பண்டைய நாகரிகங்களுள் ஒன்று. ஆற்றங்கரைகளில் தோன்றிய பழம்பெரும் நாகரிகங்களுள் எகிப்திய நாகரிகத்துக்கு அடுத்த படியாக வைத்து எண்ணப்படக் கூடியது மெசபடோமிய நாகரிகமாகும். நைல் நதிக்கரையில் எகிப்திய நாகரிகம் தோன்றியது போலவே, தைகிரிசு (Tigris), யூப்ரடிசு (Euphrates) என்ற இரு ஆறுகளின் இடையில் செழிப்பான சமவெளியில் மெசபடோமிய நாகரிகம் தோன்றியது. அந்நாகரிகம் பல கிளைகளாகக் கவடுவிட்டுச் சுமேரிய, பாபிலோனிய, அசிரிய, சாலடிய நாகரிகங்கள் என்னும் பெயரில் விளங்குகின்றன. இவை நான்கும் ஒன்றோடொன்று பெரிதும் தொடர்பு கொண்டவை. எனினும், இவற்றுள் பெரிதும் தனிப்பட்ட இயல்புடையது அசிரிய நாகரிகமாகும் (Assyrian Civilization). அசிரிய நாகரிகம் படைவலிமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. போர் வெறி மக்களிடம் மிகுந்திருந்தது. சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்கள் போர்வீரர்கள். போரில் வெற்றி பெறுதல் ஒன்றே இவர்களின் உயர் குறிக்கோளாயிருந்தது. போரால் வெல்லப்பட்ட நாடுகள் அடக்கு முறையாலேயே ஆளப்பட்டன. எப்போதும் போரிலீடுபட்ட காரணத்தால் விரைவிலேயே இவர்களது வலிமை குன்றியது. அடக்குமுறைக்குட்பட்ட நாடுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டன. இதனால், அசிரியப் பேரரசு அழிந்தொழிந்தது. அடக்கு முறையின் அடிப்படையில் அமைந்த படைவீரர் ஆட்சி நெடுநாள் நீடிக்காது என்ற வரலாற்று உண்மைக்கு அசிரிய நாகரிகம் ஒரு சான்றாகும். மெசபடோமியாவின் வடக்குப் பகுதியில் அசிரிய நாடு அமைந்துள்ளது. மெசபடோமியாவின் மேற்குப் பகுதி ஒரே சமவெளியாகக் காட்சியளித்த போதிலும், அதன் வடபகுதி மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டிருந்தது. அசிரிய நாட்டின் பெரும்பான்மையான பகுதி மலைப்பாங்கான இடமாகும். தைகிரிசு ஆற்றங்கரையில் அது அமைந்திருந்தாலும் அந்நீரைப் பயன்படுத்தக்கூடிய சமவெளிகள் அங்கு ஒரு சிலவே இருந்தன. எனவேதான், அசிரியர்கள் அண்டை நாடுகளைப் பிடிப்பதில் பெரிதும் அக்கறை காட்டலாயினர். வளமாக வாழ்வதற்கான வசதிகளில்லாமையாலும் சுற்றிலும் பகைவர்களின் தாக்குதலுக்கு உட்படக்கூடிய நிலையிலிருந்ததாலும் அசிரியர்கள் போர்க்குணத்தையும் வல்லாட்சி வெறியையும் இயல்பாகவே பெற்றிருந்தார்கள். ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டளவில், தைகிரீசு ஆற்றின் வடபாகத்தில் ஒருவகை செமிடிக் இனத்தவர் குடியேறினர். அசுர் என்னும் சூரியக் கடவுளை அவர்கள் வணங்கி வந்ததால் அவர்களுக்கு அசிரியர் என்ற பெயர் வழங்கலாயிற்று. பாபிலோனியா முதலிய இடங்களிலிருந்து வந்த செமிடிக் இனத்தவர்களோடு மலைகளில் வாழ்ந்த செமிடிக் அல்லாத இட்டைட்டு, குர்திசு இனத்தவர்களும் நாளடைவில் கலந்துவிட்டார்கள். இக்கலப்பு இனத்தவர் ஒரே தேசிய இனமாக மாறித் தமக்கென ஓர் அரசனை நினவா (Nineveh) என்ற தலைநகரில் ஏற்படுத்திக் கொண்டனர். தைகிரீசு ஆற்றின் கிழக்குக் கரையில் அசிரியப் பேரரசு அமைத்திருந்த அந்நகரிலிருந்து அசிரியர் சிறிது சிறிதாகத் தங்களது நாட்டை விரிவுபடுத்தலாயினர். தெற்கேயிருந்த பாபிலோனியர்க்கும் அசிரியர்க்கும் அடிக்கடி போர் மூண்டது. இறுதியில் கி.மு. 1200 ஆம் ஆண்டளவில் பாபிலோனியாவை அசிரியர் கைப்பற்றினர். கி.மு. 1100–இல் முதலாம் திக்லாத் பிலாசர் என்ற மன்னர் மேற்கேயிருந்த பாலசுதீனத்தைக் கைப்பற்றினார். இட்டைட்டு மக்களை வென்று அவர்கள் நகரங்களைத் தம் நாட்டோடு இணைத்தார். ஏறக்குறைய 1000 சிங்கங்களை வேட்டையாடிக் கொன்றதாகக் கருதப்படும் இவ்வீர மன்னருக்குப் பின் அவர் கைப்பற்றிய நாடுகள் தன்னாட்சி பெற்றன. எனினும், இரும்புக் கனிகள் நிறைந்த கம்போடீசியாவை அவர்கள் கைப்பற்றி, அதன் மூலம் இரும்பாலாய போர்க்கருவிகளைச் செய்து அவற்றைப் பயன்படுத்தி, மீண்டும் ஒரு பேரரசை நிறுவினர். இரண்டாம் சார்கன் (கி.மு. 722-705), சென்னகேரீப் (கி.மு. 785-681). ஆசுர்பானிபல் (கி.மு. 668-626) என்ற அரசர்கள் காலத்தில் அசிரியப் பேரரசு விரிவடைந்தது. அதன் தலைநகரான நினவா ஈடும் எடுப்புமற்ற வாணிப நகராக விளங்கியது. உலகிலேயே மிகப் பெரிய நூல் நிலையம் ஒன்றை ஆசுர்பானிபல் அங்கு நிறுவினார். அவரது மறைவுக்குப் பின் பேரரசு நலியத் தொடங்கியது. பரந்து கிடந்த பேரரசைக் கட்டியாளக்கூடிய திறமை மிக்க ஆட்சி முறையை அமைக்க அசிரியப் பேரரசர் தவறிவிட்டனர். எனவே ஆங்காங்கே கலகங்கள் மூண்டன. தெற்கே தோன்றிய சால்டியர் கலகக்காரர்களுக்குத் தலைமை தாங்கினர். பாரசீகத்திலிருந்து வந்த மீடியர் ஒரு புறமும் சால்டியர் மற்றொரு புறமும் தாக்கிய போது அசிரியப் பேரரசு நிலை குலைந்தது. நினவா நகரம் கி.மு. 612-இல் சால்டியர் வசமாயிற்று. அந்நகரை அவர்கள் அழித்துத் தரைமட்டமாக்கினர். அசிரியர்களின் ஆட்சி அங்கு நடைபெற்றது என்பதற்குரிய அடையாளம் ஒரு சிறிதும் இல்லாத வகையில் அவ்வழிவு வேலை நடைபெற்றது. அசிரியர்களின் ஆட்சி இராணுவ வலிமையையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. முதலில் பாதுகாப்புக்கென அமைக்கப்பெற்ற இராணுவம், விரைவில் அக்காலத்து நாடுகள் எவற்றிலும் காணப் பெறாத அளவுக்குப் பெருகியது. ஒரு பெரும் இராணுவப் பொறியாகவே அரசு மாறிவிட்டது. போர்த் தளபதிகள் நாட்டிலேயே செல்வாக்கு மிக்க வகுப்பினராக விளங்கினர். போரில் வெல்லப்பட்ட நாடுகளில் இருந்த நிலங்கள் யாவும் அவர்களுக்கே பிரித்து வழங்கப்பட்டன. அதனால், அவர்களுள் ஒரு சிலர் அரசர்களையே நீக்குமளவுக்கு அதிகாரம் பெற்றனர். இரண்டாம் சார்கன் என்னும் தளபதி அவ்வாறு ஆட்சியைக் கைப்பற்றியவர். அசிரியர்களின் நிலைப் படைக்கு நிகராக அக்காலத்தே எந்த நாட்டிலும் படை இல்லை. அசிரியர்கள் சென்றவிடமெல்லாம் வெற்றி பெற்றதற்குப் போர்க் கருவிகளின் வலிமையும் புதுமையும் ஒரு பெருங் காரணமாகும். மற்றும், குதிரைப் படையிலும் அவர்கள் வல்லுநராக விளங்கினர். அவற்றின் மின்னல் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் எதிரிகள் தவித்தனர். தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய முப்படையுடன் அவர்கள் சென்று எதிரிகளின் கோட்டைகளைத் தாக்கினர். கோட்டைகளைத் தகர்க்க, இரும்பாலாகிய முனைகளைக் கொண்ட மதில் தகர் கருவிகளைப் பயன்படுத்தினர். நகர்ந்து செல்லும் முற்றுகைத் தேர்களில் வீரர்கள் அமர்ந்து சென்று எதிரியின் கோட்டைகள் மீது நின்றிருந்த வீரர்களை நேரடியாகத் தாக்கினர். இரும்பாலாகிய