செயற்கை இழைகள்
ceyaṟkai iḻaikaḷ
செயற்கை முறையில் (மனிதனால்) தயாரிக்கப் படும் இழைகள் செயற்கை இழைகள் ஆகும் (synthetic fibres).
செயற்கை முறையில் (மனிதனால்) தயாரிக்கப் படும் இழைகள் செயற்கை இழைகள் ஆகும் (synthetic fibres). 1910இல் பட்டுக்கு, பதிலீடாகத் தயாரிக்கப்பட்ட ரேயான், முதல் செயற்கை அல்லது தொகுப்பு இழையாகும். செயற்கைப் பட்டு எனப்படும் ரேயானின் இயைபு, பட்டின் இயைபிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அதற்குப் பின்பு, தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்ட இழைகள் எவையும், இயற்கை இழைகளைப் போல இருக்கவில்லை. தொகுப்பு வழியில் பெறப்பட்ட, செல்லுலோஸ் வகையல்லாத இழை என்ற வரையறையும் உள்ளது. இயற்கையிழையான பருத்தியைத் திருத்தம் செய்து (மறு வீழ்படிவு செய்து) பெறப்பட்ட ரேயான் இவ்வரையறையில் அடங்காது. ரேயானையும், அசெட்டேட் இழையையும், பகுதித் தொகுப்பு இழைகள் (semi-synthetic fibres) எனலாம். முழுத் தொகுப்பு இழைகளைத் தயாரிப்பதற்கு வேதிப் பொருள்களே அடிப்படையாகும். இவ்வேதிப் பொருள்களுக்கும், இழைத் தன்மைக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை. சில மூலப் பொருள்கள் வளிம நிலையிலோ, நீர்ம நிலையிலோ இருக்கக் கூடும். தொகுப்பு இழைகளை வகையிடுகையில் இழைகளுக்கும், நீட்சி நெகிழிகளுக்கும் (elastomers) இடைப் பட்ட நிலையைக் கருத்திற் கொள்ள வேண்டும். சில ரப்பர்கள், இழைத் தன்மைகளைப் பெற்றுள்ளன: எ-டு. ஸ்பான்டஸ்.
1930-40ஆம் ஆண்டில் புதிய, மாறுபட்ட செயற்கை இழை ஆய்வுகள் பல்வேறு நிறுவனங்களில் செய்யப் பட்டன. இக்கால கட்டத்தில், தொழில் நுட்பம் மறையமாகப் பாதுகாக்க ப்பட்டது. தயாரிக்கப்பட்ட இழைகளுக்கு முறையான வேதி உய்த்துணர் (chemically derived) பெயர்கள் இடப்படவில்லை. மாறாக, தயாரித்த நிறுவனங்கள், தம் நோக்கங்களுக்குத் தக்கவாறு வணிகப் பெயர்களை அளித்தன. இதனால், இவ்விழைகளைப் பற்றிய செய்திகளில் மிகுந்த குழப்பம்
நிலவியது. தற்போது ஒவ்வோர் இழையும் திட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அசெட்டேட் இழைகள். இது செல்லுலோஸ் அசெட்டேட்டை இழைப் பொருளாகக் கொண்ட இழை. இங்கு மொத்த —OH தொகுதிகளில் 92% அசெட்டைலேற்றம் கொண்டுள்ளது. டிரை அசெட்டேட் (triacetate) எனும் பெயர், இவ்விழையின் பொதுப் பெயராகும். இதன் அடர்த்தி 1.3–1.32 ஆகும்.
ஈர மர ஈர்ப்பு (moisture regain), 3.2% இழு வலிமை 124-158 M.Pa. பூசண நிறம் மாறுதலுக்கு ஈடு கொடுக்கக் கூடியது. ஆனால், நீண்ட நாள்கள் சூரிய ஒளி படுமாறு வைக்கப் பட்டிருந்தால், வலிமை இழப்பு ஏற்படுகிறது. தேய்மான எதிர்ப்பு மிகுந்த இழையாகும். ஆக்சிஜனேற்றிகளால் பாதிக்கப் படுகிறது. ஹைப்போகுளோரைட், பெராக்சைடு நிற நீக்கிகளையும், கரைப்பான்களையும் எதிர்க்க வல்லது. அசெட்டோன், டிரைகுளோரோ எத்திலீன், அடர் அசெட்டிக் அமிலம், மெத்திலீன் குளோரைடு ஆகியவற்றில் பருத்துப் பெருகுகிறது. 232°C. வரை பெட்டிப் போடும் போது, டிரை அசெட்டேட் பிசுபிசுப்பை ஏற்பதில்லை; 300°C இல் உருகுகிறது. சாதாரண அசெட்டேட் இழை (அசெட்டைலேற்றம் முழுமையுறாதது) 177–191°C இல் பிசுபிசுப்புத் தன்மை அடைகிறது. 204–230°C வரம்பில் மென்மையுறுகிறது. டிரை அசெட்டேட் படல வடிவிலும், அசெட்டேட் படல, வெட்டிழை வடிவுகளிலும் கிடைக்கின்றன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> துணியின் விலையைக் குறைக்கும் பொருட்டோ, இரு வேறு இழைகளின் விரும்பத் தக்க தன்மைகளை ஒருங்கே பெறும் பொருட்டோ, அசெட்டேட் இழைகள் ஏனைய இழைகளுடன் கலக்கப் படுகின்றன.
இயற்கை இழைகளுக்குள், கம்பளியே அசெட்டேட்டுடன் கலப்பதற்கு ஏற்ற இழையாகும். அசெட்டேட் கலக்கப்பட்ட கம்பளி இழை எளிதில் சுருங்குவதில்லை; மடிப்புக் கலையாது, பாதுகாக்கப்படுகிறது.
அக்ரிலிக் இழை. மொத்த எடையில் குறைந்தது 85% அக்ரிலோநைட்ரைல் தொகுதிகளைக் கொண்ட நீண்ட சங்கிலியுடைய தொகுப்பு இழை. இது
எனும் ஒரு படித் தொகுதி கொண்டது.
அடர்த்தி 1.16–1.18; ஈர மறு ஏற்பு: 1–2.5%; இழு வலிமை: 207–373 MP. பூசணம், சூரிய ஒளி, தேய்மானம், கரைப்பான்கள், நிற நீக்கிகள், நாட்படத் திறந்து வைத்தல் ஆகியவற்றைச் செவ்வனே எதிர்க்க வல்லது. கனிம அமிலங்களையும், வீரியம் குறைந்த காரங்களையும் பாதிக்கவொட்டாதது. 150°C வரை பெட்டிப் போட ஏற்றது; எரிதலை ஊக்குவிப்பதில்லை; சிதறிய நிலை மற்றும் எதிரயனிச் சாயங்களை ஏற்கின்றது. நீள் தன்மை குறைவாக அமையப் பெற்றது; ஆனால், மீட்சி (resilience) மிகுந்தது. பருத்தியில் 25%உம் கம்பளியில் 10% உம் அடர்த்தியைக் கொண்டது. 220–330°C வெப்ப நிலை வரம்பில் பிசுபிசுப்புத் தன்மை அடைகிறது. பருத்தி, கம்பளி, மோஹேர் (mohair), ரேயான் ஆகியவற்றுடன் கலப்பினமாக்க ஏற்றதெனினும், ஒவ்வொரு கலப்பின இழையும் வேறுபட்ட தன்மை கொண்டது.
அரமிட் இழை. இது குறைந்தது 85% அமைடு பிணைப்புகள், இரு அரோமாடிக் வளையங்களுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டிருக்கும் அமைப்புள்ள பல் அமைடு நீள் சங்கிலி; அடர்த்தி 1.38–1.44; ஈர மறு ஏற்பு: 4.5–7%; இழு வலிமை: 620–2760 MP. பூசண எதிர்ப்பு மிக்கது. நீண்ட நாள்களுக்குச் சூரிய ஒளி படுவதால், சீர்கேடடைகிறது. தேய்மான எதிர்ப்பும், கரைப்பான்களால் பாதிப்புறாமையும் மிக்கது. பெரும்பாலான அமிலங்களால் பாதிக்கப் படுவதில்லை. எனினும், HCl, HBr, HNO₅, H₂SO₄ போன்ற கனிம அமிலங்கள் படுமாறு நீண்ட நாள்கள் திறந்து வைத்திருப்பின், வலிமையிழப்பு நேருகிறது; எளிதில் எரிவதில்லை; தீச்சுடரைப் பரப்புவதில்லை; உருகுவதில்லை. 370–500°C வெப்ப நிலை வரம்பில் சிதைவுறுகிறது. நீளிழை சாயமேற்றத் தக்கதன்று; வெட்டிழை எதிரயனிச் சாயங்களை ஏற்கிறது. வெப்பம் கடத்தும் தன்மையற்றது. வியர்வையால் பாதிப்புறுவதில்லை. அரமிட் இழையை ஏனைய இழைகளோடு கலப்பினமாக்குவதன் நோக்கம், அதன் சுடர் எதிர்ப்புத் தன்மையை உயர்த்துவதேயாகும். சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளிக்கு 50 மணி நேரத்திற்கு மேல் படுமாறு வைத்திருந்தால், இழையின் வலிமையில் பாதி குறைந்து, வெண்கல (மஞ்சள்) நிறமடையும். அரமிட் இழைகளின் வணிகப் பெயர்கள்: கெவ்லார், நொமெக்ஸ் என்பன.
புளூரோகார்பன் இழைகள். இது கார்பன் அணு கொண்ட நீள் சங்கிலியில் புளூரின் அணுக்கள் இணைப்புகளாக உள்ள இழை. டெஃப்ளான் என்பது இதன் வணிகப் பெயர்களுள் ஒன்றாகும்.
அடர்த்தி 0.8–2.2; ஈர மறு ஏற்பு இல்லை; இழு வலிமை 173–793 Mpa. பூசணம், சூரிய ஒளி, தேய்மானம் ஆகியவற்றை எதிர்க்க வல்லது. அமிலங்களாலும், காரங்களாலும் பாதிப்புறுவதில்லை. உருகு நிலையான 288°C வரை மிகுதியும் பாதிப்புறுவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட கரைப்பான்களைப் பயன்படுத்திச் சில வகைகளுக்கு நிறமேற்றலாம். விஸ்கோஸ் ரேயானை ஒத்த வலிமை கொண்ட இவ்விழை டிரை அசெட்டேட்டை விட வலிமை குன்றியது. டெஃப்ளான் துணி, மின் தடுப்புப் பொருளாகும். எந்நீர்மமோ, திண்மமோ, டெஃப்ளான் பரப்பில் ஒட்டுவதில்லை. இத்துணி பொதுவாகத் தொழிலகங்களில் மட்டுமே பயன்படுகிறது. தாங்கு வலிமை, அரிமான எதிர்ப்பு, வெப்ப எதிர்ப்பு ஆகிய தன்மைகள் தேவைப்படுகையில், இவ்விழைகள் பயன்படுகின்றன. எனினும், இவற்றின் விலையும், மீச்சூட்டில் நச்சு வளிமம் உமிழ்தலும், பயனைக் குறைக்கின்றன.
மோடாக்ரிலிக் இழை. இது 35%க்குக் குறையாமலும், 85%க்கு மேற்படாமலும், அக்ரிலோ நைட்ரைல் தொகுதிகளைக் கொண்ட ரப்பராகவோ, பல் அமைடாகவோ, வகையிடப்பட முடியாத தொகுப்பு வகை இழை.
