ஓர் அணு உலையினுள், நியூட்ரான்களைப் பல தனிமங்கள் மீது ஒளிரச் செய்யும் போது (irradiate), அத்தனிமங்கள் கதிர் வீசும் திறன் பெறுகின்றன. இவ்வடிப்படையில்தான் செயலூக்கப் பகுப்பாய்வு (activation analysis) மேற்கொள்ளப்படுகிறது. கிளர்வுற்ற கதிர் வீசும் ஐசோடோப்புகள் வெவ்வேறான அரை வாழ்வுக் காலத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் கதிர் வீச்சுச் செறிவையும், காலத்தையும், வரை படம் வரையும் போது, சிதைவு வளை கோடு (decay curve) கிடைக்கிறது. இவ்வரை கோட்டிலிருந்தும், மேலும் பல வகையான கதிர் வீச்சுகளை அடையாளங் கண்டு கொள்வதாலும், தனிமக் கலவையின் கலப்பு விகிதத்தைக் கண்டு பிடிக்கலாம். இவ்வகை ஆய்வின் முடிவு மூன்று உண்மைகளைச் சார்ந்துள்ளது. (அ) உள்ளடங்கிய தனிமங்களின் நியூட்ரான் பிடிக்கும் குறுக்கு வெட்டுத் தோற்றம் (ஆ) நியூட்ரானைக் கொடுக்கும் மூலத்தின் (source) செறிவு (இ) தனிமத்தின் அரை வாழ்வுக் காலம்: காட்டாக, ஒரு கலவையிலுள்ள ஏதேனும் ஒரு தனிமத்தின் (E) அளவைக் கண்டு பிடிப்பதாகக் கொள்ளலாம். இதற்கு, ஐசோடோப்பை நீர்மமாக்கும் முறையைப் (isotope dilution) பயன்படுத்தலாம். முதலில் ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவுள்ள Eஇன் கதிரியக்க ஐசோடோப் கலவையுடன் சேர்க்கப்படுகிறது. பிறகு, கலவையிலுள்ள தனிமம், Eஐயும் கலந்த கதிரியக்க ஐசோடோப்பையும் கலவையிலிருந்து பிரித்தெடுத்து, அவற்றின் கதிர் வீச்சுத் திறன் கணக்கிடப்படுகிறது. கதிரியக்க ஐசோடோப்பைக் கலந்த பிறகு, கலவையிலுள்ள தனிமத்தின் நியமக் கதிரியக்கத் திறனும் (specific activity) பிரித்தெடுக்கப்பட்ட தனிமத்தின் நியமக் கதிரியக்கத் திறனும் சமம். \frac{I_0}{m_0 + m_x} = \frac{I_1}{m_1} I0–சேர்க்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்பின் கதிரியக்கத் திறன். I1–பிரித்தெடுக்கப்பட்ட தனிமத்தின் கதிரியக்கத் திறன். m0–சேர்க்கப்பட்ட ஐசோடோப்பின் நிறை. m1–பிரித்தெடுக்கப்பட்ட தனிமத்தின் நிறை. mx–அளவு தெரியாத தனிமத்தின் நிறை (எடை) எனவே, mx= (m1-m0) அல்லது. mx = m0( -1) S0 - சேர்க்கப்பட்ட ஐசோடோப்பின் நியம கதிரியக்கத் திறன். S1- பிரித்தெடுக்கப்பட்ட தனிமத்தின் நியம கதிரியக்கத் திறன். ஒரு கலவையிலுள்ள தனிமத்தின் அளவை, வேறு முறையிலும் கண்டு பிடிக்கலாம். ஒரே சூழ்நிலையில், ஒரே நேரத்தில், அளவு தெரியாத (கண்டு பிடிக்க வேண்டிய) தனிமத்தின் மேலும், நியம தனிமத்தின் மேலும் (standard composition) நியூட்ரான் வீச்சுப் படும் போது, அவை கதிரியக்கத் திறன் பெறுகின்றன. அவற்றின் கதிரியக்கத் திறனிலிருந்து அளவு தெரியாத தனிமத்தின் நிறையைக் கண்டு பிடிக்கலாம். mx–அளவு தெரியாத தனிமத்தின் நிறை (எடை). mx1–நியம தனிமத்தின் நிறை. Ax–அளவு தெரியாத தனிமத்தின் கதிரியக்கத் திறன். Ax1–-நியம தனிமத்தின் கதிரியக்கத் திறன். செயலூக்கப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் தனிமங்கள், ஓர் அணு உலையுள் நியூட்ரான்களாலோ, சைக்ளோட்ரானில் மின் சுமையுள்ள துகள்களாலோ, பீட்டா, காமாக் (β, γ) கதிர்களாலோ, தாக்கமடைகின்றன. இச்செயலூக்கப் பகுப்பாய்வு அறிவியலில் மிக முக்கியத்துவத்தை அடைந்துள்ளது. 0.001–1.14 MEV வரை பாய்மச் செறிவுள்ள (flux intensity) நியூட்ரான்கள் கதிர் விடப் படுகின்றன. மின் வேதி முறைகள். ஒரு கரைசலின் செறிவை மின்னழுத்தப் பகுப்பாய்வு முறையிலும் (potentiometric analysis) கண்டுபிடிக்கலாம். இம்முறையில், முதலில் குறிப்பிட்ட கரைசலின் மின்னழுத்தத்தைக் (electrical potential) கணக்கிடுவதன் மூலம் அந்தக் கரைசலின் செறிவு கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தக் கரைசலின் மின்னழுத்தத்தைப் பயன்படுத்தி, அதன் pHஐயும் கண்டு பிடிக்க முடியும், இம்மின்னழுத்த முறையில், பல வகையான மின் முனைகள் பயன்படுகின்றன. அவை பெரும்பாலும் அயனி–தேர்ந்தெடுப்பவையாக (ions selective) உள்ளன. மின் முனைகளுக்குக் கரைசலில் உள்ள ஒரு குறிப்பிட்ட அயனிக்கு மட்டுமே செயல்படும் திறன் உள்ளது. இம்மின்னழுத்த முறையில் செறிவு கண்டுபிடிக்கப் பட வேண்டிய கரைசலின் அயனி தேர்ந்தெடுக்கும் மின்முனை ஒன்றைச் செருகி, அதை இன்னொரு நியம மின்முனையோடு (standard electrode) இணைத்து, ஒரு மின்கலன் அமைக்கப்படுகிறது. இம்மின்கலனில் மின்னழுத்தத்தைக் கணக்கிடுவதன் மூலம், அந்தக் கரைசலின் செறிவு அல்லது pH ஐக் கண்டு பிடிக்கலாம். அலைவு இயல் (oscillometry). இம்முறையில் ஒரு கரைசலின் மின் கடவா மாறிலியைக் (dielectric constant) கண்டுபிடிப்பதன் மூலமாகவோ, கடத்துந் திறனைக் (conductivity) கண்டு பிடிப்பதன் மூலமாகவோ, அந்தக் கரைசலின் செறிவைக் கண்டு பிடிக்கலாம். இம்முறையில் பயன்படும் மின் கலங்களின் மின் முனைகளுக்கு அதிக அலைவு எண் கொண்ட மாற்ற மின்னோட்டக் குறியீடுகள் (high frequency alternating signals) அனுப்பப்படுகின்றன. வோல்ட்டாயியல் (voltametry). இம்முறையிலும், செறிவு கண்டு பிடிக்க வேண்டிய கரைசலில் இரண்டு மின் முனைகளைச் செருகி, ஒரு மின் கலன் அமைக்கப் படுகிறது. இம்மின் முனைகளில் ஒன்று, மிகச் சிறியதாகவும், மந்தமாகவும் உள்ளது. (பெரும்பாலும் Au அல்லது pt) பிறிதொரு வகை மின் முனைகள் மிகப் பெரியவையாக உள்ளன. இவற்றின் மின் செறிவு மிகக் குறைவு. எனவே, மின் கலனிலிருந்து வெளி வரும் மின்சாரம் மந்த மின் முனையை நோக்கி நகரும் பொருள்களின் வேக விகிதத்தைப் பொறுத்து அமையும், இம்முறை கரிம, கனிமச் சேர்மங்களின் பகுப்பாய்வில் பயன்படுகிறது. மாறும் மின்னழுத்தம், மாறும் மின்னோட்டம், மாறா மின்னோட்டம் போன்ற நிலைகளிலும், இம்முறை பயன்படும். இம்முறை, கால மின்னழுத்த முறை (chrono potentiometry) எனப்படும். ஒவ்வொரு முறையிலும், மின்னோட்டத்திற்கும், மின்னழுத்தத்திற்கும் தொடர்புள்ள ஒரு வரை படம் பெறப் படுகிறது. இவ்வரை படம் வடிவ வளை கோடுகளைக் கொடுக்கும். இதிலிருந்து கரைசலின் செறிவைக் கண்டு பிடிக்கலாம். —கி. மு. மோகன்