வாள்கள், ஈட்டிகள், மெய்யுறைகள், கேடயங்கள், தலைக் கவசங்கள், கனமான விற்கள், இரும்பு முனை கொண்ட அம்புகள் இவற்றுடன் போர் புரிந்த வீரர்களை வெற்றி கொள்ள முடியாமல் ஏனைய வீரர்கள் தவித்தனர். இவ்வாறு தலைசிறந்த போர்க்கருவிகளைப் பயன்படுத்தியதால் மட்டுமே அசிரியர்கள் எதிரிகளை வெல்லவில்லை. பலவகையான அச்சுறுத்தல் முறைகளையும் அவர்கள் கையாண்டு எதிரிகளைப் பணிய வைத்தனர். கைது செய்யப்பட்ட போர் வீரர்களை அவர்கள் ஈவிரக்கமின்றிக் கொன்றனர். தளபதிகளின் உடல்கள் கண்டதுண்டமாக்கப்பட்டு நகரின் பல பகுதிகளில் எறியப்பட்டன. சிறைப்பட்ட கைதிகளின் தோல்கள் உரிக்கப்பட்டன. காது, கை போன்ற உறுப்புகள் வெட்டி எறியப்பட்டன. போர் வீரர்களை மட்டுமன்றி எளிய குடிமக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் அவர்கள் அதே முறையில் துன்பத்துக்குள்ளாக்கினர். நாட்டை ஆட்சி புரிவதில் அசிரியர் தமக்கே உரிய பாணியைக் கையாண்டனர். பேரரசைப் பல மாநிலங்களாகப் பிரித்து அவற்றின் ஆளுநர்களை அவர்களே நியமித்தனர். அவர்களை அவ்வளவாக மன்னர்கள் கட்டுப்படுத்தவில்லை. ஓரளவு மாநிலத் தன்னாட்சியை அவர்கள் வழங்கினர். மத்திய அரசுக்கு எதிராகச் சதி செய்தவர்களும், திறை செலுத்தத் தவறியவர்களும் மட்டுமே கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். நன்கு பயிற்சி பெற்ற ஆட்சித் துறை அலுவலர்கள் மூலம் நாட்டின் நிருவாகம் நடைபெற்றது. தகுதிக்கேற்பவே பதவி உயர்வு வழங்கப்பட்டது. சட்டங்களை மன்னரே ஆக்கினார். அவற்றைச் செயற்படுத்தும் அதிகாரிகளை அவரே நியமித்தார். உள்ளூர் ஆட்சி, வரி வசூல் ஆசி ஆகியவற்றைப் பெரியவர்களே மேற்கொண்டனர். அசிரியச் சட்டங்கள் பாபிலோனியச் சட்டங்களினின்றும் வேறுபட்டிருந்தன. வெவ்வேறு நிலையிலிருந்த மக்களுக்கேற்பத் தண்டனைகள் மிகக் கடுமையாக இருந்தன. சிறு குற்றங்களுக்கும் கூட மரண தண்டனை வழங்கப்பட்டது. அசிரிய சமுதாயம் ஐந்து பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. நிலம்படைத்த பிரபுக்கள், படைத்தளபதிகள் ஆகியோர் சமுதாய மாடியின் மேல்தளத்தில் உலவினர். அவர்களுக்குக் கீழ் பல்வேறு தொழில்களைச் செய்வோரும் கைவினைஞரும் இருந்தனர். அவர்களுக்கும் கீழாகக் கூலி வேலை செய்வோரும். வயலில் வேலை செய்வோரும் நான்காம் வகுப்பினராகக் கருதப்பட்டனர். சமுதாயத்தின் அடித்தளத்தில் உலவியவர்கள் வீட்டிலும் நிலத்திலும் உழைத்த அடிமைகளாவர். அடிமைகளுக்கு நிலம் சொத்து முதலியன கிடையா விலங்குகள்போல் அவர்கள் நடத்தப்பட்டனர். அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டித் தலையை மொட்டையடித்துக் கொள்ளுமாறும், காதுகுத்திக் கொள்ளுமாறும் அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். மக்கள் பெருக்கத்தை அசிரிய அரசு ஆதரித்தது. படைக்கு ஆள் சேர்க்கவே அவர்கள் அத்தகைய கொள்கையைக் கடைப்பிடித்தனர். அதனாலேயே அவர்கள் கருச் சிதைவுக்கு மரண தண்டனை விதித்தனர். பெண்டிரை அசிரியர்கள் மிக இழிவாக நடத்தினர். விலங்குகள் போல் அவர்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள். கணவன், மனைவியை எவ்விதம் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். ஒரு மனைவியிருக்கும் போதே வேறு பல மகளிரை மணந்து கொள்ளவும், வேண்டாத மனைவியரை மணவிலக்குச் செய்யவும், காமக் கிழத்தியர்களோடு உறவு கொள்ளவும், கணவனுக்கு உரிமை தரப்பட்டது. மேலும், சோரம்போன மனைவியைக் கணவர்கள் கொல்லவும் உரிமை பெற்றிருந்தனர். பெண்கள் பொது இடங்களில் முகமூடி இன்றி உலலக் கூடாது. வீட்டில் தனி இடங்களில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்தப் பர்தா முறை இன்றும் மேற்கு ஆசிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம். சமயச் சடங்குகளிலும் பொதுப் பணிகளிலும் ஈடுபட மகளிருக்கு உரிமை இல்லை. பரத்தைமை (Prostitution) சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டது. போர்த் தொழிலில் நாட்டம் கொண்டிருந்த அசிரியர்கள், வேளாண்மை, வாணிகம் போன்ற துறைகளில் போதிய ஆர்வம் காட்டவில்லை. அத்தகைய தொழில்களில் ஈடுபடுதல் தமது குலப் பெருமைக்கே இழுக்கென்று அவர்கள் கருதினர். பெரிய நில புலங்களைப் பிரபுக்கள் வைத்திருந்த போதும் அவற்றைச் சாகுபடி செய்தவர்கள் நிலமற்ற அடிமைகளேயாவர். வாணிகத்தில் ஈடுபட்டவர்கள் அராபியர்கள் என்ற அயலவர்களேயாவர். எனவே நாட்டின் மூலதனம் அயலவர்களின் ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டது. பழைய பாபிலோனிய முறையிலேயே நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டன. நிலக் கிழார்கள் நகரங்களில் இன்பக் களிப்பில் மூழ்கிக் கிடக்க, நாட்டுப் புறங்களில் உழவர்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றித் தவித்தனர். முதலில் செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களையும், இறுதியில் இரும்பையும் தோண்டி எடுத்து உருக்கிப் பல கருவிகளைச் செய்யக் கற்றிருந்தனர். இந்தியாவிலிருந்து பருத்தியைக் கொணர்ந்து நூல் நூற்று ஆடை நெய்வதிலும் ஒரு சிலர் வல்லவராயிருந்தனர். அழகிய அணிகலன்களை ஆக்கவும் பானைகளை வனையவும் அவர்களுள் பலர் தெரிந்திருந்தனர். பண்டமாற்று முறையில்தான் பெரும்பாலும் வாணிகம் நடைபெற்றது. வெள்ளியாலும் ஈயத்தாலுமான ஒரே நிறையுள்ள உலோகக் கட்டிகளையும் வணிகர்கள் சில சமயங்களில் பண்டமாற்றுக்குப் பயன்படுத்தினர். வங்கி முறையும், கடன்கொடுத்து வாங்கும் முறையும் வழக்கத்திலிருந்தன. 25 விழுக்காடு வரை வட்டி வசூலிக்கப்பட்டது. உள்ளூர் வாணிகமே அன்றி, உலக வாணிகத்திலும் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் ஒன்றுசேர்ந்து வணிகக் குழுக்களை அமைத்துக் கொண்டனர். அசிரியர்களின் சமயம் எளிமையானது. அசுர் என்ற சூரியக் கடவுளே அவர்களின் முக்கிய தெய்வம். அதனை மகிழ்விக்கவே அவர்கள் போரிலீடுபட்டனர். அசுர் அல்லாத ஏனைய தெய்வங்களை வணங்குபவர்கள் மீது படையெடுத்து அவர்களைக் கொல்வதை அவர்கள் ஒரு புனிதச் செயலாகக் கருதினர். சிறைக் கைதிகளை நரபலியாக அவருக்குப் படைப்பதில் அவர்கள் பேருவகை கொண்டனர். ஆடுமாடு போன்ற விலங்குகளையும் அவர்கள் தெய்வத்துக்குப் பலியிட்டனர். இசுடார் என்ற பெண் தெய்வத்தையும் அவர்கள் வணங்கினர், பிள்ளைப் பேற்றை வழங்கும் தேவதையாக அதனை அசிரியர்கள் கருதினர். கருதினர். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மாயம், மந்திரம் முதலியவைகளிலும் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தாயத்துகளை அவர்கள் அணிந்தனர். போர்த் தளபதிகளை அடுத்து, சமய குருமார்களுக்கே மிகுதியாக நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன. வரப் போகும் இடையூற்றைக் சுட்டிக் காட்டும் சகுனங்கள் பலவற்றை அவர்கள் மக்களுக்கு எடுத்துக் கூறி வந்தனர். வருங்காலமுணர்த்தும் கலையில் விற்பன்னர்களாக அவர்கள் விளங்கினார்கள். போர் வாழ்க்கையில் மட்டுமே பெரிதும் இன்பங் கண்ட அசிரியர்கள், கலை இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டாததில் வியப்பில்லை. எனினும், போரில் வெற்றி பெறுதற்காக அவர்கள் ஒரு சில கலைகளை வளர்த்தனர். மதில்களை இடிக்க அவர்கள் முற்றுகை இரதங்களையும் தகர்க்குங் கருவிகளையும் கையாண்டனர். போர்க்களத்தில் ஏற்படக் கூடிய வெற்றி தோல்விகளை முன் கூட்டியே அறியச் சோதிடக் கலையை வளர்த்தனர். அதனால், கணிதமும் இலக்கணமும் வளர்ந்தன. ஒரு வட்டத்தை 360 பாகைகளாகப் பிரிக்கவும், பூமியின் மேற்பரப்பிலுள்ள இடங்களைச் சுட்டிக்காட்டக் குறுக்குக்கோடு, நேர்க்கோடு போன்ற கோடுகளைப் பயன்படுத்தவும் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஐந்து கோள்களின் இருப்பை அவர்கள் உணர்ந்திருந்ததோடு கிரகணங்களைத் துல்லியமாகக் கணிக்கும் முறையையும் நன்கு கற்றிருந்தனர். போர் வீரர்களின் உடல்நலம் மிக முக்கியமாதலால் மருத்துவக் கலையை அவர்கள் நன்கு வளர்த்தனர். 500-க்கும் மேற்பட்ட மருந்துகளை அவர்கள் தயாரிக்கத் தெரிந்திருந்தனர். நோய்க்கான அறிகுறிகளைப் பற்றியும் அவர்கள் விரித்துரைத்தனர். நோய் நீக்க மருந்துகளும் மந்திர முறைகளும் பயன்படுத்தப்பட்டன. அசிரியர்கள் சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர். கல்லாலாய விலங்குருவங்களும், வெண்கலத்தால் செய்யப்பட்ட சிறகுகளைக் கொண்ட எருதுகளும் அரண்மனையின் வாயில்களை அழகுபடுத்தின. அரண்மனைச் சுவர்களைப் புடைப்போவியங்கள் அழகு செய்தன. வீரர்களின் துணிச்சலான செயல்களையும் விலங்கு வேட்டைகளையும் காட்டும் ஓவியங்களில் உயிரோட்டம் தெரிகிறது. மனித உருவங்களில் கை, கால்கள் எல்லாம் விறைப்பாகவும், நேராகவும் வரையப்பட்டுள்ளன. ஆனால் விலங்குகளின் உருவங்களில் நெளிவு சுளிவுகள் காணப்படுகின்றன. சிறப்பாகச் சிங்கங்களின் பாய்ச்சலும் வீரமும் நன்கு தீட்டப்பட்டுள்ளன. அசுர்பானிபல் என்னும் மன்னரின் சிற்பத்- தில் அவரது எடுப்பான தோற்றமும் வீரமும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அது இன்று இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட அசிரியப் பறக்கும் எருதின் வேகம், வலிமை ஆகிய இரண்டும் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அசிரியாவிலுள்ள பறக்கும் மருதுச் சிற்பம் கட்டிடக் கலையில் அசிரியர்கள் பெரிதும் முன்னேறவில்லை. எனினும், அவர்கள் கல்லைப் பயன்படுத்திக் கோயில்களையும் அரண்மனைகளையும் கட்டினர். வட்டம், வளைவு, குவிமாடம் போன்ற சிறப்பியல்புகளை அவற்றில் புகுத்தினர். அளவில் மிகப் பெரியதாகக் கட்டிடங்களைக் கட்டுவதில் அசிரியர்கள் பெரிதும் இன்பங் கண்டனர். தூண் வரிசைகளை அவர்கள் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை. அசிரியர்கள், குறிப்பாக அரசர்கள், இலக்கியத்தைப் பெரிதும் பேணி வளர்த்தனர். சான்றாக, அசுர்பானிபல் என்னும் மன்னன் பாபிலோனிய இலக்கியங்கள் பலவற்றைத் தேடி எடுத்து நினவா நகரிலிருந்த நூல் நிலையத்தில் சேர்த்தார். ஏறக்குறைய 22,000 அசிரிய ஆப்பு வடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட களிமண் பலகைகளை அவர் சேகரித்ததாகத் தெரிகிறது. அவற்றுள் பல மந்திர தந்திரங்களைப் பற்றியவை. இன்னும் பல வாணிகம், இராணுவம், வரலாறு, மருந்து தொடர்பான கடிதங்கள் ஆகும். இக்களி மண்பலகைகள் இப்போது இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அம்மன்னர் தம் வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அவர் கடிதங்களில் இலக்கியச் சுவை இருப்பதைக் காணலாம். போர்க்களங்களில் நடைபெற்ற வீரச் செயல்கள் பல நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்த அசிரியப் பேரரசு உச்சநிலை அடைந்த ஒரே நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. இராணுவ வலிமையை மட்டும் நம்பி வாணிகத்தையும் வேளாண்மையையும் புறக்கணித்தது, அசிரியர்கள் செய்த பெருந்தவறாகும். நாட்டின் பொருளாதாரத்தில் அயலவரின் ஆதிக்கம் புக அது வழிவகுத்தது. நாட்டில் வேளாண்மையில் பெரும்பான்மையான உழவர்களை விலங்குகளைப் போல் நடத்தியது, அசிரியர்களின் மற்றொரு தவறாகும். அயலவர் படையெடுப்பு வந்தபோது அத்தகைய அடிமைகள் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு, அசிரியப் பெருங்குடி மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டனர். மன்னர்களின் செல்லப் பிள்ளைகளாகப் போர்த் தலைவர்களும், சமய குருமார்களும் நடத்தப்பட்டது மற்றுமொரு தலறாகும். அதனால் அவர்கள் ஒழுக்கமும் வீரமும் நாளடைவில் மங்கின. இன்பக் களிப்பில் மூழ்கி அவர்கள் நாட்டைக் காக்கும் திறனை இழந்தனர். இப்படிப் பல குறைகளைக் கொண்டிருந்த அசிரியப் பேரரசு, மேற்கு ஆசியாவில் ஓர் ஒற்றுமையை உண்டாக்கியது. பிற்காலத்தே தோன்றிய பாரசீகப் பேரரசு, உரோமானியப் பேரரசு, ஆங்கிலப் பேரரசு போன்றவற்றிற்கு அஃது ஒரு வழிகாட்டியாய் விளங்கியது. பெரும் சாலைகளாலும், அஞ்சல் முறையாலும், நாடுகளைப் பிணைக்கும் கலையை அசிரியர் உலகுக்குக் காட்டிச் சென்றனர். உலக அமைதிக்காக நாடுகளை ஒன்று சேர்ப்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டாக விளங்கினர் என்றால் அது மிகையாகாது. கி.ர.அ. துணை நூல்கள் Durrant, W., “The Story of Civilization–Part I–”, Our Oriental Heritage Simon & Schnoter, 1954. Wallbank & Taylor, “Civilization – Past and present, Vol.I”. Tull, G.k., “Early Civilizations”, Blandford Press, London, 1968. Stipp, John L. Warrent Holliester, C Dirrim, Allen W., “The rise and development of Western Civilization, Part I: Beginnings to 1500”, John Wiley & Sons, INC, New York, 1967. அனுமந்தன், கி.ர., “பண்டைய உலக வரலாறு”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1976.