அடர்த்தி: 1.35–1.37; ஈர மறு ஏற்பு 2.5–3%; இழு வலிமை: 200–325 MPa. பூசணம், சூரிய ஒளி, கரைப்பான்கள், சலவைப் பொருள்கள் ஆகியவற்றினால் எளிதில் தாக்கப்படுவதில்லை. பெரும்பாலான அமிலங்களினாலும், வீரியம் குறைந்த காரங்களினாலும் பாதிப்புறுவதில்லை. சற்றே நிற மாற்றம் நிகழ்கிறது. கொதி நீரில் ஏற்படும் சுருக்கம் 1% வெப்பத்தால் தோன்றும் சுருக்கம் 200°C இல் 5% எரிதலை ஊக்குவிப்பதில்லை. நடு நிலையான, உலோகமேற்றப்பட்ட, நேரயனி, சிதறல் வகைச் சாயங்கள் ஏற்றவை. சாய நிற மாற்றமோ, வியர்வையால் பாதிப்போ இல்லை. பெரும்பாலான வகைகள் பெட்டிப் போடத் தேவையற்றவை. சலவை செய்வதற்கு ஏற்றதெனினும், தோய்த்தாலோ, அழுத்திப் பிழிந்தாலோ, இழைப் பிசிர் தோன்றக் கூடும். இரு வேறு வணிக நிறுவனங்கள் இரு வேறு பெயர்களில் (SEF மற்றும் VEREL) இவ்விழையைத் தயாரிக்கின்றன. பருத்தி–மோடாக்ரிலிக் கலப்பின இழைகள், விளையாட்டு வீரர் உடைகள், உள்ளாடைகள் ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுகின்றன.
பாலி எத்திலீன். இவை குறை அடர்த்தி மற்றும் உயர் அடர்த்தி ஒற்றை நீளிழைகள் என வகையிடப் பட்டுள்ளன. குறை அடர்த்தி வகையின் தன்மைகள்: அடர்த்தி 0. 92; ஈர மறு ஏற்பு புறக்கணிக்கத் தக்கது. இழுவலிமை: 76–240 MPa. உயர் அடர்த்தி வகையின் அடர்த்தி: 0.95: ஈர மறு ஏற்பு புறக்கணிக்கத் தக்கது. இழு வலிமை: 200–580 MPa. இரு வகைப் பல் எத்திலீன் இழைகளுக்கும் பொதுவான இயல்புகளாவன: அமில, காரப் பாதிப்பு இல்லை. ஆக்சிஜனேற்றிகள் பாதிக்கின்றன. தயாரிக்கும் போதே, நிறமேற்றப் படுகிறது. தேய்மான எதிர்ப்பு மிக்கது. குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்களில் பருத்துப் பெருகுகிறது.
பாலிபுரோப்பிலீன். இதன் (PP) தயாரிப்புக்காகச் சீக்லிர் (Ziegler) என்னும் ஜெர்மானியரும், நட்டா (Nutta) என்னும் இத்தாலியரும் நோபல் பரிசு பெற்றனர்.
எனும் தொடர் அமைப்புக் கொண்ட இப்பல படியில் மெத்தில் தொகுதிகள் சங்கிலிக்கு ஒரே புறத்திலோ, மாறி மாறி மேலும், கீழுமாகவோ. தாறு மாறாகவோ அமையக்கூடும். இவற்றில் முதல் இரு வகைகளைத் தனித்துத் தயாரிப்பதற்கு ஏற்ற வினையூக்கிகளைச் சீக்லிரும், நட்டாவும் கண்டு பிடித்தனர். மெரக்லான், ஹெர்குலான், ரீவான் என்ற பெயர்களில், வணிக நிறுவனங்கள் இவ்விழையைத் தயாரிக்கின்றனர். பல்புரோபிலீன் பிசினுடன், அதன் இயல்பான வெப்ப, ஒளி பாதிப்புறுதலைத் தவிர்க்கும் பொருட்டுச் சில வேதிப் பொருள்கள் கலக்கப் படுகின்றன. இவ்விழை உருக்கிப் பிழிந்து, வார்த்தல் முறையில் நூற்கப் படுகிறது. ஒற்றை நீளிழைகளாகவும், பல் நீளிழைகளாகவும், ஏட்டு வடிவிலும் (sheet form) தயாரிக்க ஏற்றது. சாயமேற்றத் தக்கன. சாயமேற்றத் தகாதன என இரு