உட்ரோ வில்சனின் பதினான்கு கோட்பாடுகள்
uṭrō vilcaṉiṉ patiṉāṉku kōṭpāṭukaḷ
முதலாம் உலகப்போர் ஒருபுறம் செருமனி, ஆசுத்திரியா–அங்கேரி, பல்கேரியா, துருக்கி முதலிய நான்கு நாடுகளுக்கும், மறுபுறம் பிரிட்டன், பிரான்சு, ஐக்கிய அமெரிக்க நாடு முதலியவற்றுக்குமிடயையே (1914–1918) நடைபெற்றது.
முதலாம் உலகப்போர் ஒருபுறம் செருமனி, ஆசுத்திரியா–அங்கேரி, பல்கேரியா, துருக்கி முதலிய நான்கு நாடுகளுக்கும், மறுபுறம் பிரிட்டன், பிரான்சு, ஐக்கிய அமெரிக்க நாடு முதலியவற்றுக்குமிடயையே (1914–1918) நடைபெற்றது. செருமனியும் அதன் கூட்டுநாடுகளும் தோற்கடிக்கப்- பட்டன; வெர்சே உடன்படிக்கைதான் (Treaty of Versailles) முதல் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதி உடன்படிக்கைகளுள் முக்கியமானது ஆகும். இந்த உடன்படிக்கைக்கு ஆதாரமாக அமைந்ததுதான் ஐக்கிய அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் வரைந்த பதினான்கு கோட்பாடுகள் (Fourteen Points of President Woodrow Wilson of the U.S.A.) ஆகும்.
பதினான்கு கோட்பாடுகள்
1) நாடுகளுக்கிடையே இரகசியமான ஒப்பந்தங்கள் இருத்தல் கூடாது. 2) கடல்வழிகளைப் பயன்படுத்துவதற்கு எல்லா நாடுகளுக்கும் சுதந்தரம் இருத்தல் வேண்டும். 3) பொருளாதாரத் துறையில் நாடுகளுக்கிடையே உள்ள தடைகள் (Barriers) நீக்கப்படுதல் வேண்டும். 4) போர்க் கருவிகளெல்லாம் மிகக் குறைந்த அளவுக்குக் குறைக்கப்படுதல் வேண்டும். 5) குடியேற்ற நாடுகளிலுள்ள மக்களின் நலனையும் அவற்றை ஆளுகின்ற அரசாங்கங்களின் உரிமைகளையும் தீர்மானித்து, அக்குடியேற்ற நாடுகளின் உரிமைகளை ஓரஞ்சாராமல் தீர்மானித்தல் வேண்டும். 6) உருசியமக்களின் விருப்பத்துக்கிணங்க நிறுவப்பட்ட நிறுவனங்களின் வாயிலாக உருசியா வளர்ச்சி அடைவதற்கும், மற்ற நாடுகளோடு அதற்கு நல்லுறவு ஏற்படுவதற்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். 7) பெல்சியம் நாட்டிலிருந்து அயலவர் படைகள் விலக்கப்பட்டு, அது முன்போலச் சுதந்தர நாடாக அமைதல் வேண்டும். 8) போருக்கு முன்பு செருமனியினால் பிரான்சிடமிருந்து கைப்பற்றப்பட்ட அல்சேசு-லொரெய்ன் (Alsace-Lorraine) மாகாணங்களைப் பிரான்சுக்கே திருப்பி அளித்தல் வேண்டும். 9) இத்தாலிய நாட்டின் எல்லைப்புறங்கள் (Frontiers) மாற்றி அமைக்கப்படுதம் வேண்டும். 10) ஆசுத்திரியா–அங்கேரி நாட்டில் சேர்க்கப்பட்டிருந்த சுதந்தரமற்ற சார்பு மக்கள் சுதந்தர மக்களாக ஆக்கப்படுதல் வேண்டும். 11) பால்கன் நாடுகளின் எல்லைகளெல்லாம் வரலாற்று எல்லைகளின் (Historical Lines) அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். 12) உதுமானியப் பேரரசில் (Ottoman Empire) சேர்க்கப்பட்டிருந்த துருக்கியரல்லாத மக்கள் வாழும் நிலங்களெல்லாம் சுதந்தரமான வளர்ச்சி பெறுவதற்குரிய வாய்ப்புகள் அளிக்கப்படுதல் வேண்டும். 13) ஐயத்திற்கிடமில்லாத வகையில் போலிசு (Polish) மக்கள் குடியிருக்கிற நிலப்பகுதிகளை இணைத்து ஒரு சுதந்தரப் போலந்து நாடு உருவாக்கப்படுதலும், அதற்குக் கடலோடு இணைப்பை ஏற்படுத்துதற்கு ஓர் இடைவழி (Corridor) ஏற்படுத்தப்படுதலும் வேண்டும். 14) நாடுகள் ஒன்றுக்கொன்று மற்றதன் அரசியற் சுதந்தரத்துக்குப் பொறுப்புடனிருக்கும் பொருட்டுத் திட்டவட்டமான ஒப்பந்தங்களினடிப்படையில் ஒரு பன்னாட்டுக் கழகம் அமைக்கப்படுதல் வேண்டும்.
பதினான்கு கோட்பாடுகளின் அரசியல் முக்கியத்துவமும் அவை செயற்படுத்தப்பட்ட விதமும்
குடியேற்ற நாடுகளுக்குச் சுதந்தரம், எல்லா நாடுகளின் சுதந்தரத்துக்கும் பாதுகாப்பு, நாடுகளுக்கிடையே நல்லுறவு, ஒத்துழைப்பு, அமைதி ஆகிய நல்ல குறிக்கோள்களுடன் வரையப்பட்டவையே பதினான்கு கோட்பாடுகளாகும். ஆகையால், பதினான்கு கோட்பாடுகளும் அரசியல் முக்கியத்துவமுடையவையேயாகும்.
ஆனால் இவற்றுள் சிலவற்றைத் தவிர, மற்ற அரசியல் ஏற்பாடுகளெல்லாம் தீராத பூசல்களுக்கே இடமாக இருந்தன. எல்லாக் குடியேற்ற நாடுகளும் சுதந்தரமாக்கப்படவில்லை; எடுத்துக்காட்டாக, தென் ஆப்பிரிக்காவிலிருந்த செருமனிக் குடியேற்ற நாடுகள் (Colonies) ஆங்கிலக் குடியேற்ற நாடுகளாக மாற்றப்பட்டன. நாடுகளுக்கிடையே இரகசிய ஒப்பந்தங்கள் தடுக்கப்பட்டாலும், தொடர்ந்து இரகசிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடலில் எல்லா நாடுகளின் கப்பல்களும் செல்லுவதற்குச் சுதந்திரம் இருத்தல் வேண்டுமென்று ஒரு குறிப்புக் கூறினாலும், நடுநிலை நாடுகளின் சரக்குக் கப்பல்களைப் பகைநாடுகள் கைப்பற்றாதபடி தடுப்பதற்காக, அவற்றைக் கைப்பற்றுவதற்குத் தனக்கு உரிமை உண்டென்று பிரிட்டன் கூறிற்று. நாடுகளுக்கிடையேயுள்ள பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுதல் வேண்டுமென்று ஒரு குறிப்புக் கூறினாலும், உண்மையில் போருக்குப் பிற்பட்ட காலத்தில் இத்தடைகள் பெருகின; ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தில் தன்னிறைவடைவதிலும், தன் ஏற்றுமதிகளைப் பெருக்குவதிலும் நாட்டம் செலுத்திற்று. போர்க் கருவிகள் குறைக்கப்படுவதற்கு மாறாகச் செருமனி, இத்தாலி முதலிய நாடுகளில் அவை மிகுதியாக உற்பத்தி செய்யப்பட்டன. பிரிட்டன் ஒன்றுதான் குறைவான கருவிகளை வைத்திருந்தது. இதனால் உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் இடர்ப்பாட்டை உண்டாக்கக்கூடிய இரண்டாம் உலகப்போர் உண்டாகக்கூடிய நிலைமை உண்டாயிற்று. சோவியத்து உருசியாவோடு மேலை நேச நாடுகள் அமைதியான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு மாறாக, அதனோடு போரிட்டுப் பின்னர், பொருளாதாரப் புறக்கணிப்பு செய்து அதை வளரவொட்டாமல் எல்லைகள் தடுத்தன. இத்தாலிய மாற்றியமைக்கப்பட்டாலும், அந்நாடு ஏட்ரியாட்டிக்- குக் கடலின் கிழக்குக் கரையிலுள்ள நிலப்பகுதிகள் கொடுக்கப்படாததனால், அந்நாட்டுக்கும் யூகோசுலேவியாவுக்கும் இடையே எல்லைத் தகராறுகள் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. போலந்துக்கு அளிக்கப்பட்ட இடைவழி நிலமானது தங்களுடைய நாட்டை இரண்டாகத் துண்டிக்கிறது என்றும், செருமானிய மக்கள் வாழ்கின்ற அந்த நிலம் தங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளப்பட்டதென்றும் செருமனியர் குறை கூறிக் கொண்டேயிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக உலக அமைதியை ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட அனைத்துலகச் சங்கம் ஐக்கிய அமெரிக்க நாட்டின் சட்டமன்றத்தால் புறக்கணிக்கப்படவே, அந்நாடு சங்கத்தின் உறுப்பினராகவே இல்லை; மேலும் அந்தச் சங்கத்துக்கு அடிப்படையான ஒப்பந்தம் பழிவாங்கும் எண்ணத்தோடு வரையப்பட்ட வெர்சே உடன்படிக்கையோடு இணைக்கப்பட்டமையினால், அந்த உடன்படிக்கையை மீறி, வல்லரசுகளாகிய நாசிச செருமனி, பாசிச இத்தாலி, இராணுவ சப்பான் முதலிய நாடுகளெல்லாம் தம் விருப்பம்போல் செயற்பட்டுச் சங்கத்திலிருந்து விலகிக் கொள்ளவே, சங்கத்தால் அவற்றின் போர்ச் செயலைத் தடுக்க இயலவில்லை. இவ்வாறு சில குறைபாடுகள் இருந்தபோதிலும் வில்சனின் பதினான்கு குறிப்புகளில், தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமை போன்ற குடியாட்சி உரிமைகளும், கடல்வழிச் சுதந்திரம் போன்ற உரிமைகளும் இடம் பெற்றிருந்தன என்பது மறுத்தல் இயலாது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 772)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qyyx9ytd/
தமிழ்“உட்ரோ வில்சனின் பதினான்கு கோட்பாடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qyyx9ytd/APA
Oliyon Research. (2026). உட்ரோ வில்சனின் பதினான்கு கோட்பாடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qyyx9ytd/MLA
"உட்ரோ வில்சனின் பதினான்கு கோட்பாடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qyyx9ytd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment