இந்தியாவின் வடபாகத்திலுள்ள இலடாக்கு (Ladakh) பகுதியில் வாழும் மக்களாவர். சம்மு–காசுமீர் (Jammu and Kashmir) மாநிலத்தின் கிழக்குப் பகுதி மாவட்டமான இலடாக்கு உலகத்தின் மிக உயர்ந்த பகுதியாகும். இலடாக்கின் வடபகுதி சின்கியாங்கு (Sinkiang) என்னும் சீனப் பகுதியாலும் கிழக்குப் பகுதி திபேத்து (Tibet) எனும் சீனப் பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. 1,17,000 சதுர கி.மீ. பரப்புடைய இலடாக்குப் பகுதி உயர்ந்த சமவெளிகளையும் ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்டிருக்கிறது. இலடாக்கின் கிழக்குப் பகுதி உயர்ந்த சமவெளிகள் நிறைந்த பகுதியாகவும் மேற்காகச் செல்லச் செல்லச் சமவெளிகளற்ற பகுதியாகவும் காணப்படுகிறது. 13,500 அடி உயரமுள்ள தென்கிழக்கு இலடாக்குப் பகுதி பெரிய உவர் ஏரிகளால் சூழப்பட்டுள்ளது. சிந்து, சசுகர் (Zaskar) ஆகிய ஆறுகள் இலடாக்குப் பகுதியில் பாயும் முதன்மையான ஆறுகளாகும். வட பாகிசுத்தானின் சையாக்கு ஆற்றின் (Shyok river) முகப்பிலிருந்து சீனாவின் திபேத்துப் பகுதி வரை நீண்டு உயர்ந்து நிற்கும் காரகோரம் (Karakoram) மலைத் தொடர் இலடாக்குப் பகுதி வழியாகச் செல்கிறது. இப்பகுதி இலடாக்கு மலைத்தொடர் என்று கூறப்படுகிறது. இமயத்தின் பனிப் பகுதியில் வாழும் இலடாக்கியரைப் பற்றிய செய்திகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டன. சீன யாத்திரிகரான பா–கியான் (Fa–Hian) இப்பகுதிக்கு கி.பி. 400–இல் சென்றபோது இம்மக்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து வெளியிட்டார். இலடாக்குப் பகுதியில் வாழும் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் பண்பாட்டாலும் இனப்பண்பாலும் திபேத்து நாட்டவரையே பெரிதும் ஒத்திருக்கின்றனர். இலடாக்கியர் ஒரு படித்தான மக்களினமாகக் காணப்பட்டிலர். ஆரிய மொழி பேசும் தார்து (Dard) மக்களே இப்பகுதியில் குடியேறிய மிகப் பழமையான மக்களாவர். தார்து மக்கள் குழுவினர் புரோக்கா (Brokpa) என்ற வட்டாரப் பெயர்கொண்ட சித்ரல் (Chitral) மக்களுடன் தொடர்புடையவர்கள். இலடாக்குப் பகுதியில் வாழும் மற்றொரு சிறுபான்மை இனத்தவர் மான் (Mon) எனப்படுவர். இவர்கள் காசுமீரத்திலிருந்து முற்காலத்தில் குடியேறிய புத்த மதத்தினராவர். உடலமைப்பாலும் பண்பாட்டாலும் இன்றைய இலடாக்கியர் மங்கோலிய இனத் திபேத்து நாட்டவராகவே காணப்படுகின்றனர். இலடாக்கியர் நீண்ட கம்பளி ஆடைகளையே விரும்பி அணிகின்றனர். இலடாக்கியரின் வாழிடப் பகுதி சாய்வு குறைந்த மலைப் பகுதியில் அமைந்திருக்கின்றது. தட்டையான கூரை அமைப்புடைய இவர்கள் வீடுகள் மூன்று தளம் வரை கட்டப்பட்டுள்ளன. விறகுகள் எளிதில் கிடைக்காத இப்பகுதியில் வீடுகளில் எண்ணெய் விளக்குகளும் சாணத்தை எரிப்பதிலிருந்து கிடைக்கும் வெளிச்சமுமே ஒளி கொடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இலடாக்கின் காலநிலை தானிய வகைகளை விளைவிக்கச் சாதகமாக உள்ளது. மழை குறைந்த இப்பகுதியில் ஆற்று நீரை உபயோகித்துப் பார்லி, கோதுமை, பட்டாணி, முள்ளங்கி, கடுகு, எண்ணெய்வித்துகள் போன்றவற்றைப் பயிர் செய்கின்றனர். இலடாக்கியரின் சமூகத்தில் பயிர்த்தொழிலில் இருபாலரிடத்தும் தொழிற் பகுப்புக் காணப்படுகிறது. ஆண்கள் நிலத்தை உழுதலில் ஈடுபடுவர். எஞ்சிய பணிகளைப் பெண்களே மேற்கொள்வர். ஆண்கள் வாணிகம் செய்ய வெளியே செல்லும்போது பெண்களே பெரும்பான்மையான பணிகளைக் கண்காணிக்கின்றனர். ஒவ்வொரு குடியானவரின் சொத்தின் மதிப்பு அவர் கொண்டிருக்கும் குதிரைகள், ஆடுகள், எருதுகள் போன்றவற்றின் எண்ணிக்கையையும், தானியக் களஞ்சியத்தின் அள- வினையும் பொறுத்து அமையும், நிலத்தில் வேலை செய்வோருக்குக் கூலியாகப் பணம் தருவது மிகக் குறைவேயாகும். கூலி பெரும்பாலும் தானியமாகவே கொடுக்கப்படுகிறது. உழைப்புப் பரிமாற்றம் (Man–power exchange) இலடாக்கியரின் உழுதல் பண்பாட்டின் ஒரு சிறப்புக் கூறாகும். வேளாண்மை, வாணிகம் முதலிய தொழில்கள் போன்றே ஆயர் தொழிலும் இலடாக்கியருக்கு முதன்மையானதாகும். உப்பு, கம்பளி, தேயிலை, கால்நடை, தானிய வகைகள் போன்ற வாணிகம் செய்கின்றனர். பெண்கள் பொருளாதாரம், பாலுறவு போன்றவற்றில் சுதந்திரமும் மிகுதியான உரிமையும் பெற்றுள்ளனர். அவர்கள் தாமாக வாணிகம் செய்து தமக்கெனத் தனியாகப் பணம் சேர்த்து வைக்கும் உரிமையைக் கொண்டுள்ளமையும், குடும்பச் செயற்பாடுகளைத் தனித்துக் கவனிக்கும் பண்புகளும் நோக்கத்தக்கது. சொத்துரிமை ஆண்கள் வழியே செல்லும். ஆண் குழந்தைகளில்லாக் குடும்பங்களில் பெண்ணின் கணவனைப் பெண் வீட்டிற்கே அழைத்து வாழ்க்கை நடத்துவர். இவ்வகையான அமைப்பில் பெண்களே சொத்துரிமையைப் பெறுவர். பெரும்பான்மையான பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைக் கொண்டிருக்கின்றனர். மூத்தவரின் மனைவியுடன் இளைய சகோதரர்கள் உடலுறவு கொண்டாலும் பிறக்கும் குழந்தைக்குத் தந்தை உரிமை மூத்தவனுக்கே கிடைக்கும். இலடாக்கின் மக்கள் தொகையில் சம விழுக்காடு ஆண்கள் புத்தத் துறவிகளாக மடத்திலேயே வாழ்கின்றனர். இவர்கள் கொம்பா (Gompa) எனப்படுகின்றனர். இவர்களுள் பெரும்பான்மையோர் நையிங்மப்பா (Nyingmapa) பிரிவினைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிவப்பு ஆடை அணிவதால் சிவப்புப் பிரிவினர் (Red Sect) என்றும் கூறப்படுவர். சிறுபான்மையான எண்ணிக்கையினர் செலுக்பா (Gelugpa) அல்லது மஞ்சள் பிரிவினர் (Yellow Sect) என்று கூறப்படுவர். புத்த சமயத்தைச் சார்ந்துள்ள இலடாக்கியர் திபேத்து மொழியின் கிளைமொழியைப் பேசி வருகின்றனர்.