1898இல் கேமில்லோ கோல்கை என்னும் இத்தாலி நாட்டவர், ஆந்தையின் சிறு மூளையில் உள்ள நரம்புச் செல்களில் ஒரு வகைச் சிறப்பு உறுப்பு இருப்பதைக் கண்டறிந்து, அதற்கு உள் வலைக் கருவி எனப் பெயரிட்டார். பின்னர், பல வகைச் செல்களிலும், இதைக் கண்ட அறிவியலார், இதற்குக் கோல்கை உறுப்பு (golgi body) அல்லது கோல்கைக் கூட்டு அமைப்பு (golgi complex) என்று பெயரிட்டனர். இவ்வமைப்பிற்கு, வேறு பல பெயர்களும் உள்ளன. கோல்கை அமைப்பை ஆஸ்மியம், வெள்ளி போன்ற உலோகங்களின் உப்புகளைச் செல்லின் உட்புகச் செய்து, தோன்றச் செய்யலாம். கோல்கை உறுப்பு என்று ஒன்று உள்ளதா அல்லது அது செயற்கையாக வேதிப் பொருள்களின் சேர்க்கையால் உண்டானதா என்னும் ஐயம் எழுந்தது. 1963இல் கோல்கை உறுப்பு செல்லின் ஓர் அமைப்பே என ஒப்புக் கொள்ளப் பட்டது. சுரப்பிகளின் செல்கள், நரம்புச் செல்கள் ஆகியவற்றில் கோல்கை அமைப்பைத் தெளிவாகக் காண முடியும். ஆனால், உயிருள்ள செல்களை நுண்ணோக்கியில் நோக்கும் போது, கோல்கை உறுப்பின் வழக்கமான தோற்றம் தெரியாது. முன் கூறிய ஆஸ்மிய, வெள்ளி உட்புகச் செய்த செல்களே இதன் வடிவத்தைக் காட்ட உதவும். சுரப்புச் செல்களிலும், முதுகெலும்புள்ள விலங்குகளின் தைராய்டு, கணையம், ஈரல் ஆகிய உறுப்புகளின் செல்களிலும், கோல்கை உறுப்பைச் சிறப்பாகக் காண இயலும், தைராய்டு, கணையம் போன்ற சுரப்புச் செல்களின் கோல்கை உறுப்பு, நியூக்ளியசின் ஒரு புறமாக நியூக்ளியசிற்கும், செல்லின் ஒரு முனைக்கும் இடையில் இருக்கும். நரம்புச் செல்கள், ஈரல் செல்கள் ஆகியவற்றில், கோல்கை உறுப்பு சைட்டோப்பிளாசத்தில் நியூக்ளியசைச் சுற்றிப் பரவிக் கிடக்கும். முதுகெலும்பற்றவையின் செல்களில், கோல்கை உறுப்பு, தனித் தனியாக அமைந்திருக்கும்; இவ்வாறே, தாவரச் செல்களிலும் தனித் தனியாகவே இருக்கும்; இவற்றை, டிக்டியோசோம்கள் எனலாம். முதுகெலும்புள்ளவற்றின், நரம்புச் செல்களில் கோல்கை உறுப்பு வலைப் பின்னலாக நியூக்ளியசைச் சுற்றி இருப்பது குறிப்பிடத் தக்கது. ஒளி நுண்ணோக்கியில் பார்க்கும் போது, பல்வேறு தோற்றங்களில் காணப் படும் கோல்கை உறுப்பு, எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் பார்க்கும் போது, அடிப்படையான சில அமைப்பைக் கொண்ட அதிக வேறுபாடற்ற செல் உறுப்பாகத் தோன்றும். ஒளி நுண்ணோக்கியில் தோன்றும் வடிவங்கள். கோல்கை உறுப்பு ஒழுங்கற்ற வடிவுள்ள சிறு, சிறு தட்டையான துணுக்குகள், தகடுகள் ஆகியவற்றால் ஆனது போலக் காணப்படும். சிறு உருண்டை வடிவான குமிழ், பிறைச் சந்திரன் அல்லது வளைந்த வாழைப் பழம் போன்ற வடிவம், வளையம் போன்ற வட்ட வடிவம் எனப் பல்வேறு உருவங்களின் தொகுதியாக இருக்கும். ஒவ்வொரு கோல்கை வடிவத்திலும், ஆழ்ந்த கருமையான ஆஸ்மியம்–ஏற்கும் அல்லது வெள்ளி–ஏற்கும் (பொதுவில் நிறம் ஏற்கும்) வெளிப் பகுதியும், இலேசான சாம்பல் நிறம் அல்லது நிறமற்ற மேற்சொன்ன இரு உலோகங்களையும் ஏற்காத உட்பகுதியும் இருக்கும். இவற்றை முறையே, கோல்கை வெளிப் பகுதி, கோல்கை உட் பகுதி எனலாம். கோல்கை உறுப்பு செல்லின் வெவ்வேறு செயல் நிலைகளில் வெவ்வேறான தோற்றம் கொண்டிருக்கும். எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் பார்க்கும் போது, பெரும்பாலும் அனைத்துச் செல்களிலும், கோல்கை உறுப்பு சற்றேறக் குறைய, ஒரே தோற்றம் பெற்றிருக்கும். அதன் பகுதிகளாக, அருகருகே இரண்டு சவ்வுகளும், இடையில் ஓர் இடைவெளியும் கொண்ட தட்டையான கோணிப் பை போன்ற வளைவான பைகள் (cisternae), ஏறத் தாழ 60 நானோ மீட்டர் அளவுள்ள குமிழ்கள் மற்றும் சில குழாய்கள், சற்றுப் பெரிய குமிழ்கள் (vacuoles) போன்றவை காணப் படும். பெரிய குமிழ்களில், வடிவமில்லாத அல்லது துகள் போன்ற பொருள் நிரம்பியிருக்கும். சிறு குமிழ்களுக்கும், பெரிய குமிழ்களுக்கும் சவ்வாலான சுவர் ஒன்று இருக்கும். செல்லின் சவ்வாலான பிற பகுதிகளினின்றும் கோல்கை உறுப்பு, தெளிவான வேற்றுமையுடையது. அதைச் சுற்றியோ, அருகிலோ கிளைக்கோஜன் துணுக்குகள், ரிபோசோம்கள், மைட்டோகாண்டிரியங்கள் போன்றவை இருக்கா. கோல்கை உறுப்பின் தட்டையான பைகள் இணையாக, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட சற்றுக் குழிவான தட்டுகள் போல இருக்கும். ஒவ்வொரு தட்டுப் போன்ற பைக்கும் ஒரு குழிவான பரப்பும், ஒரு குவிந்த பரப்பும் உண்டு. அடுத்தடுத்த இரு பைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 20–30 நா.மீ. இருக்கும். பெரும்பாலான விலங்குகள், தாவரங்களின் செல்களில் ஓர் அடுக்கில் 3–7 பைகள் இருக்கும். சில வகைப் பாசிகளில் 10–20 பைகள் ஓர் அடுக்கில் இருப்பதுண்டு. கோல்கைப் பை அடுக்கு. ஓர் அடுக்குப் பையை ஒரு டிக்டியோசோம் எனலாம். நியூக்ளியஸ் சவ்வின் அருகிலுள்ள குவிந்த கோல்கைப் பையை முகம் அல்லது உண்டாகும் முகம் எனலாம். நியூக்ளியசிலிருந்து அப்பாலுள்ள குழிந்த பை மற்றும் பெரிய சுரப்பு நிறைந்த குமிழ்கள் ஆகியவை உள்ள பகுதியைத் தொலைவில் உள்ள முகம் அல்லது முதிர் முகம் எனலாம். சிறு, சிறு உருண்டையான குமிழ்கள் கோல்கையில் உண்டாகும் முகத்தின் அருகில் இருக்கும்; எண்டோப்பிளாச வலையிலிருந்து மேற்கூறிய சிறு குமிழ்கள் பிரிந்து நகர்ந்து, பின்னர், அவற்றின் சேர்க்கையால், கோல்கைப் பகுதியில், அதன் உண்டாகும் முகம் ஏற்படுவதால், இக்குமிழ்களை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்லும் குமிழ்கள் எனலாம். முதிர் முகப் பகுதியிலிருந்து, சுரப்புக் குமிழ்கள் தொடர்ச்சியாக உண்டாக்கப் பட்டு விடுவிக்கப் படுகின்றன. முதிர் முகத்துக்கு அண்மையில், அமில பாஸ்ஃபேட்டேஸ் நிறைந்த பை ஒன்று இருக்கும். இதை GERL என்று கூறுவர். லைசோசோம்களை உற்பத்தி செய்யும். ரிபோசோம்கள் இல்லாத எண்டோப்பிளாச வலை–கோல்கை உறுப்பின் அருகே உள்ளது என்பதை GERL என்னும் பெயர்ச் சுருக்கம் குறிக்கிறது. கோல்கை உறுப்பைச் சேர்ந்த பெரிய குமிழ்கள் கூட GERL உண்டாக்குவதாக, இப்போது கண்டு பிடித்துள்ளனர். எண்டோப்பிளாச வலையிலிருந்து, கோல்கை உறுப்பு, பிளாஸ்மா சவ்வு ஆகியவற்றின் சவ்வுகளில் தடிமன் கூடிக் கொண்டே வருவது சிறப்புத் தன்மையாகும். நியூக்ளியஸ் சவ்லின் தடிமன் 65 நா.மீ. எனில், எண்டோப்பிளாச வளையின் சவ்வும் 65 நா.மீட்டரும், இரண்டாம் பை 68 நா. மீட்டரும், மூன்றாம் பை 72 நா. மீட்டரும், நான்கு, ஐந்தாம் பைகளின் சவ்வு 80 நா.மீட்டரும் தடிமன் கொண்டிருக்கும்., சுரப்புக் குமிழ்களின் சுவர் 83 நா.மீ. தடிமனுள்ள சவ்வு ஆகும். பிளாஸ்மா சவ்வு 85 நா.மீ, தடிமனிருக்கும். சுரப்புக் குமிழ்களின் சுவர் 83 நா.மீட்டர் தடிமனுள்ள சவ்வு ஆகும். பிளாஸ்மா சவ்வுப் பகுதியிலிருந்து தோன்றி, சிறிது சிறிதாக நகர்ந்து, வெவ்வேறு செல் உறுப்பாக மாறி, இறுதியில் பிளாஸ்மா சவ்வாக மாறுவதையும், அதன் தடிமன் அதிகரிப்பதையும் அறியலாம். எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் காணும் போது, கோல்கை உறுப்பின் தோற்றம் படத்திலுள்ளவாறு காணப் படும். பைகள் அடுக்காக உள்ளமையையும், ஒவ்வொரு பையும் இரண்டுச் சவ்வைப் பெற்றுள்ளமையையும், பைகளின் விளிம்புகள் பருத்து, உருண்டை வடிவில் உள்ளமையையும், இவை தனியாகப் பிரிந்து, குமிழ்களாகி உள்ளமையையும் காணலாம். சில பெரிய குமிழ்கள், கோல்கையின் குளிந்த முதிர் முகத்தின் அருகில் காணப் படுகின்றன. கோல்கை உறுப்பின் செயல்கள். கோல்கைப் பைகள் வேதிப் பண்பில் தமக்குள் வேறுபடுகின்றன. எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம், இவ்வேறுபாடுகள் காட்டப் படுகின்றன. உண்டாகும் முகத்தில் உள்ள பைகளை, ஆஸ்மியம் மிகுதியாகப் பற்றிக் கொண்டு, எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் தெளிவாகக் காண உதவுகிறது. அதே போல, தயமின் பைரோபாஸ்ஃபேட்டேஸ் என்னும் நொதி முதிர் முகப் பைகளில் உள்ளமையைக் காணலாம். தைராய்டு செல்களிலும், வேறு சிலவற்றிலும் ஆராய்ந்த போது, கோல்கைப் பைகளின் வழியாகப் புரோட்டின் சுரப்புச் செல்லும் போது, முதிர் முகப் பகுதியில், அதனுடன் கார்போஹைட்ரேட்டுகள் சேர்க்கப் படுவதை அறிய முடிந்தது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கிளாட் என்பார், லிப்போப் புரதங்கள் உண்டாக்கப் பட்டு எடுத்துச் செல்லப் படுவதை ஆராய்ந்த போது, முதலில் இத்துகள்கள் தோன்றும் விதம் தெளிவாயிற்று. லிப்போப் புரதங்களின் புரதப் பகுதி ரிபோசோம்கள் இணைந்த எண்டோப்பிளாச வலையால் உருவாக்கப் படும். டிரைகிளிசரைடுகள் எனப் படும் கொழுப்புப் பொருள் ரிபோசோம்களற்ற எண்டோப்பிளாச வலையால் உண்டாக்கப் பட்டு, இரண்டும் இணைகின்றன. இணைந்த லிப்போப்புரதம் கோல்கை உறுப்பினுள் செல்கிறது. நீண்ட நேரத்துக்குப் பிறகு, லிப்போப் புரதம் கோல்கைப் பைகளின் ஓரங்களின் விரிவடைந்த பகுதிகளிலிருந்து உண்டாகும் பெரிய குமிழ்களில் நிறைவதைக் கிளாட் கண்டார். அதன் பின்னர், இக்குமிழ்கள் கோல்கைப் பைகளினின்றும் பிரிந்து சுரப்புக் குமிழ்களாகின்றன. செல் வேதியியல். மைட்டோகாண்டிரியா, எண்டோப்பிளாச வலை ஆகியவற்றை விடக் கோல்கை உறுப்பு ஒப்படர்த்தி குறைந்ததாகும். எலியின் ஈரல் செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கோல்கை உறுப்பு 60% புரதத்தாலும், 40% கொழுப்பாலும் ஆனது. கூழ் மின் சவ்வூடு பரவல் (gel electrophoresis) மூலம், புரதங்களைப் பிரித்தெடுத்து ஆராயும் போது, எண்டோப்பிளாச வலையிலும், கோல்கை உறுப்பிலும், பொதுவான சில புரதங்கள் உள்ளமை தெரிய வந்தது. ஆனால், கோல்கை உறுப்பில் புரதப் பகுதிகள் குறைவாகக் காணப் படுகின்றன. கோல்கை உறுப்பின் பாஸ்ஃபோலிப்பிடுகள் எண்டோப்பிளாச வலையுடையவற்றுக்கும், பிளாஸ்மா சவ்வுடையவற்றுக்கும் இடைப்பட்ட அமைப்புடையன. கோல்கை உறுப்புக்கே உரிய நொதி டி.பி.பியேஸ் ஆகும். மேலும், சில கிளைக்கோ டிரான்ஸ்பரேஸ்களும் உள்ளன; இவை, புரதங்களுடன், சில கார்போஹைட்ரேட்டுகளை இணைக்க உதவுகின்றன. மூல லைசோசோம்கள் கோல்கை உறுப்பிலிருந்து தோன்றுவதால், இவ்வுறுப்பில் அமில பாஸ்ஃபேட்டேசும், லைசோசோமில் உள்ள பிற நொதிகளும் உள்ளன. கோல்கை உறுப்பின் பணி. சுரப்பதே கோல்கை உறுப்பின் சிறப்பான பணி ஆகும். செல்லின் பெரிய மூலக் கூறுகள் உண்டாக்கப் படுவதும், எடுத்துச் செல்லப் படுவதும், வெளியாக்கப் படுவதுமான செயல்களில் எண்டோப்பிளாச வலையும், கோல்கை உறுப்பும், நேரடியான தொடர்புடையன. வேறோரிடத்தில் ('எண்டோப்பிளாச வலையில்) உருவாக்கப் பட்ட பொருள்கள், தனித் தனியாகப் பிரிக்கப் பட்டு, மாற்றம் அடைவதற்கேற்ற, செல் தடுப்பு அறைகளாகக் கோல்கை உறுப்பின் பைகள் உள்ளன. மாற்றமடைந்த பைகள் கோல்கை உறுப்பின் பைகளிலிருந்து குமிழ்களாக விடுவிக்கப் படுகின்றன. இவ்வாறு கோல்கை உறுப்பு, செல்லின் சுரப்புத் தயாரிப்புகளைச் செம்மையாகச் சேமிக்க அல்லது வெளியே அனுப்ப உதவும் சவ்வாலான தடுப்பு அறையாக விளங்குகிறது. GERL உம் லைசோசோம் உண்டாதலும், சுரப்புக் குமிழ்களுக்கு ஒரு வெளிச் சவ்வு தந்து, உருப் பெறச் செய்வது மட்டுமன்றி, மூல லைசோசோம்கள் உண்டாவதிலும் கோல்கை உறுப்பு தொடர்புடையது. சுரப்புக் குமிழ்கள் உண்டாவதைப் போலவே, அதே வரிசையில் நொதிகளின் உற்பத்தி, மொத்தமாதல், எடுத்துச் செல்லப் படுதல், அடைக்கப் படுதல் ஆகியன மூல லைசோசோம்கள் உருப் பெறும் போதும் நிகழ்கின்றன. லைசோசோமின் பெரும்பாலான நொதிகள், கிளைக்கோப் புரதங்களாக உள்ளன; எனவே, கிளைக்கோசை ஆக்குதலில் கோல்கை உறுப்பு பங்கேற்கிறது என்பது தெளிவாகிறது. கோல்கை உறுப்பின் முதிர் முகத்தில் GERL இருக்கிறது. லைசோசோமுக்குரிய அமில பாஸ்ஃபேட்டேஸ் GERL இல் உள்ளமையால், லைசோசோம் உருவாதலில், இப்பகுதி அடிப்படையாகக் கருதப் படுகிறது. நோவிக்காஃப் என்பார், கறுப்பு நிறத்தினை உண்டாக்கும் மெலானின் துகள்கள் உண்டாதல், நாளமுள்ள மற்றும் நாளமில்லாத சுரப்பிகளின் சுரப்புப் பொருள்களைப் பக்குவப் படுத்திக் குமிழ்களில் அடைத்தல், கொழுப்பின் ஆக்கச் சிதை மாற்றம் ஆகியவற்றில் கோல்கை உறுப்பிற்கும் GERLக்கும் தொடர்பு உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். புரதங்கள், கொழுப்புகள் ஆகியவற்றைக் கிளைக்கோசைடு ஆக்குதல். கொழுப்புப் பொருளைக் கிளைக்கோ கொழுப்புகளாகவும், புரதங்களைக் கிளைக்கோப் புரதங்களாகவும் ஆக்குவதற்கான கிளைக்கோசிடேஸ் என்னும் நொதி கோல்கை உறுப்பில் உள்ளமையால், அது மேற்காணுமாறு கார்போஹைட்ரேட்டுகளை இணைக்கிறது. பாலி சாக்கரைடுகளை உற்பத்தி செய்தல். குளூக்கோசிலிருந்தோ, காலக்டோசிலிருந்தோ, இவ்விரண்டிலுமிருந்தோ, பாலிசாக்கரைடுகள் எனப் படும் பெரிய மூலக் கூறுகளைக் கோல்கை உறுப்பு உண்டாக்குகிறது. குடலின் மதுக் கிண்ண வடிவச் செல்கள் போன்றவற்றில், சர்க்கரைகளைச் சல்ஃபேட்டாக்குவதையும், கோல்கை உறுப்புச் செய்கிறது. விந்துச் செல்லின் நுனிப் பகுதியில் உள்ள அக்ரோசோம் என்பது கோல்கை உறுப்பால் உண்டாக்கப் படுகிறது. ஹைட்ரோசோவாவின் கொட்டும் செல்கள் கோல்கை உறுப்பால் உண்டாக்கப் பட்டவையாகும். கோல்கை உறுப்பும் புற்று நோய்ச் செல்களும். ஸ்ஃபிங்கோ கொழுப்புகளைக் கிளைக்கோசைடாக ஆக்கும் நொதிகள், கோல்கை உறுப்பில் செறிந்துள்ளன. புற்று நோய்ச் செல்லின் மேற்புறச் சவ்வில் கிளைக்கோ ஸ்ஃபிங்கோ கொழுப்புகள் இழக்கப் படுவதால், சில மாற்றங்கள் உள்ளன. கோல்கை உறுப்பில் உள்ள கிளைக்கோ டிரான்ஸ்ஃபரேஸ்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை குறைவாக இருப்பதே இம்மாற்றங்களுக்குக் காரணம் ஆகும். செல்லில் புற்று நோய்ப் பண்புகள் வளர்வதற்கும், அதன் மேற்புறப் பரப்பில் உள்ள கிளைக்கோப் புரதங்கள், கிளைக்கோஸ்ஃபிங்கோ கொழுப்புகள் ஆகியவற்றில் ஏற்படும் மாறுபாடுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதில் இப்போது மிகுந்த கவனம் செலுத்தப் படுகிறது. கோல்கையின் தோற்றம். எண்டோப்பிளாச வலையினின்றும், கோல்கை உறுப்பின் சவ்வுகள் தோன்றுவதாக இப்போது கருதப் படுகிறது. எண்டோப்பிளாச வலையினின்றும் தோன்றும் சிறு, சிறு குமிழ்கள் நகர்ந்து சென்று, ஒரு வரிசையாக அமைந்து, ஒன்றாகச் சேர்ந்து ஒரு பையை உண்டாக்குகின்றன. மேன்மேலும் இப்பைகள் தோன்றத் தோன்ற, முதலில் உண்டான பை முன்னோக்கித் தள்ளப் படுகிறது. இவ்விதம் அடுக்கடுக்காகப் பைகள் உண்டாகி, டிக்டியோசோமாக உருவெடுக்கின்றன, முதிர் முகத்தில் உள்ள பை, சிறு சிறு குமிழ்களாகப் பிரிந்து சுரப்புக் குமிழ்களாக மாறும். 1957இல் கிராஸ் என்பாரால் வெளியிடப் பெற்ற இக்கருத்து இப்போது வலிமை பெற்றுள்ளது. —சோம. பேச்சிமுத்து