அரசாங்க வரவு-செலவுத் திட்டம்
aracāṅka varavu-celavut tiṭṭam
அரசாங்க வரவு-செலவுத் திட்டம் என்பது, அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டிற்கான “ஆண்டு நிதி நிலை அறிக்கை” (Annual Financial Statement) ஆகும்.
அரசாங்க வரவு-செலவுத் திட்டம் என்பது, அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டிற்கான “ஆண்டு நிதி நிலை அறிக்கை” (Annual Financial Statement) ஆகும். ஆண்டுக்கொரு முறை உருவாக்கப்படும் இத்திட்ட அறிக்கை, அடுத்த ஆண்டிற்கான செலவினங்களையும், எதிர்பார்க்கப்படுகிற வரவினங்களையும் மதிப்பீடு செய்து, சுருக்கமான முறையில் அரசின் நிதி நிலையினைத் தெரிவிக்கும் ஒரு ஆவணமாகும். ஆகவே, அரசாங்க வரவு–செலவுத் திட்டம், சிக்கனம், நிருவாகத்தில் ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க அரசாங்கத்திற்கு இன்றியமையாத ஒரு கருவியாக இருக்கிறது. அரசாங்கத்தின் செலவுகளையும் வருவாய்களையும் சட்டமன்றம், தக்க அளவுக்குக் கண்காணிக்கவும் இந்திட்டம் பயன்படுகிறது. இந்தியாவில் வரவு–செலவுத் திட்டங்கள், ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு நல்ல கருவியாகவும் உதவுகின்றன. மேலும், வரவு–செலவுத் திட்ட உரை (Budget Speech) அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையாக அமைந்து, மக்கள் ஆண்டுதோறும் பிப்பிரவரி மாதக் கடைசி வாரம் அல்லது மார்ச்சு மாதம் முதல் வாரத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அரசு ஆவணமாக விளங்குகிறது. அரசின் கொள்கை பற்றிய பொதுமக்களின் கருத்துரைகளை அரசு பெறுவதற்கு இந்த அறிக்கையும் வரவு–செலவுத் திட்ட உரையும் உதவுகின்றன.
நிதிநிலை அறிக்கை உரை
இதன் தலையாய நோக்கம், அரசின் கொள்கைகள், பணித் திட்டங்கள் ஆகியவை, எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும், வரவு–செலவுத் திட்ட ஆண்டில் மேலும் அவற்றை எப்படிச் செயற்படுத்துவது என்பதையும் குறிப்பிடுவதாகும்.
கொடை வேண்டல்களும் விரிவான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளும்
இது ஒரே முழு ஆவணமாகவோ பகுதி பகுதியாகவோ வெளியிடப்படும். இதன் முன்னுரை நூலின் பொருளடக்கமாக உள்ளது.
வருவாய் வரவு–செலவுத் திட்டம்
இதனுள் வருவாய்க் கணக்கிலுள்ள வரவினங்களின் மதிப்பீடுகள் தரப்படுகின்றன. இப்போதைய வரிகள் மூலம் கிடைக்கக் கூடிய வருவாய் மதிப்பீடுகள் (Estimates of Revenue), அரசின் வணிக நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதாயம் (Profits), அரசு முதலீடுகளுக்குக் கிடைக்கும் லட்டி (Interest), இந்திய அரசிடமிருந்து கிடைக்கும் கொடைகள் (Grants) முதலியன சேர்ந்தது அரசின் ஆண்டு வருமானம்.
ஆண்டுத் திட்டம்
ஐந்தாண்டுத் திட்டப் பணிகளுக்கான செலவு, வெவ்வேறு கொடைகளுடன் விரிவான மதிப்பீடுகளில் கொடுக்கப்படுகிறது. வெவ்வேறு திட்டப் பணிகளுக்காகச் செய்துள்ள நிதி ஒதுக்கீட்டைப் பார்த்தவுடன் கண்டு கொள்ள, இந்தத் தனி ஆவணமும் உருவாக்கப்படுகிறது.
திட்டச் செயலாக்க விளக்க அறிக்கைகள்
தல வளர்ச்சிப் பணிகள் பெருகி வருவதன் சிறப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டு, செலவையே நோக்கமாகக் கொண்ட, ஒரு தலைநோக்காக அமைந்த வரவு–செலவுத் திட்ட அமைப்பு முறை, பல்வேறு பணித் திட்டங்களின் கீழ் ஆற்றிய செயலாக்கங்களை விரிவாகச் சட்ட மன்றத்தில் எடுத்துச் சொல்வதற்குத் தகுந்ததாயில்லை. ஆகவே, ஒவ்வொரு துறையின் திட்டங்களுக்கும் பணிகளுக்கும் திட்ட இலக்குகளுக்கும், திட்டச் செயலாக்கங்களுக்கும் சிறப்பிடம் அளிக்கும் திட்டச் செயலாக்க விளக்க அறிக்கைகளை (Performance Budgets) உருவாக்கவேண்டும். இயல்பான வரவு–செலவுத் திட்ட அறிக்கை தொடர்பான ஆவணங்களைத் தவிர, ஒரு சில இன்றியமையாத வளர்ச்சித் துறைகளின் செயலாக்கங்களைப் பற்றிய “திட்டச் செயலாக்க விளக்க அறிக்கைகளும்” இப்போது இந்தியாவில் வெளியிடப்படுகின்றன.
இந்திய நாட்டின் அரசியலமைப்பில் எந்த இடத்திலும் “பட்செட்” (Budget) என்னும் சொல் பயன்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தின் நிதி அமைச்சர், ஆண்டு நிதிச் செயற்குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துக் கொண்டு மக்களவைக்குச் (House of Commons) சென்றார். அத்தோல் பைக்குத்தான் ‘பட்செட்’ என்று பெயர், இந்தப் பைக்கு உரிய பெயர் நாளடைவில் பழக்கம் காரணமாக அதன் உள்ளே இருந்த ஆண்டு நிதிச் செயற்குறிப்புகளுக்கு ஆகுபெயராக மாறியது. இந்திய அரசியலமைப்பில் “பட்செட்” என்பதற்கு “ஆண்டு நிதி நிலை அறிக்கை” என்னும் பெயரே கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்திய நாட்டு மக்களிடையே பொதுவாகப் “பட்செட்” என்னும் சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
வரவு–செலவுத் திட்டம் உருவாக்கப்படும் முறையும் செயற்படுத்தப்படும் முறையும்
வரவு–செலவுத் திட்டத்தினை உருவாக்க, ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் அரசியல் அமைப்புக்கு ஏற்ற ஒரு முறை பின்பற்றப்படுகிறது. இந்தியா ஒரு கூட்டரசு (Federal Government). எனவே, மத்திய அரசும் மாநில அரசும் தனித்தனியே வரவு செலவுத் திட்டங்களை உருவாக்குகின்றன. மத்திய அரசின் திட்டம் நாடாளுமன்றத்திலும், மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்புடைய சட்டமன்றங்களிலும் ஒப்புதலுக்கு வைக்கப்படுகின்றன. இந்தியாவின் நிதியாண்டு ஏப்பிரல் முதல் தேதி முதல் மார்ச்சு 31–ஆம் தேதி வரையிலான காலமாகும். இந்திய இரயில்வே நிறுவனத்திற்- கும் அதுபோன்ற ஒரு சில நிறுவனங்களுக்கும் தனியே வரவு – செலவுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படுகின்றன.
பொதுவாக, வரவு–செலவுத் திட்டம் மூன்று நிலைகளில், உருவாக்கமும் செயலாக்கமும் பெறுகிறது. இந்தியாவில் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தினை உருவாக்குவதற்கான பணிகள், பெரும்பாலும் தலைமைச் செயலக நிதித் துறையில் அக்டோபர்த் திங்களில் தொடங்கப்படுகின்றன. பல்வேறு துறைத் தலைவர்களிடமிருந்து, குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகள் பெறப்பட்டு, நிதித் துறையில் ஆய்வு செய்யப்பட்டு, அமைச்சரவையால் முடிவு செய்யப்படுகின்றன.
இப்போது நடைபெற்று வரும் பணிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு வரவு–செலவுத் திட்டத்தின் முதற் பகுதியிலும், புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு இரண்டாம் பகுதியிலுமாகச் செலவுத் தேவைகள் வைக்கப்படுகின்றன. முன்பு கிடைத்த வருமானத்தைக் கருத்தில் கொண்டு, நிதித்துறை அந்த ஆண்டில் கிடைக்கக் கூடிய வருவாயை மதிப்பிடுகிறது. இப்போதைய பணிகளை நீட்டிக்கத் தேவையான அளவுக்கு வகை செய்து, வரவு–செலவுத் திட்டத்தின் 1–ஆம் பகுதியை, நிதி அமைச்சரே அப்போதைக்கு முடிவு செய்து, பின்னர் ஒப்புதலுக்கு அமைச்சரவை முன் வைக்கிறார், வரவு–செலவுத் திட்டத்தை உருவாக்கும் பணியில் சிறந்த கட்டம் புதிய திட்டச் செலவுகள் பற்றிய ஆய்வேயாகும். அண்மைக் காலத்தில் இதற்காக மீதமிருக்கும் தொகை மிகவும் குறைவாகவும் திட்டங்கள் பலவாகவும் உள்ளன. நல அரசுக் கோட்பாடு வலியுறுத்தப்படுவதும், நாட்டுத் திட்டத்தில் பல திட்டங்கள் சேர்க்கப்படுவதும் பல துறைத் தலைவர்களின் வேண்டுகோள்களாகும். ஆனால், கிடைக்கக்கூடிய நிதி வசதிகளுக்குள், அரசு தனது செலவுகளை அடக்கிக் கொள்ள வேண்டும். திட்டங்களைத் தெரிந்தெடுக்கும் பணியைத் தொடர்புள்ள செயலகத் துறைகள் முதலில் செய்கின்றன. பின்னர்த் தெரிந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் நிலை நிதிக் குழுவின் (Standing Finance Committee) ஆய்வுக்கு உட்படுகின்றன. முதலமைச்சர் அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். இன்றியமையாதவை என்று நிலை நிதிக்குழு கருதும் திட்டங்கள், வரவு–செலவுத் திட்டத்தின் 2–ஆம் பகுதியில் சேர்க்கப்பட்டு, அமைச்சரவை முன் வைக்கப்படுகின்றன. இவை “இரண்டாம் பகுதித் திட்டங்கள்” எனப்படும். இதற்கிடையே, இப்போதுள்ள வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும், வரவு–செலவுத் திட்டத்தின் 1, 2–ஆம் பகுதிகளுக்கான செலவிற்கும் இடையேயுள்ள இடைவெளியை ஈடுகட்டக் கூடுதல் வரி விதிப்புச் செயற்குறிப்புகளை நிதித்துறை ஆராய்கிறது. இப்புதிய வரித் திட்டங்கள் அமைச்சரவையால் ஆய்வு செய்யப்பட்டு, குறைக்கக் கூடிய செலவினங்கள், விதிக்கக் கூடிய புதுவரிகள் ஆகியவை பற்றி இறுதி முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பின்பு வரி விதிப்புச் சட்ட வரைவுகள் உருவாக்கப்பட்டு, வரவு–செலவுத் திட்டம் மக்கள் அவையில் வைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. வரவு–செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தின் முன் வைக்கும் வரை, அதனை மறைபொருளாக வைத்திருப்பதன் நோக்கம், புதிய வரி விதிப்புத் திட்டங்கள் பொது மக்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதேயாகும். புதிய வரிகன் பல, பங்கு அங்காடியின் நிலையையும் அன்றாடத் தேவைப் பொருள்களின் விலைகளையும் பாதிக்கக்கூடியவை. அவற்றைப் பற்றிய விவரங்கள் முன்பாகவே வெளியாகுமானால், சமூக விரோத சக்திகள் பண்டங்களைப் பதுக்கி வைத்துக் கொள்ள ஏதுவாகும். அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டமும் அதனைச் சார்ந்த பிற வெளியீடுகளும் வழக்கமாக, பிப்பிரவரித் திங்கள் கடைசி வாரத்தில் அல்லது மார்ச்சுத் திங்கள் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் அல்லது தொடர்புடைய சட்ட மன்றங்களில் ஒப்புதலுக்கு வைக்கப்படுகின்றன. நிதி ஒதுக்கச் சட்ட வரைவு (Appropriation Bill), புதிய நிதி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாக அதாவது, ஏப்பிரல் முதல் தேதிக்கு முன்னதாக நிறைவேற்றப்படுகிறது. அடுத்த நிதி ஆண்டின் தொடக்கத்துக்கு முன்பு முழு ஆண்டுக்குமான நிதி ஒதுக்கச் சட்ட வரைவை நிறைவேற்ற இயலாவிட்டால், புதிய ஆண்டின் முதல் சில திங்களுக்கான நிருவாகத் தேவைகள், சட்டமன்றத்திலிருந்து முன்பணம் ஒன்றைப் பெறுவதன் மூலம் நிறைவு செய்யப்படுகின்றன, “உடனடிச் செலவுக்கான கொடை அனுமதி” (Vote on account) மூலம் பெறப்படும் இத்தொகை, நிதி ஒதுக்கச் சட்ட வரைவில் ஒதுக்கியுள்ள தொகையுடன் பின்னர்ச் சேர்க்கப்படுகிறது. நாடாளுமன்றம் அல்லது தொடர்புடைய சட்டமன்ற ஒப்புதல் பெறுதல் மிக இன்றியமையாததாகும். அரசு செய்யும் செலவுகள் அனைத்தும், நாடாளுமன்றம் அல்லது சட்ட மன்றத்தின் திட்டவட்டமான ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்பது நாடாளுமன்ற அரசு முறையின் தலையாய கொள்கையாகும். பணம் சம்பந்தப்பட்டவரை, நிருவாகத்தினர் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் விருப்பங்களை நிறைவேற்றும் பேராளர்களேயாவர். நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றக் கூட்டம் எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டிருப்பதென்பது இயலாத ஒன்று, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் அன்றாடம், அரசின் பல்வேறு துறைகளில் இலட்சக் கணக்கில் ஏற்படக்கூடிய வரவு–செலவுகளை ஆராய்ந்து கொண்டிருப்பதென்பதும் நடைமுறையில் இயலாது. ஆதலின், வரப்போகும் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தினை உருவாக்க வேண்டும் என்னும் முறை வகுக்கப்பட்டது. வரவு–செலவுத் திட்டத்தின் மீது பொது விவாதம், கொடை வேண்டுதல்கள் மீது வாக்கெடுப்பு, நிதி ஒதுக்கச் சட்ட முன் வரைவு நிறைவேற்றம் முதலிய சட்டப்படியான நடவடிக்கைகள் மூலம் நிதி நிலை அறிக்கையை ஆராயவும் மாற்றவும் திருத்தவும் முடிவாகத் தன் ஒப்புதலை அளிக்கவும் நாடாளுமன்றத்திற்கு அல்லது சட்டமன்றத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முடிந்ததும் அடுத்த நிலையான ஆட்சியாளர் வழி வகுத்தல் (Executive Implementation) தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் அல்லது தொடர்புடைய மாநில அரசின் ஆளுநருடைய ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்ட நிதி வரம்புக்குட்பட்டுச் செயற்பட, நிருவாகத்தினருக்குப் போதிய அதிகாரமளிக்கப்படுகிறது.
வரவு–செலவுத் திட்டத்தின் உட்பிரிவுகள்
இந்தியாவில் நடைமுறையிலுள்ள அரசாங்க வரவு–செலவுத் திட்டம், வருவாய் வரவு–செலவுத் திட்டம், மூலதன வரவு செலவுத் திட்டம் என இருபிரிவாக உருவாக்கப்படுகிறது. இப்போதைய வரிகள் மூலம் கிடைக்கக் கூடிய வருமான மதிப்பீடு, அரசின் வணிக நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதாயம், அரசு முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டி, இந்திய அரசிடமிருந்து கிடைக்கும் கொடை ஆகியவை அனைத்தும் சேர்ந்து அரசில் ஆண்டு வருவாய் ஆகிறது. இவ்வாறே அரசின் பல்வேறு துறைகளை நடத்த ஆகும் செலவு, அரசு வாங்கிய கடன்களுக்கு வட்டி, கடன்களைத் தீர்க்கத் தொகை கொடுத்தல், பஞ்சத்துயர் தணிப்பு. நிலக்கிழார்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகை நிலுவை முதலியவற்றின் மதிப்பீடுகள் ஆகியவை வருவாய்க் கணக்குச் செலவினங்கள் (Revenue Account Disbursement) எனப்படும். வருவாய்க் கணக்குச் செலவினங்கள் என்பதில் அடங்கும் மொத்தச் செலவை, வருவாய்க் கணக்கு வரவினங்கள் என்பதில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த வருவாயிலிருந்து கழித்தால், ஆண்டுக்கான “வருவாய் மிகுதி” (Revenue Surplus) கிடைக்கிறது. வருவாயை விடச் செலவு மிகுதியாக இருக்குமானால், “வருவாய்ப் பற்றாக்குறை” (Revenue Deficit) ஏற்படுகிறது.
மூலதனக் கணக்குகள் (Capital Accounts), வருவாய்த் திட்ட மதிப்பீட்டின் கீழ் வாராத அரசு வரவு செலவுகளைக் குறிப்பிடுகின்றன. வருவாய் தரக்கூடிய அல்லது தொடர் செலவைத் (Recurring Expenditure) தவிர்க்கிற முறையில், ஒரு நிலையான சொத்தினை உருவாக்கவோ அடையவோ செய்யப்படும் செலவு, மூலதனச் செலவாக வகைப்படுத்தப்படுகிறது. அரசுக்கு வருவாய் தரும் இனங்களாக இருப்பதாலும் நிலையான உடைமைகளாதலாலும் பாசனத் திட்டங்கள் இப்பிரிவின் கீழ் வருகின்றன. கட்டிடங்களும் மூலதனச் சொத்தாகக் கருதப்படும். அரசின் ஆண்டு வருவாயிலிருந்து மூலதனச் செலவுகளைச் செய்து கொள்ளலாம். அன்றிப் பொது மக்களிடமிருந்தோ மத்திய அரசிடமிருந்தோ வேறு வகையிலோ கடன் பெறுகிற பணத்தின் மூலமும் இதனைச் செய்யலாம்.
ஓர் ஆண்டின் வரவு–செலவுத் திட்டம், வருவாய்க் கணக்கும், மூலதனக் கணக்கும் சமன்படுத்தப்பட்டிருந்தாலொழிய, சாதாரண நிதிக் கோட்பாடுகளையொட்டி நடந்ததாகாது. வருவாய்த் திட்ட மதிப்பீட்டில் கண்டுள்ள இயல்பான நிருவாகச் செலவுகளுக்கு மட்டுமன்றி, மூலதனக் கணக்கில் கூறப்பட்ட மூலதனப் பணிகளுக்கான செலவுகளுக்கும் அரசு வகை செய்ய வேண்டும். இச்செலலினங்களுக்கெல்லாம் தொகை ஒதுக்கிய பிறகு, ஆண்டு முடிவில், இறுதி இருப்பாகக் குறிப்பிட்ட அளவுள்ள தொகையாவது அரசிடம் இருக்க வேண்டும். வருவாய்க் கணக்கில் பற்றாக்குறையோ உபரியோ இருக்கலாம். ஆனால், எல்லாக் கணக்குகளையும் சேர்த்துப் பார்க்கும்போது பற்றாக்குறை இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அதிகப்பற்று (Over Draft) வாங்க வேண்டி வரும்.
எதிர்பாராச் செலவு நிதியம் துணை நிதிநிலை அறிக்கையும்
ஆண்டு நடப்பின்போது, மதிப்பீடுகளில் எதிர்பார்க்கப்படாத சில புதிய செலவுகள் ஏற்படலாம். அவ்வேளைகளில் மீண்டும் சட்டமன்றம் கூட்டப்பட்டு அதற்கு ஒப்புதல் பெறும் வரை அந்தச் செலவுகளை ஒத்திப் போட முடியாது. அப்பொழுது நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் ஒப்புதலை எதிர்நோக்கி, நிருவாகம் இத்தகைய திடீர் தேவைகளுக்கெனத் தனியாக வைக்கப்பட்டுள்ள ‘எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து’ (Contingency Fund) பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்குப்பின் கூடும் நாடாளுமன்றம் அல்லது சட்ட மன்றத்தின் கூட்டத் தொடரில் ‘துணை நிதி நிலை அறிக்கை’ (Supplementary Financial Statement) ஒன்று வைக்கப்படுகிறது. போதிய ஒப்புதல் பெறாமல் செய்யப்பட்ட செலவு விவரங்களும் அதில் தெரிவிக்கப்படுகின்றன. இந்தத் துணைக் கொடை வேண்டுகோள்கள் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் ஏற்கப்பட்டதும் எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து எடுக்கப்பட்ட பணம் மீண்டும் அந்நிதியில் சேர்க்கப்படுகிறது.
புதுப்பணிகளுக்குப் பணம் பெறும் முறை
வரவு–செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படாத செலவினங்களை ஆண்டு நடப்பின்போது அரசு அனுமதிப்பது என்ற வழக்கம், நாடு விடுதலை அடைவதற்கு முந்தைய காலத்தில் இல்லை. வளர்ச்சித் துறைகள் புதிய திட்டங்களை மிகுதியாக நிறைவேற்ற வேண்டியுள்ளதால், அந்த நிலை இப்போது மாறிவிட்டது. இந்நாளில் புதிய பணித்திட்டங்களை அவ்வப்பொழுது நிறைவேற்றுவதன் தேவை தொடர்ந்து உணரப்பட்டு வருகின்றது. எனவே, ஆண்டு நடுவில் தேவையான பணிகளுக்கு ஆணை வழங்குவது தவிர்க்க முடியாததாகியுள்ளது. வரவு–செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படாத இத்தகைய ஆணைகளுக்கு நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஒப்புதல் அளிப்பதுதான் முறை. ஆனால், நடைமுறையில் ஒவ்வொரு செலவினத்துக்கும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் தனித்துணைக் கொடை வேண்டுகோள் கொண்டு வருவதென்பது இயலாது. எனவே, சட்டமன்றப் பொதுக் கணக்கு ஆய்வுக்குழு, இது குறித்து விதிகளை வகுத்திருக்கிறது. “புதுப்பணிகள்” என்னும் தலைப்பில் சட்டமன்றத்தின் தனி ஒப்புதல் பெறவேண்டிய இனங்கள் எவை பாகுபாடு செய்யப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டில் உரூ. 5 இலட்சத்துக்குமேல் செலவாகக்கூடிய பணிகள், ஆண்டிற்கு உரூ. 2 இலட்சம் தொடர்ந்து செலவாகும் புதுப்பணியாளர் அமைப்புகள், எந்தப் புதியதொரு செயல் நோக்கத்திற்கும் அதன் செலவு எவ்வளவு சிறியதானாலும் கடன் அளித்தல், புதிய அரசுத்துறை வணிக நிறுவனம் அமைத்தல் ஆகியவை எல்லாம் “புதுப்பணிகள்” என்பதனுள் அடங்கும். புதுப்பணிகளாக இல்லாத தனிச் செலவினங்களைப் பொறுத்த வரையில், பொது வரவு–செலவுத் திட்டத்தில் பொருத்தமான தலைப்பின் கீழ் முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட கொடையிலிருந்து ஈடுகட்ட முடியாமல் இருக்கும் அளவிற்கு மட்டும் மொத்தமாகச் சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
வரவு–செலவுத் திட்டத்தின் சிறப்புக் கூறுகள்
அரசாங்கத்தின் எல்லாச் செலவினங்களுக்குமான பணம் ஒரே ஒரு “தொகு நிதியிலிருந்து” (Consolidated Fund) பெறப்படுகிறது. அரசின் வருவாய்ச் கணக்கு வரவினங்கள் அனைத்தும், அதாவது, அரசின், உரிய ஆண்டுக்கான இயல்பான வருமானம், தொகு நிதியின் ஒரு பகுதியாக அமைகிறது. வங்கிகளிடமிருந்தும் இந்திய அரசிடமிருந்தும் பொது மக்கள் முதலானோரிடமிருந்தும் வாங்கப்படும் கடனும், இத்தொகுநிதியில் சேருகிறது. கடன் திருப்பிச் செலுத்தப்படுகிற வகையில் அரசுக்குக் கிடைக்கும் பணமும் தொகு நிதியில் சேர்க்கப்படுகிறது. இந்த ஆதாரங்களிலிருந்து கொடுக்கப்படும் தொகைகள் யாவும் தொகு நிதித் தலைப்பில் காட்டப்படும். ஆனால், தொகு நிதியிலிருந்து செய்யப்படும் செலவுகள் எல்லாம் சட்டமன்றத்தின்முன் வைக்கப்பட்டு, ஒப்புதலைப்பெற வேண்டுமென்பதில்லை. எடுத்துக்காட்டாக, “சாட்டிய செலவுகளுக்கு” (Charged Expenditure) சட்ட மன்றத்தின் அனுமதி தேவையில்லை. இச்சாட்டிய செலவுகள் தொகு நிதியில் முதல் பொறுப்பாக இருப்பவை. குடியரசுத் தலைவர், ஆளுநர், சட்டமன்றப் பேரவைத் தலைவர், சட்டமன்ற மேலவைத் தலைவர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு அலுவலர், தேர்வு ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஊதியம் போன்றவை இதில் அடங்கும். நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராகத் தீர்ப்புக் கூறப்பட்ட தொகைகளும் சாட்டிய செலவில் வரும்.
அரசின் எல்லாச் செலவினங்களையும் எல்லா வரவினங்களையும் ஒன்றுவிடாமல் கணக்கில் எடுத்துக் கொண்டு, எல்லாவற்றையும் உள்ளடக்கி ஒருங்கிணைத்த ஒரு திட்டமே அரசாங்க வரவு–செலவுத் திட்டம். அது ஒரு குறிப்பிட்ட அரசின் ஓராண்டிற்கான ஒட்டு மொத்தமான வரவு–செலவுத் திட்டமாக அமைதல் வேண்டும்.
அரசாங்க வரவு–செலவுத் திட்ட வகைகள்
அரசாங்க வரவு–செலவுத் திட்டத்தில் பல வகைகள் உள்ளன. ஆனால், வருவாய்க் கணக்கு வரவு–செலவுத் திட்டம் (Revenue Account Budget), மூலதனக் கணக்கு வரவு–செலவுத் திட்டம் (Capital Account Budget) ஆகிய இரண்டும் பொது வரவு–செலவுத் திட்டத்தின் இரு பகுதிகளாகும், பொதுவாக, அரசுகளின் வரவு–செலவுத் திட்டங்கள் யாவும் இந்த இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்த இரு முறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இவை இரண்டும், ஒருங்கிணைந்த ஒரே ஒரு வரவு–செலவுத் திட்டமாகத்தான் உருவாக்கப்படுகின்றன. சில நாடுகளில் இவை தனித்தனித் திட்டங்களாகவும் வெளியிடப்படுவதுண்டு. அரசாங்கத்தின் செலவினங்களையும் அச்செலவினங்கள் மூலம் அடைந்த சாதனைகளையும் அறிவிக்கும் சாதனைத் திட்டங்கள், அமெரிக்க நாட்டில் பின்பற்றப்படுகின்றன. இந்திய நாட்டிலும், குறிப்பாகத் தமிழ் நாட்டில் இச்சாதனைத் திட்டங்கள் இப்பொழுது உருவாக்கப்படுகின்றன.
பொருளாதார ஆய்வுக்காக வரவு–செலவுத் திட்டங்களை இரு வகையாக உருவாக்கலாம். அவை, பண முறை வரவு–செலவுத் திட்டங்கள் (Financial Budgets), பொருள் இலக்கு முறை வரவு–செலவுத் திட்டங்- கள் (Physical Targets Budgets) என்பனலாம். திட்டக் குழுவினர் நாட்டின் வளர்ச்சிக்கான நீண்ட காலக் கொள்கைகளை முடிவு செய்வதற்கு இவ்வகைத் திட்டங்கள் உதவும்.
“முழுவேலை வாய்ப்பு வரவு–செலவுத் திட்டம்” (Full Employment Budgets) என்றும், “வாணிகச் சுழல் வரவு–செலவுத் திட்டம்” (Trade Cyclical Budget) என்றும், “அவசரக்கால வரவு–செலவுத் திட்டம்” (Emergency Budget) என்றும் மேலும் சில வகைத் திட்டங்கள் உள்ளன. நாட்டில் முழுவேலை வாய்ப்பு நிலையினை உருவாக்க நாட்டிலுள்ள உழைப்பு ஆற்றலைக் கணக்கிட்டு, மனித ஆற்றலைப் பெரும்பாலும் பயன்படுத்தும் அடிப்படையில், செலவினங்கள் அமைக்கப்படும். வரவு-செலவுத் திட்டம் “முழுவேலை வாய்ப்பு வரவு-செலவுத் திட்டம்” என்று சொல்லப்படும். ஓர் ஆண்டுக் காலத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் ஒரு வாணிகச் சுழலின் காலத்துக்காக உருவாக்கப்படும் வரவு–செலவுத் திட்டம், “வாணிகச் சுழல் வரவு–செலவுத் திட்டம்” எனப்படும். ஆனால், இத்தகைய திட்டம் இப்பொழுது எங்கும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. இம்முறையினை முன்பு மேற்கொண்ட சுவீடன் நாடும் பின்னர் அதனைக் கைவிட்டது. எதிர்பாராத பொருளாதார நெருக்கடி காரணமாகவோ போர்க்கால அவசரநிலை காரணமாகவோ வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கையின் கொடிய இன்னல்களாலோ இயல்பான வரவு–செலவுத் திட்டத்தினை அப்பொழுதைக்குக் கைவிட்டு, பொருளாதார அவசர நிலையைக் கருத்திற் கொண்டு விரைந்து செயலாற்ற உடனடியாக உருவாக்கப்படும் வரவு செலவுத் திட்டமே “அவசரக்கால வரவு-செலவுத் திட்டமாகும்”.
இந்திய அரசாங்க வரவு–செலவத் திட்டம்
நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவற்றின் வரவு–செலவுத் திட்டக் கூட்டத் தொடர்கள் பிப்பிரவரி அல்லது மார்ச்சுத் திங்களில் தொடங்கும். புதிய வரிகள் பற்றிய அறிவிப்பும் வரவு–செலவுத் திட்ட உரையில் கொடுக்கப்படும். வரவு செலவுத் திட்டத்தில் முந்தைய ஆண்டின் வரவு செலவுகளின் கணக்குகளும் (Accounts or Actuals), நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளும் (Revised Estimates), வருகின்ற ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளும் (Budget Estimates) இடம்பெறும்.
கீழ்வரும் அட்டவணைகளிலிருந்து 1950–51 நிதியாண்டிலும் 1984–85 நிதியாண்டிலும் இந்திய அரசின் வரவு–செலவுத் திட்ட நிலையினை அறியலாம்.
அட்டவணை — I
(1) !! 1950 – 51 (கணக்குகள்) (2) !! 1984 – 85 (திட்ட மதிப்பீடுகள்) (3)
அல்லது உபரி (+) || (+) 59.22 || (—) 2,598 + 273*
அல்லது உபரி (+) || (—) 78.14 || (+) 563
அட்டவணை — II
(ஒரு கண்ணோட்டம்)
இனம்
(1) !! 1983–84 வரவு–செலவுத் திட்ட மதிப்பீடு (2) !! 1983–84 திருத்த மதிப்பீடு
(3) !! 1984–85 வரவு–செலவுத் திட்ட மதிப்பீடு (4)
அல்லது பற்றாக்குறை (—) || — 1,825 || — 2,375 || — 2,598 + 273*
அல்லது பற்றாக்குறை (—) || + 239 || + 280 || + 563
பற்றாக்குறை (—) || — 1,586 || — 1,695 || — 1,762
::* வரவு–செலவுத் திட்டச் செயற்குறிப்புகளின் விளைவுகள்.
மாநிலங்களின் அதிகப்பற்றுக் கணக்கில் ரூ. 400 கோடி வரவு உள்ளிட்டது.
அட்டவணை — II — A
இந்திய அரசின் வரவு–செலவுத் திட்டத்தில் ஐந்தாண்டுத் திட்டச் செலவினத்தின் பங்கு
::{| class="wikitable"
(1) ||திட்டத்தில் சேராதது (2)||மொத்தம் (3)
தமிழ்நாடு அரசின் வரவு–செலவுத் திட்டமும் பிற மாநில அரசுகளின் வரவு–செலவுத் திட்டங்களும்:
இவை பெரும்பாலும் மைய அரசின் வரவு–செலவுத் திட்ட அமைப்பினைப் பின்பற்றியே அமைந்துள்ளன.
தமிழக அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இருப்பவை கீழ்க்கண்டவையாகும்.
::{|
மேற்கூறிய அறிக்கைகளுக்குக் கீழ்க்காணும் விரிவான அறிக்கைகள் உறுதுணையாக உள்ளன. இவையும் இதே தொகுதியில் அச்சிடப்படுகின்றன.
I தமிழ்நாட்டின் தொகு நிதி (Consolidated Fund of TamilNadu)
::{|
(அ) வரி வருவாய் (ஆ) வரி வருவாய் அல்லாத பிற வருவாய் (இ) உதவிக் கொடைகளும் உதவித் தொகைகளும்
(அ) பொதுவான பணிகள் (ஆ) சமூக – சமுதாயப் பணிகள் (இ) பொருளாதாரப் பணிகள் (ஈ) உதவிக் கொடைகளும் உதவித் தொகைகளும்.
(அ) பொதுவான பணிகளின் மூலதனக் கணக்கு.
(இ) பொருளாதாரப் பணிகளின் மூலதனக்கணக்கு.
(ஈ) பொதுக்கடன். (உ) கடன்களும் முன்பணங்களும். (ஊ) மாநிலங்களுக்கிடையிலான கடன் தீர்ப்பு ஏற்பாடு. (எ) எதிர்பாராச் செலவு நிதிக்கு மாற்றுவது.
(ஏ) சிறு சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி முதலியவை. (ஐ) சேம நிதிகள். (ஒ) அனாமத்தும் பல்வகையும். (ஓ) செலுத்தப்படுபவை (Remittances).
பொதுக்கணக்கு
வணிகர் ஒருவர் கருவூலத்திலும், வழக்குத் தொடரும் ஒருவர் நீதிமன்றத்திலும் ஒப்படைக்கும் தொகைகள் அரசுக்குச் சொந்தமானவையல்ல. ஆனால், அரசுப் பணத்தைப் போலவே இவற்றிற்கும் கணக்கு வைக்க வேண்டும். இதையொத்துப் பல்வகைக் கொடுக்கல் வாங்கல்கள், தொகு நிதியிலிருந்து வேறுபட்டுப் “பொதுக்கணக்கின்” (Public Account) கீழ் வைக்கப்படுகின்றன. இவை சாதாரண வங்கி அலுவல்கள் போன்றவையாதலால் இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டிய தேயையில்லை.
கணக்குத் தலைப்பு
பொதுவான பணிகள், சமூக–சமுதாய நலப்பணிகள், பொருளாதாரப் பணிகள் போன்ற பல்வேறு “பெருங் கணக்குத் தலைப்புகளின்” கீழ் (Major–Heads of Account) அரசின் வரவினங்களும் செலவினங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெருந்தலைப்பு ஒவ்வொன்றும் தனிப்பட்ட அலுவலைப் பொதுவாகக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, “நிலவரி”, “மருத்துவம்” முதலியன பெருந்தலைப்பின் கீழ் “உட் பெருந் தலைப்புகள்” ஆகும். அந்த உட்பெருந்தலைப்புகள், திட்டங்களின் கிளை வகைப்பாட்டினைக் குறிக்கின்றன. ஒவ்வொரு “பெருந் தலைப்பு” அல்லது “உட் பெருந் தலைப்பின்” கீழ் உள்ள “சிறு தலைப்புகள்” தனிப்பட்ட திட்டங்களைக் குறிப்பிடுகின்றன. சிறு தலைப்பின்கீழ் உள்ள “தொகுதி உள் தலைப்பு” திட்டத்தில் சேராத பணிகளை அல்லது மாநிலத் திட்டப் பணிகளின் கீழ்ப் பல்வேறு திட்டப் பணிகளின் தொகுதி வகைப்பாட்டினைக் குறிக்கிறது. ஒவ்வொரு “தொகுதி உள் தலைப்பின்கீழ்” உள்ள “உள்தலைப்புகள்” தனிப்பட்ட திட்டங்களைக் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு திட்டப் பணிக்கான செலவு விவரங்கள், “சம்பளங்கள்” “பயணச் செலவுகள்” முதலியன திட்டவட்டமான செலவு வகைப்பாட்டின் கீழ்ப் பற்றெழுதப்படுகின்றன. இவ்வாறு “பெருந் தலைப்பு” (Major Head), “சிறு தலைப்பு” (Minor Head), “தொகுதி உள் தலைப்பு” (Group Sub–Head), “உள் தலைப்பு” (Sub–Head), “நுணுக்கத் தலைப்பு” (Detailed Head) ஆகியவை வரவு–செலவுத் திட்டத்தில் அமைந்துள்ளன. இந்தியா முழுவதிலும் அரசுத்துறைக் கணக்குகளில், ஒரே மாதிரியான பெருந் தலைப்புகளும் சிறு தலைப்புகளும் பின்பற்றப்படுகின்றன.
மறு நிதி ஒதுக்கம்
சட்டமன்றம் அனுமதித்த கொடை வேண்டுகோளைப் பொறுத்தவரை, அரசு நிருவாகம் அந்த அளவுக்கு மேல் செலவிட முடியாது. கொடை வேண்டுகோளில் குறிப்பிடப்பட்ட தொகை பல செலவினங்களுக்கானது. நிருவாகத்தினர் அதனை மொத்தக் கொடைத் தொகைக்கு மேற்படாதவாறு பல்வேறு நுணுக்கப் பிரிவுகளுள் மாற்றியமைத்துக் கொள்ளலாம். கொடைக்குள் இவ்வாறு மாற்றிப் பகிர்ந்து கொள்வதற்கு “மறு நிதி ஒதுக்கம்” (Reappropriation) என்று பெயர். அனுமதிக்கப்பட்ட இனங்களும், சாட்டிய செலவினங்களும் ஒரே கொடை வேண்டுகோளின் கீழ் வந்தாலும் கூட அவற்றிடையே மறு நிதி ஒதுக்கத்திற்கு அனுமதி இல்லை.
அட்டவணை – III
கீழே காணும் அட்டவணையில் தமிழக அரசின் 1984–85–ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் சுருக்கமான முறையில் தரப்பட்டுள்ளது.
தமிழ் நாடு அரசின் வரவு–செலவுத் திட்டம் (1984–85–ஆம் நிதியாண்டின் திட்ட மதிப்பீடுகள் (Budget Estimates).
உரூபாய் கோடிக்கணக்கில் !! செலவுகள் உரூபாய் கோடிக்கணக்கில்
(வருவாய்க்கணக்கு + மூலதனக்கணக்கு) || 2,715.81 ||
(வருவாய்க் கணக்கு + மூலதனக்கணக்கு) || || 2,902.35
+114.35 || 2,112.38
வரவு—செலவுகளின் நிகர மொத்தம் (I + II + III) || || —72.19
::*வரவு—செலவுத் திட்டச் செயற் குறிப்புகளின் விளைவுகள் இதில் அடங்கவில்லை.
கீழ்க்காணும் அட்டவணையில் தமிழ்நாடு அரசின் வரவு–செலவுத் திட்டம், 1974–75–இல் இருந்ததை விட எந்த அளவுக்குத் தற்பொழுது வளர்ந்திருக்கிறது என்பதனைக் காட்டும் வகையில் சில புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன.
அட்டவணை IV தமிழக அரசின் வரவு–செலவுத் திட்டங்களிலிருந்து சில விவரங்கள்
(கணக்குகள்) !! 1977–78 (கணக்குகள்) !! 1984–85 (திட்ட மதிப்பீடுகள்)
வரவு–செலவுத் திட்டம் செயலாக்கப்படுவதைக் கண்காணித்தல்: அரசு நிருவாகம் பொதுப்பணம் செலவிடுவதை நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கண்காணிக்க வேண்டும். செலவு நடைமுறைகளைத் தொடர்ந்து கண்காணிக்க, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் சார்பில் யாரேனும் இருந்தால் மட்டுமே இந்த ஏற்பாடு திறம்பட இயங்க முடியும். இந்த அலுவலை இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர் (Comptroller and Auditor-General of India) செய்கிறார். இவர் இந்திய அரசியலமைப்பின் கீழ், அரசு நிருவாகத்திடமிருந்தும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களின் அதிகாரத்திலிருந்தும் விலகித் தனித்துப் பணியாற்றுகிறார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே பதிலளிக்கக் கடமைப்பட்டவர். இவரது பேராளராகிய மாநிலக் கணக்காய்வுத் தலைவர் (Accountant–General), சம்பந்தப்பட்ட சட்ட மன்றத்தால் ஒப்புதலளிக்கப்பட்ட ஆண்டு நிதிநிலை அறிக்கையையும் துணைநிதிநிலை அறிக்கையையும் வைத்துக் கண்காணிக்கிறார். அவரது மேற் பார்வையின்கீழ்ப் பணியாற்றும் அலுவலர்கள், எல்லா அரசுக் கருவூலங்களிலும் (Government Treasuries) இருந்துவரும் கணக்குகளைத் தொகுக்கிறார்கள். அரசின் எல்லாச் செலவுகளையும் அவர் கண்காணிக்கிறார். ஒவ்வொரு கொடை வேண்டுகோளுக்கும் சட்டமன்றம் அனுமதிக்கும் அளவுக்குமேல் செலவுகள் ஆகாதபடி அவர் கூர்ந்து கண்காணிக்கிறார்.
நிதியாண்டின் முடிவுக்குப் பின்னர், விரைவில் அந்த ஆண்டின் வரவு செலவுகளை ஆராய்ந்து, மாநிலக் கணக்காய்வுத் தலைவர் ஓர் அறிக்கை வெளியிடுகிறார். வரவு–செலவுத் திட்டத்தில் சட்டமன்றம் ஒப்புதலளித்த கொடைக்குமேல் செலவிடுவது, கொடைகளைச் செலவிடாமலேயே விட்டுவிடுவது, குறித்த காலத்திற்குள் வரிகளை வசூலிக்கத் தவறுவது, மற்றும் வீண்செலவு போன்ற நிதி முறைகேடுகளை ஆட்சியாளர்கள் செய்திருப்பார்களேயானால் அவற்றையும் அவர் எடுத்துக் காட்டுகிறார். “பொதுக் கணக்கு ஆய்வுக் குழு” (Public Accounts Committee) என்னும் நாடாளுமன்றம் அல்லது தொடர்புடைய சட்டமன்றக்குழு, இந்த அறிக்கையை ஆய்வு செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவர், இக்குழுவின் தலைவராக இருப்பது வழக்கம். இந்தக் குழுவின் ஆய்வுகளுக்கு மாநிலக் கணக்காய்வுத் தலைவர் உதவி செய்கிறார். அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மறுப்புகள் பற்றி அரசு நிருவாகம் கொடுக்கும் விளக்கங்களை இக்குழு ஆராய்கிறது. இந்தக் குழுவின் பரிந்துரைகள், சட்ட மன்றத்தின்முன் வைக்கப்படுகின்றன. இவ்வாறு, அரசினரின் செலவுகளை நாடாளு- மன்றம் அல்லது தொடர்புடைய மாநிலச்சட்ட மன்றம் தக்க அளவுக்குக் கண்காணித்து வருகிறது.
அயல்நாடுகளின் அரசாங்க வரவு–செலவுத் திட்டங்கள்
இந்தியாவின் வரவு–செலவுத் திட்டம் பெரும்பாலும் இங்கிலாந்து நாட்டுத் திட்டத்தினைப் பின்பற்றி அமைக்கப்பட்டதாகும். இங்கிலாந்து நாட்டின் நிதியாண்டும் ஏப்பிரல் முதல் நாள்தான் தொடங்குகிறது. வரவு செலவுத் திட்ட முறையே முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில்தான் உருவானது. அம்முறை, மற்ற அயல்நாடுகளில் தத்தம் தேவைக்கேற்ற மாற்றங்களுடன் பின்பற்றப்படுகிறது.
பிரான்சு நாட்டின் நிதியாண்டு, சனவரித் திங்கள் முதல் நாள் தொடங்குகிறது. அந்நாட்டுப் பேராளர்களின் மன்றத்தில் வரவு–செலவுத் திட்டத்தின் வரைவு எந்த உரையுமின்றி வைக்கப்படுகிறது. மன்றத்தால் ஒப்புதலளிக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டம் பேரவையின் (Senate) ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. சோவியத்து நாட்டின் நிதியாண்டும் சனவரித் திங்கள் முதல் நாள்தான் தொடங்குகிறது. நாட்டின் பொருளாதாரத் திட்டத்துடன் முழுதும் பொருந்தும் வகையில் ஆண்டின் வரவு-செலவுத் திட்டம் உருவாக்கப்படுகிறது. திட்ட மதிப்பீடுகளில் வருவாய்ச் செலவினம், மூலதனச் செலவினம் என்று திட்ட வட்டமான பிரிவுகள் இல்லை. அமெரிக்க நாட்டின் நிதியாண்டு சூலைத் திங்கள் முதல்நாள் தொடங்குகிறது. குடியரசுத் தலைவரின் கீழ் இயங்கும் வரவு-செலவுத் திட்ட இயக்ககம் (Bureau of the Budget), வரவு–செலவுத் திட்டத்தினை உருவாக்கும் பணியினை மேற்கொள்கிறது. அமெரிக்க நாட்டின் வரவு–செலவுத் திட்டம் குடியரசுத் தலைவரின் உரையுடன் சனவரித் திங்களில் அமெரிக்க நாட்டின் மக்கள் பேரவைக்கு (Congress) அனுப்பப்படுகிறது. அதனுடைய ஒப்புதலுக்குப் பின் செயலாக்கப்படுகிறதுதே.ந.
துணை நூல்கள்
Bhargava, R.N., “Indian Public Finance”, Orient Longmans, Bombay, 1970.
Lal, G.S., “Financial Administration in India”, H.P.J. Kapoor, Delhi, 1969.
Premchand, A., “Control of Public Expenditure in India”, Allied Publishers, Bombay, 1970.
Sonachalam, Prof. K S., “Tamil Nadu Finance in the Planning Era”, Economics Department, University of Madras, 1973.
Venkataraman, M. “States Finances in India”, George Allen and Unwin, London, 1968.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 659)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r858vgch/
தமிழ்“அரசாங்க வரவு-செலவுத் திட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r858vgch/APA
Oliyon Research. (2026). அரசாங்க வரவு-செலவுத் திட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r858vgch/MLA
"அரசாங்க வரவு-செலவுத் திட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r858vgch/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment