அநுபூதி நெறிக் கொள்கை
anupūti neṟik koḷkai
அநுபூதி என்பது நேரடிக் கடவுள் உணர்வு, சாதாரணமாக நம்முடைய பட்டறிவுகள் புலன் மூலம் கிடைப்பவை.
அநுபூதி என்பது நேரடிக் கடவுள் உணர்வு, சாதாரணமாக நம்முடைய பட்டறிவுகள் புலன் மூலம் கிடைப்பவை. அறிவு புலன் வழியாகவும் தருக்க முறைகளாலும் கிடைக்கிறது. ஆனால் அநுபூதி நிலை புலன் கடந்த அனுபவம். அநுபூதிமான்கள் இறைவனை நேரில் கண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். உன்னத நிலையிலின்றும் அறிந்து வெளியிடப்பட்ட உண்மைகள் அநுபூதி நெறிக்கொள்ளக (Mysticism) என்று கூறப்படுகின்றன.
எல்லாச் சமயத்தைச் சார்ந்த அநுபூதியாளர்களும் வெளியிடுகின்ற கருத்துகளில் சில அடிப்படை ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை: (1) உலகில் காணப்படும் பிரிவுகளும் வேறுபாடுகளும் மெய்யல்ல; உலகம் பாகுபாடுகளற்ற ஒருமைப்பாடுடையது. (2) தீமை நிலையானதன்று; அது ஒரு மாயை. (3) காலமும் ஒரு மாயையே, மெய்ப்பொருள், இடம், காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. (4) அநுபூதி அனுபவம் எல்லோரும் நுகரக்கூடியதே. இடையறாத தியானம், பக்தி, துறவு மூலமாக இந்தப் பேரின்ப நிலையை இவ்வுலகிலேயே எய்தலாம்.
எல்லா அநுபூதியாளர்களும் பன்மையைக் கடந்து, மெய்ப்பொருளுடன் ஒன்றிய நிலையை அனுபவித்தவர்கள். சிலர் இதை ‘நாயக–நாயகி’ பாவமாகக் கூறுகின்றனர். ஆண்டாள், தெய்வத்திரு காதரீன், தெய்வத்திரு தெரசா ஆகியோரை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ‘எனை மணந்த மணவாளா’ என்கிறார் வள்ளலார். மதுசூதனன் கைத்தலம் பற்றத் தாம் கண்ட அனுபவத்தைக் கூறுகிறாள் ஆண்டாள். காதரீன் கையில் கடவுள் கொடுத்த கணையாழி காட்சியளித்தது.
அநுபூதி அனுபவம் இரண்டு வழிகளில் வெளிப்படுகிறது.
(1) புறவயமானது; பொருள்களிலுள்ள வேறுபாடுகள் மறைந்து எல்லாப்பொருள்களும் ஒன்றாகவே தெரிவது. புல், மரம், கல் எல்லாம் ஒன்றே என்று மெசுட்டர் ஏக்கார்ட்டு (Meister Eckhart) கூறுகிறார். எல்லாப் பொருள்களிலும் இறைவனைக் காண்கிறார். யாக்கோபு போமே, (Jacob Bohme) ‘இவ்வொளியில் என் ஆன்மா எல்லாப் பொருள்களையும் ஊடுருவிப் பார்த்தது, புல்லிலும் செடியிலும் இறைவனைக் கண்டேன்’ என்கிறார். ‘பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தி’ என்கிறார் தாயுமானார். இவ்வாறு இயற்கையெல்லாம் இறைவனாகக் காண்பது ஒருவகை அருட்காட்சி.
(2) இரண்டாவது வகை ‘அகவயமானது’ (Introvertive). இது, மனத்தை உள்முகப்படுத்தி ஆன்ம விசாரணை செய்வதன் பயனாக ஏற்படுவது. புலன்கள், உணர்வுகள், எண்ணங்கள் எல்லாம் அடங்கிய பிறகு ஆன்மாவில் ஒன்றிய நிலை. தன்னையறிந்தின் புற்ற நிலை வாக்கு, செயல், சிந்தையற்ற நிலையில் கிட்டுகின்ற சிதையாத ஆனந்தம் ஆகியவை பற்றி உபநிடதங்கள் மிக விரிவாகக் கூறுகின்றன.