வகைகளில் பெறலாம். நைலான் இழைகளை விட, நீள் தன்மை குறைந்தவை. துவளுமையும், வெப்பக் கடத்தாப் பண்பும், குளிர் கால உடைகள் தயாரிப்புக்கு PPஐ ஏற்றதாக்குகின்றன. நீரை உறிஞ்சுவதில்லை; ஒட்ட விடுவதுமில்லை. காஃபி, முட்டை, குளிர் பானங்கள், பழச் சாறுகள், உயவு நெய், ஒப்பனைப் பொருள்கள் ஆகியவற்றால் கறையுறுவதில்லை. ஈரத்தில் வலிமை இழப்பதில்லை. எளிதில் உலரும். சுருங்குவதில்லை. 100°Cஇல் 5–12% வரை சுருங்குகின்றது; 140°Cஇல் இளகும்: 160°Cஇல் உருகும். 288°Cஇல் சிதைவுறும், சூரிய ஒளியின் புற ஊதாக் கூறு பெரும் பாதிப்பைத் தோற்றுவிக்கிறது. பூசணம், அந்துப் புழு, அமிலம், காரம் ஆகியவற்றை நன்கு எதிர்க்கும், எளிதில் சாயமேற்பதில்லையாதலால், இழையைக் தயாரிக்கும் போதே, நிறமேற்றம் செய்யப்படுவது.
அடக்க விலைக் குறைப்பு, நூல் எடைக் குறைப்பு, நூலின் பருமனை உயர்த்துதல், வலிமையையும், திடத்தையும் கூடுதலாக்குதல். பாலிபுரோப்பிலீனை ஏனைய இழைகளுடன் கலப்பினமாக்குவதன் நோக்கங்கள் ஆகும். நைலான். 83%க்கும் குறைவான அளவில் அமைடு பிணைப்புகள் இரு அரோமாடிக் வளையங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொகுப்பு வகை பாலிஅமைடு, நைலான் எனப்படும்.
டூபாண்ட் (Dupont) எனும் நிறுவனத்தில் ஆராய்ச்சி நிகழ்த்தி வந்த காரோதாஸ் எனும் வல்லுநரால் முதன் முதலாகப் பாலி அமைடு தயாரிக்கப் பட்டது. எந்த டைகார்பாக்சிலிக் அமிலத்தையும், எந்த ஈரிணைய அமீனுடனும் வினைப்படுத்திப் பல் அமைடை உருவாக்கலாம் என்றாலும், பயன்படுத்தப் படும் வினைப் பொருளைப் பொறுத்தே இழையின் தன்மை அமைகிறது. ஹெக்சா மெத்திலீன் டைஅமீன் (hexa methylenediamine), அடிபிக் அமிலம்(adipic acid) ஆகியவற்றை இணைப் பல்லுறுப்பாக்கி, முதல் நைலான் தயாரிக்கப் பட்டது. இந்நைலானை, நைலான் 6.6 என்பர். அமீன், அமிலம் ஒவ்வொன்றிலும் 6 கார்பன் அணுக்கள் இடம் பெற்றிருப்பதால், இப்பெயர் அளிக்கப்பட்டது. நைலான் மூலக் கூறு புரதத்தின் இயைபைப் பெற்றிருந்தமையால், இயற்கை வழிப் புரத இழைகளான கம்பளி, பட்டு, மயிர் ஆகியவற்றின் தன்மைகளை ஓரளவுக்குப் பெற்றுள்ளது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> அடர்த்தி 1.14; ஈரமறு ஏற்பு 2.8–5%: இழு வலிமை 275–925 MPa. ஃபீனால் வகைச் சேர்மங்களைத் தவிர, ஏனைய கரிமக் கரைப்பான்களில் கரைவதில்லை. வலி மிக்க ஆக்சிஜனேற்றிகளும், கனிம அமிலங்களும் சில நைலான் வகைகளைச் சிதைவுறச் செய்கின்றன. எரிகாரங்களினால் பாதிப்புறுவதில்லை. 229°Cஇல் பிசுபிசுப்பை அடைகிறது; உருகு நிலை 250–275°C. 150°Cஇல் பல மணி நேரங்கள் வைத்திருந்தால், வெண்ணிற நைலான் பழுப்பு நிறமடைகிறது. 316–388°C வெப்ப நிலை வரம்பில் சிதைவுறுகிறது. எல்லா வகைச் சாயங்களையும் ஏற்கிறது.
ரேயான், அசெட்டேட் இழைகளைப் போலன்றி, நைலான் உருக்கி நூற்கப்படுகிறது. நைலானின் குறிப்பிடத் தக்க பண்புகளாவன: உயர் வலிமை–எடை விகிதம்; அறுந்து போகும் தறுவாயிலும், உயர் நீட்சி (high elongation at break); வடிவ மாற்றத்திலிருந்து எளிதில் மீட்பு; உயர் தேய்மான எதிர்ப்பு மற்றும் உயர் மடித்தல் எதிர்ப்பு. இரு பாலருக்கும் ஏற்ற உள்ளாடைகள் (lingerie), நீச்சலுடை, விளையாட்டு மற்றும் வேட்டைக்காரர் சீருடை, காலுறைகள், கையுறைகள் ஆகியன நைலான் துணியால் தயாரிக்கப் படுகின்றன. நைலான்களில், பிற வகைகளாவன: நைலான் 6.10; நைலான் 6.11; நைலான் 6.
பாலி எஸ்டர். டெரிப்தாலிக் அமிலம் உள்ளிட்ட பல வகை அரோமாடிக் அமிலங்களினாலான எஸ்டர் தொகுதிகளைக் குறைந்தது 85% கொண்ட நீள் சங்கிலிப் பல்லுறுப்பாகும். மீண்டும், மீண்டும் பல்லுறுப்புச் சங்கிலியில் இடம் பெறும் தொகுதியின் வாய்ப்பாடு;
அடர்த்தி: 1.34–1.39; ஈர மறு ஏற்பு: 0.4%; இழு வலிமை : 230–1140 MPa. சூரிய ஒளி படுமாறு நீண்ட நேரம் வைத்திருந்தால், வலிமையிழப்பு நேருகிறது. சலவைப் பொருள், சோப்பு, கடல் நீர், வியர்வை, உலர் சலவை வேதிப் பொருள்கள் ஆகியன பாலி எஸ்டரை எளிதில் பாதிப்பதில்லை. ஏறத் தாழ, 230°C இல் பிசுபிசுப்புத் தன்மை அடைகிறது. உருகு நிலை சுமார் 250°C. பெரும்பாலான கனிம அமிலங்களால் பாதிக்கப் படுவதில்லை. அடர் H₂SO₄இல் பகுதிச் சிதைவுடன் கரைகிறது. வலிவு மிக்க காரங்களினால் பெரும் பாதிப்பு ஏற்படுவதில்லை. அக்ரிலிக் இழைகளை விடப் பாலி எஸ்டர் இழைகள் கூடுதலான வெப்பம் கடத்துமையைப் பெற்றவை. பாலி எஸ்டர் வெட்டிழைகள் அலைவு மிக்கவை; எனவே, நூல்களிலும், துணிகளிலும் உயர் வெப்பக் காப்பீட்டை எதிர் பார்க்க முடிகிறது. பருத்தி, லினன், ரேயான் ஆகியவற்றை விடக் கூடுதல் சூட்டுப் பாதுகாப்பையும் (கதகதப்பையும்), கம்பளி, அக்ரிலிக், பட்டு ஆகியவற்றை விடக் குறைவான சூட்டுப் பாதுகாப்பையும் அளிக்கிறது. பூசணம், பூச்சி, புழு ஆகியவற்றினால் முழுதும் தாக்குறுவதில்லை. சிதறல் வகை மற்றும் அசோச் சாயங்களை ஏற்க வல்லது. சலவையினாலோ, ஒளியினாலோ சாயம் மாறுவதில்லை. கார வகைச் சாயங்களை ஏற்குமாறு, சில பாலி எஸ்டர்கள் திருத்தப்படுகின்றன. பல இழைகளுடன் பாலி எஸ்டர் இழை இனக் கலப்பாக்கப்பட்டுள்ளது. 65% பாலி எஸ்டர் கொண்ட பாலி எஸ்டர்–பருத்திக் கலப்பின இழைகள் புகழ் பெற்ற சட்டைத் துணி இழைகளாகும். பருத்தியைப் போல், இத்துணி மடிப்பு, சுருக்கம் ஏற்பதில்லை. 80/20 பாலி எஸ்டர்–பருத்தி கலப்பு வலிமையையும், சுருக்க எதிர்ப்பையும், பரிமாண நிலைப்பையும் கூடுதலாக்குகிறது; நீர் ஏற்பு குறைகின்றது.பாலி எஸ்டர்-கம்பளிக் கலப்பில் சுருக்க எதிர்ப்பு, மடிப்பு நிலைப்பு, தேய்மான எதிர்ப்பு ஆகியன கூடுதலாக உள்ளன. 50/50–65/35 வரை பாலி எஸ்டர்–கம்பளிக் கலப்பு இழைகள் தயாரிக்கப் படுகின்றன. 65%பாலி எஸ்டரும், 35% உயர் ஈரக் குணக ரேயானும் சேர்ந்த கலப்பிழை வலி மிக்கது; திடம் மிக்கது; நீடித்து உழைக்கும். பாலி எஸ்டர்–நைலான் கலப்பிழை நிலைப்புத் தன்மை, எளிதில் உலர்தல், பூசண எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரு இழைகளுமே வெப்பத்தால் இளக வல்லனவாதலாலும், நீர்மங்களை உறிஞ்சுவதில்லையாதலாலும், சலவை செய்து பெட்டிப் போடாமல் அணிவதற்கு இவற்றின் கலப்பினத் துணி சிறந்ததாகும்.
பாலி எத்திலீன் கிளைக்கால் டெரிப்தாலேட்டைத் தவிர, PCDT (பாலி-1.4. வளைய ஹெக்சிலீன் டைமெதிலீன் டெரிப்தாலேட்) எனும் பாலி எஸ்டரும் பயன் மிக்கதாகும்.
ஸ்பாண்டெக்ஸ் (spandex). இது குறைந்தது 85% பாலி யூரிதேன் தொகுதிகளை உள்ளடக்கிய நீள் சங்கிலி வடிவுடைய தொகுப்பு இழை. மீண்டும், மீண்டும் இடம் பெறும் தொகுதி:
அடர்த்தி 1.2; இழு வலிமை 76–104 MPa: ஈர ஏற்பு < 1% வலிமை. குறைந்த அமில, காரங்களால் தாக்கப்படுவதில்லை. நீர்த்த HCI, H₂SO₄ ஆகியவற்றில் இத்துணி பழுப்பாகிறது. உயர் வெப்ப நிலைகளில் அடர் அமிலங்களால் பாதிக்கப்படுகிறது. கரைப்பான்களால் பாதிக்கப்படுவதில்லை. 75–216°C வரை பிசுபிசுப்புத் தன்மை அடைகிறது. உருகு நிலை -268°C. சிதறிய நிலை, அமில, உலோகம். புகுத்தப் பட்ட சாயங்கள் ஸ்பாண்டிக்சுக்கு ஏற்றவை. இது ஒன்றே ரப்பராலான துணி இழையாகும்.
கார்பன், பாலிபென்சிமிடசோல், கண்ணாடி ஆகியவற்றினாலான இழைகளும், தொகுப்பு வகை- யைச் சார்ந்தவையேயாயினும், இவை ஆடை தயாரிப்பில் பயன் படுவதில்லை. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles–Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, New York, 1987.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 794)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r3jppzc5/
தமிழ்“செயற்கை இழைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r3jppzc5/APA
Oliyon Research. (2026). செயற்கை இழைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r3jppzc5/MLA
"செயற்கை இழைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r3jppzc5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment