மைய நரம்பு மண்டல ஊக்கிகளான சாந்தைன்களில் முக்கியமானவை காஃபீன், தியோஃபைலின், தியோ புரோமின் ஆகியன. சாந்தைன் கலந்த பானங்களில் காஃபி, தேயிலை, கோகோ, கோலா ஆகியவை அடங்கும். இவை அனைத்துமே மைய நரம்பு மண்டல ஊக்கிகளாகும். இந்த மூன்றின் வேதி அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மூன்று அல்கலாய்டுகளும் தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றன. காஃபியில் காணப்படும் காஃபீனின் அளவு ஒரு கோப்பையில் 100 —150மி.கி. ஆகும். தேயிலையில் காணப்படும் காஃபீனும், தியோஃபைலினும் ஒரு கோப்பைக்கு 30—40மி.கி. ஆகும். ஒரு கோப்பை கோகோவில் காணப்படும் காஃபீனும், தியோபுரோமினும் 15—18மி.கி. ஆகும். 12 அவுன்ஸ் கோலாவில் காணப்படும் காஃபீன் 40மி.கி. ஆகும். காஃபீன், மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் அளவுக்குத் தியோஃபைலினும், தியோபுரோமினும் தூண்டுவதில்லை. புதுப் பிறப்புகள், மூச்சு விடத் தடை ஏற்படும் போது தியோஃபைலினைப் பயன்படுத்துகின்றனர். சாந்தைன்கள் இதயத்தைத் தூண்டுகின்றன. அமினோஃபைலின் என்ற தியோஃபைலின் இதயத் தளர்வில் பயனளிக்கிறது. சாந்தைன்கள் பெருமூளை இரத்த நாளங்களைச் சுருக்குவதால், பெருமூளைக்கான இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. ஆகவே, இரத்த மிகு அழுத்தத்தில் ஏற்படும் தலைவலியைப் போக்க, சாந்தைன்கள் பயன்படுகின்றன. இதயத்திற்கு இரத்தம் கொடுத்தல் குறையும் போது, சாந்தைன்களைப் பயன்படுத்தினால், இதய இரத்த நாளத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சாந்தைனைச் சார்ந்த தியோஃபைலின், மூச்சுக் கிளைக் குழல் மெல்லிய தசை இழைகளை விரியச் செய்வதால், இது ஆஸ்த்துமா நோயில் பயன்படுகிறது. அனைத்துச் சாந்தைன்களும் வாய் அல்லது குதம் அல்லது ஊசி மூலமாகப் பயனளிக்கின்றன. சில போது, இரைப்பையில் உறுத்தலும், குமட்டலும் உண்டாகின்றன. சாந்தைன்கள் மைய நரம்பு மண்டல ஊக்கிகளாகவும், சிறுநீர்ப் பெருக்கிகளாகவும், மூச்சுக் கிளைக் குழல் ஆஸ்த்துமாவிலும், இதயத் தளர்வின் போதும் பயன்படுகின்றன. ஆஸ்பிரினுடன் சேர்த்துத் தலைவலிக்கு எதிராகப் பயனளிக்கும். காஃபீனும், எர்காட்டும் சேர்ந்து ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படும். மேற்கூறிய இரண்டு நிலைகளிலும் பெருமூளை இரத்த நாளங்களைச் சுருக்குவதால் பயன் உண்டாகிறது. கல்லீரல் நாள வலிக்கு, அமினோஃபைலினைப் பயன்படுத்தி 0.25-0.5 கிராம் அலகில் சிரை வழியாகச் செலுத்தி வலியைப் போக்கலாம். சாந்தைன்களின் வேண்டா விளைவுகளாக நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, பிதற்றல், மிகை நாடித் துடிப்பு ஆகியவை தோன்றலாம். அமினோஃபைலினைச் சிரை வழியாகச் செலுத்தும் போது, கவனக் குறைவாக இருந்தால் மரணம் நேரிடும். —அ. கதிரேசன் நூலோதி. Charles R. Graig, Modern pharmacology, First Edition, Little Brown & Co. Boston, 1982.