சிடார் மரம்
ciṭār maram
இதன் தாவரவியல் பெயர் சிட்ரஸ் (Cedrus) என்பதாகும்.
இதன் தாவரவியல் பெயர் சிட்ரஸ் (Cedrus) என்பதாகும். இது விதை மூடாத் தாவர (gymnosperm) வகுப்பைச் சேர்ந்ததாகும். சிட்ரஸ் இனத்தில் நான்கு சிற்றினங்களுண்டு. அவற்றில் சி. தியோதாரா (C. deodara) என்பதைத் தேவதாரு என்று குறிப்பிடுவர். இது இமயமலை ஊசியிலைக் காட்டுப் பகுதியில் வளரக் கூடிய பசும் மரமாகும். பெரும்பாலும் இமயமலைச் சாரல் இயற்கைச் சூழலில், 2000—3500 மீ உயரத்தில் வளரும். எப்பொழுதும் பசுமையான பல கிளைகளைக் கொண்ட நெடிதுயர்ந்த மரமாகக் காணப்படும். கிளைகளின் நுனியில் ஊசியிலைகள் அடர்த்தியாக அமையப் பெற்றிருக்கும். ஊசியிலைகள் 2.5 செ.மீ. நீளமுடையவை.
மரத்தின் கிளைகள் அடர்த்தியான ஊசியிலைகளோடு தரையை நோக்கி வளைந்து காணப்படும். இம்மரத்தின் கூம்புகள் (cones) ஒரே மரத்திலோ, வெவ்வேறு மரங்களிலோ ஆண், பெண் எனப் பிரிந்து அமைந்திருக்கும். ஆண் கூம்புகள் அளவில் சிறியனவாகவும், நெருக்கமாகவும் அமைந்துள்ளன. ஆண் கூம்புகள் பெரும்பாலும் கிளைகளின் நுனியில் இருக்கும். ஆண் பூ என்பது ஆண் உறுப்பாகிய ஆண் கூம்பு மகரந்தத் தூளைத் தோற்றுவிக்கும். பெண் கூம்புச் செதில்கள் (cone scales) மிக நெருக்கமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு கூம்புச் செதிலின் அடித் தளத்திலும், இரண்டு சூல்கள் (ovules) உள்ளன. இவையே பின்பு விதைகளாக வளர்ச்சியடைகின்றன. பெண் கூம்பு, ஆண் கூம்பை விட அளவில் மிகப் பெரிதாகவும், கவர்ச்சியாகவும், முட்டை வடிவப் பழுப்பு நிறமாகவும் இருக்கும். பெண் கூம்பு மகரந்தச் சேர்க்கை நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே, முதிர்ச்சியடைந்து விதைகளைத் தருகின்றது. ஊசியிலை மரங்களிலேயே தரத்தில் உயர்ந்தது சிடார் ஆகும்.
தேக்கு மரத்திற்கு ஈடாக இது பயன்படுகிறது. புகை வண்டித் தண்டவாளக் கட்டைகள் தயாரிக்கப் பயன்படும். மேலும், இம்மரத்திலிருந்து ஒரு வித நறுமணம் கொண்ட எண்ணெய் எடுக்கப்பட்டுச் சோப்புத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய், வீடுகளில் பூச்சி கொல்லியாகவும் பயன்படுகிறது.
பொதுவாக ஒத்த வயதுடைய சிடார் மரங்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இதற்குக் காரணம், பெண் கூம்புகளிலிருந்து வெளிப்படும் விதைகள் அடுத்தடுத்துத் தரையில் விழுவதேயாகும். இவ்வித மரங்கள் நன்றாக வளர்வதில்லை. இடம் விட்டு நன்றாகப் பரவி வளரும் மரங்களே முழு நிலையை அடைகின்றன. புதிதாக வெளிப்பட்ட விதைகளே நன்றாக முளைக்கும் திறன் கொண்டவையாகும். மேலும், சிடார் மரங்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறையே நல்ல தரமான விதைகளைக் கொடுக்கின்றன. பாத்திகளில் விதைகளைத் தூவி நாற்றுத் தயாரிப்பதும் உண்டு. இம்மரத்தின் பட்டை, இலை ஆகியவை கசப்புத் தன்மையுடையவை. இருமல், காய்ச்சல், தோல், குருதி நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுவன. இம்மரத்தின் எண்ணெய் தொழு நோயைத் குணப்படுத்த வல்லது. —கோ. அர்ச்சுணன் நூலோதி. B.S.Trivedi and D.K.Singh, Structure and Reproduction of the Gymnosperms, Shashidar Malaviya Prakashan, Lucknow, 1969.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 213)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qttzqupu/
தமிழ்“சிடார் மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qttzqupu/APA
Oliyon Research. (2026). சிடார் மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qttzqupu/MLA
"சிடார் மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qttzqupu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment