வான்மீகியின் இராமாயணம், வியாசரின் பாரதம் ஆகிய இரண்டு பெரிய இதிகாசங்களும் இந்தியா முழுவதும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. இராமாயணம் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் கதைப் பகுதிகள் பிற இந்தியச் சமய இலக்கியங்களிலும் சிலபல வேறுபாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கம்பர் தமிழில் இராமகாதையினை விரிவாகச் செய்த பின்னர் நாடகம், அம்மானை, கும்மி, இசைப்பாடல், நாட்டுப் பாடல்கள் போன்ற பல இலக்கிய வடிவங்களிலும் அது உருப்பெற்றுத் திகழ்கிறது. சீர்காழி அருணாசலக்கவிராயர் இராமாயணத்தைக் கீர்த்தனை, விருத்தங்கள் ஆகியவற்றால் நாடகமாக அமைத்துள்ளார். அது ‘இராம நாடகக் கீர்த்தனை’ எனப்படும். அதில் அவர் பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள பகுதியில் அமைந்த வரலாற்றையே நாடகப்படுத்தியுள்ளார்; உத்தரகாண்டப் பகுதியைச் சேர்க்காது விடுத்துள்ளார். உத்தரகாண்டம் என்னும் பகுதியிலடங்கிய செய்திகளை நாடகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்ததே ‘உத்தர ராமாயண நாடகம்’ என்னும் நூல். இந்நூலும் இராம நாடகக் கீர்த்தனை போலவே கீர்த்தனைகள், விருத்தங்கள் முதலியவற்றால் இயற்றப்பட்டதாகும். இதன்கண் சில கட்டளைக் கலிப்பாக்களும் வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள கீர்த்தனைகள் இராக தாளக் குறிப்பினைக் கொண்டுள்ளன. உத்தர ராமாயண நாடகத்தை இயற்றியவர் அனந்த பாரதி அய்யங்கார். தஞ்சை மாவட்ட உமையாள்புரத்தில் தோன்றிய இவர் கி.பி. 1786 முதல் கி.பி. 1846 வரை வாழ்ந்தார். இவர் தம் நாடக நூலினைக் குடந்தைச் சாரங்கபாணித் திருக்கோயில் சிங்கார மண்டபத்தில் அரங்கேற்றினார். இதனைக் ‘கவி வாதி சிங்கார மண்டபத்தில், அனந்தவேதன் அரங்கேற்றினானே’ என்னும் இந்நூலிலுள்ள செய்யுட்பகுதி குறிப்பிடுகிறது. ‘தமிழில் இராமாயண உத்தரகாண்டம்’ என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. அது விருத்தச் செய்யுட்களால் ஆகியது. அவ்வகையில் நாடக வடிவில் அமைக்கப்பட்ட இந்த நூலை ‘உத்தரகாண்ட நாடகம்’ என்னாமல், ‘உத்தர ராமாயண நாடகம்’ என்று ஆசிரியர் பெயர் அமைத்துள்ளதிலிருந்து, இராமாயணத்தின் உந்தரகாண்டம் உத்தர ராமாயணம் என்னும் பெயராலும் வழங்கப்பட்ட செய்தி புலனாகிறது. இராவணன் இறப்புக்குப் பின்னர், அயோத்தி நகர் திரும்பி முடிபுனைந்து கொண்ட இராமன் வேண்டிக்கொள்ள, உத்தர காண்ட வரலாற்றை அகத்தியர் எடுத்துரைப்பதாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. இராவணன், கும்பகருணன் ஆகியோர் பிறப்பு வரலாறு, கும்பகருணன் வரம், மேகநாதன் வரலாறு, குபேரன் வரலாறு, இலங்கை நகர அமைப்பு, சூர்ப்பணகை கணவன் கொல்லப்படல் முதலிய செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. மேலும், சீதைக்கு உண்டாகிய பழிச்சொல், சீதை வான்மீகி ஆசிரமத்தில் உறைவது, குசனும் இலவனும் பிறத்தல், வான்மீகி குசலவர்க்குத் தம் இராமாயண காவியத்தைப் பாடக் கற்பித்தல், இராமனின் அசுவமேதயாகம், குசலவர் அவ்வேள்வியில் இராமாயண கானம் பாடுதல், சீதை அங்குவந்து சூளுரைத்துத் தான் குற்றமற்றவள் என்பதனை நிருவுதல், சீதை இரசாதல உலகம் செல்லுதல், சீதையைத் தம்மிடமிருந்து பிரித்த பூமி தேவியை இராமன் சினத்தல், அச்சினத்தைப் பிரமன் தணித்தல், சீதையைப் பிரிந்த இராமன் பொன்னால் சீதை உருவமைத்துப் பத்தாயிரம் ஆண்டு ஆளுதல், குசலவர் முதமியோர்க்கு ஆட்சி நல்குதல், இயமன் அந்தணனாக வந்து இராமனை ஒருவரும் அறியாமல் மேலுலகம் அழைத்துச் செல்லுதல், இராமன் சரயு நதிக்கரை சென்று, விண்ணுலகிலிருந்து வந்த விமானத்தேறித் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளுதல், வீடணன், அனுமன் ஆகியோர்க்கு அவன் அழியா வரம் (சிரஞ்சீவித் தன்மை) அளித்தல், அனுமன் வரலாறு ஆகிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாகம் இந்நூலாசிரியரின் சீடர் ஒருவரால் பாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்நூல் சென்னை அரசாங்கக் கையெழுத்துப்படிவ நூலகத்தால் 1960–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.