வெளியேற்றப்படும். விரிவடைவு முழுமையாக இல்லாத போது, சூலை விரைவாக முடிக்க வேண்டுமெனில், கருப்பைக் கழுத்தைக் கீறி, சிசுவை வெளிப்படுத்தலாம். சிரச்சேதம் (தலைத் துண்டிப்பு). கவனிக்கப்படாத குறுக்குத் தோற்றத்தில் சிரச்சேதம் செய்யப்படுகிறது. தேவையான கருவிகள். சிரச்சேதக் கொக்கி, மழுங்கலான நீண்ட கைப்பிடி கொண்ட கத்தரிப்பான்கள், உள்காட்டி, கழுத்தைப் பார்வையிட புல்லட் இடுக்கி, கழுத்து விடபத்தின் கிழிசல்களைச் செப்பனிடத் தேவையான கருவிகள். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> செய்முறை. கை துருத்திக் கொண்டிருந்தால், ஒரு வளையத்தை அதில் மாட்டி, உதவியாளர் அதைக் கீழ் நோக்கிச் சிசுவின் கூபகப் பகுதியின் பக்கமாக இழுக்க வேண்டும். பிறப்புக் கால்வாயுள், செயல் முறையாளர் கையைச் செலுத்துகிறார். சிசுவின் கழுத்தை அடையாளம் கண்டு, வட்டமாகப் பற்றுகிறார். கட்டை விரல் முன்புறமாக இருக்கிறது; ஆட்காட்டி விரலும், நடுவிரலும் பின்புறமாக இருக்கின்றன. உள்ளிருக்கும் கை மூலமாக, மழுங்கலான சிரச்சேதக் கொக்கி கருப்பையினுள் செலுத்தப்பட, அது சிசுவின் கழுத்தைச் சுற்றி அமைகிறது. கொக்கியின் கைப்பிடி பலமாகக் கீழ் நோக்கி இழுக்கப்பட்டு, தலை நோக்கித் திருப்பப்படுகிறது. கழுத்து முள்ளெலும்புகள் உடைகின்றன. கொக்கி அகற்றப்படுகிறது. கழுத்தின் மெல்லிய திசு, நீள் கைப்பிடி கொண்ட கத்தரியால் வெட்டப்படுகிறது. இதற்கு உள்ளிருக்கும் கை உதவுகிறது. சிசுவின் உடல், இப்போது கையால் அகற்றப்படுகிறது. இதற்குச் சிசுவின் வாயினுள் ஒரு விரல் நுழைக்கப்படுகிறது. இதுவும் பயனளிக்காவிடில், தலையைத் துளைத்து, காலி செய்து கபால நொறுக்கியால் வெளியேற்றலாம். அறுவைக்குப் பிறகு, கருப்பைக் கழுத்து, யோனி, விடபம் ஆகியன பரிசோதிக்கப்படும். காரை எலும்புப் பிளப்பு. பிறப்புப் பாதை வழியாகத் தோள்கள் எளிதில் வெளிப்பட, சிசுவின் காரை எலும்பு அறுவை முறையில் பிளக்கப்படுகிறது. தேவையாயின், இரண்டு காரை எலும்புகளும் பிளக்கப்படுகின்றன. சிரச் சேதத்திற்குப் பின்னர், கடினமான சூலின் போது, காரை எலும்பின் பிளப்புத் தேவைப்படுகிறது. பிறப்புப் பாதையினுள் செலுத்தப்பட்ட கையின் உதவியுடன் இந்த அறுவை செய்யப்படும். ஆள் காட்டி விரலும், நடு விரலும் கொண்டு, காரை எலும்பின் மையப் புள்ளி அறுதியிடப்படுகிறது. இத்துடன் நீண்ட கைப்பிடி உள்ள மழுங்கலான கத்தரி செலுத்தப்பட்டுக் காரை எலும்பு பிளக்கப் படுகிறது. முன்புறக் காரை எலும்பு பிளக்கப்பட்ட பின்னர், தோள் வளையம் 2.5—3 செ.மீ குறைகிறது. இரண்டு காரை எலும்புகளும் வெட்டப் பட்டால், தோள் வளையம் 5—6 செ.மீ குறைகிறது. உள்ளுறுப்பகற்றல். வயிற்றுச் சுவரையோ, சிசுவின் மார்பையோ பிளந்து, அதனுள்ளே உள்ள உள்ளுறுப்புகளை அகற்ற வேண்டும். கவனிக்கப்படாத குறுக்குத் தோற்றத்தில் சிசுவின் கழுத்து, சிரச்சேதத்திற்கு எட்டாவிடில், மேற்கூறிய அறுவை செய்யப் படுகிறது. இதற்குக் கருப்பைக் கழுத்தின் முழுமையான விரிவு தேவைப்படுகிறது. சிசுவின் வயிற்றுச் சுவர், கத்தரியால் வெட்டப்பட்டு உள்ளுறுப்புகள் அகற்றப்படுகின்றன. மார்பை, எளிதில் எட்ட முடியும் விலா எலும்புகள் துண்டிக்கப்படுகின்றன. மடங்கிய நிலையிலேயே சிசு வெளியேற்றப்படுகிறது. கடினமாக இருப்பின், முதுகெலும்புத் தண்டு சிதைக்கப்படுகிறது. முதுகெலும்புத் துளைப்பு. முதுகெலும்புத் தண்டு, இந்த அறுவையில் சிதைக்கப்படுகிறது. உள்ளுறுப்புகளை அகற்றிய பின்னர், முதுகெலும்பு கத்தரியால் பிளக்கப்படுகிறது அல்லது சிரச்சேதக் கொக்கியால் ஒடிக்கப்படுகிறது. இளந்திசுக்கள் அகற்றப்படுகின்றன; சிசுவின் மேல் பகுதி (தலையுடன்) வெளியேற்றப்பட்டுக் காலும் அகற்றப்படுகிறது. அறுவைக்குப் பிறகு, யோனி, கருப்பைக் கழுத்து, விடபம் ஆகியவை நன்கு பரிசோதிக்கப்பட வேண்டும். அறுவைக்குப் பின் பராமரிப்பு. செயல் முறையாளரின் கைகளோ, கருவிகளோ மகப்பேறு அறுவைகளில் கருப்பையின் உட்செல்வதால், யோனியிலிருந்து நுண்ணுயிர்த் தொற்று உட்செல்லலாம். இயல்பான கருவுயிர்த்தலை விட, இத்தகைய அறுவை முறைகளில் நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகள் உள்ளன. இனப்பெருக்கப் பாதையின் காயமடைந்த மெல்லிய திசுக்கள், நோய்த் தொற்று அறுவை செய்யப் பட்ட பெண்ணைப் பாதிக்கும். இத்தகைய கடினமான சூலை ஒட்டிய குருதிப் பெருக்கு, நோய்த் தொற்றை ஊக்குவிக்கிறது. அறுவைக்குப் பின் பராமரிப்பு அளிக்கும் போது, கருவுயிர்த்த பெண் மனச் சோர்வடைந்திருப்பாள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அறுவை செய்யப்பட்டுக் கருவுயிர்த்த பெண்ணுக்கு நாளும் 8—10 மணி நேரம் முழு ஓய்வு தேவை. பாலூட்டாத பெண்களுக்கு, டிரை ஆக்சசின் அல்லது புரோமைடுகள் கொடுக்கப்படுகின்றன. மரித்த சிசுக்களைப் பெற்ற பெண்களை, தனி அறைகளில் பாலூட்டுத் தாய்மார்களிலிருந்து பிரித்து வைத்திருக்க வேண்டும். அறுவை செய்யப்பட்ட பெண்ணுக்குக் குளியல் அளிக்கும் போதும், உட்குழல் செலுத்தும் போதும், ஊசி போடும் போதும், துணிக் கட்டுப் போடும் போதும், தொற்றெதிர் முறைகளை முழுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும். நோயாளியின் தனிப் பண்புகளைப் பொறுத்தும், செய்யப்பட்ட அறுவையைப் பொறுத்தும், அறுவைக்குப் பிந்திய பராமரிப்பு அமைய வேண்டும். அறுவைக்குள்ளான நோயாளிகளின் உடல் வெப்பம், நாடித் துடிப்பு, சிறு குடல், சிறுநீரகப் பணிகள் ஆகியவை கவனிக்கப்பட வேண்டும். பாலூட்டும் பணியும் முறையாக இருக்க வேண்டும். (முறையான செவிலியர் பராமரிப்பு, பால் தேக்கத்தை எக்கி (pump) கொண்டு அகற்றுதல், முலைகளுக்கான சரியான பராமரிப்பு ஆகியன தேவை.) பொதுப்படையான டானிக்குகளும், சரியான எதிர் உயிர் மருந்துகளும் தேவைப்படுகின்றன. —மு.ப. கிருஷ்ணன் நூலோதி. V.I. Bodyazhina, Text Book of Obstetrics, First Edition, Mir Publishers, Moscow, 1983.