சோவியத்து ஒன்றியத்தின் (U.S.S.R.) குடியரசுகளுள் ஒன்று. இதனை உசுபெக்கிசுத்தான் (Uzbekistan) என்றும் கூறுவர். இக்குடியரசு மத்திய ஆசிய சோவியத்துக் குடியரசுகளுள் ஒன்று. தாசுகண்டு (Tashkent) இதன் தலைநகர். உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு எல்லைகள் உசபெக்கிசுத்தானின் வடக்கில் கசக்குச் (Kazakt) சோவியத்துக் குடியரசும், தெற்கில் ஆப்கானிசுத்தானமும், கிழக்கில் கிர்கிசுச் (Kirghiz) சோவியத்துக் குடியரசும் தாசிக்குச் (Tadzhik) சோவியத்துக் குடியரசும், மேற்கில் துருக்மன் சோவியத்துக் குடியரசும் இதன் எல்லைகள். கர-கல்பக்குத் (Kara Kalpak) தன்னாட்சிச் சோவியத்துக் குடியரசும் இதனுள் அடங்கும். பரப்பும் மக்கள் தொகையும் உசுபெக்கிசுத்தானின் மொத்தப் பரப்பு 4,47,400 ச.கி.மீ. இக்குடியரசின் மக்கள்தொகை 1,70,39,000 (1983). இயற்கையமைப்பு இக்குடியரசின் நிலவியல் அமைப்பு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட இருகூறுகளாகப் பிரிந்துள்ளது. வடமேற்குப் பகுதியில் இருக்கும் முதற்பிரிவு மிகப் பெரிய அளவு பரப்பினைக் கொண்டுள்ளது. குசுயில்–கும் (Kyzyl–Kum) பாலை நிலத்தின் பகுதியாகவும் இது அமைகிறது. தென் கிழக்குப் பகுதியிலுள்ள இரண்டாம் பிரிவு சிறியது; இங்கு வளமான உலோயசு (Loess) என்னும் தளர் மண் சூழ்ந்துள்ளது. இப்பிரிவு தியன் சான் மலைத் தொடர்களைத் (Tien Shan Mountains) தொட்டுள்ளது. உசுபெக்கிசுத்தானின் வடமேற்கு எல்லையில் ஏரல் கடல் (Aral sea) அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் இருபெரும் ஆறுகளான ஆமுதாரியாவும் (Amu Darya) சிர்தாரியாவும் (Syr Darya) உசுபெக்குப் பகுதியின் குறுக்காகப் பாய்கின்றன. ஆமுதாரியா ஆறு கிவா பாலைநிலப் பசுஞ்சோலைக்கும் (Khiva Oasis), சிர்தாரியாவும் அதன் துணையாறுகளும் செழுமைமிக்க பர்க்கானாப் பள்ளத்தாக்கிற்கும் நீர்ப்பாசன வசதியளிக்கின்றன. தாசுகண்டு பாலைநிலப் பசுஞ்சோலையைச் சிர்சிக்கு (Chirchik), ஆங்கிரன் (Angren) ஆறுகளும், சாமர்கண்டு (Samarkhand), பொக்காரா (Bokhara) பாலைநிலப் பசுஞ்சோலைகளைச் செராவ்சன் (Zeravshan) ஆறும் பாசன வசதிக்குரியனவாக வளமாக்குகின்றன. விளைபொருள்கள் உசுபெக்குக் குடியரசு பல பொருள்களை விளைவிக்கிறது. சோவியத்து ஒன்றியத்தின் பருத்தி உற்பத்தியில் 85 விழுக்காடும் அரிசி உற்பத்தியில் பாதியும் இக்குடியரசு விளைவிக்கிறது. தானிய வகைகள், அல்பால்பா (Alfalfa) என்னும் மணப்புல் வகை, பழவகைகள், சாராயத்திற்குப் பயன்படும் திராட்சை, சணல் போன்ற நார்வகை (Kenaf), எள் (Sesame), புகையிலை கரும்பு போன்ற ஏனைய பொருள்களும் விளைவிக்கப்படுகின்றன. நீர்ப்பாசன வசதியுடன் செய்யப்படும் வேளாண்மைக்கு இக்குடியரசே சோவியத்து ஒன்றியத்தில் முதலிடம் பெறுகிறது. மிக வறண்ட மேற்குப் பகுதிகளில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. பருத்தி, பட்டு, உரோமம் போன்றவை உசுபெக்கின் பெருகி வளர்ந்துள்ள நூற்பாலைத்தொழிலுக்கு அடித்தளமாய் அமைகின்றன. எந்திர உற்பத்தி, உலோகப்பொருள்கள் செய்தல், உணவுப் பொருள்கள் பதப்படுத்தல், நீர்மின் உற்பத்தி, இரும்பு உருக்கு உற்பத்தி, ஆடை நெய்தல் போன்றவை சிறப்பான தொழில்கள், உசுபெக்கிசுத்தான் கனிமப்பொருள்கள் நிறைந்தது. பர்க்கானாப் பள்ளத்தாக்கில் எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. மேற்கு உசுபெக்கிசுத்தானில் மிகுதியான இயற்கை எரிவாயுப் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிலக்கரி, துத்தநாகம், செம்பு, மின்தனிமம் (Tungsten), முறிவெள்ளி (Molybdenum), ஈயம், வண்ணப்படிகம் (Fluoropar), தாதுப் பொருள் (Wolfram), அரக்கு (Ozokerite), கந்தகம் (Sulphur), சுண்ணாம்புக்கல், உரச்சத்து (Marl), களிமண் போன்ற கனிமப் பொருள்களும் இங்குக் கிடைக்கின்றன. வரலாறு உசுபெக்கிசுத்தான் உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் தோன்றி வளர்ந்த பகுதி. பண்டைய பாரசீகர்களின் மாநிலமான சோக்டியானா (Sogdiana) இதுவே. மகா அலெக்சாந்தர் இதனை கி.மு. நான்காம் நூற்றாண்டில் வென்றார். துருக்கிய நாடோடிகள் இப்பகுதியில் கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் நுழைந்தனர். அராபியர் இதனை கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கைப்பற்றிக்கொண்டதுடன், இசுலாம் சமயத்தையும் புகுத்தினர். செல்சுத் துருக்கியர் (Seljuk Turks) உசுபெக்கிசுத்தானை கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினர். செங்கிசுகான் (Genghis Khan) என்பார் இப்பகுதியை கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினார். தைமூரின் பேரரசுப் பகுதியான இதை அக்காலத்தில் சாமர்கண்டு என்று குறித்தனர். இப்பகுதியே அப்பேரரசின் மையப் பகுதியாகக் கருதப்பட்டது. அவருக்குப் பின் அரியணையேறியவர்களின் காலத்தில் அப்பேரரசு சுருங்கி, கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் நலியத் தொடங்கியது. உசுபெக்குகள் இதன் மீது வடமேற்கிலிருந்து கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படையெடுத்தார்கள். உசுபெக்குகான் என்பாரின் வழித் தோன்றல்கள் இதனை ஆண்டமையால் அம்மரபினர் உசுபெக்குகள் எனப்பெற்றனர். உசுபெக்குகளின் பேரரசு கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் சிறுசிறு அரசுகளாகச் சிதைந்தது. உள்நாட்டுக் குழப்பங்களாலும் கலகங்களாலும் இப்பேரரசு பலக்குறைவு அடைந்தது. இச்சிற்றரசுகளை உருசியப்படைகள் வென்றன. தாசுகண்டு நகரை கி.பி. 1865–ஆம் ஆண்டிலும், சாமர்கண்டு, பொக்காரோவை கி.பி. 1868–இலும், கீவை (Khiv) கி.பி. 1873–ஆம் ஆண்டிலும் உருசியர்கள் கைப்பற்றினர். துருக்கிசுத்தான் தாமியங்கி சோவியத்துச் சமநிலைக் குடியரசு (Turkistan Autonomous Soviet Socialist Republic) என்னும் பெயரில் உசுபெக்குகனின் பகுதி 1918–ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டது. கொரேசம் (Khorezm), பொக்காரோ மக்கள் குடியரசுகள் 1920–ஆம் ஆண்டில் நிலைநாட்டப்பட்டன. இறுதியாக உசுபெக்குகள் வாழ்ந்த இடங்கள் அனைத்தும் ஒன்றாக்கப்பெற்று உசுபெக்குச் சோவியத்துச் சமநிலைக் குடியரசு என 1924–இல் இணைக்கப்பட்டன. தாசிக்கிக்கான் (Tadzhikikhan) 1929–ஆம் ஆண்டு வரை உசுபெக்குக் குடியரசின் பாதுகாப்பில் இருந்தது. பின்னர், இது தனியாகச் சுதந்திரக் குடியரசாக்கப்பட்டது. கர–கல்பக் தானியங்கிச் சோவியத்துச் சமநிலைக் குடியரசு 1936–ஆம் ஆண்டில் இதனுடன் இணைந்து விட்டன. உசுபெக்குச் சோவியத்துச் சமநிலைக் குடியரசு 27–10–1924–இல் உருவாக்கப்பட்டது. துருக்கிசுத்தானும் அதன் பகுதியாக்கப்பட்டது. உசுபெக்கு மக்களின் பழக்கவழக்கங்கள் உசுபெக்குகள் துருக்கிய, ஈரானிய, மங்கோலிய இனத்தாரின் கலப்பினால் உருவானவர்கள். தொடக்கத்தில் இவர்கள் நாடோடிகளாக இருந்து இக்காலத்தில் ஒரே இடத்தில் வாழும் தன்மையைப் பெற்றுள்ளார்கள். முன்னர்ப் பழக்க வழக்கங்களையே சட்டமாக மதித்த இவர்கள் இப்போது அவற்றை எழுத்து வடிவில் மாற்றியுள்ளார்கள். இக்காலத்தில் இவர்கள் களிமண்ணாலும் மரத்தாலும் ஆன வீடுகளைக் கட்டிக்கொண்டாலும், கோடைக்காலத்தில் கூடாரங்களில் வாழ்வதை விரும்புகிறார்கள். உசுபெக்குகள் 92 இனங்களாக அல்லது குடும்பங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வோர் இனமும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உசுபெக்குகள் பாரசீக மொழியின் செல்வாக்குக்காட்பட்ட துருக்கிப் பேச்சுமொழிவைப் (Turki) பேசுகிறார்கள். இவர்களால் பேசப்படும் தசாக்கி (Tajaki) மொழி பண்பாடு, இலக்கியம் போன்றவற்றின் மொழியாகக் கருதப்படுகிறது.