இச்சொல் இசுலாமியச் சமயத்தின் கடவுளைக் குறிக்கிறது. முகமதியர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் எந்த மொழியைப் பேசினாலும் தனி முதல்வனான இறைவனை அல்லாகு என்று சொல்கிறார்கள். முகமதியர்கள் சமய நூலாகிய திருக்குரானில் முழு முதல்வனாகிய கடவுளுக்கு ‘ரப்பு’ என்ற வேறு பெயரையும் காண்கிறோம். அல்லாகுவின் சிறப்புப் பெயர்கள் தொண்ணூற்றொன்பது என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார். அப்பெயர்களுக்கு அசுமா–அல்–சிபாத் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அல்லாகு என்பது மேற்கூறப்பட்ட பெயருடன் நூறாவது பெயராகச் சேர்த்து, “ஏக ஈசுவரன்” பெயராகக் கூறப்படுகிறது. அல்லாகு என்பதை முதலிலும் பெயர்களுக்குப் தொண்ணூற்றொன்பது பிறகு நூறாம் பெயராகவும் வழங்குவது வழக்கம். இந்நூறு பெயர்களையும் முகமதியர்கள் செபமாலையைக் கொண்டு மனத்துட் சொல்லி வழிபடுவது வழக்கம். முகமதியர்களின் கொள்கைப்படி “அல்லாகு ஒருவன்; அவனுடைய ஆற்றலை மீற எவராலும் முடியாது; அவன் எப்பொழுதும் நிலைத்திருப்பவன்” என்ற கருத்துகளை விளக்கக்கூடிய “லா இலாஹு இல்லல்லாஹு” (வணக்கத்துக்குரியவன், அல்லாகுவைத் தவிர வேறு ஒரு கடவுளும் இல்லை) என்ற சொற்றொடரை முகமதியர்கள் உள்ளன்போடு ஒப்புக் கொள்ளுகின்றனர். திருக்குரானில் அல்லாகுவினுடைய இயல்பு, தத்துவம் முதலியன நன்கு விளக்கப்பட்டுள்ளன.