அநுபூதி, ‘ஐக்கியம்’ அல்லது ‘சங்கமம்’ என்பது இருவேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. இரண்டும் வேறுபட்டவையல்ல என்ற முற்றொருமையை வேதாந்தங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் கிறித்தவமும் இசுலாமும் (Christianity and Islam) இதைத் தெய்வ இகழ்ச்சியாகக் கருதும். அவற்றில் மனிதன் கடவுளிலிருந்து வேறுபட்டவன். எனவே கிறித்தவமும் இசுலாமியமும், ‘ஒன்றுபட்ட நிலை’யைத்தான் ஐக்கியம் என்று கூறுமே தவிர, ஆன்மாவும் கடவுளும் ஒன்றென்றோ, இயற்கையும் இறைவனும் ஒன்று என்றோ குறிப்பிடுவதில்லை. கிறித்தவ அநுபூதிச் செல்வர் ஏக்கார்ட்டு இயற்கையும் கடவுளும் ஒன்று என்ற கருத்துத் தொனிக்குமாறு கூறினார் என்பதற்காகத் திருச்சபை அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யூத அநுபூதிமான்களும் கடவுளுடன் கலந்து விடுவதாகக் கூறவில்லை. யூத சமயம் கூறும் ‘செகோவா’ மனிதனிலிருந்து அப்பாற்பட்டவர். அங்கு ‘ஐக்கியம்’ என்பது கடவுளுடன் நேர்முகத் தொடர்பு என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. ஆனால் அதிலும் ஆபிரகாம் பென் சாமுவேல் அபுலாபியா (Abraham ben Samuel) விதிவிலக்காகக் கருதப்படுகிறார். அவர் கடவுளுடன் ஒன்றுபட்டாரென நம்பப்படுகிறது. எனினும் பொதுவாக யூத சமயத்தில் கடவுளுடன் ஒன்றிய நிலை என்ற கருத்து ஊக்குவிக்கப்படவில்லை.
இசுலாமிய அநுபூதி நெறியினரான ‘சூபி’ (Sufi)யினரும் கடவுளுடன் கலந்துவிடுகின்ற நெறியைக் குறிப்பிடுகின்றனர். அதனால் அங்கும் அநுபூதியாளர்களுக்கும் மதக்குருமார்களுக்கும் பூசல் ஏற்பட்டது. அல்கல்லாசு (அல்–ஹல்லாஜ்) என்னும் அநுபூதிமான் தாமும் இறைவனும் ஒன்று என்ற கருத்தில் பேசினார் என்பதற்காகப் பாக்தாத்தில் சிலுவையில் அறையப்பட்டார். அல்பிசுதாமி என்ற சூபி ‘நான் கடவுளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கடவுள் “நீயே நான்” என்று எனக்குள் கூறினார்’ என்கிறார்.
இந்து சமயத் தத்துவ சாத்திரங்கள் அநுபூதி நிலையின் மிக உயர்ந்த வெளிப்பாடுகள். ஆன்மாவும் பரம்பொருளும் ஒன்றே; இரண்டல்ல; வேறுபாடுகளெல்லாம் மாயையே என்கிறார் ஆதிசங்கரர். ஆன்மா ஆண்டவனின் வடிவம். குளத்து நீரும் கங்கை நீரும் அடிப்படையில் ஒன்றே என்கின்றன இந்து சமய நூல்கள். ‘சித்தந் தெளிந்து சிவமானோர்’ என்கிறார் தாயுமான சுவாமிகள், புத்தசமயம் கூறும் ‘நிருவாணம்’ இரண்டற்ற நிலையை விளக்கும் அநுபூதிக் கருத்தே. நிருவாண நிலையில் ‘தான்’ என்ற தனித்தன்மை அழித்து உயிர் உலகத்தோடு ஒன்றாகக் கலந்து விடுகிறது. ‘எல்லைக்குட்பட்டது’ தன் தளைகளைத் தகர்த்துவிட்டு ‘எல்லையற்றதில்’ கலந்து விடுகிறது.
அநுபூதி நிலையை விளக்குவதற்கு அநுபூதியாளர்கள் பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். பிரமம் இதுவன்று, இதுவன்று (நேதி, நேதி) என்கின்றன உபநிடதங்கள். கடவுள் எவ்வாறு இருக்கிறார் என்று கூறமுடியாது. எவ்வாறு இல்லை என்றுதான் கூறமுடியும் என்கிறார் மோசசு (Moses). தெய்வத்திரு பால் (St. Paul) சொல்வதற்கரிய காட்சியைத் தாம் கண்டதாகவும் கேட்டதாகவும் கூறுகிறார். பாகுபாடுகள் அற்ற கடவுளை உடன்பாட்டுக் குணங்களால் குறிப்பிட முடியாது; எதிர்மறைச் சொற்களைக் கொண்டே கூறமுடியும் என்கிறார் தையோனிசியசு. இதை ‘நிருவாணம்’ என்பர் புத்த சமயத்தினர்.
அநுபூதியாளர்கள் கூறும் சில கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றன. அதனால் அது உண்மையானதுதானா என்ற ஐயப்பாடும் எழுகிறது. பரம்பொருள் குணமற்றது, மாசற்றது என்று கூறும் அதே உபநிடதங்கள், நற்குணங்களையுடைய பிரமத்தையும் கூறுகின்றன. ஒரே பரம்பொருள் எப்படிக் குணங்களற்றதாகவும் குணங்களைக் கொண்டதாகவும் இருக்கமுடியும்? ‘கடவுளைப் பார்ப்பது என்பது கடவுள் ஏதோ ஓரிடத்தில் நிற்பது போல மனிதர்கள் கற்பனை செய்கிறார்கள்; ஆனால் அது அப்படிப்பட்டதன்று, கடவுள் ஒரு வெறுமை; ஆழங்காணமுடியாத பாதாளம்; தனக்குள்ளே கலக்கின்ற நீரோடை’ என்று ஏக்கார்ட்டு கூறுகிறார். ‘கடவுள் இயங்குவதுமன்று, இயங்காததுமன்று; உள்ளதுமன்று இல்லாததுமன்று’ என்கிறார் தையோனிசியசு. ‘நிறைவு’ என்றார் ஒருவர். அதையே ‘வெறுமை’ என்று குறிப்பிடுகிறார் மற்றொருவர். பேரொளியாகத் திகழ்வதே சொல்வதற்கரிய இருளாகவும் விளங்குகிறது.
இவ்வாறு முரண்பட்ட கருத்துகள் ஏன் நிலவுகின்றன? எல்லா அநுபூதிமான்களும் தம் அனுபவம், வாக்கு மனம் எட்டாதது என்பதில் ஒருமித்த கருத்துடையவர்கள், நினைவிற்கும் அரிய இந்த வியக்கத்தக்க அனுபவத்தை விளக்குவதற்குச் சொற்களே இல்லை. எனவே மொழியின் இயலாமையே முரண்பட்ட கருத்துகள் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கலாம். பேசாத மோனநிலையைப் பேசுவதால் ஏற்படும் இடர்ப்பாடு இது. இந்த அநுபூதி நிலை எண்ணத்திற்கு அப்பாற்பட்டது. ஏனென்றால் எண்ணமும் ஒரு வரம்பிற்குட்பட்டதே. எண்ணும் பொழுது நாம் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்றாலும் சொற்கள் தரும் வடிவங்களைப் பயன்படுத்துகிறோம். சொற்களும் அவைதரும் வடிவங்களும் ஒரு வரம்புவரை மட்டுமே பயன்படுத்த முடிந்தவை. ஆழ்ந்த உணர்ச்சிகளை அவை வெளிப்படுத்த இயலா, நெடுங்காலம் பிரிந்திருந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் காணும்பொழுது பேசமுடிவதில்லை. அங்கும் பேச்சற்ற நிலையே மொழியாகி விடுகிறது. அதனால்தான் உபநிடதங்களும் பேச்சற்ற நிலையில்தான் பிரமத்தை அறியமுடியும் என்கின்றன. தாமசு அக்குவீனசு (Thomas Aquinas) என்பவர், சம்மா தியோலாசிகா (Summa Theologica) என்னும் நூலில் பார்சு தெர்சியா (Pars Tertia) என்ற பகுதியை எழுதிக்கொண்டிருந்தபொழுது அநுபூதி நிலையைப் பெற்றார். தாம் அதுவரை எழுதியதனைத்தும் வீண் என்றுணர்ந்து எழுதிக்கொண்டிருந்த நூலை முடிக்காமல் ஸிட்டுவிட்டார்.
இலக்கியம் கூடச் சில காலங்களில் இலக்கணத்தை மீறிவிடுகிறது. இலக்கணம் நம் எண்ணங்களின் வெளியீட்டை ஒரு வரம்புக்குட்படுத்துகிறது. ஆனால் ஆழ்ந்த உணர்ச்சிகள் இலக்கண வரம்பை மீறிப் பீறிடுகின்றன. அவ்வாறே கட்டற்ற பேரின்ப அநுபூதி அனுபவத்தையும் வரம்புக்குட்பட்ட சொற்களின் மூலம் வெளிப்படுத்தும்பொழுது இந்த முரண்பாடுகள் தோன்றுவதாகக் கருதலாம். அநுபூதியாளர்களின் அனுபவம் மொழிமூலம் வெளிப்படுவது அன்று என்று கருதினாலும் தவறில்லை. ஏனென்றால் சாதாரண அறிவில், அறிவோனுக்கும் (Subject) அறியப்படுகின்ற பொருளுக்கும் (Object) வேறுபாடு இருக்கிறது. ஆனால் அநுபூதி அனுபவத்தில் இந்த வேறுபாடுகள் அழிந்துவிடுகின்றன. ஒன்று மற்றொன்றில் கரைந்து விடுகிறது. எனவே, அன்றாட வாழ்க்கை, அறிவியல் அறிவு ஆகியவற்றுக்கு அடிப்படையான ‘முரணாமை’ (Law of non- contradiction) என்னும் சிந்தனை விதியே, அறிவுக்கு அறிவான ஆண்டவனைக் காண்கின்ற அனுபவத்திற்கும் அளவு கோல் என்று கூறமுடியாது.ஜெ.மு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 382)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r4wu2w9q/
தமிழ்“அநுபூதி நெறிக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r4wu2w9q/APA
Oliyon Research. (2026). அநுபூதி நெறிக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r4wu2w9q/MLA
"அநுபூதி நெறிக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r4wu2w9q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment