இராசாதிராசன், முதலாம்
irācātirācaṉ, mutalām
சோழப் பேரரசன் முதலாம் இராசேந்திரனின் (1012–1044) மகன்.
சோழப் பேரரசன் முதலாம் இராசேந்திரனின் (1012–1044) மகன். சோழ வமிசம் கண்ட பெரும் படைத்தலைவர்களுள் ஒருவன். இவன் கி.பி. 1018–இல் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றுத் தன் தந்தையுடன் 25 ஆண்டுகள் இணைந்து ஆட்சி நடத்தியபின், கி.பி. 1044–இல் சோழ அரசின் தனி வேந்தனாக முடிபுனைந்துகொண்டான். இராசகேசரி என்பது இவன் பட்டப்பெயர்.
முதலாம் இராசாதிராசலின் கல்வெட்டுகள் ‘திங்களேர் பெறவளர்’, ‘திங்களேர் தரு’, ‘திருக்கொடியொடு தியாகக்கொடி’ எனத் தொடங்கும் மூன்று வகையான மெய்க்கீர்த்திகளைக் கொண்டுள்ளன.
சிறப்புப் பெயர்கள்
இவனுக்கு விசயராசேந்திரன், சயங்கொண்ட சோழன், ஆகவமல்ல குலாந்தகன், கல்யாணபுரங்கொண்ட சோழன், வீரராசேந்திரவர்மன் முதலான சிறப்புப் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இவன் பூரட்டாதியில் பிறந்தவன்.
வெற்றிகள்
கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்ட இவன் அண்டை நாடுகளை வென்று, தன் அதிகாரத்தை விரிவுபடுத்தினான். தன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் இளவரசனாக இருந்தபோதே இவன் பாண்டிய வேந்தர்களான மானாபரணன், வீரகேரளன், சுந்தரபாண்டியன் ஆகிய மூவேந்தரையும் வென்று, சோழராட்சிக்கெதிராக எழுந்த கலகத்தை ஒடுக்கினான். இராமகுட வேந்தரையும் வேணாட்டரசனையும் வென்று சோழரது புகழை நிலைநாட்டினான். மேலைச் சாளுக்கிய நாட்டின்மீது கி.பி. 1042–இல் படையெடுத்துச் சென்று, சோமேசுவரன் தன் மகன் விக்கிரமாதித்தனையும், கீழைச்சாளுக்கிய வேந்தனான ஏழாம் விசயாதித்தனையும் தோற்கடித்தான். இவன் கி.பி. 1044–இல் நடைபெற்ற கொள்ளிப் பாக்கைப் போரில், தன் வீரத்தினையும், தந்தையைப் போன்று தானும் ஆற்றல் மிக்க படைத்தலைவனே என்பதையும் மாற்றாருக்கு உணர்த்தினான்.
ஈழவெற்றி
தன் தந்தையின் காலத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த சிங்களவர்கள் சோழர் ஆட்சிக்கு அடிபணிய மறுத்தனர். விக்கிரம பண்டு என்ற விக்கிரம பாண்டியன் ஈழநாட்டைக் கி.பி. 1044 முதல் 1047 முடிய ஆண்டுவந்தான். சிங்கள வேந்தனான மகாலான கித்திக்கும் பாண்டியத் தாய்க்கும் பிறந்த விக்கிரம பாண்டியன் கி.பி. 1047–இல் சோழர் படையால் தோற்கடிக்கப்பட்டான். இராசாதிராசன் ஈழத்தில் தோன்றிய எழுச்சியை ஒடுக்கினான். இதுவே இவனது முதலாவது ஈழப் படையெழுச்சியாகும். சோழப்படை இரண்டாம் தடவையாக கி.பி. 1051–இல் ஈழத்தின்மீது படையெடுத்துச் சென்று, ஈழ நாட்டு வேந்தனான சக்தி பாலனை வென்று, அவனைக் கொன்று, பெருநிதியத்தைக் கைப்பற்றியது. இராசாதிராசன் மீண்டும் கி.பி. 1053-அளவில் தனது ஏகாதிபத்தியத்தை ஈழத்தில் நிலைநாட்ட வேண்டியிருந்தது. சீவல்லப மதனராசன் என்ற கன்னட தேசத்தவன் ஈழநாட்டினரின் தேசிய போராட்டத்திற்குத் தலைமை தாங்கினான். இவன் கி.பி. 1053–இல் சோழர் படையால் கொல்லப்பட்டான். இதுவே இராசாதிராசனின் ஈழநாட்டின் மீதான கடைசி இராணுவப் படையெழுச்சியாகும். இதன் விளைவாக ஈழத்தின் பெரும் பகுதி சோழரது ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது.
