இதனைக் குறத்தி என்றும் குறிப்பிடுவர். இதன் தாவரவியல் பெயர் சேகிமா நேர்வோசம் (Sehima nervosum) என்பதாகும். ஸ்கேமம் லேக்சம் (Ischaemum laxum) என்பது இதன் இணை தாவரவியல் பெயராகும். போயேசிக் குடும்பத்தைச் சேர்ந்த இதனை இந்தியா முழுவதும் காணலாம். அமைப்பு. இது பல பருவத் தாவரமாகும். இதன் சிறிய வேர் தடித்தது. இதன் தண்டு 120 செ.மீ. நீளத்தில் குஞ்சம் போன்றிருக்கும். புல் முதிர்ந்திருக்கும் போது, தண்டின் நிறம் வைக்கோல் நிறத்தை ஒத்திருக்கும். இதன் கிளைகள் தட்டையாகவும், நேராகவும் காணப் படும். மஞ்சரி, தனித்த துணர் (raceme) வகையாகும். இது நேராகவும், நொறுங்கக் கூடியதாகவும், இளம் பச்சை, கருஞ் சிவப்பு நிறமாகவும் இருக்கும். சிறு கதிர்கள் அமுங்கியிருக்கும். ஒன்று காம்புடனும், ஒன்று காம்பற்றும் இருக்கும். இணைப்புகளும், பூக்காம்புகளும் இரு ஓரங்களிலும், இழைகளைக் கொண்டவை. கீழ்ப் பகுதியில் ஆண் மலரும், மேல் பகுதியில் இரு பால் மலரும் காணப் படும். தாளைப் போன்ற உமிகள் சமமற்றவை. நீள்சதுரக் கனி, தானிய வகையைச் (Caryopsis) சேர்ந்தது. பயன். இந்தப் புல் கருமண் நிலத்திலோ, மணல் கலந்த இரு மண் பாட்டு நிலத்திலோ காணப் படும். வறட்சியைத் தாங்கி வளரும் இது மலைப் பகுதியில் தீவனமாகும் புல் வகையாகும். மஞ்சரிகள் விழுந்த பின்பும், இப்புல்லைக் கால்நடைகள் விரும்பி உண்ணுகின்றன. இப்புல்லை வைக்கோலாக்கித் தீவனமாகத் தரலாம். இப்புல் கூரை வேயவும் பயனாகிறது. —கோ. அர்ச்சுனன்