நடு ஐரோப்பாவிலுள்ள தான்யூபு ஆற்றின் துணை ஆறுகளுள் ஒன்று. சுவிட்சர்லாந்தில் கிராபவுண்டன் (Graubunden) மாநிலத்திலுள்ள இலோங்கினோ (Longhino) ஏரியிலிருந்து தொடங்கி, வேகமாகப் பாய்ந்தோடும் மலையருவியாக ஓடும் இந்த ஆறு, வடகிழக்காக ஓடிச் சிறுசிறு ஏரிகளாக உருமாறிவிடுகிறது. சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க நகரங்களுள் ஒன்றான புனித மார்டிசு (St. Mortiz), இன் ஆற்றின் ஏரிக்கரை ஒன்றின் அமைந்துள்ளது. இன் ஆறு (Inn River) வடகிழக்காகப் பாய்ந்து ஆசுத்திரியாவில் நுழைந்து, இன்சுபர்கு (Innsburg), குப்சுடீன் (Kufstein) போன்ற நகரங்களை ஒட்டினாற்போல் ஓடுகிறது. பின்னர்ச் செருமனியில் பவேரிய-ஆல்ப்சு (Bavarian Alps) மலைத்தொடர் வழியாகப் பாய்ந்து, முல்டார்பு (Muhldorf) என்னுமிடத்திற்கருகில் கிழக்காகத் திரும்பி, பாசா (Passau) என்னும் ஊருக்கு அருகில் தான்யூபு (Danube) ஆற்றுடன் இணைகிறது. இந்த ஆறு ஏறத்தாழ 515 கி.மீ. நீளமுடையது. வேகமாகப் பாய்ந்து ஓடி வருவதால் இந்த ஆறு கப்பல் போக்குவரத்திற்குப் பயனற்றது. இவ்வாற்றின் வடபகுதிகளில் பல நீர் மின் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆற்றின் தாழ்நிலப் பள்ளத்தாக்குகள் அகன்றும் செழித்துமுள்ளன.