சாளுக்கியப் போர்
சோழ–சாளுக்கியப் போர் தமிழக வரலாற்றில் சுவைமிக்க பகுதியாகும். இராசாதிராசன் முதலாம் சாளுக்கியப் போரில் கொள்ளிப் பாக்கையில் கண்ட வெற்றியுடன் சோழ–சாளுக்கியப் போராட்டம் நிற்கவில்லை. இராசாதிராசன் கி.பி. 1044–இல் முடிசூடிக்கொண்ட பின்பு, இவனே முன்னின்று இரண்டாம் சாளுக்கியப் போரைத் (கி.பி. 1044–1046) தலைமை தாங்கி நடத்தினான். இப்போரில் ஆகவமல்லனின் படைத்தலைவர்களான மதுசூதனன், கண்டர்தினகரன், நாரணன், கணபதி முதலானோர் தோல்வியுற்று ஓடினர். வெற்றிகண்ட சோழர் படை பல்லாரி மாவட்டம் ஆசுபெட்டு வட்டத்திலுள்ள கம்பிலி நகரத்தை (கி.பி. 1046) அழித்து, அங்கு வெற்றித் தூண் ஒன்றினையும் நிறுவியது. இரண்டாண்டுகள் சென்ற பின்னர் இராசராசன் சாளுக்கியரின் மீது மூன்றாம் போரையும் தொடங்கினான். சோழருக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆகவமல்லனின் படைகளைச் சோழர் படைகள் கிருட்டிணா நதியின் தென்கரையிலமைந்த பூண்டூரில் சந்தித்தன. அங்கு நடந்த கடும்போரில் தெலுங்க விச்சயன், அத்திராசன், அக்கப்பையன், முஞ்சன், தனஞ்செயன், வீரமானிக்கன் முதலான சாளுக்கியப் படைத்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பூண்டூர் நகரின் கோட்டை கொத்தளங்கள், மன்னப்பாயில் நகரம் ஆகியன கி.பி. 1048–இல் அழிக்கப்பட்டன. வெற்றி பெற்ற சோழவேந்தன் 1050-இல் கல்யாணி நகரத்தில் வீராபிடேகம் என்னும் வேள்வியை நடத்தி, விசயராசேந்திரன் என்றும் பட்டத்தையும் சூட்டிக் கொண்டான். வெற்றி வாகை சூடிய சோழர் படை கல்யாணபுரத்தை எரித்து, அங்குள்ள கோயிலில் சிறப்புடன் திகழ்ந்த துவாரபாலகர் சிற்பத்தை வெற்றிச் சின்னமாகத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தது. நான்காம் தடவையாகக் கிருட்டிணா நதிக் கரையிலுள்ள ‘கொப்பம்’ என்னுமிடத்தில் கி.பி. 1054–இல் போர் நடந்தது இப்போரில் யானைமீது அமர்ந்து போர் செய்த இராசாதிராசன் மாறப் பெருமாள் தேவனால் கொல்லப்பட்டான். ஆதலின் இவன், ‘யானைமேல் துஞ்சிய தேவர்’ என்று குறிக்கப்பெற்றான். இருப்பினும் இவன் தம்பியான இரண்டாம் இராசேந்திரன் இப்போரில் சோழர்க்கு வெற்றியைக் கொடுத்தான். இவ்வாறு போர்க்களத்திலேயே பல ஆண்டுகளைக் கழித்த இம்மாவீரன் போர்க்களத்திலேயே இறந்தான்.
அரசியல் அதிகாரிகளும் சிற்றரசர்களும்
இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் தண்டநாயகன் அப்பிமையனாகிய இராசேந்திர சோழ பிரமாதிராசன், சேனாபதி இராசேந்திர சோழ மாவலி வாணராயன், சேனாபதி சயங்கொண்ட சோழ வாணகோவரையன், தண்டநாயகன் சோழன் குமரன் பராந்தக மாராயனாகிய இராசாதிராய நீலகங்கரையன், தண்டநாயகன் வெண்காடன் சங்கரனாகிய இராசாதிராசப் பல்லவரையன் முதலான வீரம் செறிந்த படைத்தலைவர்களும் உலகளந்த சோழப் பிரமராயர் போன்ற அரசியல் அலுவலரும் பணிபுரிந்தனர். இவன்தன் தம்பியான இரண்டாம் இராசேந்திரனுக்கு கி.பி. 1052 ஏப்பிரலில் இளவரசுப் பட்டம் கட்டி, ஆட்சியில் பங்கு பெறச் செய்தான்.
இவ்வேந்தனுக்குப் பல அரசியர் இருந்தனர். அவர்களுள் ‘திரைலோக்கியமுடையார்’ என்பவரே பட்டத்தரசியார் ஆவார். உலகுடைய பிராட்டி என்பாரும் இவனது மனைவியாகவே குறிக்கப்பட்டுள்ளார்.
தன் பெரிய தந்தையார், உடன் பிறந்தார் மகன்கள் அனைவருக்கும் தன் ஆட்சிப் பொறுப்பு- களைப் பகிர்ந்து கொடுத்ததால் இவனது அரசியல் திறன் புலனாகிறது. உள்நாட்டு நிருவாகம் இவ்வேந்தன் காலத்தில் சிறந்திருந்தது.
முதலாம் இராசேந்திரனைப் போன்று கல்விப் பணியில் ஆர்வம் கொண்ட இம்மன்னன், பாண்டிச்சேரியை அடுத்த திரிபுவனையில் வைணவ சமயத்தைப் பற்றிய உயர்கல்வி பெருகப் பெருங்கல்லூரி ஒன்றினை நிறுவினான். இது உயர்கல்வித் துறை வளர்ச்சியில் முதன்மை சான்றது.
சமயப்பணி
இராசாதிராசனின் அரசகுருவாக விளங்கியவர் வாசுதேவ நாராயணன் என்ற உலகளந்த பிரமராயர் ஆவர், இவரே இவ்வேந்தனது ஆன்மிக வழிகாட்டி. இவ்வேந்தன் வீராபிடேகம் செய்துகொண்டதுடன், சோழர் வரலாற்றில் முதன் முறையாக அசுவமேதயாகமும் செய்துள்ளான்.
தன் முன்னோர்களைப் போன்று கோயில் கட்டுவதில் நாட்டம் கொண்ட இவன், தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் சயங்கொண்ட சோழேச்சுரம், இராசாதிராசேச்சுரம் என்னும் இரு கோவில்களைக் கட்டினான்; பல கோயில்களுக்குக் கொடை வழங்கியுள்ளான். சமயத் துறையில் பரந்த மனப்பான்மை கொண்ட வேந்தன் என்பதால் இவன் சோழர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறான். ம.இரா.த.
துணை நூல்
Nilakanta Sastri, The Colas, University of Madras, 1984.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 43)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rems9peb/
தமிழ்“இராசாதிராசன், முதலாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rems9peb/APA
Oliyon Research. (2026). இராசாதிராசன், முதலாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rems9peb/MLA
"இராசாதிராசன், முதலாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rems9peb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment