அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களுள் ஒன்று. இது தென்மேற்கு நடு இலூசியானா அமெரிக்காவில் அமைந்துள்ளது. பிரான்சு நாட்டு அரசரான பதினான்காம் உலூயியின் (Louis XIV) நினைவாக இப்பெயரிடப்பட்டுள்ளது. வடக்கில் ஆர்க்கன்சாவும் (Arkansas), கிழக்கில் மிசிசிப்பியும் (Mississippi), மெக்சிகோவும் (Mexico), தெற்கில் மெக்சிகோ வளைகுடாவும், மேற்கில் தெக்சாசும் (Texas) இதன் எல்லைகளாகும். இலூசியானாவின் (Louisana) பரப்பளவு 1,25,675 ச.கி.மீ. இதன் தலைநகர் பாட்டன் ரூசு (Baton Roouge). மிசிசிப்பியின் கீழ்ப்பகுதி புளோரிடா (Florida) வின் ஒரு பகுதியென்ற கருத்தில் இசுபானியர்கள், அப்பகுதியில் குடியேற்றங்களை ஏற்படுத்த விரும்பினர். ஆனால் தங்கம், வெள்ளி போன்ற சுரங்கங்கள் எவையும் காணப்படாமையால், இசுபானியர்கள் அப்பகுதிகளில் குடியேற்றங்கள் ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டனர். அதன் பின், கி.பி. 1682–ஆம் ஆண்டிலிருந்து பிரான்சு, மிசிசிப்பிச் சமவெளியில் குடியேற்றங்கள் அமைப்பதில் முயற்சிகள் பல எடுத்த போதிலும், கி.பி. 1714–ஆம் ஆண்டுதான் அப்பகுதிகளில் குடியேற்றத்தை அமைத்து, சீன் பாப்டிசுடெலேமொயின் (Jean Baptistele Moyne) என்பவரை அதன் ஆளுநராக அமர்த்தியது. அவர் நியூ ஆர்லியன்சு (New Orleans) நகரை உருவாக்கி, கி.பி. 1722–ஆம் ஆண்டு அதனை இலூசியானாவின் தலைநகராக்கினார். அப்பகுதியில் குடியேறிய பிரெஞ்சுக்காரர்கள் அரிசி, புகையிலை, கரும்பு போன்றவற்றைப் பயிர் செய்தனர். நியூ ஆர்லியன்சு நகரம் ஏழாண்டுப் போரின்போது இசுபெயின் பிரான்சிற்கு உதவி செய்ததால், பிரான்சு இசுபெயினுக்கு இலூசியானாப் பகுதியைப் பரிசாக அளித்தது. இதற்குக் குடியேற்ற மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் நெப்போலியன், இசுபெயினிடமிருந்து இலூசியானாவை மீட்டார். வலிமையான ஓர் ஐரோப்பிய அரசு மேற்கு எல்லைப்பகுதியில் ஆதிக்கம் பெற்றால், அது அமெரிக்காவின் முன்னேற்றத்தையும் வாணிகத்தையும் பாதிக்குமென்று எண்ணிக் குடியரசுத் தலைவர் செபர்சன் (Jefferson), இலூசியானாவைப் பிரான்சிடமிருந்து கைப்பற்ற எண்ணினார். ஆனால், வட அமெரிக்காவில் பேரரசை நிறுவ உறுதி கொண்டிருந்த நெப்போலியன், பிரிட்டனுடன் மீண்டும் போர்தொடுக்கும் நிலையிலிருந்ததால், அமெரிக்காவுக்கு அதனை 150 இலட்சம் தாலருக்கு (Dollar) கி.பி. 1803–ஆம் ஆண்டு விற்றார். செபர்சன் அங்குக் கிளைபோன் (Claiborne) என்பவரை ஆளுநராக அமர்த்தினார். இசுபெயினிடமிருந்து மிசிசிப்பியின் கிழக்குப் பகுதியைப் பெற்ற பின், கி.பி. 1812–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 8–ஆம் நாள் இது அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் தலைநகர், நியூ ஆர்லியன்சிலிருந்து கி.பி. 1828–ஆம் ஆண்டு தோனால்சன் வில்லிக்கு (Donaldson Ville) மாற்றப்பட்டது. பின்பு, அங்கிருந்து கி.பி. 1849–இல் பாட்டன் உருசுக்கு மாற்றப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ஐக்கியக் கூட்டிணைப்பிலிருந்து பிரிந்து, நேசக் கூட்டிணைப்புடன் இம்மாநிலம் சேர்ந்தது. சிறிது கால இராணுவ ஆட்சிக்குப் பின், கி.பி. 1868–ஆம் ஆண்டு இலூசியானா மீண்டும் ஐக்கியக் கூட்டிணைப்புடன் இணைக்கப்பட்டது. உலகப் போரின்போது இது அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு இராணுவ உதவி செய்தது. எஸ்.இரா.